Thursday, April 30, 2020

யோசேப்பு

இன்றைய (1 மே 2020) திருநாள்

யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர்

தொழிற்சாலைகள் இன்று முடங்கி, பல தொழிலார்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து வேலை செய்ய, சில தொழிலார்கள் தொழில் செய்ய முடியாமல் இருக்க, இன்னும் சிலர் தங்கள் தொழில்களை இழந்து நிற்க, இந்த மே தினம், மௌனமாக நம்மிடமிருந்து நகர்கிறது.

உழைப்பு, தொழில், வேலை, பணி, செயல் என நாம் பல பெயர்கள் இட்டாலும் இவை சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.

'மனிதன் ஒரு தொழிலாளி' என்று மனிதனை வரையறை செய்கிறார் மாற்கு.

இன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித யோசேப்பின் திருநாளைக் கொண்டாடுகிறோம். யோசேப்பு தச்சுத் தொழில் செய்பவராக நாம் பல ஓவியங்களைப் பார்த்திருக்கிறோம். யோசேப்பு தச்சுத் தொழில் செய்தார் என்பது மாற்கு நற்செய்தியிலும், யாக்கோபின் முன்நற்செய்தி எனப்படும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூலிலும் காணக்கிடக்கிறது.

மனிதர்களின் பாவத்தால் தொழில் அல்லது வேலை வந்தது எனப் பலர் சொல்வதுண்டு. மனிதர்களின் வீழ்ச்சியால் வந்தது அல்ல தொழில். மனிதர்களை எழுச்சிபெற வந்ததே தொழில்.

விவிலியம் வேலை அல்லது தொழிலை எப்படி புரிந்துகொள்கிறது?

1. வேலை என்பது கடவுளின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி (காண். தொநூ 1, 2, எசா 65).

2. நாம் வேலை செய்யும்போது கடவுளின் உடன் படைப்பாளர்கள் ஆகின்றோம் (காண். தொநூ 1:27, 2:5, 2:15, எபே 2:10)

3. கடவுள் நமக்குத் திறன்கள், ஆற்றல்கள், மற்றும் கொடைகளைக் கொடுத்து, சில குறிப்பிட்ட ஆளுமை நிலைகளில் பணியாற்றவும், செயல்படவும் அழைக்கிறார் (காண். விப 31:1-5, மத் 25:14-30)

4. தரம், குணம், மற்றும் அறநெறி ஆகியவை தொழிலின் அடித்தளங்கள் (காண். மத் 25:21, கொலோ 3:23-24, எரே 17:10)

5. நம் வேலை கிறிஸ்துவின் நுகத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது (காண். 2 கொரி 6:14-15, மத் 11:29-30)

6. பிறரன்பும், பிறர்பணியுமே நம் வேலையின் இலக்காக இருக்க வேண்டும் (காண். 2 கொரி 5:16-21, மாற் 12:31, மத் 7:12, பிலி 2:3-4)

7. உழைப்பும் ஓய்வும் மாறி மாறி வரக்கூடிய வாழ்வியல் முதன்மைகள் (காண். விப 20:8-11, யோவா 15:4, எபி 4:10, 1 யோவா 3:19)

8. செல்வம் மற்றும் முதலீடுகள் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் (காண். 1 கொரி 4:7, 1 திமொ 6:17-19, திப 2:45)

9. கடவுளின் பணி உறவுநிலைகள் வழியாகப் பலுகி பெருகுகிறது (காண். 1 திமொ 3:15, தீத் 2:3-8, இச 6:4-9)

10. பணி அல்லது தொழில் அல்லது வேலை கடவுளின் கொi (காண். சஉ 5:19, 4:4, 2:4-11)

நாம் நம்முடைய ஓய்விற்காக அல்ல, நாம் செய்த பணிக்காகவே, வேலைக்காகவே நினைவுகூரப்படுவோம்.

உழைப்பே இந்த உலகை நகர்த்துகிறது என்பதை அறிந்தவரும், தன் மகன் இயேசுவுக்கு அறிவித்தவரும் நம் திருவிழா நாயகன் வளன்.

நற்செயல்: நம் உழைப்பால், வேலையால், தொழிலால் நாம் அடைந்துள்ள அக, புற மாற்றங்களை எண்ணிப் பார்த்தல்.


Wednesday, April 29, 2020

கற்றுத் தருதல்

இன்றைய (30 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:44-51)

கற்றுத் தருதல்

'கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்' என்று ஏற்கனவே சொன்னதை நினைவூட்டும் இயேசு, தொடர்ந்து, 'தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்' என்று கூறுகின்றார்.

'கற்றுத் தருதல்' அல்லது 'கற்றுக்கொள்ளுதல்' என்பது யோவான் நற்செய்தியிலும், மற்றும் அவருடைய திருமுகங்களிலும் நாம் வாசிக்கும் ஒன்று.

இந்த லாக்டவுன் நாள்களில் நாம் தனியாக நிறையக் கற்றுக்கொள்கிறோம். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் கற்றுக்கொடுத்தலை முன்னெடுத்துள்ளன. கொரோனா நமக்கு நிறையக் கற்றுத் தருகிறது. நாம் வாசிக்கும் புத்தகங்கள், நாம் காணும் காணொளிகள், திரைப்படங்கள், குறும்படங்கள் என எல்லா நிலைகளிலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கின்றோம்.

கற்றுக்கொள்ளுதலில் என்ன நடக்கிறது என்றால், பழையது மறைந்து புதியது வருகிறது.

இந்த நிலையை ஒருவரில் உருவாக்குபவரே உண்மையாகக் கற்றுக்கொடுக்கிறார்.

30 நிமிடங்கள் பாடம் கேட்டுவிட்டு, 30வது நிமிடத்தின் இறுதியில் நான் முதல் நிமிடத்தில் இருந்ததுபோல இருந்தால், என்னில் எந்தக் கற்றலும் நடக்கவில்லை. நிமிடங்கள் மட்டுமே வீணாகியுள்ளன.

என்னில் மாற்றம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

'செவிசாய்க்க வேண்டும்'

செவிசாய்த்தல் என்பது எனக்கும் பேசுபவருக்கும் இடையே ஒரு ப்ளுடூத் இணைப்பை உருவாக்கிக்கொள்ளுதல் போல. அதாவது, அவரோடு மெய்நிகர் (virtual) நிலையில் நான் இணைந்திருத்தல்.

ஆக, கற்றல், செவிசாய்த்தல், இணைதல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து இருக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 8:26-40), தான் வாசிப்பதன் பொருளை உணர்ந்து கொள்ளாத எத்தியோப்பிய திருநங்கை அமைச்சர், திருத்தொண்டர் பிலிப்புடன் தன்னை இணைத்துக் கொண்டதால், அவருக்குச் செவிகொடுப்பதால் வாசிப்பதன் பொருளை உணர்ந்துகொள்கின்றார்.

நற்செயல்: கடவுளிடமிருந்து கற்றுக்கொள்ள, அவரோடு இணைய, அவருக்குச் செவிசாய்க்க என்னில் உள்ள அக மற்றும் புறத்தடைகள் எவை?

Tuesday, April 28, 2020

திருவுளம்

இன்றைய (29 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:35-40)

திருவுளம்

கடந்த வாரத்தில், பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கிய உரை ஒன்றைக் கேட்டேன். அந்த உரையின் தலைப்பு 'உளப்பகுப்பாய்வு' ('How to Psychoanalyze Yourself?). உளப்பகுப்பாய்வு (psychoanalysis) அல்லது உளப்பகுப்பாய்வு முறை என்பது உளவியலில் சிக்மண்ட் ஃப்ராய்ட் மற்றும் அவருடைய மாணவர் கார்ல் யுங் ஆகியோரால் தொடங்கப்பட்ட சிகிச்சை முறை. இப்போது உளவியல் பல கட்டங்களில் வளர்ந்துவிட்டது என்றாலும், இவ்விருவரும் வகுத்த, 'ஈத்,' 'ஈகோ,' 'சூப்பர்-ஈகோ' போன்ற வகையினங்களே இன்று எல்லா உளவியல் பகுப்பாய்வு முறைகளுக்கும் அடிப்படையாக உள்ளன.

தன்னுடைய உரையில், இவ்வுலகின் மனிதர்களை இரண்டாகப் பிரிக்கிறார் ஷூன்: 'மேன்மையானவர்கள்,' 'மேன்மையற்றவர்கள்.'

