Sunday, December 31, 2017

தாய்மையுடன் புத்தாண்டில்

01 ஜனவரி 2018: மரியாள் இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு பெருவிழா

I. எண்ணிக்கை 6:22-27
II. கலாத்தியர் 4:4-7
III. லூக்கா 2:16-21

தாய்மையுடன் புத்தாண்டில்

கிரகோரியன் காலண்டரின் முதல் நாளாகிய இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (1) இது ஆண்டின் தலைநாள். இன்று புத்தாண்டுப் பெருவிழா. புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய வேலை என புத்துணர்ச்சி அளிக்கும் வரிசையில் புதிய ஆண்டும் அடக்கம். காலண்டர், டைரி என அனைத்தையும் புதிதாகத் தொடங்குகின்றோம்.  (2) இன்று கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள். இந்த நாள்தான் 'இயேசுவுக்கு' பெயர்சூட்டப்படும் நாள். 'பெயரில் என்ன இருக்கிறது?' எனக் கேட்கிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் பெயரில் நிறையவே இருக்கிறது. தனக்குச் சூட்டப்பட்ட பெயர்போலவே வாழ்ந்து முடிக்கிறார் இயேசு. நம் மீட்பராகின்றார். (3) இன்று மரியாளின் தாய்மையின் விழா. மூவொரு இறைவனின் இரண்டாம் நபரை திருவயிற்றில் தாங்கியதால் இறைவனின் தாய் என்ற நிலைக்கு உயர்கின்றார். 

கிரேக்க கடவுள் Janus (from here is derived 'January') போல இரண்டு தலை கொண்டவர்களாக - பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக நிற்கின்றோம்.

முதல் வாசகம் எண் 6:22-27

'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே (காண். லேவி 9:22) இன்றைய முதல் வாசகம். இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த வார்த்தைகளை வைத்தே திருத்தூதர் பவுலும் பிற்காலத்தில் தன் கடிதங்களில் திருஅவையினரை வாழ்த்துகிறார் என்பதையும் நினைவில்கொள்வோம். 

இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த ஃபார்முலாவைத்தான் கால்வின் பயன்படுத்தி தன் சபையில் உள்ள எல்லாரையும் செல்வராக்கினார். எப்படி? கடவுள் உனக்கு ஆசீர் தருகிறார் என்றால் நீ செல்வந்தனாய் இருப்பாய். இதை அப்படியே கொஞ்சம் நீட்டி, நீ நன்றாக உழைத்து, செல்வம் சேர்த்தால், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்று உணரலாமே என்று சொன்னார். இந்த பின்புலத்தில்தான் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழில்புரட்சி உருவானது.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ.

மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்.

1. 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! 
உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். இருந்தாலும், இங்கே அந்த பணியை இங்கே அருட்பணியாளர்தான் செய்கிறார். ஆக, அருட்பணியாளர் தன் கரத்தில் ஆண்டவரின் கரம் கொண்டு ஆசீரளிக்கின்றார். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பதை 'புகழ்வது' என்றும் 'ஆசீர்வதிப்பது' என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்திலும் இதை நாம் பார்க்கலாம்: 'Let us bless the Lord' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது மனிதர்கள் இறைவனைப் புகழ்வதையும், 'God பளஸ் யூ' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'பராகா' என்பதை நாம் இரண்டாம் அர்த்தத்தில் எடுத்துக்கொள்வோம். இரண்டாவதாக, 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான்.

2. 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. ஆக, ஆண்டவரின் ஒளி சூரியனின் ஒளி போல எல்லாருக்கும் பொதுவாக இல்லாமல், ஒவ்வொருவர் மேலும் அவரின் தனிப்பட்ட அருளாக ஒளிர்கிறது.

3. 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார். 

இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது?

நான் என் உள்ளங்கையில் ஐஃபோனை வைத்திருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு வெளியில் இருப்பது ஐஃபோன். இந்த ஐஃபோனை தொட்டுக் கொண்டிருப்பது என் தோல். இந்த ஐஃபோனின் நிறையை, குளிர்ச்சியை, வெதுவெதுப்பை உணர்வது என் உள்ளுணர்வு அல்லது மூளை. ஆக, எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது.

இதை ஆண்டின் முதல் நாளில் நாம் வாசிக்க என்ன காரணம்?

இறைவனின் ஆசி நமக்கு வெளியில் இருக்கவும் - அதாவது, நம் வெளிப்புற காரணிகளால் நமக்கு தீங்கு நிகழாமல் இருக்கவும், நம் மேற்புறத்தில் தொடர்ந்து, நம் உள்புறத்தில் அமைதியாக நிலைத்திருக்கவும் வேண்டும். இல்லையா?

இந்த ஆசியை ஆண்டின் முதல் நாள் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கலாம். வழங்குவதன் வழியாக நாமும் பெறலாம்.

இரண்டாம் வாசகம் கலா 4:4-7

கலாத்திய திருச்சபைக்கு தான் எழுதும் கடிதத்தில் சட்டம் மற்றும் தூய ஆவி என்ற இரண்டு கூறுகளை விளக்கும் பவுலடியார், சட்டத்தின் வழி பிறப்பவர்கள் அடிமைகள் எனவும், தூய ஆவி வழி பிறப்பவர்கள் உரிமைக் குடிமக்கள் எனவும் முன்வைக்கின்றார். சட்டத்திலிருந்து, தூய ஆவியானவரை நோக்கிய நம் பயணம் இயேசுவில் தொடங்குகிறது. 

காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார்.

'கடவுளின் மகன்.' இயேசுவை ஆண்டவர் என்றோ, கிறிஸ்து என்றோ அழைப்பதற்குப் பதிலாக 'கடவுளின் மகன்' என அழைக்கின்றார். இயேசுவின் இந்த கடவுளின் மகன் நிலையை ஏற்றுக்கொள்ளும் அனைவரும், அந்த நிலையில் பங்கேற்கின்றனர். இந்த நிலைதான் தூய ஆவி. இந்த நிலையினால்தான் நாமும் கடவுளை, 'அப்பா, தந்தையே' என அழைக்க முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தை இன்று நாம் ஏன் வாசிக்கின்றோம்?

1. 'காலம்.' இன்று ஆண்டின் புதிய நாளைத் தொடங்குகிறோம். ஆண்டு அல்லது காலம் என்பது கடவுளுக்கும், நமக்கும் வௌ;வேறு எதார்த்தங்கள் அல்ல. காலம் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானது. ஏனெனில் கடவுளின் மகனே இந்தக் காலம் என்னும் நீரோட்டத்தினுள் இறங்கிவிட்டார்.

2. 'கடவுளின் மகன்.' இன்று அன்னை மரியாளை 'இறைவனின் தாய்' என்று கொண்டாடுகிறோம். இயேசு கடவுளின் மகன். ஆகையால், இந்த மகனை கருத்தாங்கிய மரியாள் கடவுளின் தாயாக மாறுகிறார்.

3. 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்!' - இது புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு நல்ல பாடம். நாம் யாருக்கும், எந்தப் பழக்கத்திற்கும், எந்த சூழலுக்கும் அடிமைகள் அல்லர். நாம் அப்படி யாருக்காவது அல்லது எதற்காவது அடிமையாக இருந்தால் அதை நாம் கண்டறிந்து அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எந்த சின்ன நூற்கண்டும் நம்மை சிறைப்படுத்திவிடக் கூடாது.

நற்செய்தி வாசகம் லூக் 2:16-21

i. பாட பின்புலம்
இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல் பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி வாசகம்.

ii. பாட அமைப்பு
இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. இடையர்களின் வருகை
ஆ. இடையர்களின் வியப்பு
இ. மரியாளின் பதிலுணர்வு
ஈ. இடையர்களின் செல்கை
உ. இயேசுவின் விருத்தசேதனம்

அ. இடையர்களின் வருகை
இடையர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பெத்லகேம் நோக்கி புறப்படுமுன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றனர். 'வாருங்கள்!' 'போவோம்!' 'பார்ப்போம்!' - இந்த மூன்று வினைச்சொற்களால் ஒருவரையொருவர் வேகப்படுத்துகின்றனர். மேலும், 'ஆண்டவர் நமக்கு அறிவித்ததை' என அவர்கள் சொல்வதன்வழியாக தங்களுக்குத் தோன்றிய தூதர் வெறும் கனவோ அல்லது காட்சியோ அல்ல, ஆண்டவரின் தூதரே என நம்புகின்றனர். 

ஆ. இடையர்களின் வியப்பு
திருக்குடும்பத்தை காணும் பேறு முதலில் இடையர்களுக்கே கிடைக்கின்றது. சமூகத்தில் யாரும் அங்கீகரிக்காத ஒரு குழுவை இறைவன் அங்கீகரிக்கிறார். குழந்தையைப் பற்றி அவர்கள் மரியாள் மற்றும் யோசேப்பிடம் என்ன சொன்னார்கள்? இக்குழந்தையே 'ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர்' என்பது ஒரு புதுமையான செய்தி. இந்த செய்தியை கபிரியேல் மரியாளிடம் சொல்லவில்லை. இப்படித்தான் தங்களுக்கு இக்குழந்தை வெளிப்படுத்தப்பட்டது என்று இவர்கள் சொன்னவுடன், அது மரியாளுக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

இ. மரியாளின் பதிலுணர்வு
மரியாளின் பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல் இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன் உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது 'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள். அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத் துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில் கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள். இன்று மட்டுமல்ல. இயேசுவின் வாழ்வின் இறுதிப்பொழுது வரை இவள் இப்படி குட்டித் துண்டுகளை ஒன்றுகூட்டிக் கொண்டே செல்ல வேண்டும்.

ஈ. இடையர்களின் செல்கை
இது லூக்காவின் கமெண்ட். அதாவது, இடையர்கள் ஏமாற்றம் அடையவில்லை. தாங்கள் கேட்டவையும், கண்டவையும் நிறைவேறியது குறித்து மகிழ்ந்தவர்களாக இல்லம் திரும்புகின்றனர்.

உ. இயேசுவின் விருத்தசேதனம்
இந்த நிகழ்வு பெத்லகேமில் நடந்ததா, அல்லது நாசரேத்தில் நடந்ததா, அல்லது எருசலேமில் நடந்ததா என்ற குறிப்பு நற்செய்தியில் இல்லை. நாள் பற்றிய குறிப்பு - எட்டாம் நாள் - இருக்கிறது. மேலும் இந்த நாளில்தான் 'இயேசு' என்ற பெயரும் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. 'யசுவா' என்றால் 'ஆண்டவர் மீட்பார்' என்பது பொருள். இந்த 'மீட்பர்' என்ற பெயர் இடையர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. ஆக, இடையர்களின் வருகை வானதூதர் மரியாளுக்கு அறிவித்த முதல் செய்தியை உறுதிப்படுத்துகிறது.

iii. 'இறைவனின் தாய்' - இறையியல் விளக்கம்
மரியாளை 'கடவுளின் தாய்' என்று சொல்வது சிலருக்கு நெருடலாக இருக்கும். எல்லாம் கடந்த கடவுளுக்கு மனிதர் ஒருவர் எப்படி தாயாக இருக்க முடியும்? என்பது முதல் கேள்வி. மேலும், மரியாள் கடவுளுக்கே தாய் என்றால், கடவுள் தோன்றுமுன்னே மரியா இருந்தாரா? கடவுள் மரியாளிடம் தோன்றினார் என்றால், அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? - தோற்றம் இல்லாத தோன்றல்தானே கடவுள்!

ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

iv. இடையர்களின் பத்து கட்டளை

இன்றைய நாளில் நாம் சந்திக்கும் இடையர்கள் நாம் புதிய ஆண்டில் இனியவர்களாக வாழ நமக்கு பத்துக்கட்டளைகத் தருகின்றனர். (இவை பவுலோ கோயலோ அவர்களின் 'ரசவாதி' என்ற நூலில் வரும் 10 வாழ்க்கை பாடங்களைத் தழுவியவை. ரசவாதியின் ஹீரோ சந்தியாகுவும் ஆடுமேய்க்கும் சிறுவன்தான். ஆக, இந்த தழுவல் எளிதாக இருக்கிறது. பவுலோ கோயலோவின் வலைப்பூவில் காண இங்கே சொடுக்கவும்: )

1. பயப்பட வேண்டாம்.
அடையவர்களுக்கு வானதூதர் நற்செய்தியை அறிவித்தபோது சொன்ன முதல் வார்த்தை: 'அஞ்சாதீர்!' என்பதுதான். தடைகளை விட தடைகள் வரும் என்ற பயமே நம்மை பல நேரங்களில் பலவீனமாக்குகிறது. நாளை நமக்கு தேவைப்படும் என்ற அச்சத்தில் நாம் சரியாக சாப்பிடாமல் இன்றே உணவைச் சேர்த்து வைத்து பட்டினி கிடக்கின்றோம். படிக்கும்போது வேலையைப் பற்றி பயப்படுகிறோம். வேலையில் திருமணம் பற்றி பயப்படுகிறோம். திருமணத்தில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்படுகிறோம். நமக்கு மேலிருப்பவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதியவர்களைப் பார்த்து பயப்படுகிறோம். புதிய முயற்சிகள் எடுக்க பயப்படுகிறோம். ஏற்கனவே எடுத்து வைத்த புதிய ஆடைகளை அணியப் பயப்படுகிறோம். வாசனை திரவியங்களை மூடி மூடி வைக்கிறோம். நகைகளை நல்ல நாட்களில் அணிந்து கொள்ளலாம் என்று பத்திரப்படுத்கிறோம். மொத்தத்தில், நாம் நம் கண்முன் இருக்கும் பொழுதை வாழாமல், கண்முன் இல்லாத ஒரு பொழுதில் வாழ்வதற்காக நாம் நம் வாழ்வை தள்ளிப்போடுகிறோம். வாழ்வதற்காக தயாரிப்பதை நிறுத்திவிட்டு நாம் வாழத் தொடங்கலாமே!

2. உண்மை என்றும் நிலைத்திருக்கும்
தேன் ஒரு போதும் கெடுவதில்லை. சூரிய ஒளி பட்டால் மின்னும். சூடாகும். பனிக்கட்டி பட்டால் குளிரும். ஆனால், வெயிலோ, மழையோ, பனியோ அதன் இயல்பு மாறுவதில்லை. யாரும் அதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், சுவைத்தாலும், சுவைக்காமல் விட்டாலும் அது அப்படியேதான் இருக்கின்றது. உண்மையும் அப்படித்தான். யாராலும் அதை மூடி வைக்கவோ, கலங்கப்படுத்தவோ முடியாது. இடையர்கள் பொய்யர்கள் என்றும், திருடர்கள் என்றும், அழுக்கானவர்கள் என்றாலும் அக்கால சமுதாயம் சொன்னாலும், அவர்களின் உண்மையான இயல்பை அவர்கள் மறைக்க முடியவில்லை. அவர்கள் மனிதர்கள். அதுதான் உண்மை. இந்த உண்மை வானதூதர்களால் உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த இடையர்கள் தங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதது பற்றி வருத்தப்படவில்லை. குப்பையில் கிடந்தாலும் வைரம் மின்னும் என்று தங்கள் கடமையை தாங்கள் செய்கிறார்கள். இறுதியில் தாங்களே உலகின் மெசியாவை முதலில் காணும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

3. ஒரே போல் வாழ்வதை விடுங்கள்
'வாருங்கள்! பெத்லகேம் செல்வோம்!' என்று ஒருவர் சொன்னவுடன், எல்லாரும் உடனடியாக வந்திருப்பார்கள் என நினைக்கிறீர்களா? 'ஐயயோ! அப்போடு ஆடுகளை யார் பார்ப்பார்?' என்று யாராவது ஒருவர் கண்டிப்பாக கேள்வி கேட்டிருப்பார். எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உறங்குதல் என்ற ஒரே போல் வாழ்க்கையை உடைக்கிறது இடையர்களின் பயணம். தங்கள் வாழ்வில் இதுவரை செய்திராத செயல்களை இனி அவர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவற்றைச் செய்ய துணிவோடு புறப்படுகின்றனர். திங்கள் தொடங்கி வெள்ளி வரை ஒரு வாழ்வு, சனி-ஞாயிறு வேறொரு வாழ்வு என நம் வாழ்வும் ஒன்றுபோலவே இருக்கின்றதா?

4. நிகழ்காலத்தை தழுவிக்கொள்ளுங்கள்
தங்கள் கடந்த காலம் இடையர்களின் கண்முன் வரவில்லை. தாங்கள் போய் குழந்தையைப் பார்த்தால், குழந்தையின் பெற்றோர்கள் தங்களை நம்புவார்களா என்ற கலக்கம் இல்லை. ஒவ்வொரு பொழுதும் நமக்கு கொடுக்கப்படும் வேலையை நன்றாக செய்து முடிப்பதே சால்பு என நினைத்துப் புறப்படுகின்றனர்.

5. உன் மகிழ்ச்சி அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும்
'ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் அடிக்கும்' என்று அவர்களுக்குத் தெரியும். ஆக, மகிழ்வாரோடு இருந்தால், தாங்களும் மகிழலாம். மெசியாவோடு இருந்தால் தாங்களும் மீட்கப்படலாம் என புறப்படுகின்றனர். இவர்களின் மகிழ்ச்சி இவர்களோடு முடியவில்லை. அது திருக்குடும்பத்தையும், மற்றும் சுற்றத்தார், நண்பர்களையும் பற்றிக் கொள்கிறது.

6. முடிவெடு - அதை நீயே எடு!
'போவோம் - பார்ப்போம்!' என உடனடியாக முடிவெடுக்கின்றனர் இடையர்கள். 'நாளைக்குப் போவோம்!' 'நாளைக்குப் பார்ப்போம்!' என்று முடிவை தள்ளிப் போடவோ, 'போகவா?' 'வேண்டாமா?' என்று இழுத்துப் பறிக்கவோ இல்லை.

7. முடியாது என்பதை முடியும் எனக் காட்டு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம் மற்றவர்கள் முடியாது என்று சொன்னதை 'முடியும்' என முடித்துக் காட்டினார்கள். இடையர்கள் எப்படி நற்செய்தி அறிவிக்க முடியும்? அது குருக்களின் வேலைதானே - என நினைத்தவர்கள்முன், தாங்களே முதல் திருத்தூதர்களாக வலம் வந்தனர் இடையர்கள்.

8. மேல் நோக்கி பயணம் செய்
மெசியாவைப் பார்க்க வேண்டுமானால், ஆடுகளை விடத்தான் வேண்டும். மெசியாவும் வேண்டும், ஆடுகளும் வேண்டும் என கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலை அறவே கூடாது. மேலானது கைகூடும்போது, தாழ்வானதை விட்டுவிட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால், கீழ் படிக்கட்டில் இருந்து காலை எடுக்க வேண்டும். எல்லாரிடமும் அன்பு பாராட்ட வேண்டுமென்றால், நம் கோபத்தை விட வேண்டும். கீழிருப்பதை விட்டால்தான் மேலிருப்பது கிடைக்கும் என உணர்ந்தவர்கள் இடையர்கள்.

9. உன் பயணத்தில் கருத்தாயிரு
இன்று நாம் எல்லாரும் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கருத்தாயிருக்கிறோமே தவிர, நாம் எப்படி இருக்கிறோம் என்று பார்ப்பதில்லை. பீப் சாங் பாடிய நடிகரை கடிந்து கொள்ளும் நாமே அந்த 'பீப்' வார்த்தையை பயன்படுத்துவதில்லையா? அடுத்தவரின் பாதை எப்படி இருக்கிறது என்று ஆராய நேரம் எடுக்கும் நாம் நம் பாதையை ஆராய்வதற்கு நேரமில்லையே. மேலும், அடுத்தவர்களின் பாதையும், பயணமும் நம் பாதையையும், பயணத்தையும் பாதிக்க கூடாது. ஒரு சிலர் எல்லாரையும்போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆசிரியரைப் பார்த்தால் ஆசிரியராக வேண்டும் போல இருக்கும். டாக்டரைப் பார்த்தால் டாக்டராக வேண்டும் என இருக்கும். இப்படி தினமும் ஆயிரம் ஐடியாக்கள் வந்து போகும். நான் ஒரே ஆளே எல்லாவற்றையும் வாழ முடியாது. என் சிறு வட்டத்தில் நான் எனக்கு சரியெனப்படுவதை ஆய்ந்து வாழ்தல் தான் சால்பு. இடையர்கள் திருக்குடும்பத்தை பார்த்துவிட்டு, தங்கள் வழியில் செல்கின்றனர். மேலும், 'மரியா! நீங்க கவனமாக இருக்கணும். மெசியா பிறந்திருக்காரு! யோசேப்பு, பத்திரமா இருப்பா!' என்று யோசனை எதுவும் சொல்லவில்லை. தங்கள் வியாபாரத்தை மட்டும் பார்க்கின்றனர் இடையர்கள் (மைன்ட யவர் பிசினஸ்).

10. எப்போதும் செயல்படு
நான் டிரைவிங் பழகும்போது எனக்கு சொல்லிக் கொடுத்த சதீஷ், 'ஃபாதர், ப்ரேக்கைப் பார்த்தால் மட்டும் வண்டி நிற்காது. ப்ரேக் போட்டால்தான் வண்டி நிற்கும்!' என்பார். இலக்கு முன் நின்று அம்பு எய்ய வேண்டுமென்றால், இலக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும்போதாது. அம்பை எய்ய வேண்டும். இடையர்களும் தங்களுக்கு செய்தி அறிவிக்கப்பட்டவுடன், குழந்தையைக் காண ஓடுகின்றனர். கண்டவுடன் அதை மற்றவருக்கு அறிவித்துக்கொண்டே வழிநடக்கின்றனர்.

மேலும் சிந்திக்க,

இயேசு நம் அனைவரின் சகோதரர் என்ற அடிப்படையில் மரியாள் நம் ஒவ்வொருவரின் தாய் ஆகிறார் இன்று.

இந்த புதிய ஆண்டை இனிய ஆண்டாக வாழ இறைவனின் தாய் வைக்கும் ஏழு வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுங்க!

வானதூதரின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாவின் முதல் உணர்வு ஆச்சர்யம். 'இது எங்ஙனம் ஆகும்?'  (லூக் 1:34) என்னும் மரியாவின் வார்த்தைகள் அவரின் நம்பிக்கையின்மையில் உதித்த கேள்வி அல்ல. மாறாக, வியப்பில் உதித்த ஆச்சர்யக்குறி. தன்னந்தனியே அமர்ந்திருந்த ஒரு இளவலுக்குத் தோன்றிய தேவதூதன், 'நீ அப்படியாக்கும்! இப்படியாக்கும்! நீ அப்படி இருப்ப! இப்படி இருப்ப!' என அடுக்கிக்கொண்டே போனபோது அந்த இளவல் மௌனமாக ஒரு புன்னகை பூக்கின்றாள். அனைத்தையும் வியந்து பார்க்கின்றாள். நாம் வளர வளர இழந்துபோன ஒரு அற்புதமான உணர்வு 'ஆச்சர்யம்'. இரயில் ஏன் முன்னால போகுது? செடி ஏன் பச்சையா இருக்கு? பஸ் போகும்போது மரங்கள் ஏன் ஓடுகின்றன? அது ஏன்? இது ஏன்? என்று அனைத்தையும் பற்றி கேள்வி கேட்ட நாம் இன்று எதைப்பற்றியும் கேள்வி கேட்க மறுக்கின்றோம். நம் உள்ளத்தில் ஆச்சர்யம் போய் இன்று சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகத்தின் உடன்பிறப்பு எல்லாம் தெரியும் என்ற மனநிலை. 

மரியாள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுவோம் இந்த புதிய ஆண்டில்.

'சார், உங்களுக்கு சுகர் இருக்கு!' 'மேடம், உங்க ப்ரஸர் கூடியிருக்கு!' என்று யார் என்ன சொன்னாலும், 'அப்படியா!' என வியந்து பார்ப்போம்.

