Friday, September 30, 2016

சின்ன சின்ன

'வானிலிருந்து ரோஜா மலர்களை அள்ளித் தெளிக்கும்
எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா...'

ஒவ்வொரு திருப்பலி நடு செபத்திலும் இப்படித்தான் சிறுமலர் குழந்தை தெரசம்மாளை வாழ்த்தி செபிப்பார் எங்கள் குருமட முன்னாள் அதிபர் அருள்தந்தை. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள்.

நாளை இந்த சின்ன ராணியின் திருநாள்.

நாளை அக்டோபர் திங்கள் முதல் நாள். அக்டோபர் திங்களை நாம் செபமாலை திங்கள் என சிறப்பிக்கின்றோம்.

நாம் பத்து நாட்களாக முதல் வாசகதத்தில் வாசித்துக் கொண்டுவந்த யோபு நூல் நாளை நிறைவடைகிறது.

'யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசி வழங்கினார்' என்று சொல்கிறார் ஆசிரியர்.

யோபிற்கு மூன்று மகள்கள் பிறக்கின்றனர்.

முதலாமவள் 'எமிமா' - 'எம்' என்றால் 'நாள்' அல்லது 'பகல்.' 'எமிமா' என்றால் எபிரேயத்தில் 'பகலைப்போல பளிச்சென்று இருப்பவள்' என்று பொருள்.

இரண்டாமவள் 'கெட்சியா' - 'கெட்சியா' என்றால் 'இலவங்கம்' அல்லது 'ஏலக்காய்' என்பது பொருள். ஏலக்காய் போல மணமானவள் இவள்.

மூன்றாமவள் 'கேரன்ஹப்புக்' - 'கேரன்ஹப்புக்' என்றால் கண்மை என்பது பொருள்.

மூன்று மகள்களின் பெயர்களும் 'அழகு' அல்லது 'இனிமை'யோடு தொடர்புடையவை.

2016ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன. நாளை நாம் தொடங்கும் புதிய மாதத்தில் முன்னைய நாள்களை விட ஆண்டவர் இன்னும் அதிகம் ஆசி வழங்கக் காத்திருக்கிறார்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:17-24), 'உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று மகிழுங்கள்' என தன் சீடர்களிடம் சொல்கிறார் இயேசு.

சின்ன ராணி குழந்தை தெரசாவும் தன் அப்பாவிடம் வானத்து நட்சத்திரங்களைக் காட்டி அங்கே தன் பெயர் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்வாள்.

இளவல் - அழகி - சின்ன ராணி.

இவளின் மறைபரப்பு தாகத்தாலும், இவளின் எழுத்துக்களாலும் இந்த இளவலை 'மறைவல்லுநர்' எனவும், 'மறைபோதகப் பணியின் பாதுகாவலி' எனவும் அழைக்கிறது திருஅவை.

வாழ்வின் பெரிய விஷயங்கள் சின்னஞ்சிறியவற்றில்தான் இருக்கின்றன என்பதை உணர்த்தியவள் இந்த சின்ன ராணி.

சின்ன சின்ன வழிகள் வழியாகவே வாழ்க்கை.

Thursday, September 29, 2016

கொராசின் நகரே

'கொராசின் நகரே, ஐயோ உனக்குக் கேடு!'

(காண். லூக் 10:13-16)

தன் போதனையைக் கேட்டு திருந்த மறுத்த கொராசின், பெத்சாய்தா, மற்றும் கப்பர்நகூம் நகரங்களைச் சாடுகின்றார் இயேசு.

இயேசுவே இந்நகரங்களைச் சாடினாரா அல்லது இயேசுவின் சீடர்கள் காலத்தில் அவர்களின் பணி இந்த நகரங்களில் எடுபடவில்லை என்பதால் தாங்கள் சாட விரும்பியதை இயேசுவே செய்ததாக அவர்கள் பதிவு செய்தார்களா?

'நீங்கள் மனம் மாறவில்லை!' என்று சபிக்கிறராரே இயேசு. ஏன்?

மனித மனத்தில் இருப்பது அவருக்கு எப்படி தெரிந்தது?

அல்லது மனமாற்றம் என்பது வெளிப்படைச் செயல்களில் தெரியவேண்டுமா?

மனம் மாறுவதற்கு என்று டிகிரி (அளவு) எதாவது இருக்கின்றதா?

இந்த அளவை எப்படி நிர்ணயம் செய்வது?

நாளைய பதிலுரைப்பாடல் (திபா 139) திருப்பாடல் ஆசிரியர், 'உன் உள் உறுப்புக்களை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!' என்று இறைவனின் வியத்தகு ஆற்றலைப் புகழ்ந்து பாடுவதாக இருக்கிறது.