மேன்மையானவர்களின் பண்புகள் மூன்று:

(அ) அவர்களுக்கென்று ஒரு இலக்கு (vision / goal / aim) அல்லது குறிக்கோள் அல்லது நோக்கம் (mission) இருக்கும். எடுத்துக்காட்டாக, நம் அறையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வோம். 'இந்தப் பொருள் இதற்காக' என்று நாம் நிர்ணயிக்காத எந்தப் பொருளும் நம் அறையில் குப்பைதான். அறையில் தொங்கும் கடிகாரம் நேரத்தைக் காட்டுவதற்காக, மேசையில் உள்ள பேனா எழுதுவதற்காக, அருகில் உள்ள விவிலியம் வாசிப்பதற்காக என ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதே போல, என் வாழ்விற்கும் நோக்கம் இருக்க வேண்டும். நான் இந்த உலகில் பிறந்தது விபத்து அல்ல. என் நோக்கம் என்ன என்பதை நான் அறிந்து, அதை நோக்கிச் செல்ல வேண்டும். மேலும், நோக்கம் நிர்ணயிக்கப்பட்டவுடன் அதில் நான் தொடர்ந்து முன்னேற வேண்டும். நோக்கம் இல்லாத போது நான் என்ன செய்வேன்? ஒரு பத்து அடி இந்தப் பாதையில் நடப்பேன். பின் யோசித்துவிட்டு, இல்லையில்லை, இந்தப் பாதை வேண்டாம், அடுத்த பாதையில் செல்லவேண்டும் என நினைத்து, திரும்பி வந்து புதிய பாதையில் செல்கிறேன். அதுவும் திருப்தி இல்லை. வேறு பாதையைத் தேர்வு செய்கிறேன். இப்படி நான் பாதைகளை மாற்றிக்கொண்டே இருந்தால் என் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது. என் வாழ்வின் இலக்கு என்பது எப்போதும் இறுதியில் வருவது. எடுத்துக்காட்டாக, மதுரைக்குச் செல்ல வேண்டும் என்பது காரில் ஏறுகின்ற என் இலக்கு என வைத்துக்கொள்வோம். மதுரை உடனே வந்துவிடாது. விராலிமலை, துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர், எனக் கடந்து இறுதியில்தான் மதுரை வரும். விராலிமலையை நான் பிடித்துக்கொண்டு இதுதான் மதுரை என்று சொல்வதோ, அல்லது இங்கே இருந்துகொள்கிறேன் என்று சொல்வதோ என் இயக்கத்தை இறுக்கிவிடும்.

(ஆ) மேன்மையானவர்கள் தங்களது மனம் (mind / reason) மற்றும் ஆன்மாவால் (will) (விருப்பம் என்றும் மொழிபெயர்க்கலாம்) வழிநடத்தப்படுவார்கள். ஒரு முடிவு எடுக்கும்போது, மனம் பகுத்தாய்ந்து இதன் விளைவு இது, அதன் விளைவு அது என்று சொல்லும். அப்போது ஆன்மா இரண்டையும் ஆய்ந்து அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யும்.

(இ) மேன்மையானவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளையும் (emotions), உந்துதல்களையும் (instincts) கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஏனெனில், அவர்களுக்கு இலக்கு அவசியம்.

இதற்கு எதிர்மாறாக, மேன்மையற்றவர்கள் அல்லது மேன்மையை அடைய முடியாதவர்களின் பண்புகள் இருக்கும்:

(அ) அவர்களுக்கு என்று எந்த இலக்கும், குறிக்கோளும், நோக்கமும் இருக்காது.

(ஆ) அவர்கள் தங்களது உணர்ச்சிகளாலும், உந்துதல்களாலும் வழிநடத்தப்படுவார்கள்.

(இ) இவர்கள் தங்கள் மனத்தையும் ஆன்மாவையும் மயக்க மருந்து கொடுத்து வைத்திருப்பார்கள். அல்லது அவற்றை மழுங்கடித்துவிடுவார்கள்.

இப்பண்புகளை ஓர் உருவகமாகத் தருகின்றார் ஷீன்: ஒரு கப்பல்.

கப்பல்தான் மனித வாழ்க்கை. தூரத்தில் தெரிகின்ற கலங்கரை விளக்கம் அல்லது விண்மீன் நாம் அடைய வேண்டிய இலக்கு. மனம் உள்ளிருக்கும் இயந்திரம். ஆன்மா அதை இயக்கும் கேப்டன். உணர்ச்சிகளும் உந்துதல்களும் கப்பலை மோதும் அலைகள்.

மேன்மையானவர்கள், உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் கண்டுகொள்ளாமல், தங்கள் இலக்கை நோக்கி நகர்வர். ஆனால், மேன்மையற்றவரோ, தங்கள் கப்பலை தலைகீழாகக் கவிழ்த்துக்கொண்டு, மனத்தையும், ஆன்மாவையும் தண்ணீருக்குள் அமிழ்த்திவிட்டு, தங்களுடைய உணர்ச்சிகளாலும் உந்துதல்களாலும் இயக்கப்படுவர். விளைவு, இவர்களுக்கு இலக்கு தெரியாது. இவர்கள் அங்குமிங்கும் செல்வார்கள். தங்களுடைய மனத்தையும் ஆன்மாவையும் பயன்படுத்தி தங்களுடைய உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் நியாயப்படுத்திக்கொள்வர்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 6:35-40), இயேசு ஒரு மேன்மையானவராக முன்வைக்கப்படுகிறார்.

எப்படி?

தன்னைச் சுற்றி நின்ற மக்களிடம், தன் இலக்கு அல்லது நோக்கம் எது என்பதை முன் வைக்கின்றார்.

இயேசுவின் இலக்கு என்ன? தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவது.

அவரின் மனம் என்ன? எது தேவை, எது தேவையற்றது என்பதை பிரித்துப் பார்ப்பது.

அவரின் ஆன்மா என்ன? தந்தையின் திருவுளம்

உணர்ச்சிகளும் உந்துதல்களும் என்ன? மக்கள் அவரைப் பிடித்து அரசராக்க நினைப்பது.

தன்னுடைய இலக்கில் தெளிவாக இருந்த இயேசு, தன் உணர்ச்சிகளையும் உந்துதல்களையும் கட்டுக்குள் வைத்து, தன் மனம் மற்றும் ஆன்மாவால் வழிநடத்தப்பட்டு முன்னேறிச் செல்கின்றார்.

அவரின் இலக்கு அனைவரும் பெறுகின்ற நிலைவாழ்வில் நிறைவேறுகிறது.

நற்செயல்: நான் மேன்மையானவரா? மேன்மையற்றவரா? என்பதை மேற்காணும் பண்புகள் கொண்டு ஆய்வு செய்வதும், என் வாழ்வின் இலக்கைத் தெளிவாக்குவதும்.

என் வாழ்வின் இலக்கு (vision): 'அவரோடு இருக்கவும், நற்செய்தி பறைசாற்ற அனுப்பப்படவும், தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்கவும்' (மாற். 3:14)

என் வாழ்வின் நோக்கம் (mission): 'இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பது' (திப 6:4).

நோக்கத்தின் வழி இலக்கை அடைவதும், இலக்கை மனத்தில் வைத்து நோக்கத்தை நெறிப்படுத்துவதும் சால்பு.

Monday, April 27, 2020

பசியே இராது

இன்றைய (28 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவான் 6:30-35)

பசியே இராது

நேற்றைய தினம் அருணகிரிநாதரின் சில பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தேன். முக்திநிலை என்பது மாற்றங்களைக் கடந்த நிலை என்கிறார் அவர்.

அது என்ன மாற்றங்களைக் கடந்த நிலை?

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதும், 'ஒரே ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது' என்பதும் வாழ்வியல் எதார்த்தம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

பகல்-இரவு, இன்பம்-துன்பம் என வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

நம் உடல் மாறுகிறது.

நம் உணர்வு மாறுகிறது.

நம் சிந்தனை மாறுகிறது.

நம் புரிதல் மாறுகிறது.

நம் அறிதல் மாறுகிறது.

ஆனால், மாற்றத்தை விட்டு கடக்கின்ற நிலையை அடைய முடியுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரை தொடர்கிறது.

'என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்கிறார்.

பசி-நிறைவு, தாகம்-நிறைவு என வாழ்க்கை மாறுகிறது.

இந்த நாள்களில் நாம் உள்ளடைப்பில் இருக்கின்றோம். இந்த உள்ளடைப்பின் துன்பத்தை நாம் ஏன் பொறுத்துக்கொள்கிறோம்? கொரோனா நம்மைவிட்டுப் போய்விடும் அல்லது நாம் நோயின்றி வாழலாம் என்ற எண்ணத்தில்தாம். ஆக, பலன் எந்த அளவிற்கு கூடுதலாக இருக்குமோ அந்த அளவிற்கு வலியை நாம் தாங்கிக்கொள்கிறோம்.

பசியை தாங்கிக்கொள்கிறோம். ஏனெனில், உணவு உண்ணும்போது நாம் பெறுகின்ற இன்பத்திற்காக. ஆனால், அந்த இன்பம் சில மணி நேரங்களில் மறைந்து மறுபடியும் பசி எடுக்கிறது. தாகமும் அது போலவே.

ஆக, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றம் என்ற எதார்த்திற்குள் சிக்கிக்கொள்கிறோம்.

இதைக் கடப்பதே முக்தி நிலை.

இதைக் கடப்பதே நிலை வாழ்வு.

பசியே இராது என்றால், எப்போதும் நிறைவு மட்டுமே இருக்கும்.

இதையே இயேசு முதல் ஏற்பாட்டோடு ஒப்பிட்டு, 'அவர்கள் மன்னா உண்டார்கள், ஆனால், அவர்களுக்கு மீண்டும் பசித்தது' என்று சொல்லி, தான் தருகின்ற உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.

எல்லா நேரமும் ஒரே மாதிரியான உணர்வைப் பெற நம்மால் இயலுமா?