2. சரண் அடையுங்க!

வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது அவற்றை எதிர்கொள்ள மிகச்சரியான வழி அவற்றிற்குச் சரணாகதி ஆவதே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே நிகழட்டும்!' (லூக் 1:38) என சரணடைகின்றார் மரியாள். நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. அல்லது நாம் விரும்பும் விடை இல்லை. ஒரு விடையே அடுத்த கேள்வியாகிவிடுகிறது சில நேரங்களில். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் நேரம் மற்றும் ஆற்றல் விரயமாகிறது.

'அவன் ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சொன்னான்?' என்ற கேள்விக்கு நான் விடை தேடத் தொடங்கி, இறுதியில் அப்படிச் சொன்னவனை என்னால் அன்பு செய்ய முடியாமல் போய்விடுகிறது. 'அவன் ஏன் இப்படி இருக்கிறான்?' 'எனக்கேன் இப்படி நடக்கிறது?' 'அவள் நல்லவளா?' 'அடுத்து என்ன நடக்கும்?' 'நான் இப்படி செய்தால் அப்படி இருக்கலாமா?' என கேள்விகள் தவிர்த்து மரியாளின் சரணாகதி மனம் கொள்தல் இரண்டாம் பாடம்.

3. மனிதர்களை நாடி ஓடுங்க!

காலையில் நாம் தொடங்கும் வாழ்க்கை ஓட்டம் இரவு ஆகியும் இன்று முடியாமல் போகிறது. பணம், பொருள், பதவி, புகழ், பெயர் என இவற்றை நாம் தேடி ஓடுகிறோம். ஆனால், நாம் எதைத் தேடி ஓட வேண்டும்? மனிதர்களை அல்லவா.

கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மரியாள் நேராக எருசலேம் ஆலயத்திற்கோ, தலைமைக்குரு அல்லது ஆளுநரின் அலுவலகங்களுக்கோ ஓடவில்லை. மாறாக, தன் உறவினரான எலிசபெத்தின் வீட்டை நோக்கி ஓடுகின்றார். ஒரு பிள்ளைத்தாங்கி (பிள்ளைத்தாச்சி) மற்றொரு பிள்ளைத்தாங்கியை நோக்கி ஓடுகின்றார். சென்ற அவர் தன் பெருமை பற்றிப் பேசாமல் எலிசபெத்தை வாழ்த்துகின்றார்.

மனித உறவு மேம்பட மிக முக்கியமான ஒன்று, 'அடுத்தவருக்கும் எனக்கும் எது பொதுவானது' என்று பார்க்கும் மனநிலைதான். 'நான் உன்னைவிட பெரியவன், படித்தவன், தெரிந்தவன்' என்ற நிலையில் வேற்றுமையை மையப்படுத்தி நான் மற்றவரோடு உறவை வளர்க்க முடியாது. 

'நான் மெசியாவின் அம்மாவாக்கும்!' 'நீயோ முன்னோடியின் மகன்தானே!' என்று தன் நிலையை உயர்த்தி, எலிசபெத்து நிலையை தாழ்த்தவில்லை மரியாள். 'உன் நிலையில் நீ பெரியவள்!' என அவருக்கு உரியதை அவருக்கு கொடுக்கின்றார். 'நீயும், நானும் இறைத்திட்டத்தால் வழிநடத்தப்படுபவர்கள்' என்ற பொதுப்பண்பில் மரியாள் எலிசபெத்தோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

மேலும், தன்னை விலக்கி விட நினைத்த யோசேப்பின்மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் வாழ்கின்றார் மரியா. ஆக, பரந்த உள்ளம் கொண்ட மரியா அனைவரையும் தன் அன்புக் கரத்தால் தழுவிக்கொள்ள நினைக்கின்றார்.

4. பாத்ரூம்லயாவது பாடுங்க!

எலிசபெத்தோடு அன்பு பாராட்டும் மரியாள் தன் உள்ளம் நிறை உணர்வுகளைப் பாடலாக வடிக்கின்றார். 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது' (1:47) என்று பாடுகின்றார் மரியாள். மரியாளின் பாடல் கடவுள் வரலாற்றில் நிகழ்த்திய அனைத்து புரட்டிப் போடுதல்களையும் ஒருசேரப் பதிவு செய்கின்றது. இறுதியாக, 'இஸ்ரயேலுக்குத் துணையாக ஆண்டவர் இருந்து வருகிறார்' என பாடலை நிறைவு செய்கிறார் மரியாள்.

'வாயில் பாடலை ஹம் செய்து கொண்டிருப்பவர்களை சாத்தான் நெருங்காது!' என்பது போர்த்துகீசிய பழமொழி.

பாடல்கள் மற்றும் நமக்கு இசை பிடிக்கக் காரணம் அவைகளுக்கு நம் மனத்தை ஆட்கொள்ளும் திறன் உண்டு என்பதால்தான். பாடலின் ஒற்றைச் சொல் கூட நம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.

இந்தப் புதிய ஆண்டில் நல்லதோ, கெட்டதோ அதைப் பாடலாக பாடிவிடுவோம் - பாத்ரூம்லயாவது!

5. இணைந்து தேடுங்க!

காணாமல் போன 12 வயது இயேசுவை தேடுகின்றார் மரியாள். இந்தத் தேடலில் யோசேப்பும் உடன் நிற்கின்றார். மனித குலத்தின் பெருமுயற்சிகள் எல்லாம் கூட்டு முயற்சிகளே. மூன்று ஞானியர் விண்மீன் வழிகாட்டுதலில் இயேசுவைக் கண்டதும் கூட்டுமுயற்சியாலே.

இன்று நாம் தனிமரங்களாக வாழ நினைக்கின்றோம். நான் யாரையும் சாராதவன், சாராதவள் என்று தன்னந்தனியாக நிற்க நினைக்கின்றோம். ஆனால், அது நம்மால் இயலாத ஒன்று. நாம் இருப்பதே அடுத்தவரின் இருப்பால்தான்.

கணிணியை இயக்கும் ஒரு மென்பொருளின் பெயர் 'உபுந்து.' 'உபுந்து' என்றால் ஸ்வாகிலி மொழியில், 'நான் இருக்கிறேன். ஏனெனில், நாம் இருக்கிறோம்' என்பது பொருள். 'நான்' என்று என்னை அடையாளப்படுத்தக்கூட, 'நீ' அல்லது 'அவர்;' என்ற ஒருவர் தேவைப்படுகிறார்.

இதையே மேலாண்மையியலில், ஒன்றும், ஒன்றும் மூன்று என்றும், ஒருங்கியக்கம் என்றும் சொல்கின்றனர்.

6. தூலிப்ஸ் விதை போல இருங்க!

எல்லா மலர்களுக்கும் விதைகள் உண்டு. ஒவ்வொரு மலரின் விதையும் அந்தந்த மலரை மட்டுமே உருவாக்க முடியும். உங்க கைநிறைய நான் தூலிப்ஸ் விதைகளைக் கொடுத்து, ரோஜா மலர் கொண்டு வாங்க என்று சொன்னால், உங்களால் உருவாக்க முடியுமா? அழுதாலும், புரண்டாலும் தூலிப்ஸ் தூலிப்ஸை மட்டுமே உருவாக்க முடியும். அப்படி இருக்க மனிதர்கள் மட்டும்தான், 'நான் அவரைப்போல இருக்க வேண்டும். இவளைப் போல இருக்க வேண்டும்' என மெனக்கெடுகிறோம்.

'விஜய் வீட்ல இருக்கு, சூர்யா வீட்ல இருக்கு, தனுஷ் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா' என கேட்கும் டேபிள்மேட் விளம்பரம் முதல், நாம் குளிக்கும், துவைக்கும் சோப் வரை நாம் அடுத்தவரைப் போல இருக்க விரும்புகிறோம். 

அவனாக, அவளாக நான் இருக்க முனைந்து கொண்டே கடைசியில் என்னைப்போல இருக்க என்னால் முடியாமல்போய் விடுகிறது.

மரியாள் இறுதி வரை தன்னைப்போல மட்டுமே வாழ்ந்தார்.

'மெசியாவின் தாய்' என்ற புதிய நிலை வந்துவிட்டதால் அவர் உருமாறிவிட விரும்பவும் இல்லை. உருமாறவும் இல்லை.

7. பூக்களிடம் கற்றுக்கொள்ளுங்க!

என்னதான் பூக்கள் அழகாக காலையில் பூத்துக் குலுங்கினாலும் மாலையில் அவை கீழே விழத்தான் வேண்டும். கீழே விழுந்தால்தான் புதிய விதைகளை அவைகள் உருவாக்க முடியும். எனக்கு இந்த காம்பு பிடித்திருக்கிறது என அவைகள் செடிகளையே பற்றிக்கொண்டிருந்தால் அவைகள் வதங்கிவிடும்.

கைகளை விரித்துக் கொடுப்பதுதான் மரியாள் சொல்லும் இறுதிப் பாடம்.

நாம் சேமித்து உழைத்து வாங்கிய ஒரு பைக் அல்லது கார் மேல் ஒரு ஸ்க்ராட்ச் விழுந்து அதை மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் அதை கடா முடா என்று கையாள்வார். அது நமக்கே வலிப்பது போல இருக்கும். ஆனால், நம்மால் என்ன செய்ய முடியும்? என்னதான் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அதை நாம் விடத்தான் வேண்டும். அப்படி விடுவதற்கு தயாராக இருப்பவர்தான் மகிழ்ச்சியை சொந்தமாக்க முடியும்.

கல்வாரியில் தன் மகனை விரித்துக்கொடுக்குமுன், மரியா தன் உள்ளத்திலிருந்து இயேசுவை விரித்துக் கொடுத்தார்.

எடுத்து வைத்தல்போல, விரித்துக் கொடுத்தலும் இனிய செயலே!

இறுதியாக,

இளவல் ஒருத்தி கடற்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை விளையாடுவது போல தெரிந்தது. அந்தக் குழந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். குழந்தை கரையிலிருந்து எதையோ கடலுக்குள் தூக்கிப் போடுவது தெரிந்தது. கரைக்கும் நீருக்குமாய் குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. அதன் கையில் நட்சத்திர மீன். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்கிறாள் இளவல். 'இந்த நட்சத்திர மீனை கடலில் தூக்கி போடுகிறேன். கரையில் இருந்தால் அது இறந்துவிடும்' என்கிறது குழந்தை. 'கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அனைத்தையும் உன்னால் தூக்கிப் போட முடியுமா?' எனக் கேட்கிறாள் இளவல். 'அனைத்தையும் தூக்கிப் போட முடியாதுதான். ஆனால், நான் தூக்கிப்போடும் ஒவ்வொரு மீனும் மீண்டும் வாழ ஆரம்பிக்கிறதே!' என்று சொல்லி தொடர்ந்து கரையை நோக்கி, கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது குழந்தை.

கடலுக்கும், கரைக்கும் நடுவில் நாம் நிற்கிறோம் இன்று.

நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உலகத்தையே மாற்றவில்லை என்றாலும், என்னையும், என் உடனிருப்பவரையும் மாற்றும். பெரிய மாற்றங்கள் சிறியவற்றில்தான் தொடங்குகின்றன.

புத்தாண்டில் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். ஒவ்வொரு அடியிலும் அன்னை மரியாள் கற்றுத்தரும் தாய்மை நிரம்பட்டும்.

இத்தாலியன் மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு:

'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!' 

வாக்குறுதிகள் எடுக்காத புத்தாண்டு மலரட்டும்!
வாழ்த்துக்களும், செபங்களும்!

Friday, December 29, 2017

அன்னா

நாளைய (30 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 2:36-40)

இயேசுவை கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வின் இரண்டாம் கதைமாந்தரை நாளைய நற்செய்தி வாசகம் நமக்கு அறிமுகம் செய்கிறது:

'ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா. இவர் இறைவாக்கினர். வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர். வயது எண்பத்து நான்கு.'

