Thursday, April 23, 2020

புல்தரையாய்

இன்றைய (24 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவான் 6:1-15)

புல்தரையாய்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை (யோவானின் பதிவின்படி) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் அப்பங்கள் பலுகுவதற்கு முன் இன்னொரு அற்புதம் நடக்கிறது. அதுதான், புல்தரை.

நிகழ்வு நடக்கின்ற இடம், திபேரியக் கடலின் மறுகரை. மறுகரையில் உள்ள உயர்வான பகுதியில் இயேசு அமர்கிறார். கடற்கரையை ஒட்டி புற்கள் வளர்வதில்லை. ஆனால், இந்தப் பதிவின்படி, 'அப்பகுதி முழுவதும் புல்தரையாய்' இருக்கிறது.

புல்தரை எங்கிருந்து வந்தது?

கடலின் உப்புக் காற்றையும், அதையொட்டி நிலவும் வெப்பமான சூழலையும் எதிர்கொண்டு புல் எப்படி வளர்ந்தது?

புல்தரைக்கும், நற்செய்தியின் இறுதியில் வரும், 'அவர்கள் தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள்' என்ற வாக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

திருப்பாடல் 23இல் ஆண்டவரை தன்னுடைய ஆயன் என அழைக்கின்ற தாவீது, 'பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்' (23:2) எனப் பாடுகின்றார். தாவீது காட்சியில் காணும் அல்லது தாவீது தன் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று இங்கே நடந்தேறுகிறது.

ஆக, கடவுள் இருக்கும் இடத்தில் பசும்புல் தரையும், இளைப்பாறுதலும் இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:34-42), கமாலியேல் என்னும் கதைமாந்தரை எதிர்கொள்கிறோம். திருத்தூதர்களைப் பற்றிய விசாரணையில் குரல் கொடுக்கின்ற இவர், 'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' என சக உறுப்பினர்களை எச்சரிக்கின்றார்.

தானாகவே ஒன்று முடிந்துவிட்டால் அது மனிதரிடமிருந்து வருவது.

அப்படி முடியாதது எதுவும் கடவுளிடமிருந்து வருவது.

'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கலாம்' என்னும் பிலிப்பின் திட்டம் மனிதரிடமிருந்து வருகிறது. ஆக, அது தானாகவே அழிந்துவிடுகிறது.

ஆனால், 'மக்களை அமரச் செய்யுங்கள்' என்னும் இயேசுவின் திட்டம் கடவுளிடமிருந்து வருகிறது. ஆகையால்தான், அங்கே நின்றுகொண்டவர்கள் தங்கள் கால்களுக்கு அடியில் முளைத்திருந்த பசுமையான புற்களைக் கண்டுகொள்கின்றனர்.

அங்கேயே தொடங்குகிறது அற்புதம்.

இன்று நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் பல முடிவுக்கு வரவில்லை என்றால் அவை நம் திட்டங்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஏனெனில், கடவுளின் திட்டம் அனைத்தும் இனிய முடிவிற்கு வரும்.

ஆஸ்கர் ஒயில்ட் சொல்வார்: 'தொடங்கிய அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால் அது இன்னும் முடியவில்லை'.

இன்றைய நற்செயல்: நம் வாழ்வில் நாம் அமர்ந்து இளைப்பாறும் புல்தரை நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தல்.


3 comments:

  1. நம் திட்டம்-கடவுளின் திட்டம் 👌

    கடவுளின் திட்டம் அனைத்தும் இனிய முடிவிற்கு வரும்.🤝

    நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால்,
    அது இன்னும் முடியவில்லை.... 🙏.

    ReplyDelete
  2. கடல் மட்டத்திலிருந்து 209 மீட்டர் ஆழத்திலுள்ள கலிலேயா கடல் (ஏரி) நன்னீர் ஏரி என்று Wikipedia குறிப்பிடுகிறது. தந்தையின் சிந்தனைகள் எப்போதுமே புதியதொரு பார்வையைத்தருகிறது. தந்தை அவர்களுக்குப் பாராட்டு.

    ReplyDelete
  3. அப்பங்கள் பலுகும் நிகழ்வில் குறிப்பிடப்பட்ட ‘ புல்தரைக்கு’ விளக்கமாக கடவுள் இருக்கும் இடத்தில் இளைப்பாறுதலும்,புல்தரையும் இருக்கும் என்ற பதிவைத தருகிறது இன்றையப்பதிவு.தானாகவே நடக்கும் ஒன்று,தானே அழிந்துவிடும் என்பதும், அவ்வாறு இல்லையேல், அது கடவுளிடமிருந்து வருகிறது என்பதும் நாம் அனுபவத்தில் காணும் உண்மை. இந்த வரிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது ....ஆஸ்கர் ஒயில்டின் வரிகள். “தொடங்கிய அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும்; நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால் அது இன்னும் முடியவில்லை.” தந்தைக்கு நன்றிகள்!!!

    இத்தனை வெதுவெதுப்பிலும் நாம் காய்ந்து,தீய்ந்து போகாமல் இருக்கிறோமே..அது ஒன்று போதாதா நாம் அமர்ந்திருப்பது பசும்புல் தரைதான் என்பதைக் கண்டு கொள்ள?

    ReplyDelete