நமக்கு நடக்கும் எதுவும் நம்மைப் பாதிக்காத வண்ணம் நாம் நம்முடைய மனநிலையை ஒரே உணர்வில் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

இறையனுபவம் பெற்றவர்களுக்கு முடியும்.

எடுத்துக்காட்டாக, பவுல் சொல்வதுபோல, 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும்' என்பது போல. வறுமை என்று பவுல் வாடுவதுமில்லை. வளமை என்று பவுல் கொண்டாடுவதுமில்லை.

இதுவே பசியற்ற, தாகமற்ற நிலை.

நற்செயல்: என் உடல் மாற்றத்தையும், சிந்தனை மாற்றத்தையும் உற்றுக் கவனிப்பது.

Sunday, April 26, 2020

எப்போது இங்கு வந்தீர்?

இன்றைய (27 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:22-29)

எப்போது இங்கு வந்தீர்?

இயேசு அப்பம் பலுகச் செய்தபின், வாழ்வுதரும் உணவு பற்றிய நீண்ட உரையைப் பதிவு செய்கின்றார் யோவான். அந்த உரைக்கான முன்னுரையே இன்றைய நற்செய்திப் பகுதி.

இந்த வாசகத்தில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன:

அ. ரபி, எப்போது இங்கு வந்தீர்?

மக்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. தாங்கள் உணவு உண்ட இடத்திலேயே இயேசுவைக் காணலாம் நினைத்து மக்கள் அங்கே வருகிறார்கள். ஆனால், அவரோ அதற்கு நேர் எதிரே உள்ள கப்பர்நாகூம் சென்றுவிட்டார். அங்கு அவரைத் தேடிச் சென்று, அவரைக் காண்கின்ற மக்கள், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' ஆனால், அந்த நேரத்தில் இயேசுவின் மைன்ட் வாய்ஸ், 'நீங்க எப்படா இங்க வந்தீங்க?' என்றும், அல்லது 'நீங்க ஏன்டா இங்க வந்தீங்க?' என்றும் இருந்திருக்கலாம்.

ஆனால், இயேசு இக்கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாறாக, அவர்கள் வந்ததன் நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவர்களை அழைக்கின்றார்.

ஆ. எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்வியையும் மக்களே இயேசுவைப் பார்த்துக் கேட்கின்றனர். இது ஒரு நல்ல கேள்வி. ஓபனிங் நல்லாதான் இருக்கு. ஆனா, ஃபினிஷிங்தான் நல்லா இருக்காது. இயேசுவின்மேல் எறிய கற்களை எடுக்க ஆரம்பிப்பார்கள்.

இங்கே இயேசுவின் பதில் நேரிடையாக இருக்கிறது: 'கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'

நம் சிந்தனைக்கு இன்று, இம்மக்களின் தேடலில் விழுந்த ஓட்டையை எடுத்துக்கொள்வோம்.

அது என்ன தேடலில் விழுந்த ஓட்டை?

முதல் நாள் நிகழ்வு: இயேசு படகில் ஏறவில்லை. சீடர்கள் மட்டுமே ஏறுகின்றார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வு: நிறையப் படகுகள் வருகின்றன. ஆனால் அதில் இயேசுவும் இல்லை, சீடர்களும் இல்லை.

இதற்கிடையில் உள்ள ஒன்றை அவர்கள் காணவில்லை. அது என்ன?

'இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்'

இதுதான் அவர்களின் தேடலில் விழுந்த ஓட்டை.

இயேசுவை நேருக்கு நேராகப் பார்த்து அவரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்க்க மறந்துவிட்டார்கள். அல்லது தங்களுக்கு வசதியான இடத்தில் மட்டும் இயேசுவை அவர்கள் தேடினார்கள்.

ஒருவேளை அவர் மலைக்குச் சென்றதை அவர்கள் கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய பார்வை அவர்களுக்கு மாறியிருக்கும். அவரது அரசாட்சி ஆன்மீகம் சார்ந்தது என எண்ணியிருப்பார்கள்.

கடவுள் இங்கேதான் இருக்க வேண்டும், கடவுள் இப்படித்தான் இருக்க வேண்டும் என மனித அறிவு அவருக்கு வரையறை இடவே விரும்புகிறது.

எனக்கு நானே என்னால் வரையறை இட இயலாதபோது, நான் கடவுளுக்கு வரையறை இடலாமா?

அல்லது நான் மற்றவர்களுக்கு வரையறை இடலாமா?

வரையறைகளை மிஞ்சும் இறைவனை நாம் நம்பினால் போதும். அவர் நம் வரையறைக்குள் வந்துவிடுவார். இதுதான் கடவுளின் வலுவின்மை.

நற்செயல்: நான் எங்கே இருக்கிறேன்? இங்கே நான் எப்படி, எப்போது வந்தேன்? நான் எங்கே போகவேண்டும்? என்ற இலக்கு நிர்ணயக் கேள்விகளைக் கேட்பது.


Friday, April 24, 2020

என் மகன் மாற்கு

இன்றைய (25 ஏப்ரல் 2020) திருநாள்

என் மகன் மாற்கு

இன்று நாம் நற்செய்தியாளரான மாற்கின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவரை இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேதுரு 5:5-14), பேதுரு, '...என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்' என எழுதுகின்றார்.

பவுல் தன்னுடைய கடிதங்களில், அன்பு மகன் அல்லது அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயு என்று குறிப்பிடுவதுபோல இது உள்ளது.

இவர் பேதுருவின் சீடர் என்பதும், இயேசு பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்ய திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் இவர் என்பதும், இவருடைய இல்லத்தின் மேல்மாடியில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார் என்பதும், இந்த இல்லத்தின் மேலறையில்தான் திருத்தூதர்கள்மேல் தூய ஆவி பொழியப்பட்டது என்பதும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் மாற்கு என்பதும், இவருடைய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட நற்செய்தி என்பதும் மரபுவழிச் செய்தி. இவர் யோவான் மாற்கு என்றும் அறியப்படுகின்றார்.

இவரைப் பற்றி திருத்தூதர் பணிகளில் இரண்டு பதிவுகள் வருகின்றன. அவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'பின்பு , பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் (மாற்கு) அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார்' (காண். திப 13:13)

'மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச்செல்ல பர்னபா விரும்பினார். ஆனால், தங்களோடு சேர்ந்து பணி செய்ய வராது, பம்பிலியாவில் தங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டதால் அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை. இதனால், அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே, இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார்' (காண். திப 15:37-39)

முதல் நிகழ்வு பவுலின் முதல் தூதுரைப் பயணத்தில் நிகழ்கிறது. எதற்காக மாற்கு கப்பலிலிருந்து இறங்கி எருசலேம் திரும்பினார் என்று நமக்குத் தெரியவில்லை. கடற்பயணம் பயமாக இருந்ததாலா? அல்லது வீட்டு நினைப்பு வந்ததாலா? அல்லது பவுலோடு வந்தவர்களை இவருக்குப் பிடிக்கவில்லை என்பதாலா? அல்லது பவுலைக் கண்ட பயத்தாலா? அல்லது உள்மனப் போராட்டத்தாலா?

ஏதோ, ஒரு காரணத்திற்காக மாற்கு எருசலேம் திரும்புகின்றார். இந்நிகழ்வில் ஏறக்குறைய யோனா போல இருக்கிறார். பணி செய்வதில் மிகவே தயக்கம் காட்டுகிறார்.

இரண்டாம் நிகழ்வில், இவர் யோனா போல மீண்டும் கப்பலேற முயல்கின்றார். பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் அவர்களோடு இணைந்துகொள்ள விரும்புகிறார். ஆனால், பவுல் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என நினைக்கிறார் பவுல். 'இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே' என்கிறார் பர்னபா. ஒரே நிகழ்வை இரண்டு நிலைகளில் பார்க்கின்றனர் இருவர். பர்னபாவுக்கு மாற்கை எந்த அளவிற்குப் பிடித்தது என்றால், மாற்கிற்காக பவுலையே விட்டுப் பிரிகின்றார். அந்த அளவிற்கு மாற்கு ஆர்வம் கொண்டவராக அல்லது எல்லாருக்கும் பிடித்த இளவலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இறுதியில் பவுலும் மாற்குவும் சமரசம் செய்துகொள்கின்றனர் என்பதை வேறு குறிப்புகள் நமக்குக் காட்டுகின்றன:

'என் உடன் கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்' (காண். கொலோ 4:10) - மாற்கு பர்னபாவின் சகோதரரா அல்லது பவுல் இங்கே அவர்களைக் கிண்டல் செய்கிறாரா என்று தெரியவில்லை.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:11) - பவுல் மாற்கைப் பற்றி நற்சான்று கூறுகிறார்.

மாற்கு என்னும் வரலாற்று மைந்தர் நமக்குத் தரும் செய்தி என்ன?

வாழ்வில் நாம் சில நேரங்களில் பின்னடைவு கொண்டாலும், தொடர்ந்து முன்னேறலாம் என்பதே. வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத் தரவே செய்கின்றது.