'ஆசேர் குலத்தை' பற்றி யாக்கோபும், மோசேயும் இறைவாக்குரைத்திருக்கின்றனர். இவர்களின் இறைவாக்குகள் 'ஆசீர்' போல இருக்கின்றன:

'ஆசேரின் நிலம் ஊட்டமிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.' (தொநூ 49:20)

'ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான். தன் உடன்பிறந்தார்க்கு உகந்தனவாய் இருப்பான். அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான் ... உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை. உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.' (இச 33:24-25)

இப்படி செழுமையான குலத்திலிருந்து வந்தவர் அன்னா. இவர் இறைவாக்கினர். வயது முதிர்ந்தவர். மணமானவர். 'ஏழு' ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தவர். திருமண வாழ்வில் நிறைவு கண்டவர். மேலும், 'எண்பத்து நான்கு' வயது - ஏழு முறை பன்னிரண்டு (இரு மடங்கு நிறைவு).
நிறைவான ஒருவர் தன் வாழ்வின் நிறைவில் நிறைவான இறைவனைக் கண்டுகொள்கின்றார்.

இவர் செய்த அழகான செயல் குழந்தையைப் பற்றி அடுத்தவர்களிடம் - எல்லாரிடமும் பேசினார்.

'குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை மற்றவரிடம் சொல்லுங்கள்' என்று சில ஓட்டல்களில் எழுதியிருப்பார்கள்.

தான் கண்ட நிறைவை மற்றவர்களிடம் அள்ளிச் செல்கின்றார் அன்னா.

இன்று நான் என் அடுத்தவரிடம் காணும் நிறைவை மற்றவரிடம் சொல்லும் நற்பண்பை இந்த அன்னா பாட்டி நமக்கு அருள்வாராக!


Thursday, December 28, 2017

ஆவியின் தூண்டுதலால்

நாளைய (29 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 2:22-35)

ஆவியின் தூண்டுதலால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வை வாசிக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படும் கதைமாந்தர் சிமியோன்.

லூக்கா நற்செய்தியாளர் தன் நற்செய்தியை 'ஒரு சான்ட்விச் போல' எழுதுகிறார் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம். லூக்கா நற்செய்தியின் படி இயேசுவை அவரது வாழ்வில் முதன்முதலாக ஏந்திய அந்நியரின் பெயர் 'சிமியோன்.' அதேபோல அவரை இறுதியில் கல்வாரிக்குச் செல்லுமுன் ஏந்தும் நபர் 'சீமோன்' (சீரேனே ஊரானாகிய சீமோன்). இந்த சிமியோன் ஆண்டவரின் ஆவியின் தூண்டுதலால் வருகிறார். அந்த சீமோன் வற்புறுத்தலில்பேரில் வருகின்றார்.

சிமியோனைப் பற்றிச் சொல்லும்போது, 'அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்' என லூக்கா பதிவு செய்கின்றார்.

'ஆவியின் தூண்டுதலை' அவர் எப்படி கண்டுணர்ந்தார்? என்பது நமக்கு ஆச்சர்யமாக இருந்தது.

நம் வாழ்விலும் பல நேரங்களில் தூண்டுதல்கள் இருப்பதை பார்க்கின்றோம். காலையில் எழுவதிலிருந்து நாம் தூங்கச் செல்லும் வரை நிறைய தூண்டுதல்கள் நம்மை உந்தித் தள்ளுகின்றன. ஆனால், ஆவியின் தூண்டுதல் எது என்று கண்டுபிடிப்பது மிக முக்கியம்.

'அவர் நேர்மையானவர். இறைபற்றுக் கொண்டவர். ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்' - இந்த மூன்று காரணிகளால் அவர் ஆவியின் தூண்டுதலைக் கண்டுகொள்கின்றார்.

'நம்புகிற ஒருவருக்குத்தாம் அற்புதம் நடக்கும்' என்பது செல்டிக் பழமொழி.

ஆக, எதிர்பார்க்கிற ஒருவருக்குத்தான் தூண்டுதல் கிடைக்கும்.

'எதிர்பார்ப்பு' இல்லாமல் எதிர்பார்ப்பது - இதுதான் சிமியோன் கற்றுக்கொடுக்கும் பாடம்.
இந்த வகை எதிர்பார்ப்பில்தான் ஏமாற்றம் இருக்காது.
ஏமாற்றம் இருந்தாலும் அந்த ஏமாற்றம் அடுத்த எதிர்பார்ப்பிற்கான முதல்படியாகும்.

Wednesday, December 27, 2017

மாசில்லாக் குழந்தைகள்

நாளைய (28 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 2:13-18)

மாசில்லாக் குழந்தைகள்

நாளை மாசில்லாக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படுதல் நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வா அல்லது ஒரு இறையியல் நிகழ்வா என்றால், 'இறையியல் நிகழ்வே' என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.

ஏன்?

அ. இந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசேவாக யூத மக்களுக்கு அறிமுகம் செய்கின்றார். எகிப்து இல்லாமல் மோசேயை முன்வைக்க முடியாது. எப்படி பழைய மோசே எகிப்திலிருந்து வெளியே வந்தாரோ, அதே போல புதிய மோசேயும் வரவேண்டும் என்பது மத்தேயு நற்செய்தியாளரின் எண்ணமாக இருந்திருக்கலாம். 'எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்' என்ற இறைவாக்கு நிறைவேறுவதற்காக இயேசுவை எகிப்திற்கு வம்படியாக அனுப்பி வைக்கின்றார் மத்தேயு.

ஆ. பல குழந்தைகள் கொல்லப்பட ஒரு குழந்தை மட்டும் தப்பி அரசனாவதும், ஆளுகை செய்வதும் ஒரு இலக்கிய உத்தி. மற்றவர்களை விட இக்குழந்தை முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்டுவதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்படுகின்றது. இதே நிகழ்வை நாம் மோசே வாழ்விலும் (காண். விப 2:1-10), யோத்தாம் வாழ்விலும் (காண். நீத 9:3-6) பார்க்கின்றோம். எல்லாக் குழந்தைகளும் கொல்லப்பட மோசே மட்டும் தப்பிக்கின்றார். 70 சகோதரர்கள் கொல்லப்பட யோத்தாம் மட்டும் தப்பிக்கின்றார். தப்பிக்கின்ற இவர்கள் மற்றவர்களுக்குத் தலைவர்கள் ஆகின்றனர். இயேசுவை மற்ற குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாகக் காட்டுவதற்காக மத்தேயு இந்த உத்தியை கையாண்டிருக்கலாம்.

இ. குழந்தைகள் இறப்பு என்பது எந்த வரலாற்று நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், இயேசு பிறந்த காலத்தில் யூதேயா மற்றும் கலிலேயாவை ஆண்டவர்கள் உரோமையர்கள். ஏரோது போன்றவர்கள் வெறும் குறுநில மன்னர்களே. இவர்களைக் கண்காணிக்க ஆளுநர்கள் இருந்தார்கள். ஆக, ஏரோது தான் விரும்பியதுபோல குழந்தைகளைக் கொன்று குவிப்பது இயலாத காரியம். அப்படி இவன் செய்திருந்தால் உடனடியாக மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டிருப்பான். இன்னும், பெத்லகேமில் மிஞ்சிப்போனா 10 குழந்தைகள் இருந்திருப்பார்கள். இறந்திருப்பார்கள். ஆயிரக்கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் சொல்வதெல்லாம் மிகைப்படுத்துதலே.

இந்த மூன்று காரணங்களுக்காக மாசில்லாக் குழந்தைகள் நிகழ்வை ஒரு இறையியல் நிகழ்வு என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிகழ்வு நம்மில் சில கேள்விகளையும் எழுப்புகின்றன:

அ. தன் மகன் இயேசுவை வியத்தகு முறையில் காப்பாற்றத் திருவுளம் கொண்ட எல்லாம் வல்ல, 'அன்பு' இறைவன் எல்லாக் குழந்தைகளையும் ஏன் காப்பாற்ற 'திருவுளம்' கொள்ளவில்லை? மற்ற குழந்தைகள் இறந்துதான் இவரது மகன் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் கடவுள்தான் முதல் குற்றவாளி. இவருடைய மகனுடைய உயிர்தான் உயிர். மற்ற உயிரெல்லாம் இவருக்கு உயிரல்லையா?

ஆ. இதே காலகட்டத்தில் பிறந்த திருமுழுக்கு யோவான் தப்பித்தது எப்படி? பெத்லகேமிற்கும் எய்ன் கரிமிற்கும் (சக்கரியா - எலிசபெத்து - திருமுழுக்கு யோவான் குடும்பத்தின் ஊர்) உள்ள தூரம் மிகக் குறைவு.

இ. ஞானிகள் ஏரோதிடம் வராமலேயே போயிருக்கலமே? அல்லது குழந்தையைப் பார்த்துவிட்டு ஏரோதிடம் வந்து, 'அப்படி எந்த அரசனும் பிறக்கவில்லை அரசே!' என்று பொய்யாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! இவர்களும் குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் ஆகிறார்களே.

ஈ. ஏரோது - மூன்று ஏரோதுக்குள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். இவர் எந்த ஏரோது என்பது பற்றிய தெளிவான புரிதல் நமக்கு இல்லை.

நிற்க.

மாசில்லாக் குழந்தைகள் கொல்லப்படுவதற்குக் காரணம் - கடவுள், ஏரோது, குழந்தை இயேசு, ஞானியர், அகஸ்து சீசர், கபிரியேல் வானதூதர், நான், நீங்கள் - என எண்ணற்ற பேரை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

'மாசில்லாக் குழந்தைகள்' பலிகடா ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் இயலாமை, மௌனம், மென்மை, கையறுநிலை அனைத்தும் மற்றவரின் சுயநலத்திற்காக பலிகொடுக்கப்படுகின்றன.

பலிகடா ஆவதும், பலிகடா ஆக்குவதும்தான் நம் வாழ்வில் ஆற்ற முடியாத அம்மைத் தழும்புகளாக இருக்கின்றன.

மாசில்லாக் குழந்தைகள் இன்று நம் பரிதாபத்தையோ, கருணையையோ எதிர்பார்க்கவில்லை.

'நான் உன்னை திருப்பி அடிக்க முடியாது என்பதால்தானே நீ என்னை அடித்தாய்!'

- இந்த வார்த்தைகள்தாம் மாசில்லாக் குழந்தைகள் இறக்குமுன் தங்கள் உள்ளத்தில் எண்ணிய வார்த்தைகளாக இருந்திருக்கும்.

நம் இயலாமை, கையறுநிலை, மௌனம் ஆகியவை மற்றவர்களால் பயன்படுத்தப்படும்போதெல்லாம் நாமும் மாசில்லாக் குழந்தைகளே!

(இன்றைய வலைப்பூவை அலங்கரிக்கும் மாசில்லாப் பூ நான் அண்மையில் நான் கண்டு க்ளிக்கிய குட்டிப்பூ)

Tuesday, December 26, 2017

மற்றச் சீடர்

நாளைய (27 டிசம்பர் 2017) நற்செய்தி (யோவா 20:2-8)

மற்றச் சீடர்

நாளை திருத்தூதரும், நற்செய்தியாளருமான தூய யோவானின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர் தனது நற்செய்தி நூல்களில் தன்னை 'மற்றச் சீடர்' என்று அழைக்கின்றார். இது ஒரு வகையில் தன்னடக்கம்  என்று சொல்லப்பட்டாலும், இவர் 'மற்ற சீடர்' என்று சொல்வதன் வழியாக இயேசுவின் அருகில் அனைவரும் செல்வதற்கு கதவுகளைத் திறந்துவிடுகிறார். அதாவது, நீங்கள், நான், அவர், இவர் என எல்லாரும் இயேசுவின் 'மற்றச் சீடராய்' இருக்க முடியும்.

மற்றச் சீடராய் இருப்பதற்கான தகுதிகள் என்ன என்பதை நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வசனம் நமக்குச் சொல்கிறது: 'பின்னர் ... மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.'

செல்லுதல், காணுதல், நம்புதல் - இந்த மூன்று செயல்களின் வழியாக எவரும் மற்றச் சீடராய் ஆக முடியும்.