ஆக, நம் உள்ளுறை எண்ணங்களை உய்த்துணர்பவர் கடவுள்.

நம் உள்ளுறை எண்ணங்கள் மற்றவர்களுக்குத் தெரியக் காரணம் நம் பழக்கவழக்கங்களும், செயல்களும், நடை உடை பாவணைகளும்.

எனவே, மனம் மாற வேண்டும்.

அதற்கேற்ற செயல்களும், பண்புகளும் இருக்க வேண்டும்.


Wednesday, September 28, 2016

அதிதூதர்கள்

'வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (காண். யோவான் 1:47-51)

நாளை (செப்டம்பர் 29) அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

தீமையிலிருந்து காப்பாற்றும் மிக்கேல்,

மங்கள வார்த்தை சொல்லும் கபிரியேல்,

நலம் நல்கும் இரபேல்

என மூன்று அதிதூதர்கள் இருக்கின்றனர் நம் கத்தோலிக்க நம்பிக்கை மரபில்.

தூதர்கள் என்பவர்கள் இசுலாம், யூத, மற்றும் பாரசீக சமயங்களிலும் காணப்படுகின்றனர்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

நிறைய நாள்கள் நாம் கடவுளையும், புனிதர்களையும் நினைத்துப் பார்க்கிறோம். நாளை ஒருநாள் இந்த அதிதூதர்களை சிறப்பாக நினைத்துப் பார்க்கலாமே.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இதை நாளைய திருநாள் நிறைவுசெய்வதாக.

இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

Tuesday, September 27, 2016

பின்பற்றுதல்

நாளைய நற்செய்தியில் (காண். லூக் 9:57-62) இயேசுவைத் தேடி மூன்றுபேர் வருகின்றனர். அவரிடம் வரும் மூன்றுபேருக்குமே ஓர் ஆசை - இயேசுவைப் பின்பற்றுவது!

ஆனால், தன்னைப் பின்பற்றுவதற்காக வரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை இயேசு.

தன்னைப் பின்பற்றுவது கடினம் என்ற எதார்த்தத்தை மட்டும் சொல்கிறார்.

கடந்த வாரம் எங்கள் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களுக்கான ஆண்டுத்தியானம் நடைபெற்றது. தியானத்தை வழிநடத்திய அருள்தந்தை, 'இறைவன் தகுதியில்லாதவர்களை அழைக்கிறார்' என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்படி அவர் சொல்லும்போதெல்லாம் தமிழ்சினிமாவின் திரைக்கதைதான் நினைவிற்கு வந்தது.

இப்போ கொஞ்ச நாளா வரும் படங்களில் அப்படித்தான் காட்டப்படுகின்றன.

வேலையில்லாமல், ஊரைச் சுற்றிக்கொண்டு, பெண்களைக் கிண்டல் செய்து கொண்டு, குடித்துக் கொண்டு, ஓடுகிற பஸ்சில் சும்மா சுற்றித் திரியும், கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் சரிவரப்படிக்காத ஹீரோவை தேடி தேடி காதலிக்கிறார் ஹீரோயின்.

ஏன்! நல்லா படிச்ச, நல்ல வேலையில் இருக்கும், குடிக்காத, புகைபிடிக்காத, தன் பெற்றோருக்கு கீழ்ப்படியும், மற்றவர்களை மதித்து நடக்கும் மனிதர்களை இவர்கள் லவ் பண்ணுவதில்லை. பல திரைப்படங்களில் இத்தகைய கதாபாத்திரங்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்களாகவும், கேலிப்பொருள்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

நம் திரைப்படங்கள் எதைத்தான் நமக்கு சொல்ல வருகின்றன?

ஒன்றும் சொல்ல வரவில்லை.

செல்லுலாய்டில் செதுக்கப்படுவதெல்லாம் வாழ்க்கை அல்ல.

அப்படி ஒரு பிரம்மையில் தன்னைச் சுற்றி வந்தவர்களின் கனவுகளைத்தான் துடைத்துப் போடுகின்றார் இயேசு.

இயேசுவைப் பின்பற்றுதல் என்பது மிகவும் கடினமே.

தன்னிடம் லவ்வை வந்து சொல்லும் இளவலை நிராகரிக்கும் மற்றொரு இளவல்போல போகிற போக்கில் தன்னிடம் வருபவர்களை நிராகரிக்கின்றார் இயேசு.

Friday, September 16, 2016

நிறைவு

'உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்.
உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.
விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.'
(திருப்பாடல் 17:8, 15)

இன்று காலை திருப்பலிக்கு வெளியே சென்றிருந்தேன்.

பதிலுரைப்பாடல் வாசித்தபோது மேற்காணும் இறைவார்த்தைகள் என் கவனத்தை ஈர்த்தன.