முதலில் தோற்றால் பரவாயில்லை. இரண்டாவது வாய்ப்பு நிச்சயம் வரும்.

அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்தி மாற்கு நன்முறையில் திருத்தொண்டு ஆற்றுகிறார். அனைவரின் நற்சான்றையும் பெறுகிறார். தன்னை வெறுத்தவரின் அன்பையும் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தி நூல் காட்டும் சீடர்களும் இப்படித்தான் இருப்பார்கள். முதல் வாய்ப்பில் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். சில நேரங்களில் இறுதிவரையும் அப்படியே இருப்பார்கள். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் மாற்கு.

எல்லாரும் இயேசுவைப் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

அதுவும் முதலிலேயே புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

நற்செயல்: மாற்கு நற்செய்தியை அல்லது நற்செய்தியின் ஒரு பகுதியை வாசிப்பது.

Thursday, April 23, 2020

புல்தரையாய்

இன்றைய (24 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவான் 6:1-15)

புல்தரையாய்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை (யோவானின் பதிவின்படி) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் அப்பங்கள் பலுகுவதற்கு முன் இன்னொரு அற்புதம் நடக்கிறது. அதுதான், புல்தரை.

நிகழ்வு நடக்கின்ற இடம், திபேரியக் கடலின் மறுகரை. மறுகரையில் உள்ள உயர்வான பகுதியில் இயேசு அமர்கிறார். கடற்கரையை ஒட்டி புற்கள் வளர்வதில்லை. ஆனால், இந்தப் பதிவின்படி, 'அப்பகுதி முழுவதும் புல்தரையாய்' இருக்கிறது.

புல்தரை எங்கிருந்து வந்தது?

கடலின் உப்புக் காற்றையும், அதையொட்டி நிலவும் வெப்பமான சூழலையும் எதிர்கொண்டு புல் எப்படி வளர்ந்தது?

புல்தரைக்கும், நற்செய்தியின் இறுதியில் வரும், 'அவர்கள் தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள்' என்ற வாக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

திருப்பாடல் 23இல் ஆண்டவரை தன்னுடைய ஆயன் என அழைக்கின்ற தாவீது, 'பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்' (23:2) எனப் பாடுகின்றார். தாவீது காட்சியில் காணும் அல்லது தாவீது தன் அனுபவத்தில் உணர்ந்த ஒன்று இங்கே நடந்தேறுகிறது.

ஆக, கடவுள் இருக்கும் இடத்தில் பசும்புல் தரையும், இளைப்பாறுதலும் இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:34-42), கமாலியேல் என்னும் கதைமாந்தரை எதிர்கொள்கிறோம். திருத்தூதர்களைப் பற்றிய விசாரணையில் குரல் கொடுக்கின்ற இவர், 'இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்' என சக உறுப்பினர்களை எச்சரிக்கின்றார்.

தானாகவே ஒன்று முடிந்துவிட்டால் அது மனிதரிடமிருந்து வருவது.

அப்படி முடியாதது எதுவும் கடவுளிடமிருந்து வருவது.

'இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கலாம்' என்னும் பிலிப்பின் திட்டம் மனிதரிடமிருந்து வருகிறது. ஆக, அது தானாகவே அழிந்துவிடுகிறது.

ஆனால், 'மக்களை அமரச் செய்யுங்கள்' என்னும் இயேசுவின் திட்டம் கடவுளிடமிருந்து வருகிறது. ஆகையால்தான், அங்கே நின்றுகொண்டவர்கள் தங்கள் கால்களுக்கு அடியில் முளைத்திருந்த பசுமையான புற்களைக் கண்டுகொள்கின்றனர்.

அங்கேயே தொடங்குகிறது அற்புதம்.

இன்று நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் பல முடிவுக்கு வரவில்லை என்றால் அவை நம் திட்டங்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஏனெனில், கடவுளின் திட்டம் அனைத்தும் இனிய முடிவிற்கு வரும்.

ஆஸ்கர் ஒயில்ட் சொல்வார்: 'தொடங்கிய அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். நல்ல முடிவுக்கு வரவில்லை என்றால் அது இன்னும் முடியவில்லை'.

இன்றைய நற்செயல்: நம் வாழ்வில் நாம் அமர்ந்து இளைப்பாறும் புல்தரை நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தல்.


Wednesday, April 22, 2020

பொம்மைகள் அழுவதில்லை

இன்றைய (23 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 3:31-36)

பொம்மைகள் அழுவதில்லை

நாம் இந்த நாள்களில் அனுபவிக்கும் தனிமைப்படுத்தப்படுதல், சமூக விலகல் பல உடல்சார் மற்றும் மனம்சார் பிரச்சினைகளை எழுப்பிக்கொண்டே வருகின்றன. ஒரு பக்கம், இது கடவுளின் சினம் என்று ஆன்மீகவாதிகளும், அவசர இறைவாக்கினர்களும் சொல்லி பணம் வாங்குகின்றனர். இது கடவுளின் சினம் என்றும், கடவுள் இதன் வழியாக உலகை அழிக்கிறார் என்றால், அவர்கள் ஏன் கொரோனா பெயரில் வியாபாரம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இன்னொரு பக்கம், கொரோனா வைத்து அரசியல். சோதனைக் கருவி வாங்குவதில் ஊழல். அதை செய்கின்ற நாட்டிலும் ஊழல். ஒன்று மட்டும் தெரிகிறது, இவர்களுக்கு நம்மேல் அக்கறை இல்லை.

ஒரு பக்கம், கடவுளின் சினம். இன்னொரு பக்கம், மனிதர்களின் பேராசை.

இந்த இரண்டிற்கும் இடையில் இருப்பதற்குப் பதிலாக, கொரோனா வந்து இறந்துவிட்டால் நலம்! என்று எண்ணத் தோன்றுகிறது. பயத்தாலும், கோபத்தாலும் உயிர் தினமும் போய்க்கொண்டிருக்கத் தேவையில்லையே!

I think that's what Samson of the Book of Judges did. He purposely attempted to play with the Philistine fire so that he would be consumed by it early.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியோடு நிக்கதேம்-இயேசு உரையாடல் நிறைவு பெறுகிறது. 'நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக், கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து விழும்' என்ற எச்சரிக்கையோடு முடிகிறது உரையாடல்.

கடவுள் சினம் கொள்பவரா? அல்லது இரக்கம் கொள்பவரா?

இரண்டிற்கும் ஆதாரங்கள் விவிலியத்தில் உள்ளன.

ஆனால், கடவுளின் இரக்கமே மேலோங்கி இருக்கிறது. நான் எப்போதும் நினைக்கும் ஒரு கதைமாந்தர் சிம்சோன். அவர் மற்றவர்களைப் போல இருக்க விரும்பவில்லை. அதுதான் அவருடைய பிரச்சினை. அவருடைய அம்மா, 'நீ ஏன் மற்றவர்களைப் போல நம் இனத்தில் பெண் கொள்ள மறுக்கிறாய்? நீ ஏன் மற்றவர்களைப் போல இருக்க மறுக்கிறாய்?' என்று கேட்கின்றார். ஆனால், சிம்சோன் மற்றவர்களைப் போல இருக்க நினைத்த அனைத்துப் பொழுதுகளிலும் தோல்வியைச் சந்திக்கின்றார். தான் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும், மறுதலிக்கப்பட்டாலும், காட்டிக்கொடுக்கப்பட்டாலும், அவமானப்படுத்தப்பட்டாலும், இறுதியாக கடவுளிடம் குரல் எழுப்புகின்றார். என்ன ஓர் ஆச்சர்யம்! கடவுள் அவருடைய குரலைக் கேட்கின்றார். கடவுள் மனித அறநெறிக்கு எந்த வரையறையும் வைப்பதில்லை என்பது சிம்சோன் வாழ்வில் தெளிவாகிறது. மனித வலுவின்மைதான் கடவுளின் இயங்குதளம்.

நம்பிக்கையின்மையும்கூட ஒரு வலுவின்மைதான்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-33), திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாருக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றனர். ஆக, தலைமைச் சங்கத்தார் அவர்கள்மேல் கோபம் கொண்டு கொதித்தெழுகின்றனர். ஆனால், மனிதர்களின் கோபத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

மனிதர்களின் கோபம் கடவுளின் இரக்கத்தின்முன் ஒன்றுமில்லை.

'கடவுளுக்கல்லவா நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்?' என்று கேட்கின்றனர் திருத்தூதர்கள்.

இவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் கடவுள் இவர்களுக்கு இரக்கம் காட்டினார் எனில், தன்னுடைய நாசீர் அர்ப்பண வாக்குறுதிகள் அனைத்தையும் மீறிய சிம்சோனுக்கு கடவுள் ஏன் இரக்கம் காட்டினார்?

கடவுளை வரையறுக்க நம்மால் இயலாது.

ஆக, நாம் கடவுளின், அரசியல்வாதிகளின், விதியின், கடவுளின் திருவுளத்தின், இயற்கையின் கையில் இருக்கும் பொம்மை.

அவர்களின் சினம், இரக்கம் எல்லாவற்றாலும் நாம் அலைக்கழிக்கப்படலாம்.

ஆனாலும், பொம்மைகள் அழுவதில்லை!