அ. செல்லுதல்
இருத்தல் என்பது வேர் என்றால், செல்லுதல் அல்லது பயணித்தல் என்பது விழுது. 'இருத்தலும்,' 'செல்லுதலும்' இருந்தால்தான் வாழ்க்கை. வெறும் இருத்தல் மட்டும் இருந்தால் அதை நாம் இறப்பு அல்லது தேக்கம் என்று சொல்லிவிடுகின்றோம். யோவான் தன் வாழ்வில் இயேசுவைக் கண்ட நாள் முதல் 'சென்றுகொண்டே' இருக்கின்றார். முதல் சீடர்களை அறிமுகம் செய்கின்றார். இயேசுவின் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கின்றார். கானாவூர் செல்கின்றார். கல்வாரி செல்கின்றார். கல்லறைக்கு ஓடுகின்றார். ஆக, ஓட்டமும், நடையுமாகக் கடக்கிறது இவரது வாழ்க்கை.

ஆ. காணுதல்
காணுதல் என்பது இங்கே வெறும் கண்களைக் கொண்டு பார்த்தல் அல்ல. மாறாக, உள்ளத்தால் பார்த்தல். வெற்றுக்கல்லறைக்குள் காண்பதற்கு ஒன்றுமில்லை. பின் அவர் எதைக் கண்டார்? இல்லாமையில் இறைவனின் இருப்பைக் கண்டார். அதுதான் காணுதல். இதையே தூய பவுலும், 'நாம் இங்கே அரைகுறையாய்க் காண்கிறோம். அங்கே நிறைவாக, அவர் இருப்பதுபோல காண்போம் என்கிறார்.' அந்தக் காணுதலை நாம் இங்கே காணுதலுக்குக் கண்களை மூடுதல் அவசியம்.

இ. நம்புதல்
அதாவது, இயேசுவே மெசியா அல்லது இறைமகன் என்ற நம்பிக்கை அவரின் செல்லுதல் மற்றும் காணுதலின் கனியாக இருக்கிறது. இன்று சில நேரங்களில் நம் பயணம் முதல் இரண்டு நிலைகளில் நின்றுவிட வாய்ப்பும் இருக்கிறது.

இந்த மூன்று வினைச்சொற்களும் நம் பெயர்ச்சொற்கள் ஆனால் நாமும் மற்றச் சீடர்களே!


Monday, December 25, 2017

மன உறுதியுடன் இறுதிவரை

மன உறுதியுடன் இறுதிவரை

நாளைய (26 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 10:17-22)

நாளை திருஅவையின் முதல் மறைசாட்சியான தூய ஸ்தேவான் அவர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாளைய நற்செய்தியில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறிய அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம்.

ஒரு பெரிய தயாரிப்பை உருவாக்கும் நிறுவனம் அதை விளம்பரம் செய்யும்போது அதற்கான சந்தைப்படுத்துதலுக்குப் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தும்.

இறையரசு என்ற தயாரிப்பில் பங்கேற்கும் அனைவரும் அனுபவிக்கும் துயரம் பற்றி பதிவு செய்கின்றார் இயேசு. சங்கங்களில் ஒப்புவித்தல், சாட்டைகளால் அடித்தல், கொல்லப்படுதல், வெறுத்தல் என அனைத்தும் திருத்தூதர்களுக்கு நடக்கும் என்று சொல்கின்ற இயேசு, இரண்டு ஆறுதல் மொழிகளையும் தருகின்றார்: (அ) தூய ஆவி அந்நேரத்தில் அருளுவார், (ஆ) இறுதிவரை மனஉறுதியுடன் இருப்பவர் மீட்பு பெறுவர்.

இறுதிவரை மனஉறுதியுடன் இருத்தல் என்பது இயேசுவின் உள்ளார்ந்த கட்டளையாக இருக்கிறது.

மனஉறுதி என்றால் என்ன?

2017ஆம் ஆண்டு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

இதே ஆண்டு ஜனவரி 1 அன்று நாம் என்ன நினைத்தோம்? என்னென்ன திட்டங்கள் தீட்டினோம்? என்னென்ன முடிவுகள் எடுத்தோம்? அவற்றில் இறுதிவரை என்னால் எத்தனையை நிறைவேற்ற முடிந்தது? 'இறுதிவரை' என்னால் நிறைவேற்ற முடியாமல்போக காரணம் என்ன?

மனஉறுதி என்பது சமரசம் செய்துகொள்ளாத மனம்.

ஆக, திருத்தூதர்கள் எந்த நிலையில், எந்த நபர்கள்முன் நிறுத்தப்பட்டாலும் தாங்கள் முதலில் கொண்டிருந்த நம்பிக்கையில் சமரசம் அறவே கூடாது.

மனஉறுதியைக் குலைக்கும் காரணிகள் பல: பயம், ஒப்பீடு, உடனடி பலன் இல்லாமை போன்ற காரணிகளால் நாம் நம் வாழ்வில் சமரசம் செய்துகொள்கின்றோம். அதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கின்றோம்.

ஸ்தேவானிடம் இருந்த ஒரு அழகான பண்பு மனஉறுதி.

இன்று சாதாரண நிகழ்வுகளில் எனக்கு மனஉறுதி இருக்கிறதா? என்று கேட்கிறேன்.


Sunday, December 24, 2017

தீவனத்தொட்டியில் மெசியா

25 டிசம்பர் 2017 கிறிஸ்து பிறப்பு பெருவிழா

தீவனத்தொட்டியில் மெசியா

கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலிகளில் மூன்று வௌ;வேறான நற்செய்தி வாசகங்கள் வாசிக்கப்படுவதால், எல்லாவற்றிற்கும் பொதுவான லூக்கா 2:1-20 வாசகப் பகுதியை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் மையமாக இருப்பவர்கள் இடையர்கள். 'சீசர் அகுஸ்து, குரேனியு' என பேரரசர் பெயரையும், ஆளுநர் பெயரையும் பதிவு செய்கின்ற லூக்கா இடையர்கள் பெயரையோ, அவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்தின் பெயரையோ பதிவு செய்ய மெனக்கெடவில்லை. 'இடையர்களுக்கு பெயர் தேவையில்லை' என்றுதான் லூக்காவின் சமகாலத்து மக்கள் நினைத்தனர். இந்தப் பெயரில்லா பெரியவர்களுக்குத்தான், பெரியவராம் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகின்றது.

ஜோசப் ஃப்ளேவியஸ் என்ற வரலாற்று அறிஞர் இடையர்களைப் பற்றி மூன்று வார்த்தைகளைச் சொல்கின்றார்:
அ. இடையர்கள் அழுக்கானவர்கள். அவர்கள் ஆடுகளோடு தொடர்பில் இருப்பவர்கள். அவர்கள் காலணிகள் அணிவதில்லை. அவர்களின் கால்கள் புழுதியாய் இருக்கும். அவர்கள் ஆடுகளோடு ஆடுகளாக உறங்குபவர்கள். ஆடுகளின் கழிகளோடு உழல்பவர்கள்.

ஆ. இடையர்கள் பொய்யர்கள். அடுத்தவருடையதைத் தங்களுடையது என்றும், தங்களுடையதை அடுத்தவருடையது என்றும் சொல்பவர்கள். 

இ. இடையர்கள் திருடர்கள். தங்களின் ஆடுகளில் ஏதாவது ஒன்று தங்கள் கவனக்குறைவினால் காணாமல்போனால் அதை ஈடுகட்ட வேறு கிடைகளில் உள்ளவற்றைத் திருடிக்கொள்வர். அடுத்தவரின் விளைச்சல் நிலத்தில் ஆடுகளை மேய விடுவர். விளைச்சல் செய்து களங்களில் சேர்த்துவைத்திருப்பவற்றைத் திருடுபவர்கள். இவர்கள் ஊர் விட்டு ஊர் செல்வதால் எந்த ஊரில் யார் இருக்கிறார், யாரிடம் பணம் இருக்கிறது, யாரை கொள்ளையடிக்கலாம் என்று நோட்டமிட்டு திருடர்களுக்கு தகவல்கள் சொல்பவர்கள்.

இப்படிப்பட்ட இடையர்களுக்கு இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்படுகிறது என்பதுதான் கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் பெரிய வியப்பு.

ஃப்ளேவியஸ் அவர்களின் மேற்காணும் மூன்று அடையாளங்களும் இங்கே புரட்டிப்போடப்படுகின்றன. எப்படி?

அ. அழுக்கில் இருப்பவர்களுக்கு தீவனத் தொட்டி தெரியும்

மாட்டுக் கொட்டகைக்குள் போயிருக்கிறீர்களா? மாட்டுக்கொட்டகையில் தீவனத் தொட்டி என்பது பெரிய கட்டிடக்கலையோடு கட்டப்பட்ட தொட்டி அல்ல. ஒரு பெரிய அறை இருக்கும். அறையின் தரை மண் அல்லது கல்லாக இருக்கும். மேலே கூரை வேயப்பட்டிருக்கும். தீவனம் போடுவதற்காக பலகை ஒன்றை சுவற்றிற்கு கொஞ்சம் தள்ளி அடித்திருப்பார்கள். அதே பலகையோடு சேர்த்துள்ள கம்பத்தில் அல்லது வளையத்தில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும். மாடுகள் நிற்கும் இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வார்கள். சாணம் அல்லது கழிவை உடனே அப்புறப்படுத்துவார்கள். ஆனால், அதிகம் தூய்மையாக்கப்படாத பகுதி எதுவென்றால் தீவனத்தொட்டிதான். தீவனத்தை மாடு சாப்பிட்டவுடன் அதே இடத்தில் மீண்டும் வைக்கோல் அல்லது புல்லை அடுக்குவார்கள். ஆக, பல ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் பகுதியே தீவனத்தொட்டி. மேலும், தீவனத்தொட்டியை யாரும் எடுத்தேறிச் சென்று பார்க்க மாட்டார்கள். மாட்டு உரிமையாளர் காலையில் எழுந்தவுடன் கொட்டகையை திறந்து எட்டிப்பார்ப்பார். 'மாடு இருக்கிறதா!' என பார்த்துவிட்டு கதவுளை மூடி விடுவார். இப்படியாக அழுக்கான, யாரும் அண்டிச் சென்று பார்க்காத இடத்தில் குழந்தை வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இப்படி வைப்பது குழந்தைக்கு குளிருக்கு இதமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

ஆ. பொய்யர்கள் உண்மைக்குச் சான்று பகர்கின்றனர்

பொய் அதிகம் சொல்பவர்கள் யாரையும், யார் சொல்வதையும் எளிதில் நம்ப மாட்டார்கள். தாங்கள் பொய் சொல்வதால் அடுத்தவர்கள் சொல்வதும் பொய் என நினைப்பார்கள். இப்படிப்பட்ட இடையர்கள் எப்படி வானதூதரின் செய்தியை நம்பினர்? - இது அடுத்த ஆச்சர்யம். 'அது சும்மா சத்தம்பா!' 'இது நம்ம கனவு' 'இது ஒரு காட்சி' 'இப்படித்தான் போன வருஷம் நடந்துச்சு' என்றெல்லாம் இவர்கள் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், வானதூதர் சொன்னதை அப்படியே நம்புகிறார்கள். நம்புவது மட்டுமல்ல. 'நீங்க போங்க' என்று இவர்களுக்குச் சொல்லப்படவில்லை. வெறும் தகவல்தான் வானதூதர் கொடுக்கிறாரே தவிர. அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. வெறும் தகவலையே அழைப்பாக ஏற்று புறப்பட்டுச் செல்கின்றனர். சென்றது மட்டுமல்லாமல் தாங்கள் கேட்டதை குழந்தையின் பெற்றோரிடம் சொல்கின்றனர். கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே தங்கள் வீடு திரும்புகின்றனர்.

இ. திருடர்கள் மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்

திருடனுக்கு அரச கருவூலத்தை திறந்துவிட்டால் எப்படி இருக்கும்? இங்கே இன்னொரு ஆச்சர்யத்தைக் கவனித்தீர்களா? மெசியாவை தீவனத் தொட்டியில் முதலில் திருடர்களே காண்கின்றனர். சிலுவையில் இறுதியிலும் திருடர்களே (நல்ல கள்வன், கெட்ட கள்வன்) காண்கின்றனர். திருடச் செல்லுமுன் வீட்டை அடையாளம் காட்டி அனுப்புவார்கள். 'இந்தக் கலர் சட்டை போட்ட இந்த மனிதர் காசு வைத்திருக்கிறார்' என்று அடையாளம் சொல்லி அனுப்புவதுபோல, 'குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்' என அடையாளம் சொல்கிறார் வானதூதர்.

