Tuesday, April 14, 2020

கண்கள் மறைக்கப்பட்டிருந்தன

இன்றைய (15 ஏப்ரல் 2020) நற்செய்தி (லூக் 24:13-35)

கண்கள் மறைக்கப்பட்டிருந்தன

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் எண்கிழமையின் புதன் கிழமையில் இருக்கின்றோம். திருவழிபாட்டு ஆண்டில், கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புக் காலத்தில் எண்கிழமைகள் (எட்டு நாள்கள்) உள்ளன. கிறிஸ்து பிறப்பு விழாவின் எட்டாம் நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டப்படுகிறது, விருத்தசேதனம் செய்யப்படுகிறது. உயிர்ப்பின் எட்டாம் நாளில் ஆண்டவராகிய கிறிஸ்து தன்னைச் சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். எட்டாம் திருவிழா என்பது சைவத்திலும் முக்கியமான ஒன்று. எட்டாம் திருநாளில்தான் கடவுள் புதிய அவதாரம் எடுப்பார்.

பாஸ்கா காலத்தின் எண்கிழமையில் உள்ள வாசங்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை நம் சிந்தனைக்குக் கொண்டுவருகின்றன. அவ்வகையில் இன்றைய நாளில் நாம் எம்மாவு நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார்.

எம்மாவு சென்ற சீடர்களின் கண்கள் 'மறைக்கப்பட்டிருந்தன' (காண். 24:16) என்று நிகழ்வு தொடங்கி, அவர்கள் 'கண்கள் திறக்கப்பட்டன' (காண். 24:31) என்று நிகழ்வு முடிகிறது. இங்கே 'கண்கள்' என்பவை சீடர்களின் அகக்கண்கள் அல்லது உள்ளத்தைக் குறிக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம். அல்லது, கண்களில் கண்ணீரும், உள்ளத்தில் சோகமும் அவர்களின் புறக்கண்களை மறைத்துவிட்டன என்றும் பொருள் கொள்ளலாம்.

மறைக்கப்பட்டிருந்த கண்கள் எப்படி திறக்கப்படுகின்றன? அல்லது என் கண்கள் திறக்கப்பட வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

அ. திறந்த மனம் வேண்டும்

சீடர்கள் தங்களோடு ஒருவர் வழிப்பயணத்தில் சேர்ந்துகொள்வதை அனுமதிக்கின்றனர். 'வழி நெடுகிலும் நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று முன்பின் தெரியாத ஒருவர் கேட்டவுடன், 'யோவ் ... போயா ... உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! நாங்க என்னவும் பேசுவோம் உனக்கென்ன!' என்று அவரிடம் கேட்டிருக்கலாம். அல்லது, 'மாப்ள! யார்ரா இது! நம்ம உரையாடலுக்குள் வருகிறார்' என்று தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டு தள்ளி நடந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. உடனடியாகப் பதிலிறுக்கின்றனர். மேலும், அவரைப் பேசவும் அனுமதிக்கின்றனர். ஒருவேளை, அவர்களுடைய விரக்தி மற்றும் சோகத்தைப் பங்கிட ஒருவருக்காக ஏங்கினார்களோ என்னவோ!

ஆ. இறைவார்த்தை அறிய வேண்டும்

இறைவார்த்தை என்பது விவிலியம் மட்டுமல்ல. மாறாக, இறைவன் பல்வேறு வகைகளில், பல்வேறு நபர்களில் நம்மோடு பேசலாம். வழிப்போக்கர் இறைவார்த்தையை எடுத்துரைத்தவுடன் அவர்கள் அதை நம்பத் தொடங்குகிறார்கள். இன்று இறைவார்த்தை என்பது நம் அன்பிற்குரியவரின் உரையாடலில், நாம் டிவியில் பார்க்கும் விளம்பரத்தில், ஒரு குறுஞ்செய்தியில் எங்கும் வரலாம். அந்த வார்த்தையை இறைவனின் வார்த்தை என்று நம்பி அதை ஏற்றல் நலம்.

இ. கை விரித்து வரவேற்க வேண்டும்

தங்களோடு வழிநடந்த முன்பின் தெரியாத நபரிடம், 'மாலை நேரம் ஆயிற்று. எங்களோடு தங்கும்' என்கின்றனர் சீடர்கள். யூத சமூகத்தில் விருந்தோம்பல் மிக முக்கியான மதிப்பீடாக இருந்தது என்பதற்கு இது சான்று. நாம் யாருக்காவது கொடுத்தால் அது நமக்கே திரும்பி வரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால், அந்த இரவில் இவர்கள் தங்களுடைய சிறிய இல்லத்திற்குள் இந்த அந்நியரை வரவேற்றது பாராட்டுதற்குரியது.