Tuesday, April 21, 2020

ஒளி

இன்றைய (22 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவான் 3:16-21)

ஒளி

கௌதம புத்தரின் சீடர்களுள் ஒருவர் அவரிடம், 'ஐயனே! மனிதர் படும் கோபத்திற்குத் தண்டனை என்ன?' என்று கேட்டார். அதற்கு புத்தர், 'தம்பி! கோபத்திற்குத் தண்டனை ஏதும் இல்லை. ஏனெனில், அவர்களுடைய கோபமே அவர்களுக்குத் தண்டனை' என்று விடையளித்தார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு-நிக்கதேம் உரையாடல் தொடர்கிறது.

இந்த உரையாடலில் மிக முக்கியமான இறையியல்கூற்றை யோவான் பதிவு செய்கின்றார்: 'தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' (யோவா 3:16). யோவான் நற்செய்தியாளரின் சுருக்கக் கூற்றுக்களில் இதுவும் ஒன்று.

இங்கே, இயேசு கடவுளின் மகன் என்றும், அவர் மேல் நம்பிக்கை கொள்தல் என்றும், நிலைவாழ்வு என்பது நம்பிக்கையாளர்களுக்கு உண்டு என்றும், கடவுள் உலகின்மேல் அன்புகூர்கின்றார் என்றும், அந்த அன்பு அவருடைய தற்கையளிப்பில் வெளிப்படுகிறது என்றும் பல இறையியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நம்பிக்கை கொள்தல்' பற்றிய இரண்டு புரிதல்கள் தெளிவாக இருக்கின்றன. ஒன்று, 'நம்பிக்கை கொள்தல் என்றால் ஒளிக்கு வருதல்.' இரண்டு, 'நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல் என்றால் தண்டனைத் தீர்ப்பு அளித்தல்.'

நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலால் தண்டனைத் தீர்ப்பு வருவதில்லை. ஏனெனில், நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலே தண்டனைத் தீர்ப்புதான் என்பதுதான் இயேசுவின் புதிய பகிர்வு.

'ஒளிக்கு வருதல்' என்பதை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

அ. ஒளி உலகிற்கு வந்துவிட்டது (அந்த ஒளிதான் இயேசு).

ஆ. தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

இ. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.

ஈ. தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

உ. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.

ஊ. (அவர்கள் ஒளியிடம் வருவதால்) அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றனர்:

அ. கடவுள்தான் ஒளி. அவரே உண்மை. அவரோடு இணைந்து மனிதர்கள் செயல்படும்போது அவர்கள் நன்மையானதைச் செய்கின்றனர்.

ஆ. தீங்கு செய்யும் மனிதர்கள் ஒளியிடம் வர அஞ்சுகிறார்கள். ஏனெனில், வந்தால் அவர்களுடைய செயல்கள் வெளியாகிவிடும். அவர்கள் நிந்தனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக வேண்டும். நிந்தனையும் வெட்கமும் பொய்மையின் கனிகள்.

ஒளி என்றால் என்ன?

ஒளி என்பது வெளியே எரியும் வெளிச்சம் அல்ல. மாறாக, அது நன்மை அல்லது உண்மையை நோக்கி என்னைத் தூண்டி எழுப்பும் ஒரு தீப்பொறி.

எப்படி?

நான் செய்யும் தவறை எனக்கு மேலிருக்கும் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார் என்றால், அந்தச் சுட்டிக்காட்டுதல் ஒரு ஒளி.

நான் வாசிக்கும் புத்தகம் நான் வாழ்வில் அனுபவிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்றால், அந்த வாக்கியம் ஒரு ஒளி.
நான் காய்ச்சலாய்க் கிடக்க, ஒரு டைலினால் அல்லது பாராஸெட்டமால் என் காய்ச்சல் போக்குகிறது என்றால், அந்த மாத்திரை ஒரு ஒளி.

ஆக, ஒளி என்பது எந்த வடிவத்திலும் வரலாம்.

அகுஸ்தினார் தன்னுடைய வாழ்வின் மனமாற்றம் பற்றி எழுதும்போது, இனி தன்னாளுகையோடும் உடல் இன்பங்களை அடக்கியும் அவர் முடிவெடுக்கும் தருணத்தில் நடந்த மனப்போராட்டை இப்படி எழுதுகின்றார்:

'நான் எழுந்தேன். எழுந்து உம்மிடம் (இறைவனிடம்) வந்தேன். இனி என் பழைய வாழ்க்கையை வாழப் போவதில்லை என முடிவெடுத்தேன். ஆனால், என் முடிவு என்னுடைய இச்சைக்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும் பிடிக்கவில்லை. அவை, என் மேலாடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, 'எங்களைவிட்டு போகப் போகிறாயா? உண்மையிலேயே போகப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? சீக்கிரம் திரும்பிவந்துவிடுவாய்தானே? ஒருமுறை கூட திரும்ப வரமாட்டாயா? இன்றைக்கே போக வேண்டுமா? நாளை பார்த்துக்கொள்ளக் கூடாதா?' என்று கேட்டன.'

ஆக, ஒளியை நோக்கி நாம் வருவதற்குத் தயாராக இருந்தாலும், இருளின் செயல்கள் தரும் இன்பம், 'இவை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியும்?' என்ற அச்சத்தையும், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற தயக்கத்தையும் தருகின்றன.

ஒளி எல்லார்மேலும் ஒளிர்கிறது. சிலரே அதைக் கண்டு அதனிடம் வருகிறார்கள்.

இருளின் செயல்களுக்குத் தண்டனை என்று எதுவுமே இல்லை. ஏனெனில், இருளின் செயல்களே தண்டனை. ஒளி மட்டுமே உண்மை. ஒளி மட்டுமே விடுதலை.

நற்செயல்: மெழுகுதிரி போல என் வாழ்வு எரிந்தாலும், என் கால் பகுதியில் இருள் இருக்கும் என்பது நியதி. இந்த இருள் அகல வேண்டுமானால், அங்கே இறை என்னும் மெழுகுதிரியை ஏற்ற முயல்தல் சால்பு.

Monday, April 20, 2020

மறுபடியும் பிறத்தல்

இன்றைய (21 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 3:7-15)

மறுபடியும் பிறத்தல்

இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக, அதாவது, இயேசு-நிக்கதேம் உரையாடலின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

இயேசுவா அல்லது நிக்கதேமா, யார் தூக்கக் கலக்கத்தில் இருந்தார் என்று தெரியவில்லை. இயேசு ஒன்றைச் சொல்ல, நிக்கதேம் வேறொன்றைச் சொல்ல, இயேசு இன்னொன்றைச் சொல்ல என, தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நகர்கிறது நற்செய்தி வாசகம்.

இயேசு சொல்லும் ஓர் உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் சொல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்.'

நேரடியாக இந்த உருவகம் இயேசுவுக்குத்தான் பொருந்துகிறது. அதாவது, உரையாடலின் தொடக்கத்தில், நிக்கதேம் இயேசுவிடம், 'கடவுளிடமிருந்து வந்தாலன்றி', என்று இயேசு கடவுளிடமிருந்து வந்ததை அடிக்கோடிடுகின்றார். ஆனால், அவரின் வார்த்தைகளில் ஐயம் கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இந்த ஐயத்தைப் போக்கும் முகத்தான், இயேசு தான் காற்றைப் போல இருப்பதாகவும், தான் விரும்பியதைச் செய்கிறார் எனவும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதும், தான் எங்கே செல்கிறேன் என்பது வேறு யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறார். 

ஆனால், 'தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும்' என்று சொல்வதன் வழியாக, தன்னைத் தவிர மற்றவர்களும் தூய ஆவியால் பிறக்க முடியும் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார் இயேசு.

இயேசு கொணர்கின்ற மீட்பு, கட்டின்மை அல்லது சுதந்திரம் என்ற பொருளில் தரப்படுகிறது.
காற்றின் தொடக்கம் யாருக்கும் தெரியாது. அதன் முடிவும் யாருக்கும் தெரியாது. அதை யாரும் வேலி போட்டு நிறுத்தவோ, அதன் போக்கை மாற்றவோ இயலாது. 

இந்தக் கட்டின்மைதான் மீட்பு.

இன்று நாம் நேரம் மற்றும் இடத்தால் வரையறுக்கப்படுகின்றோம். நேரத்தையும், இடத்தையும் தாண்டி நம்மால் செயல்பட முடிவதில்லை.

இரண்டு நாள்களுக்கு முன் திருச்சி பண்பலையில் சுவாசம் பற்றி ஒரு மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். பிராணயாமா (மூச்சுப் பயிற்சி) செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் அவர், நாம் மூச்சை உள்ளே இழுத்து, மூச்சை வெளியே விடுவதற்கும் என ஒரு சிறிய இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் கவனம் செலுத்தும் ஒருவர் நேரத்தையும் இடத்தையும் கடக்க முடியும் என்கிறார்.

ஆக, நாம் எந்தவொரு விருப்பு மற்றும் வெறுப்பினால் கட்டப்படாமல், காற்று போல இருப்பதே இயேசு தரும் மீட்பு.