ஆக, கிறிஸ்து பிறப்பின் ஆச்சர்யம் என்னவென்றால் இயேசு ரொம்பவும் பாதுகாப்பற்ற சூழலில் பிறக்கிறார். முன்பின் தெரியாத இடையர்கள் - அழுக்கர்கள், திருடர்கள், பொய்யர்கள் - தங்களைத் தேடி வந்தபோது அந்த சின்ன இளவல் மரியாளும், தச்சர் யோசேப்பும் எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? இவ்வாறாக, முன்பின் தெரியாத இடத்தில், முன்பின் தெரியாத நபர்கள் முன் நடந்தேறுகிறது கிறிஸ்து பிறப்பு.

கிறிஸ்து பிறப்பு இன்று எனக்கு மூன்று பாடங்களைக் கற்பிப்பதாக நான் எண்ணுகிறேன்:

1. ப்ரேகிங் தெ ரொட்டின் ('வழக்கத்தை உடைப்பது')

தன் பாப்பா பாட்டில் பாப்பாவுக்கு அறிவுரை சொல்கின்ற பாரதியார், 'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வ(ப)ழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா' என்கிறார். நாம் குழந்தையாய் இருக்கும்போது நமக்கு சொல்லப்படுவது எல்லாம் 'பழக்கமும், வழக்கமும்'தான். 'பெரியவருக்கு எழுந்து நிற்றல்,' 'சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்,' 'வணக்கம் சொல்லுதல்' என நிறைய வழக்கங்களும், பழக்கங்களும் கற்கின்றோம். சில வழக்கங்களை நாமே ஏற்படுத்திக்கொள்கிறோம் - கறுப்பு சட்டை போடுவது, வெள்ளை நிறம் மட்டும் அணிவது, மீசை வைப்பது, தாடி வைப்பது என. சில மேலாண்மையியல் நிபுணர்களும் நாம் நிறையவற்றை வழக்கப்படுத்திக்கொள்ளும்போது நாம் நிறைய காரியங்களைச் செய்ய முடிகிறது என்கிறார்கள். ஆனால், வழக்கங்களை உடைப்பதில்தான் கிறிஸ்து பிறப்பின் முக்கியத்துவம் இருக்கிறது.

தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வழக்கம் காவல் காப்பதுதான். ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கின்றார் வானதூதர். அவர் உடைப்பதைவிட தாங்களே அதை உடைக்க முன்வருகின்றனர்: 'வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, 'வாருங்கள். நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்'' என்று சொல்லி விரைகிறார்கள்.

வழக்கமான காரியங்களைச் செய்வதால் நாம் மனித நிலையில் வேண்டுமானால் நிறைய வேலைகளை அல்லது இலக்குகளை அடையலாம். ஆனால் இறையனுபவம் தேவையெனில் 'ப்ரேகிங் தெ ரொட்டின்' மிக அவசியம். இதைத்தான் நாம் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டிலும் (காண். லூக் 10:25-35) பார்க்கிறோம். அடிபட்டுக் கிடந்தவனைக் கடந்து சென்ற குருவுக்கும், லேவிக்கும் தன் ரொட்டின் (வழக்கம்)தான் மிக முக்கியமாக தெரிந்தது. அவர்கள் தங்கள் வழக்கத்தை உடைக்க விரும்பவில்லை. ஆக, தங்கள் வழி செல்கின்றனர். ஆனால் சமாரியனோ தனக்கு ஒரு இலக்கும், ரொட்டினும் இருந்தாலும், அதை உடைக்கின்றார். வழக்கத்தை உடைக்கின்றார். ஆகையால்தான் அவரால் இரக்கம் காட்ட முடிகிறது. 

இன்று, என்னால் ரொட்டினை உடைக்க முடிகிறதா? கடிவாளமிட்ட குதிரை போல நான் என் வேலையில் ஓடிக்கொண்டே இருக்கிறேனா? 'இது இப்படித்தான் இருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும்' என என்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும் படிமங்களை வார்த்திருக்கிறேனா?

2. அழைப்பின்றி புறப்படுவது

நாம் பிறந்தபோது நமக்கு எந்த அழைப்பும் கொடுக்கப்படவில்லை. இறக்கும்போதும் எந்த அழைப்பும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் நடுவில் நாம் அழைப்புக்காக காத்துக்கொண்டே இருக்கிறோம். 'திருமணத்திற்கு அழைக்கவில்லை,' 'விழாவிற்கு அழைக்கவில்லை,' 'அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை,' 'நீ என்னைக் கூப்பிடவில்லை' என நிறைய ஃபார்மாலிட்டிகளை வைத்திருக்கிறோம். வானதூதர்கள் இடையர்களுக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. மரியாளும், யோசேப்பும், 'எங்களுக்கு ஒரு இளவரசன் பிறந்திருக்கிறான்' என யாருக்கும் அழைப்பு அட்டையோ, குறுஞ்செய்தியோ அனுப்பவில்லை. ஆனாலும் இடையர்கள் உடனே புறப்படுகின்றனர். தங்களுக்கு கிடைத்த தகவலையும் அழைப்பாக எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர்.

வரலாற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தியவர்கள் எந்த அழைப்பிற்கும் காத்திருக்கவில்லை. 'ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களுக்காக வந்து போராடுங்கள்' என யாரும் காந்தியை அழைக்கவில்லை. 'கொல்கத்தாவின் சேரி மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்' என யாரும் அன்னை தெரசாவை அழைக்கவில்லை. இவர்கள் தங்கள் கண்முன் நடக்கும் நிகழ்விற்கு ஏற்ற செயலைச் செய்கிறார்கள். அதுதான் இறையனுபவம். 

அதாவது, இயல்பான, எதார்த்தமான நிகழ்வுகளில் இயல்பாக, எதார்த்தமாக செயல்படுவது கிறிஸ்து பிறப்பின் இரண்டாம் அழைப்பு.

3. நம் வேலையை தொடர்ந்து செய்வது

'இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்' என பதிவு செய்கின்றார் லூக்கா. மெசியாவைக் கண்டவர்கள் மெசியாவைப் பற்றிக்கொள்ளவில்லை. 'மெசியா பிறந்திருக்கிறார்' என மறைபரப்பு செய்யவில்லை. தங்கள் வேலையைப் பார்க்க புறப்பட்டுச் செல்கின்றார்கள். கடவுள் அதனதன் நேரத்தில் அதனதன் நிகழ்வை செயல்படுத்துவார். 'நீ உன் வேலையை பாரு. நடப்பது அதுபோல நடக்கும்' என்று வாழ்வை அதன் போக்கில் வாழ்கிறார்கள். 'நான் இறையனுபவம் பெற்றிருக்கிறேன். அதை உங்களுக்குத் தருகின்றேன்' என நிறைய போதகர்களும், குருக்களும் புறப்படுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், இறையனுபவம் பெற்றவுடன் நான் என் வாழ்வை இயல்பாக வாழ்ந்தாலே போதும் என நினைக்கிறேன். 'நானே உலகின் மெசியா' என்று அடுத்தவரைக் காப்பாற்ற நான் புறப்படத் தேவையில்லை. ஆக, இன்று இறையனுபவம் கிடைத்தால், அதற்காக கடவுளைப் புகழ்ந்து பாடிவிட்டு என் வேலையைத் தொடர்ந்து செய்வதே சால்பு.

இறுதியாக,

கிறிஸ்து பிறப்பு என்பது வரலாற்று நிகழ்வு. உலக வரலாற்றில் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் வரலாற்றிலும். நாம் வாழும் இந்தக் குறுகிய நாள்களில் கிறிஸ்துவாக பிறக்க கிறிஸ்து பிறப்பு பெருவிழா அழைப்பு விடுக்கிறது.
இன்றைய உலகில் நாமும் பாதுகாப்பற்ற சிறு குழந்தையாக இந்த உலகம் என்ற தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறோம். இந்த உலகம் தன் நுகர்வுக்கலாச்சாரம், வியாபாரம் என்னும் கரங்களால் நம்மைப் பிட்டு வாயில் போட்டுக்கொள்ள தயாராக இருக்கிறது. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நாம், இந்த பெத்லகேம் குழந்தைபோல நம் கைகளை விரித்துக்கொடுப்போம்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களும், செபங்களும்!

Friday, December 22, 2017

சுற்றமும் நட்பும்

நாளைய (23 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:57-66)

சுற்றமும் நட்பும்

'வீரபத்திரன் துணை...நிகழும் மங்களகரமான...'
என்று தொடங்கும் திருமண பத்திரிக்கை ('அழைப்பிதழ்' என்பது புது வார்த்தை)
எல்லாம் பெரும்பாலும்,
'தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து' என்று நிறைவடையும்.

ஒரு பேச்சுக்குத்தான், இல்லை ஒரு எழுத்துக்குத்தான், அப்படி எழுதுகிறார்கள். இதற்காக, நம் ஃபேஸ்புக் நண்பர்கள் 2000 பேரையும் கூட்டிக்கொண்டு போனால் என்ன ஆகும்?

எலிசபெத்தின் சுற்றமும், நட்பும்தான் நாளைய நற்செய்தி வாசகத்தின் மையம்.

'ஆண்டவர் எலிசபெத்துக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு மகிழ்ந்தனர்.'

நாளைய நற்செய்தியில் வரும் எலிசபெத்தின் சுற்றத்தார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறார்கள்.

அ. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்
ஆ. 'என்ன பெயர் வைக்கலாம்?' என ஆர்வம் காட்டுகின்றனர்
இ. 'இந்த குழந்தை எப்படிப்பட்டதா இருக்குமோ?' என ஆச்சர்யப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றத்தார் அமைவது மிக அபூர்வம். ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு குடும்பம் எப்படி அவசியமோ, அதேபோலத்தான் சுற்றமும் அவசியம். தன் சுற்றத்தில், அக்கம் பக்கத்தில் தன் குழந்தைகளுக்கு வகுப்பு தோழர்கள் அல்லது தோழிகள் இருந்ததால், தங்களின் வெளியூர் வேலைக்கு 'நோ' சொன்ன பெற்றோர்களை அறிவேன்.

மற்றொரு எக்ஸ்ட்ரீம் என்னவென்றால், சில வீடுகளில் ஒரு குறிப்பிட்ட ஜன்னலைத் திறக்கவே மாட்டார்கள். ஏன்? திறந்தால் அடுத்த வீட்டுக்காரரின் முகம் தெரியும். அல்லது குரல் கேட்கும். இப்படியாக நாம் அறவே வெறுக்கும் சுற்றத்தார்களும் இருக்கிறார்கள்.

இது நம் மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் கூட பொருந்தும். நம் சுற்றத்து மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை. நம் சுற்றத்து நாடுகள் எந்நேரம் நமக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

சுற்றமும், நட்பும் என்னைப் பொறுத்தவரையில் நாம் சாப்பாட்டில் போடும் உப்பு மாதிரி. உப்பு போடாமலும் சாப்பிடலாம். உப்பு சரியான அளவில் இருந்தால் தான் அது ருசி. இல்லையென்றால் அது சாப்பாட்டையே கெடுத்துவிடும்.

'மகிழ்ச்சி,' 'ஆர்வம்,' 'ஆச்சர்யம்' - இந்த மூன்று பண்புகளை சக்கரியா-எலிசபெத்தின் சுற்றம் நமக்குக் கற்றுத்தருகிறது.

நமக்கு அருகில் இருப்பவர் வாழ்வில் நல்லது நடக்கும்போது அது கண்டு பொறாமைப் படாமல், அவர்களோடு ஒப்பிட்டு சோகத்தை வருவித்துக்கொள்ளாமல், அவர்களோடு மகிழ்ந்திருப்பது.