நான் தயார் செய்த மறையுரை ஒதுக்கிவிட்டு இவ்வார்த்தைகளைப் பற்றி பேசினேன்.

மேற்காணும் வார்த்தைகளில் மிகவும் பிடித்தது என்ன தெரியுமா?

'விழித்தெழும்போது உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்!'

திருப்பாடல் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் 'புவிமைய எண்ணம்' (geocentrism) கொண்டிருந்தனர். கோப்பர்னிகசுக்குப் பின்தான் 'சூரிய மைய எண்ணம்' (heliocentrism) தொடங்கியது.

புவிமைய எண்ணம் என்றால் என்ன?

புவி நடுவில் இருக்கிறது. பகலில் நம் கண்களுக்குத் தெரியும் இரவில் அடி உலகத்திற்கு கடந்து செல்கிறது. சூரியன் இல்லாததால் இரவில் எல்லாம் நிலைத்தன்மைக்கு வந்துவிடும். ஷேக்ஸ்பியர் 'ஒவ்வொரு உறக்கமும் குட்டி இறப்பு. ஒவ்வொரு இறப்பும் நீண்ட தூக்கம்'  என்று சொல்வது போல ஒவ்வொரு நாளும் எல்லாம் இறந்துவிடுவதாக நினைத்தனர் திருப்பாடல் ஆசிரியர் காலத்து மக்கள்.

காலையில் சூரியன் வந்தவுடன் மீண்டும் உயிர்வந்துவிடும் எல்லாவற்றுக்கும்.
நமக்கு அப்படி ஒரு நிலை வருகிறது என வைத்துக்கொள்வோம்.

எல்லாம் இறந்துவிட்டது என்று நினைத்தவர் திடீரென எழுந்தால் முதலில் எதைத் தேடுவார்? தன் மனைவி, பிள்ளை, பணம், நகை அல்லது தான் அதிகம் விரும்பும் ஒன்றைத் தேடுவார்.

ஆனால், நம் திருப்பாடல் ஆசிரியர் ரொம்பவே வித்தியாசமானவர்.

எழுந்தவுடன் கடவுளின் உருவத்தைத் தேடுகிறார்.

அப்படித் தேடி அவரைக் கண்டுகொள்கிறார். மேலும், நிறைவு அடைகின்றார்.

இவரிடம் நாம் காணும் 'நிறைவுதான்' நாம் கற்க வேண்டிய பாடம்.

நிறைவு எல்லாத இடத்தில்தான் கருத்து வேறுபாடுகளும், புகார்களும் எழுகின்றன.

அருள்நிலை வாழ்வில் நிறைவு இருந்தால்தான் வார்த்தைப்பாட்டிலும் நிலைக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில் லூக்கா இயேசுவைப் பின்பற்றிய பெண்சீடர்களைப் பற்றி எழுதுகின்றார். இந்தப் பெண்கள் தங்கள் வாழ்வில் 'நிறைவு' பெற்றதால்தான் இயேசுவைப் பின்பற்ற முடிந்தது என நினைக்கிறேன்.

அன்று மட்டுமல்ல இன்றும் கடவுளே கண் என்று நினைக்கும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவுக்கு முளைப்பாரி செய்து கொடுக்கும் என் அய்யாமைக்கு ஊர் சார்பாக 100 ரூபாய் கொடுப்பார்கள் (15 ஆண்டுகளுக்கு முன்பு). ஒருமுறை அப்படி கொடுத்த ஊர் பெரியவர், 'லட்சுமி அம்மா, இது போதுமா?' என்றார்.

'போதாதுன்னா எதுவுமே போதாதுதான். போதும்னா இதுவே போதும்!' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த வெள்ளை சேலை சீடத்தி.

இப்பெண்களும், திருப்பாடல் ஆசிரியரும் சொல்லும் பாடம் 'மனநிறைவு' (contentment)!

Thursday, September 15, 2016

குருத்துவ உறவு

இன்று மாலை திருச்சிலுவை துறவற இல்லத்திற்கு தேனீர் அருந்தச் சென்றோம்.

இனிய மாலை வேளை. மழை புதுப்பொண்ணு போல சொட்டு சொட்டாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது.

இந்த துறவற இல்லத்தில்தான் நான் குருமாணவராய் இருந்தபோது யோகா கற்றுக்கொள்ள வந்தேன். அந்த நினைவுகள் வந்து சென்றன. இன்று புதிதாய் சில அருள்சகோதரிகளின் அறிமுகம் பெற்றேன்.

சிலரின் பிரசன்னம் ஒருவித நம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைக்கும். அப்படித்தான் இருந்தது இன்று நான் சந்தித்தவர்களின் சந்திப்பு.