'மன்னிக்கின்ற இதயம் கோழி இறகு போல மாறிவிடும்' என்பது சந்தால் இன மக்களிடையே விளங்கும் ஒரு பழமொழி. அதாவது, பறக்க ஆரம்பிக்கும்.

பற்றுக்கள் குறையக் குறைய நாம் காற்று போல ஆகிறோம்.

எனக்கென சேர்த்து வைக்கும்போது அது கனமாக மாறுகிறது.

என் மையமாக வைக்கும் அன்பு இச்சை என்றும், எனக்கு நானே சேர்த்து வைக்கும் பணம் பேராசை என்றும், பகிர்ந்துகொள்ளாமல் சேகரிக்கப்படும் அறிவு தற்பெருமை என்றும் மாறிவிடுகிறது. ஏனெனில், இதில் நான் என்னோடு கட்டப்பட்டு என் எடை கூடிவிடுகிறது.

கட்டுக்கள் அவிழ அவிழ ஒருவர் உயரே எழுவார்.

இதுவே மறுபடியும் பிறத்தல்.

நற்செயல்: இன்று என்னைக் கீழே இழுக்கும் ஊனியல்பு எது? என்னை மேலே இழுக்கும் தூய ஆவியின் இயல்பு எது? முன்னது விடுத்து பின்னது பிடித்தல் சால்பு.

Sunday, April 19, 2020

நிக்கதேம்

இன்றைய (20 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 3:1-8)

நிக்கதேம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஓர் இரவில் இயேசுவைச் சந்திக்க வருகிறார் நிக்கதேம். இயேசுவை அடக்கம் செய்யும் நிகழ்விலும் இவர் வருகிறார். இவர் ஒரு பரிசேயர். நிறையக் கற்றவர். ஆளுநர் பிலாத்து வரை ஆள்களைத் தெரிந்தவர்.

இயேசுவிடம் ஓர் இரவில் வருகின்றார்.

யோவான் நற்செய்தியில் உரையாடல்கள் தொடங்கும் பகுதி இதுதான். மேலும், யோவான் நற்செய்தியில், இயேசு, யூதர்கள், புறவினத்தார், சமாரியர்கள், கிரேக்கர்கள், உரோமையர்கள் என்று ஒவ்வொரு வட்டமாக கடந்து செல்வதுபோல யோவான் தன்னுடைய நற்செய்தியைக் கட்டமைக்கிறார். அவ்வகையில், ஒட்டுமொத்த யூதப் பானையின் பதத்துக்கு ஒரு சோறாக வந்தவர்தான் நிக்கதேம்.

மேலும், யோவான் நற்செய்தியில் பொருள் இரண்டு நிலைகளில் நகரும். ஒன்று, மேலோட்டமான நிலை. இரண்டு, ஆழமான நிலை. கதைமாந்தர்கள் பேசும் அனைத்தும் மேலோட்டமான நிலையில் இருக்கும். இயேசு பேசும் அனைத்தும் ஆழமான நிலையில் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இயேசு சமாரியப் பெண்ணிடம், 'நான் வாழ்வுதரும் தண்ணீரை உமக்கு அளிப்பேன்' என்பார். ஆனால் பெண்ணோ, 'உம்மிடம் வாளி இல்லையே! கிணறு ரொம்ப ஆழமானதே!' என்பார்.

இயேசு பிலாத்துவிடம், 'உண்மையை அறிவிக்கவே வந்தேன்' என்பார். ஆனால் பிலாத்துவோ, 'உண்மையா அது என்ன?' என்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படி ஒன்று நடக்கிறது.

இயேசு நிக்கதேமிடம், 'மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது' என்கிறார்.

ஆனால், நிக்கதேம், 'வயதான பின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?' எனக் கேட்கின்றார்.

ஏன் இந்த முரண்பாட்டு இலக்கியக் கூற்றை யோவான் கையாளுகின்றார்?

நற்செய்தியை வாசிக்கும் வாசகர், இயேசுவின் வழிநடத்துதலால் மட்டுமே மேலோட்டமான பொருளிளிலிருந்து ஆழமான பொருளுக்குக் கடந்து செல்ல முடியும் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு கையாளுகின்றார்.

நிக்கதேம் மூன்று நிலைகளில் தனக்குத் தானே முரணாக இருக்கின்றார்:

அ. இயேசுவை, 'கடவுளிடமிருந்து வந்தவர்' என ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரை 'ரபி' அல்லது 'போதகர்' என அழைக்கின்றார்.

ஆ. இயேசுவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். ஆனால், மற்றவர்களுக்கு அஞ்சி இரவில் இயேசுவிடம் வருகின்றார்.
இ. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதை அறிந்துள்ளார். இருந்தாலும் புரியாதவர்போல கேள்வி கேட்கின்றார்.

முரண்கள் நம் வாழ்விலும் இருக்கக் கூடியவை.

முரண்களை நாம் முழுமையாக ஒழித்து ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டுவரவும் தேவையில்லை.

இதையே, சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்' (காண். சஉ 7:18) என்கிறார்.

ஆக, இன்று என் ஆன்மீக வாழ்வில் நான் எதிர்கொள்ளும் முரண்கள் எவை?

நற்செயல்: ஒரு பேப்பர் எடுத்து, அதை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் நம்மிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், அதற்கு மறுபுறம் அதற்கு எதிரான நன்மைகுறை பண்புகளையும் பட்டியலிடலாம். இரண்டும் முரண்கள்தாம். ஆனால், இரண்டும் இருக்கும் நாம் முரண் அல்ல. அல்லது ஏன், முரணாகக் கூட இருக்கலாம்?

Friday, April 17, 2020

கடின உள்ளம்

இன்றைய (18 ஏப்ரல் 2020) நற்செய்தி (மாற் 16:9-15)

கடின உள்ளம்

உயிர்ப்பின் எண்கிழமையின் இறுதி நாளாகிய இன்று, இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வை நாம் மாற்கு நற்செய்தியிலிருந்து வாசிக்கின்றோம். மாற்கு நற்செய்திதான் முதலில் எழுதப்பட்டது என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மேலும், மற்ற நற்செய்தி நூல்கள் மாற்கு நற்செய்தியின் நீட்சி என்பதும் பரவலாகக் கருதப்படும் ஒன்று. மற்ற நற்செய்தியாளர்கள் பதிவுசெய்த நிகழ்வுகளை மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்கிறார் மாற்கு.

இன்றைய வாசகம் இயேசு உயிர்ப்புக்குப் பின் சீடர்களுக்குத் தோன்றிய நிகழ்வு பற்றியதாக இருந்தாலும், இங்கே முழுக்க முழுக்க சீடர்களைப் பற்றித்தான் நாம் வாசிக்கின்றோம்:

அ. சீடர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்
ஆ. பெண்கள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை
இ. மற்றவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை
ஈ. அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தனர்

இறுதியில், இயேசு அவர்களின் கடின உள்ளத்தையும் அதிலிருந்த நம்பிக்கையின்மையையும் கடிந்துகொண்டு, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' எனக் கட்டளையிடுகின்றார்.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்வதில்லை. அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.

எப்போது நம் உள்ளம் கடினப்படுகிறது?

மூன்று காரணங்களுக்காக என நினைக்கின்றேன்:

அ. நம்முடைய இறந்தகாலம் நம்மைப் பின்நோக்கி இழுக்கும்போது. (When we are pulled back by our past)

எடுத்துக்காட்டாக, என் கடந்த கால வாழ்வின் கசப்பான அனுபவம் அல்லது காயம் என்னைப் பின்நோக்கி இழுக்கும்போது, என்னால் இன்றைய வாழ்வின் இனிப்பான அனுபவங்களைச் சுவைக்க முடிவதில்லை.

ஆ. நம்முடைய நிகழ்காலத்தின்மேல் நாம் காதல்வெறி கொள்ளும்போது. (When we are enamoured of our present)

அதாவது, அளவுக்கு அதிகமாக நிகழ்காலத்தைப் பற்றிக்கொள்ளும்போது. இன்று நான் செய்யும் வேலை, படிக்கும் படிப்பு, உடனிருக்கும் உறவு போன்றவற்றில் நான் அதிகப் பற்றுக்கொள்ளும்போதும் என் உள்ளம் கடினப்படும். ஏனெனில், என்னால் வாழ்வை அண்ணாந்து பார்க்க முடியாத நிலையை இவை உருவாக்கிவிடும். இன்னும் நான் செல்ல வேண்டிய பாதை உள்ளது என்பதை மறக்கச் செய்யும்.

இ. நம்முடைய எதிர்காலத்தின்மேல் பயம் வரும்போது. (When we are afraid of our future)

நாளை என்ன நடக்குமோ, அல்லது அடுத்த ஐந்து வருடத்தில் எப்படி இருப்பேனோ, அல்லது என்னுடைய இறுதி நாள்கள் எப்படி இருக்குமோ என்ற பயம் நம் உள்ளத்தை கடினப்பத்திவிடும்.

கடின உள்ளமும் நம்பிக்கையின்மையும் இரட்டைப் பிள்ளைகள்.

கடின உள்ளம் தன்மேல், பிறர்மேல், இறைமேல் உள்ள நம்பிக்கையை அசைத்துவிடும். விளைவாக, அவநம்பிக்கை மீண்டும் நம் உள்ளத்தை கடினப்படுத்தும்.