'குழந்தைக்கு என்ன பெயரிடலாம் உம் விருப்பம் என்ன?' என்று சக்கரியாவிடம் சைகை காட்டிக் கேட்கின்றனர். ஆக, சக்கரியாவின் மொழியில் பேச அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். சக்கரியாவின் நிலைக்கு இறங்கி வருகின்றனர். மேலும், குழந்தையின் பெயர்சூட்டும் நிகழ்வில் முழுமையாகப் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்று என் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின்மேல் எனக்கு எந்த அளவு ஆர்வம் இருக்கிறது? 'ஓ! இது தெரியாதா?' என நான் அவசரப்படுகிறேனா? அல்லது ஆர்வம் காட்டுகிறேனா?

ஆச்சர்யம் - 'இந்தக் குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' என்ற இவர்களுடைய வியப்பில் இவர்கள் கடவுளின் பிரசன்னத்தைக் குழந்தையில் கண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.


'நல்ல வேலி நல்ல சுற்றத்தை உருவாக்கிறது' என்பதும்,
'நல்ல சுற்றத்தார் உனக்கு அமைய நீ நல்ல சுற்றத்தாராய் இரு' என்பதும் ஆங்கில பழமொழிகள்

எலிசபெத்துக்கு அமைந்தது நல்ல சுற்றமும், நட்பும்.

Thursday, December 21, 2017

அன்னா

நாளைய (22 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:46-56)

அன்னா

நாளைய நற்செய்தி வாசகத்தில் மரியாளின் பாடலை வாசிக்கின்றோம். மரியாளின் பாடல் சாமுவேல் முதல் நூலில் உள்ள அன்னாவின் பாடலின் தழுவல் என்பது எல்லா விவிலிய ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆக, இந்தப் பாடலின் கதாநாயகியாம் அன்னாவை (நாளைய முதல் வாசகத்தில் சந்திக்கிறோம்) இவரை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

முதல் ஏற்பாட்டு அன்னா எனக்கு என்றும் ஆச்சர்யம் தரக்கூடிய கதாபாத்திரம்.

எதற்காக?

'இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவரின் சக்களத்தி அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.' (1 சாமு 1:7)

அன்னாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதை ஒரு குறையாகச் சொல்லி அவளின் சக்களத்தி அவளைத் துன்புறுத்துகிறாள்.

இந்தக் கண்ணீரை ஆண்டவரிடம் முறையிட வருகிறார் அன்னா.

அங்கு என்ன நடக்கிறது?

ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா, 'இல்லை! என் தலைவரே! நான் உள்ளம் நொந்த பெண்...ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடுச்சாம் என்கிற கதையா, சக்களத்தி கொடுமையை கடவுளிடம் முறையிடப்போன அன்னாவுக்கு, குடிகாரி என்ற பட்டம் கிடைக்கிறது.

ஆனால், இங்கே எனக்கு அன்னாவிடம் பிடிச்சது என்னவென்றால், அவரின் திடமான உள்ளம். 'யார் என்ன சொன்னாலும், யார் என்னை எப்படிப் புரிந்து கொண்டாலும், என்னைப் பற்றி எனக்குத் தெரியும். என் அருமை எனக்குத் தெரியும். என் குறை எனக்குத் தெரியும்' என துணிவாக நிற்கிறார்.

இது எனக்கு நல்ல பாடம். என் அருமையை அடுத்தவரின் பாராட்டில் அல்லது தட்டிக்கொடுத்தலில் அல்லது உற்சாகப்படுத்துதலில் கட்டி வைக்காமல், நானே உணர்வதற்கு அன்னா என்னைத் தூண்டுகிறார்.

இரண்டாவதாக,

'இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன்.' (1 சாமு 1:27-28)

ரொம்ப வருஷமா குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அப்படி பிறந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்? தன்னைக் கேலி செய்த எல்லாரையும் கூப்பிட்டு, 'ஏன்டி, என்னயவா கிண்டல் பண்றீங்க? இங்க பாருங்க லட்டு மாதிரி ஒரு பையன் எனக்கு பிறந்திருக்கான்' என்று காட்டுவாள். அல்லது அவனைத் தன்னுடனே வைத்திருந்து, 'நீ தவமிருந்து பெற்ற மகன்' என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம், உள்ளம் குளிர்ந்திருப்பாள்.

ஆனால், அன்னா இப்படிச் செய்யவில்லை.

ஆண்டவருக்கு அர்ப்பணித்து விடுகிறார்.

இதை இவர் செய்ய இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்:

அ. 'நான் என்னையே யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை.' அதாவது, கேலி பேசியவர்களின் கேலிப் பேச்சை ஒரு பொருட்டாகவே அவர் கருதவே இல்லை. தன் வாழ்வை தான் தேர்ந்து கொண்ட வழியில் வாழ்கிறார். நம்ம வாழ்க்கை பல நேரங்களில் நம்மை அடுத்தவர்களுக்கு 'ப்ரூவ்' பண்ணுவதிலேயே கழிந்துவிடுகிறது. இல்லையா? 'நான் படித்தவன், பட்டம் பெற்றவன், பணம் படைத்தவன், செல்வாக்கு படைத்தவன்' என ஒவ்வொரு நொடியும் அடுத்தவர்கள் முன் நம்மை நிரூபிக்க நினைக்கிறோம். அல்லது அடுத்தவர்களின் கேலிப் பேச்சை பொய்யாக்க நினைக்கிறோம். இந்த முயற்சியில் நமக்கு மிஞ்சியதெல்லாம் களைப்பும், இளைப்புமே.

ஆ. 'தான் அதிகம் அன்பு செய்கின்ற ஒன்றை கடவுளுக்கு கொடுப்பது.' தான் பயன்படுத்தியதையோ, அல்லது தனக்கு தேவையில்லாததையோ கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதை விடுத்து, தன் உயிர், ஆவி என நினைக்கின்ற உயரிய தன் குழந்தையை கொடுத்து விடுகிறார். இது என் அர்ப்பண வாழ்வுக்கு அன்னா விடுக்கும் அழைப்பாகவே பார்க்கிறேன். கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. வருத்தப்படவும் கூடாது. அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது.


Wednesday, December 20, 2017

எலிசபெத்து

நாளைய (21 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:39-45)

எலிசபெத்து

நாளைய நற்செய்தி வாசகத்தின் நல்மனிதர் எலிசபெத்து. இவர் சக்கரியாவின் மனைவி. திருமுழுக்கு யோவானின் தாய். மரியாளின் உறவினள்.

'எலிசபெத்து' என்றால் எபிரேயத்தில் 'கடவுளின் வாக்குறுதி,' 'கடவுள் நிறைவாய் இருக்கிறார்,' அல்லது 'கடவுளின் திருப்தி' என்பது பொருள்.

எலிசபெத்து இரண்டு முறை பேசுவதாக நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்கின்றார்.

முதல் முறை, தனக்குத்தானே பேசிக்கொள்கிறார் எலிசபெத்து: 'மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்.'
எலிசபெத்தின் இவ்வார்த்தைகளில் நிறைய சோகம் அப்பியிருக்கிறது. தான் இதுவரை தமது சமகாலத்தில் குழந்தைப் பேறு இல்லாததால் அனுபவித்த துன்பங்களையும், பிறரால் தனக்கு வந்த இகழ்ச்சியையும் இது படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும், தான் துன்பங்கள் அனுபவித்தாலும், பிறரால் இகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டாலும் அவற்றையும் தாண்டிய ஒன்று இருக்கிறது - அதுதான் கடவுளின் அருள் என்பதையும் இது காட்டுகிறது.
'யோவான் - யோஹனான்' என்றால் 'கடவுளின் அருள்' என்பது பொருள். ஆக, எலிசபெத்தின் இந்த வார்த்தையிலேயே பிறக்கப் போகும் குழந்தை என்ன பெயர் பெறப்போகிறது என்பது வாசகருக்குத் தெரிந்துவிடுகிறது.
ஆக, ஒவ்வொரு துன்பத்தையும் மிஞ்சி நிற்கும் ஒன்று இருக்கிறது என்றும், அதுவே கடவுளின் அருள் என்றும் நமக்குச் சொல்கிறது எலிசபெத்தின் முதல் பேச்சு.

இரண்டாம் முறை, மரியாளிடம் பேசுகின்றார் எலிசபெத்து. எலிசபெத்தின் வீட்டில் அவரைச் சந்திக்கின்ற மரியாள், 'ஷலோம்' ('அமைதி!) என்று வாழ்த்துகின்றார். வாழ்த்தைக் கேட்டவுடன் எலிசபெத்தின் வயிற்றில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன. அப்படியே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவராய் வாய்நிறைய வாழ்த்துக்களை அள்ளி வீசுகின்றார்.

எலிசபெத்தின் வார்த்தைகளில் இரண்டு சொல்லாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன:
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'
மரியாளை தன் உறவனளாக, தன்னைவிட வயதில் சிறிய சின்னப் பொண்ணாக, தனக்குப் போட்டியாக ஒரு மகனை அற்புதமான முறையில் கருத்தாங்குகிறாள் என்று பொறாமைப்படாமல், மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்றும், மரியாள் வயிற்றில் வளரும் குழந்தையை 'ஆண்டவர்' என்றும் அறிக்கையிடுகின்றார். எலிசபெத்துக்கு இதை யார் வெளிப்படுத்தினார்? கபிரியேலா? இல்லை. பின் எப்படி தெரிந்தது இவருக்கு? இதுதான் இவரது உள்ளொளிப் பார்வை.
'ஆண்டவர் உமக்குச் சொன்னவை என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'
'என் வீட்டுக்காரர் நம்பாம இப்போ ஊமையா திரியுறாரு. நீயாவது நம்பினாயே!' என்ற புலம்பலாக இல்லாமல், மரியாளின் ஆழமான நம்பிக்கையைப் பாராட்டுகிறார் எலிசபெத்து.

எலிசபெத்து - தன் வாழ்வின் அஸ்தமனத்திலும் ஆண்டவரின் அருளைக் கண்டுகொள்கின்றார்.
ஆண்டவரின் அருளுக்கு அவசரப்படத் தேவையில்லை.
அவசரப்படுவோருக்கு ஆண்டவரின் அருள் இல்லை.
இது எலிசபெத்து தரும் பாடம்.


Tuesday, December 19, 2017

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

நாளைய (20 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:26-38)

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எருசலேம் திருக்கோவிலுக்கு வந்து சக்கரியாவை சந்தித்த வானதூதர் ஆறு மாதங்கள் கழித்து நாசரேத்தூரில் உள்ள ஒரு கன்னியிடம் வருகின்றார்.

'வாழ்த்து' ('அருள்நிறைந்த மரியே வாழ்க,' 'ஆண்டவர் உம்மோடு')
'கலக்கம்' ('இந்த வாழ்த்து எத்தகையதோ?')
'வாக்குறுதி' ('அஞ்ச வேண்டாம்')
'தயக்கம்' ('இது எப்படி நிகழும்?')
'இறையுணர்வு' ('உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்')
'சரணாகதி' ('நான் ஆண்டவரின் அடிமை')

என்று ஆறு உணர்வுகளாக கபிரியேலுக்கும், மரியாளுக்கும் இடையே நிகழும் உரையாடல் நிகழ்கிறது. கபிரியேல் - சக்கரியா நிகழ்வில் இறுதி வார்த்தை கபிரியேலுடையதாக இருக்கிறது. ஏனெனில் சக்கரியா ஊமையாக்கப்படுகின்றார். இந்நிகழ்வில் இறுதி வார்த்தை மரியாளின் வார்த்தையாக இருக்கிறது. இங்க ஒரு லைஃப் சீக்ரெட் கற்றுக்கொள்ளலாம்: 'எங்கே இறுதி வார்த்தை பெண்ணின் வார்த்தையாக இருக்கிறதோ அங்கே எவ்வளவு பெரிய உறவுப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும். ஆக, நட்பில், அன்பில் ஆண்-பெண் பிரச்சினை வரும்போது ஒரே தீர்வு பெண்ணின் வார்த்தையை இறுதி வார்த்தையாக வைத்துக்கொள்வது!