இம்மூன்று படிகளின் இறுதியில் கண்கள் திறக்கப்படுகின்றன.

இந்நாள்களில் நாம் நம் இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வெளியே செல்லவும், வழி நடக்கவும், அந்நியரைச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், வெறுமனே என்ன செய்வது? என்று நம் கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இருக்கும் இந்நாள்கள் விடுமுறை அல்ல. இது 'பேன்டமிக்' அல்ல, 'ப்ளான்டமிக்'. நம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கவும், குடும்பமாகச் சேர்ந்து முன்னோக்கிப் பார்க்கவுமான வாய்ப்பு. நாம் இதுவரை கற்றிராத ஒன்றைக் கற்றுக்கொள்ள, எடுத்திராத ஓய்வை எடுத்துக்கொள்ள, செய்ய இயலாத ஒன்றைச் செய்ய இறைவன் கொடுத்த வாய்ப்பு. ஏனெனில், வருகின்றவற்றை எதிர்கொண்டு வாழ்பவரே மனிதர்கள்.

இன்று நம் கண்கள் திறக்கப்பட, நாம் ஒருவர் மற்றவருக்கு நம் உடனிருப்பை நல் வார்த்தைகளைப் பகிர்வதிலோ, அல்லது நற்செயல்கள் செய்வதிலோ காட்டலாம்.

இன்றைய நற்செயல்: நம் உணவை யாராவது முன்பின் தெரியாதவரோடு பகிர்ந்துகொள்வது.


2 comments:

  1. உயிர்ப்புத் திருநாளுக்குப்பின் வரும் இந்த ‘எம்மாவுஸ்’ நிகழ்வு பலருக்கு நெருக்கமானதொன்று.இங்கே சேர்ந்துகொண்ட இயேசுவை விட,சேர்த்துக்கொண்ட சீடர்களே நமக்கு நெருக்கமாகப் படுகிறார்கள்.உள்ளத்தின் சோகமும்,கண்களின் கண்ணீரும் சீடர்களின் புறக்கண்களை மறைத்திருப்பினும் அவர்களது அக்க்கண்கள் திறந்தே இருந்தன என்பதே உண்மை. நீங்களும், நானும் கூட சோகமேகங்களால் சூழப்படலாம்.அப்படிப்பட்ட நேரங்களில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பட்டியலிடுகிறார் தந்தை.நம் உணர்வுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டு விரக்திமேலீட்டால் நம்மிடம் வருபவர்களுக்கு நம் செவிகளைக்கொடுப்பதும், நல் வார்த்தைகள் யாரிடமிருந்து....எங்கிருந்து வந்திடினும் அவற்றை ‘இறைவார்த்தை’யென நம் உள்ளம் திறந்து ஏற்றுக்கொள்வதும்,நம் இல்லம் நோக்கி வருபவர்களுக்கு “ நாம் இன்று கொடுத்தால் நாளை நம்மிடம் திரும்பிவரும்” என்ற நினைப்புக்கூட இன்றி ‘விருந்தோம்பலை’ இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே அந்தப்பட்டியல் நமக்குத தரும் செய்தி. சோகமேகங்கள் எங்கும் மனிதர்களை அலைக்கழிக்கும் இந்த நாட்களில் “ வருகின்றவரை எதிர்கொண்டு வாழ்பவரே மனிதர்கள்” என்பதற்கிணங்க ஒரே குடும்பமாகச் சேர்ந்து வருவதை எதிர்கொள்ள வேண்டுமென உணர்த்தப்படுகிறோம்.கண்டிப்பாக நான் இன்று என் உணவை இன்னொருவருடன்( எனக்குத் தெரியாதவர் கிடைப்பாரா..தெரியவில்லை) பகிர்ந்து கொள்வேன்.இப்படி நற்செயல்களுக்கு ஒரு கிரியா ஊக்கியாக நிற்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!
    ‘பேன்டமிக்’ அல்ல..’ப்ளான்டமிக்’...அழகு!
    மிக நீஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பின் வந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகளும்! வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  2. Welcome back Father. Thanks to Corona , you are here. LOL

    ReplyDelete