இச்சங்கிலித் தொடரை எப்படி உடைப்பது?

மூன்று வார்த்தைகள் ஃபார்முலாவை நினைவில் கொள்ள வேண்டும்:

'இதுவும் கடந்து போகும்'

அல்லது

'எல்லாம் சில காலம்'

பெத்லகேம் பிறப்பு, வானதூதர் பாடல், எகிப்து பயணம், நாசரேத்து குழந்தைப் பருவம், எருசலேம் காணாமல் போதல், திருமுழுக்கு, இறையாட்சிப் போதனை, கதைகள், உவமைகள், அறிகுறிகள், வல்ல செயல்கள், அற்புதங்கள், கானாவூர் திருமணம், கலிலேயக் கடல் பயணம், சந்திப்புக்கள், வரவேற்புகள், ஓசன்னா, சிலுவையில் அறையும், சிலுவை, வாடகைக் கழுதை, வாடகைக் கல்லறை, நறுமணப் பொருள், தோட்டக்காரர், மகதலா மரியா, அவளிடமிருந்து விரட்டப்பட்ட ஏழு பேய்கள், வானதூதர்கள், போர்வீரர்கள், வதந்தி, ஆளுநர் -

- இவை எல்லாம் சில காலம். இவை எல்லாம் கடந்து போகும்.

நற்செயல்: இன்று நம் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜின் (refrigerator) ஃப்ரீஸ்சரைத் (freezer) திறந்து கொஞ்சம் க்ளீன் செய்யலாம். ஃப்ரீஸ் (freeze) ஆன எதுவும் இயங்குவதில்லை. இயங்குவது எதுவும் ஃப்ரீஸ் (freeze) ஆவதில்லை.

Thursday, April 16, 2020

இடுப்பில் ஆடை

இன்றைய (17 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 21:1-14)

இடுப்பில் ஆடை

இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் மூன்றாம் முறை தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

நிகழ்வின் தொடக்கத்தில், 'நான் மீன் பிடிக்கப் போகிறேன்' என்கிறார் சீமோன் பேதுரு. தான் மனிதர்களைப் பிடிக்க வேண்டும் என்பதை மறந்ததால் அப்படிச் செய்தாரா? இல்லை என்று நினைக்கிறேன். தான் தன்னுடைய தலைவரை மறுதலித்தது பேதுருவின் ஆன்மாவில் விழுந்த அம்மைத் தழும்பாய் குற்றவுணர்வாக உருத்திக்கொண்டே இருந்திருக்கலாம். ஆக, தான் மனிதரைப் பிடிக்கத் தகுதியற்றவன் என்ற நிலையிலோ, அல்லது தன்னுடைய சோகம் அல்லது தன்மேல் உள்ள கோபத்தை வடிகாலாக்க மீன்பிடிக்கச் சென்றிருக்கலாம்.

மீன் ஒன்றும் சிக்கவில்லை. கரையிலிருந்து ஒரு குரல்: படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். வலை நிறைய மீன்கள் அகப்பட்டவுடன், யோவான் பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என அடையாளம் காட்டுகின்றார்.

இதற்குப் பின் பேதுரு செய்யும் செயல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். மூன்று செயல்களைச் செய்கின்றார் பேதுரு.

அ. தம் ஆடையைக் களைந்திருந்த பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றார்.

ஒன்று, பேதுரு நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அணியும் மிகச் சிறிய அல்லது குறைவான ஆடையை அணிந்திருக்க வேண்டும்.

ஆ. படகு கரைக்குச் செல்லுமுன் தண்ணீரில் நீந்தி இயேசுவை நோக்கிச் செல்கின்றார்.

இ. 'மீன்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்' என்று இயேசு சொன்னவுடன், படகில் ஏறி, வலையிலிருந்து மீன்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வருகின்றார்.

பேதுருவின் குற்றவுணர்வு இங்கே படிப்படியாக மறைகிறது. எப்படி?

முதலில், நாம் தவறு செய்யும்போது, நம்முடைய பார்வையில் மிகச் சிறியவர்களாக மாறிவிடுகிறோம். அல்லது நாம் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போல கூனிக் குறுகுகின்றோம். ஏனெனில், பாவம் செய்தவுடன் நம் முதற்பெற்றோர் பெற்ற முதல் உணர்வே நிர்வாண உணர்வு அல்லது வெட்க உணர்வுதான். இயேசுவின் உடனிருப்பு, பேதுருவை உடுத்துகிறது. பேதுரு ஆடையை அணிந்துகொள்கின்றார்.

இரண்டாவதாக, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கின்றார். இவருக்கும் தண்ணீருக்குமான இறுதி நெருக்கம் இது. 'மீன்பிடிக்கப் போக விரும்பிய' பேதுருவை இறுதியாக, கடல்நீரில் நீந்த வைக்கின்றார் இயேசு. இப்போது நீந்திய இவர் இனி நீந்தப் போவதில்லை. இவர் இனி மனிதர்களைப் பிடிப்பாரே அன்றி, மீன்களைப் பிடிக்க மாட்டார். ஆக, தானே தன்னுடைய பழைய தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக இறுதியாக தண்ணீர் தன் உடலைத் தொட அனுமதிக்கின்றார். இதைக் கொஞ்சம் உருவகமாகச் சொன்னால், தன்னுடைய தவற்றை எண்ணி தான் வடித்த கண்ணீர்த்துளிகளை இத்தண்ணீர் சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக, படகைக் கரைக்கு இழுத்து மீன்களை இயேசுவிடம் கொண்டுவருகின்றார். படகு என்பது திருச்சபையையும், கரை என்பது இறையாட்சியின் நிறைவேறுதலையும் குறிக்கிறது. ஆக, திருச்சபை என்னும் படகை இறையாட்சி என்னும் கரையில் சேர்த்து, மீன்கள் என்னும் நம்பிக்கையாளர்களை இயேசுவிடம் கொண்டுவருவதே பேதுருவின் வேலை.

இந்த மூன்று படிகளில் பேதுருவின் குற்றவுணர்வு களையப்பட்டு, பொறுப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

நாமும் பல நேரங்களில் தவறு செய்கின்றோம். ஆனால், இயேசுவின் உடனிருப்பு நம் தவற்றை நமக்கு உணர்த்தி, நம் நிர்வாண உணர்வை அகற்றி நம்மை உடுத்துகிறது. இரண்டாவதாக, தண்ணீரில் நீந்துதல் நம் திருமுழுக்கையும், அல்லது ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் சிந்துகின்ற கண்ணீரையும் குறிக்கிறது. திருமுழுக்கின் தண்ணீர் மற்றும் ஒப்புரவின் கண்ணீர் வழியே நாம் தூய்மை அடைகிறோம். மூன்றாவதாக, அப்பமும் மீனும் நற்கருணையைக் குறிக்கிறது. இந்த நற்கருணை வழியாக நாம் இயேசுவோடு பந்தி அமர்கிறோம். நம் உறவு புதுப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து, இயேசு, இங்கே, மனித ஏமாற்றத்தையும், பசியையும் அறிந்தவராக இருக்கின்றார். 'பிள்ளைகளே, மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா!' என்றும் 'உணவருந்த வாருங்கள்' என்றும் வாஞ்சையோடு பேசுகின்றார். சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை. நம் உடல் ஏற்றதால் அவருக்கு மனித வாழ்வின் ஏமாற்றமும் பசியும் நன்றாகத் தெரியும்.

ஆக, அவரைக் கடவுளாக அந்நியப்படுத்துவதைவிட, மனிதராக அருகில் வைத்துக்கொள்தல் நலம்.

நற்செயல்: இன்று என்னை நிர்வாண உணர்வுகொள்ளச் செய்யும் என்னுடைய குறை எது? என் நிர்வாணத்தைக் களைந்து ஆடையை இடுப்பில் கட்டிக்கொள்ள நான் தயாரா?


Wednesday, April 15, 2020

மீன்துண்டு

இன்றைய (16 ஏப்ரல் 2020) நற்செய்தி (லூக் 24:35-48)

மீன்துண்டு

'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று கேட்டார்.

அவர்கள் வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.

நிற்க.

இந்த ஒற்றை மீன்துண்டு மூன்று விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

அ. சீடர்கள் தங்கள் பணிக்குத் திரும்பினார்கள்

இயேசு இறந்தபின், தங்களுடைய வேலையைப் பார்க்கத் திரும்பிச் செல்கின்றனர் திருத்தூதர்கள். குறிப்பாக, மீன்பிடித் தொழில் செய்தவர்கள் மீண்டும் தங்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள். இருந்தாலும், ஒரே குடும்பமாக கூடி இருக்கின்றனர்.

ஆ. சீடர்கள் உணவு உண்டனர்

இயேசு இறந்துவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது என்று ஓய்ந்திருக்கவில்லை திருத்தூதர்கள். தங்கள் வாழ்வைத் தக்க வைத்துக்கொள்ள தாங்கள் உண்ண வேண்டும் என்பதை அறிந்த எதார்த்தவாதிகளாய் இருக்கிறார்கள்.