கபிரியேல் - மரியாள் உரையாடல் சீக்கிரம் முடிய, அல்லது மரியாளின் சரணாகதியை தூண்டும் வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசித்தால், அது 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்பதுதான் என நினைக்கிறேன்.

ஒருவேளை 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று கபிரியேல் வந்தவுடனேயே சொல்லியிருந்தால் மரியாள் உடனடியாக சரணாகதி அடைந்திருப்பார். ஏனெனில் யூத இளவலான அவருக்கு தங்களின் கடவுள் வரலாற்றில் ஆற்றியிருக்கும் அரும்பெரும் செயல்கள் தெரியும் - படைப்பு, குலமுதுவர்கள் வாழ்வு, எகிப்தின் அடிமைத்தனம், பாஸ்கா கொண்டாட்டம், செங்கடல், பாலும் தேனும் பொழியும் நாடு, மோசே, ஆரோன், நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள், அசீரிய படையெடுப்பு, பாபிலோனிய படையெடுப்பு, சமாரியர்கள், பாபிலோனியர்கள், ஆலயம் இடிப்பு, மறு கட்டமைப்பு, பாரசீக, கிரேக்க, உரோமை படையெடுப்பு - என எல்லாம் அவர் தன் பெற்றோர் சொல்லக் கேட்டிருப்பார். இது எல்லாவற்றிலும் 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' உணர்ந்திருப்பார் அவர்.

ஆக, கபிரியேலின் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், 'நான் ஆண்டவரின் அடிமை' என்று சரணாகதி அடைகின்றார். இதுமுதல் கடவுளே என்னை ஆட்கொள்ளட்டும் என்ற திறந்த மனத்தையே இது காட்டுகிறது.

இந்த இடத்தில் மாற்கு 9:14-29 என்ற நற்செய்திப் பகுதியை நினைவுகூறுவோம்:

தீய ஆவி பிடித்திருந்த சிறுவனை நலமாக்கும் நிகழ்வில் சிறுவனின் அப்பா, 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்று சொல்ல, இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்!' என்றார்.

'கடவுளுக்கு எல்லாம் நிகழும்'
'நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'
ஆக, 'நம்புகிறவர்' அனைவரும் 'கடவுளே'

மரியாள் நம்பினார். நம்பும் அந்த நொடி அவர் கடவுள் ஆனார்.
கடவுள் ஆகிவிட்ட அவரின் வயிற்றில் மனுவுருவாதல் சாத்தியமாகிறது.



Monday, December 18, 2017

சீட்டுக் குலுக்கிப் போட்டபோது

நாளைய (19 டிசம்பர் 2017) நற்செய்தி (லூக் 1:5-25)

சீட்டுக் குலுக்கிப் போட்டபோது

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை வாசிக்கின்றோம்.

சக்கரியா, கபிரியேல், எலிசபெத்து என்ற மூன்று கதைமாந்தர்களை நாம் சந்திக்கின்றோம்.

நான் பல நேரங்களில் யோசித்ததுண்டு. வானதூதர் கபிரியேல் கடவுளின் செய்தியை சக்கரியாவுக்கும், மரியாளுக்கும் கொண்டு வருகிறார். இருவருமே தயக்கத்துடன் நிற்கின்றனர். சக்கரியாவின் தயக்கத்திற்காக அவரை ஊமையாக்குகின்ற கபிரியேல் நம்ம மரியாளை ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார். ஆண்பாவம் பொல்லாதது மிஸ்டர் கபிரியேல்!

சக்கரியா தண்டிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கான விடை 'சீட்டுக் குலுக்கிப் போட்ட போது' என்ற வார்த்தையில் இருக்கிறது. எருசலேம் திருக்கோவிலுக்குள் உள்ள தூயகத்தில் 'தூப பீடம்' என்று ஒன்று உண்டு. ஓடோனில், ஆம்ப்பிப்யூர், கோத்ரேஜ் ஏர் போன்ற பிராண்டுகளில் அறை நறுமணப்பான்கள் இல்லாத காலகட்டத்தில் தூபமும், ஊதுபத்தியும்தான் நறுமணப்பான்களாக பயன்படுத்தப்பட்டன. ஆடுகளும், மாடுகளும், புறாக்களும் வெட்டப்பட்டு, அடுப்பு, நெருப்பு என்று எரிந்து கொண்டிருக்கும் இடம் சுத்தமாகவா இருக்கும்? இப்படிப்பட்ட இடத்தில் சத்தமும், சந்தடியுமாகத்தான் இருக்கும். சக்கரியாவைப் போல நிறையப் பேர் தூபம் போட்டுக்கொண்டிருப்பர். மேலும் சக்கரியாவைப் போல நிறைய குருக்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பர்.

சக்கரியாவின் பெயருக்கு சீட்டு விழுகிறது என்றால் அவர் கொடுத்து வைத்தவர்.

ஏனெனில் இறைவன் தூயகத்தில் உண்மையாகவே இருப்பதாக யூதர்கள் நம்பினர். இன்னைக்கு நாம கடவுள் வானத்தில் இருக்கிறார் என்றுதானே நினைக்கிறோம். ஆக, கடவுளின் பிரசன்னத்தில், அவருக்கு வெகு சில அடி தூரத்தில் நிற்பதை இன்னும் பெரிய பாக்கியமாகக் கருதினர். தங்களின் பெயருக்கு சீட்டு விழாதா என்று தவங்கிடந்தனர். இப்படி இருந்தவர்களில் ஒருவர் சக்கரியா. ஆனால், சீட்டு விழுந்தவுடன் கடவுளை மறந்துவிடுகின்றார் சக்கரியா.

சக்கரியா மறக்கின்றார். ஆனால் கடவுள் அவரை நினைவுகூறுகின்றார். ஏனெனில் 'சக்கார் - யாவே' என்றால் 'ஆண்டவர் நினைவுகூர்கிறார்' என்பது பொருள்.

கடவுளை மறந்த அவரால் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்வதும் கடினமாக இருக்கிறது. ஆக, சீட்டில் பெயர் வந்தது என்பது அவருக்கு நிகழ்ந்த முதல் அற்புதம். அந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறந்தார். ஆகையால் இரண்டாம் அற்புதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்.

ஆனால் மரியாளுக்கு அற்புதம் ஒரே முறைதான் நடக்கிறது. அவர் அதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்.

கிறிஸ்து பிறப்பு தயாரிப்பு காலம் நாளைய நற்செய்தி வழியாக தரும் செய்தி, 'நமக்கு விழுந்த சீட்டுக்களை கணக்கில் எடுப்பது,' 'எண்ணிப் பார்ப்பது,' 'நன்றி கூறுவது.'

நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நாம் பேசும் மொழி, வணங்கும் கடவுள், வாழும் ஊர் எல்லாமே நமக்கு விழுந்த சீட்டுக்கள்தாம். அடுத்தவருக்கு விழுந்த சீட்டைப் பார்த்து பொறாமையோ, கோபமோ, வருத்தமோ படாமல் நம் சீட்டை நினைவுகூர்ந்தால் இரண்டாம் அற்புதம் நிச்சயம் நிகழும்.


Sunday, December 17, 2017

விலக்கிவிட திட்டமிட்டிருந்தார்!

நாளைய (18 டிசம்பர் 2017) நற்செய்தி (மத் 1:18-24)

விலக்கிவிட திட்டமிட்டிருந்தார்!

இயேசு பிறப்பதற்கு முன், அல்லது இயேசு பிறந்த சில நாள்களில் தங்கள் வீட்டின் முற்றத்தருகில் கட்டில் போட்டமர்ந்து, வானத்தின் நிலாவையும் நட்சத்திரங்களையும் மரியாளும், யோசேப்பும் இரசித்துக் கொண்டிருந்த அந்த ரம்மியமான முன்னிரவு நேரத்தில் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மரியாள் இந்தக் கேள்வியை யோசேப்பிடம் கேட்டிருப்பார்:

'என்னங்க. உங்கள ஒன்னு கேட்கலாமா? நான் கருவுற்றிருப்பது உங்களுக்குத் தெரிய வந்து நீங்க என்னய மறைவா விலக்கிவிட திட்டம் போட்டிங்கதானே?'

தனக்கு விருப்பமில்லாத கேள்வியைக் கேட்கும் பெண்ணிடமிருந்து விலகும் எந்த ஆணையும் போல,
'அதெல்லாம் ஒன்னுமில்ல! எனக்கு தூக்கம் வருது! குட்நைட்!' என்று evasive-வாக பேசிவிட்டு தன் வீட்டிற்குள் சென்றிருப்பார் யோசேப்பு.

'யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிருந்தார்' என்று நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.
'Failing to Plan is Planning to Fail' என்ற ஒரு மேற்கோளை இன்று வாசிக்க நேரிட்டது. இன்று மேலாண்மையியல் மற்றும் மனித வளத்தில் அதிகமாக பேசப்படும் வார்த்தை திட்டமிடுதல் அல்லது planning.

நாம் கட்டும் வீடு, சேர்க்கும் சேமிப்பு, படிக்கும் படிப்பு, பார்க்கும் வேலை, பார்க்கும் மருத்துவம் என எல்லாவற்றிற்கும் திட்டமிடல் தேவை என்று நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆனால், கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளின் செய்தி கொஞ்சம் எதிர்மாறானதாக இருக்கிறது.

மனித திட்டங்களையும், திட்டமிடுதலையும் உடைக்கிறது மீட்பின் நிகழ்வு.

மரியாளை விலக்கிவிட திட்டமிடுகின்றார் யோசேப்பு - அவரின் திட்டம் கலைகிறது - மரியாளை ஏற்றுக்கொள்ளப் பணிக்கப்படுகின்றார்.

தங்கள் இடையைக் காவல் காக்க திட்டமிடுகின்றனர் இடையர்கள் - அவர்களின் திட்டம் கலைகிறது - பெத்லகேம் செல்ல அழைப்பு வருகின்றது.

வானவியல் ஆராய்ச்சியில் காலம் கழிக்கலாம் என திட்டமிடுகின்றனர் ஞானிகள் - அவர்களின் திட்டம் கலைகிறது - தாங்கள் முன்பின் தெரியாத நாட்டில் முன்பின் தெரியாத அரசனைத் தேடி அலைகின்றனர்.

இறந்து போய்விடலாம் என திட்டமிடுகின்றார் சிமியோன் - அவரின் திட்டம் கலைகிறது - குழந்தையைக் கையில் ஏந்துகின்றார்.

ஓய்வு பெற்று வீட்டில் இருந்துவிடலாம் என நினைக்கிறார் அன்னா - அவரின் திட்டம் கலைகிறது - தூய ஆவியால் உந்தப்பட்டு எருசலேம் ஆலயம் வருகின்றார்.

ஆனால்,

அதே நேரத்தில் இயேசுவோடு தொடர்பில்லாதவர்களின் வாழ்வு திட்டமிட்டதுபோல நடக்கின்றது:

அகஸ்து சீசர் திட்டமிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது.
சத்திரக்காரன் திட்டமிட்டபடி சத்திரம் நிரம்பி வழிகின்றது.
ஏரோது திட்டமிட்டபடி குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

ஆக, மீட்பின் திட்டத்தில்(!) தொடர்புடையோர் தங்கள் திட்டங்களை மாற்றிக்கொள்கின்றனர். அல்லது மாற்றிக்கொள்ளுமாறு பணிக்கப்படுகிறார்கள்.

யோசேப்பும் அப்படியே.

திட்டமிடுதல் எப்போதும் சரியல்ல என்பது நாளைய நற்செய்தி தரும் பாடம். ஏனெனில் திட்டமிடும்போது வாழ்க்கையின் spontaneityயை நாம் தடுக்கின்றோம்.

அப்படியெனில் நாம் செய்ய வேண்டியது என்ன?

'தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த யோசேப்பு போல நாமும் விழித்தெழுந்து நமக்கு இறைவன் பணித்திருப்பதை ஏற்றுக்கொள்வது!'

நிற்க.

நாளைக்கு விடிஞ்சவுடன் Monthly Planner வாங்கப் போகலாம் என நினைத்தேன்