இ. கொஞ்சம் எக்ஸ்ட்ரா வைத்திருந்தார்கள்

யாராவது ஒருவர் வந்தால் அவர்களுக்கு என்று மீன்துண்டு ஒன்றை ஒதுக்கி வைக்கிறார்கள். இது அவர்களுடைய நிறைவு மனப்பான்மையைக் குறிக்கிறது. சில நேரங்களில் கடவுளே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த மீன்துண்டு நமக்குச் சொல்வது என்ன?

இலத்தீன் மொழியில் ஒரு சொலவடை உண்டு: 'ப்ரீமும் எஸ்த் வீவெரே' (Primum est Vivere) - அதாவது, உயிர் வாழ்வதுதான் முதன்மையானது. அல்லது உயிரைத் தக்கவைப்பதுதான் முதன்மையானது. மற்ற எல்லாம் காத்திருக்கலாம். உயிர் போனால் போனதுதான். அந்த உயிர் வாழ்வதற்கு உடல் அவசியம். ஆக, உடலைக் காப்பாற்றாமல் உயிரைக் காப்பாற்ற முடியாது. அந்த உடலுக்குத் தேவையான உணவும், பராமரிப்பும் அவசியம். உடல் காப்பாற்றப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டால்தான் நாம் கொண்டிருக்கும் மற்ற அனைத்திற்கும் பொருள் உண்டு: உறவு, பணம், வேலை, படிப்பு, பதவி, பயணம், உதவி மற்றவை அனைத்தும் உடலும், உயிரும் இருந்தால்தான் சாத்தியம்.

இயேசுவின் சீடர்கள் இதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்' என்ற நிலையில், இயேசுவின் இறப்பு சோகத்தையும், வெறுமையையும், விரக்தியையும் தந்தாலும், தங்களுடைய வேலையைத் தொடர்கிறார்கள், உண்கிறார்கள், நிறைவுடன் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும்போதுதான் அங்கே அற்புதம் நடக்கிறது.

அங்கே இயேசு வருகிறார்.

அவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றுகிறார். 'நீங்கள் என் சாட்சிகள்' என்று அவர்களுடைய பணியின் இலக்கை மாற்றுகின்றார்.

ஆக, சுவரை நான் தயராக வைத்தால்தான் அவர் சித்திரம் வரைவார்.

இந்நாள்களில் நாம் 'லாக்டவுனில்' இருக்கிறோம். மற்ற எல்லாம் காத்திருக்கலாம். உயிரும், உடலும் போனால் வராது. ஆனால், இவற்றை நாம் இந்நாள்களில் காத்துக்கொண்டால், அவர் நம்மிடம் வருவார். நம் அருகே அமர்ந்து அவசரமின்றி உண்பார். நம் வாழ்வின் இலக்கை மாற்றி விடுவார்.

நற்செயல்: என் உடலோடு நான் இன்று உரையாடுவேன்.

Tuesday, April 14, 2020

கண்கள் மறைக்கப்பட்டிருந்தன

இன்றைய (15 ஏப்ரல் 2020) நற்செய்தி (லூக் 24:13-35)

கண்கள் மறைக்கப்பட்டிருந்தன

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் எண்கிழமையின் புதன் கிழமையில் இருக்கின்றோம். திருவழிபாட்டு ஆண்டில், கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புக் காலத்தில் எண்கிழமைகள் (எட்டு நாள்கள்) உள்ளன. கிறிஸ்து பிறப்பு விழாவின் எட்டாம் நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டப்படுகிறது, விருத்தசேதனம் செய்யப்படுகிறது. உயிர்ப்பின் எட்டாம் நாளில் ஆண்டவராகிய கிறிஸ்து தன்னைச் சீடர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். எட்டாம் திருவிழா என்பது சைவத்திலும் முக்கியமான ஒன்று. எட்டாம் திருநாளில்தான் கடவுள் புதிய அவதாரம் எடுப்பார்.

பாஸ்கா காலத்தின் எண்கிழமையில் உள்ள வாசங்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வுகளை நம் சிந்தனைக்குக் கொண்டுவருகின்றன. அவ்வகையில் இன்றைய நாளில் நாம் எம்மாவு நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வை லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார்.

எம்மாவு சென்ற சீடர்களின் கண்கள் 'மறைக்கப்பட்டிருந்தன' (காண். 24:16) என்று நிகழ்வு தொடங்கி, அவர்கள் 'கண்கள் திறக்கப்பட்டன' (காண். 24:31) என்று நிகழ்வு முடிகிறது. இங்கே 'கண்கள்' என்பவை சீடர்களின் அகக்கண்கள் அல்லது உள்ளத்தைக் குறிக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம். அல்லது, கண்களில் கண்ணீரும், உள்ளத்தில் சோகமும் அவர்களின் புறக்கண்களை மறைத்துவிட்டன என்றும் பொருள் கொள்ளலாம்.

மறைக்கப்பட்டிருந்த கண்கள் எப்படி திறக்கப்படுகின்றன? அல்லது என் கண்கள் திறக்கப்பட வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?

அ. திறந்த மனம் வேண்டும்

சீடர்கள் தங்களோடு ஒருவர் வழிப்பயணத்தில் சேர்ந்துகொள்வதை அனுமதிக்கின்றனர். 'வழி நெடுகிலும் நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று முன்பின் தெரியாத ஒருவர் கேட்டவுடன், 'யோவ் ... போயா ... உன் வேலையைப் பார்த்துக்கிட்டு! நாங்க என்னவும் பேசுவோம் உனக்கென்ன!' என்று அவரிடம் கேட்டிருக்கலாம். அல்லது, 'மாப்ள! யார்ரா இது! நம்ம உரையாடலுக்குள் வருகிறார்' என்று தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டு தள்ளி நடந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. உடனடியாகப் பதிலிறுக்கின்றனர். மேலும், அவரைப் பேசவும் அனுமதிக்கின்றனர். ஒருவேளை, அவர்களுடைய விரக்தி மற்றும் சோகத்தைப் பங்கிட ஒருவருக்காக ஏங்கினார்களோ என்னவோ!

ஆ. இறைவார்த்தை அறிய வேண்டும்

இறைவார்த்தை என்பது விவிலியம் மட்டுமல்ல. மாறாக, இறைவன் பல்வேறு வகைகளில், பல்வேறு நபர்களில் நம்மோடு பேசலாம். வழிப்போக்கர் இறைவார்த்தையை எடுத்துரைத்தவுடன் அவர்கள் அதை நம்பத் தொடங்குகிறார்கள். இன்று இறைவார்த்தை என்பது நம் அன்பிற்குரியவரின் உரையாடலில், நாம் டிவியில் பார்க்கும் விளம்பரத்தில், ஒரு குறுஞ்செய்தியில் எங்கும் வரலாம். அந்த வார்த்தையை இறைவனின் வார்த்தை என்று நம்பி அதை ஏற்றல் நலம்.

இ. கை விரித்து வரவேற்க வேண்டும்

தங்களோடு வழிநடந்த முன்பின் தெரியாத நபரிடம், 'மாலை நேரம் ஆயிற்று. எங்களோடு தங்கும்' என்கின்றனர் சீடர்கள். யூத சமூகத்தில் விருந்தோம்பல் மிக முக்கியான மதிப்பீடாக இருந்தது என்பதற்கு இது சான்று. நாம் யாருக்காவது கொடுத்தால் அது நமக்கே திரும்பி வரும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. ஆனால், அந்த இரவில் இவர்கள் தங்களுடைய சிறிய இல்லத்திற்குள் இந்த அந்நியரை வரவேற்றது பாராட்டுதற்குரியது.

இம்மூன்று படிகளின் இறுதியில் கண்கள் திறக்கப்படுகின்றன.

இந்நாள்களில் நாம் நம் இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வெளியே செல்லவும், வழி நடக்கவும், அந்நியரைச் சந்திக்கவும் வாய்ப்பில்லை. ஆனால், வெறுமனே என்ன செய்வது? என்று நம் கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இருக்கும் இந்நாள்கள் விடுமுறை அல்ல. இது 'பேன்டமிக்' அல்ல, 'ப்ளான்டமிக்'. நம் வாழ்வைத் திருப்பிப் பார்க்கவும், குடும்பமாகச் சேர்ந்து முன்னோக்கிப் பார்க்கவுமான வாய்ப்பு. நாம் இதுவரை கற்றிராத ஒன்றைக் கற்றுக்கொள்ள, எடுத்திராத ஓய்வை எடுத்துக்கொள்ள, செய்ய இயலாத ஒன்றைச் செய்ய இறைவன் கொடுத்த வாய்ப்பு. ஏனெனில், வருகின்றவற்றை எதிர்கொண்டு வாழ்பவரே மனிதர்கள்.

இன்று நம் கண்கள் திறக்கப்பட, நாம் ஒருவர் மற்றவருக்கு நம் உடனிருப்பை நல் வார்த்தைகளைப் பகிர்வதிலோ, அல்லது நற்செயல்கள் செய்வதிலோ காட்டலாம்.

இன்றைய நற்செயல்: நம் உணவை யாராவது முன்பின் தெரியாதவரோடு பகிர்ந்துகொள்வது.