மேலும் இன்றைய இரவு உணவிற்கு எங்கள் இல்லத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அழைக்கப்பட்டிருந்தனர்.

பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள், குட்டீஸ்கள் என ஒரே கலர்ஃபுல்லாய் இருந்தது.

இந்தி மொழியில் திருப்பலி இருந்தது.

புனேவுக்கு வரும்போதெல்லாம் ஏதோ புதிதாய் பிறந்தது போலத்தான் இருக்கும்.

என் வாழ்க்கையை ஐந்து ஏழு என பிரித்தால், முதல் மற்றும் இரண்டாம் ஏழு என் ஊரிலும், நான்காம் ஏழு புனேயிலும், ஐந்தாம் ஏழு அருள்பணியாளராகவும், மூன்றாம் ஏழு உயர்கல்வி, மேல்நிலை, ஆயத்தநிலை என கடந்தது என்றும் சொல்வேன்.

நான் குருமாணவராய் இருந்தபோது என் ஜன்னலுக்கு வெளியே கடந்து போகும் சோனாவை இன்று பார்த்தேன். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றவள், 'நீங்க அப்படியே இருக்கிறீங்க!' என்றாள்.

முன்பின் தெரியாதவர்களையும், நெருக்கமாக மாற்றும் உறவு குருத்துவ உறவுதான்.

'நாங்கள் யாருக்கும் அறிமுகமில்லாதவர் எனத் தெரிந்தாலும் எல்லாரும் எங்களை அறிவர்' என்று பவுல் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

Wednesday, September 14, 2016

மந்திரச்சொல்

இன்று காலை ஒரு துறவற இல்லத்திற்கு திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

ஆங்கிலத் திருப்பலி.

ஆங்கிலத்தை இப்போதுதான் கற்கத் தொடங்கும் 14 முதல் 16 வயது முடிய உள்ள மாணவியர் துறவற சபையில் சேர்ந்து முதல் நிலையில் இருந்தார்கள்.

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் - எங்கெல்லாம் இப்படி துறவற இல்லத்தில் பயிற்சி பெறும் மாணவியரைப் பார்க்கின்றேனோ - அப்போதெல்லாம் எனக்கு என் தங்கை ஞாபகம் வந்துவிடும்.

திருப்பலி முடிந்து சாப்பிட்டுவிட்டு என் இல்லம் திரும்பும்வரை மனது ரொம்ப கனமாக இருந்தது.

'இயேசு என்றால் யார், திருச்சிலுவை என்றால் என்ன, மோசே என்றால் யார், வெண்கலப்பாம்பு என்றால் என்ன, பவுல் சொல்லும் வெறுமை என்றால் என்ன' என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்ல முயன்றேன். ஆனால் அவர்களைப் பார்த்தவுடன் அவர்களின் கண்களில் இருக்கும் ஒருவித ஏக்கம் என்னைப் பேச விடவில்லை. பாதியிலேயே மறையுரையை நிறுத்திவிட்டேன்.

இப்பெல்லாம் எந்த பொண்ணுங்களைப் பார்த்தாலும் ஒருவித பரிவுதான் வருகிறது. வயதாவதற்கான அறிகுறி என இதை நான் நினைக்கிறேன்!

நான் புனே குருமடத்தில் மாணவராக இருந்த சமயம், என் தந்தை இறந்த இரண்டாவது ஆண்டில், என் தங்கையை ஒரு துறவற சபை அருள்சகோதரி அழைத்துச் சென்றுவிட்டார். 'அண்ணனும் ஃபாதர், நீயும் சிஸ்டர்' என்று யாரும் சொன்னார்களா அல்லது 'அப்பா இறந்துவிட்டார்கள். உன்னை இனி யார் கரையேற்றுவார்கள்!' என்று யாரும் சொன்னார்களா என்று தெரியவில்லை. எனக்குத் தெரியாமலேயே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அது தெரிய வந்தவுடன் எனக்கு ஒரு பக்கம் கோபம். மறுபக்கம் வருத்தம்.

'இது உனக்கு வேண்டாம்!' என்று சொல்லி என் தங்கையை அழைத்து வரச் சென்றபோது அவர்கள் விட மறுத்தார்கள்.

ஒருவரின் வறுமை மற்றும் இயலாமைதான் துறவற அழைத்தலைத் தேடத் தூண்டுமா?

இன்று காலை நான் பார்த்த அந்த இளவல்கள் ஒருவேளை அம்பானி அல்லது அதானி போன்ற குடும்பத்தில் பிறந்திருந்தால் இறையழைத்தல் என்றால் என்ன என்பதை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்தானே!

'இறைவன் என்னைத் தொட்டார்!' 'நான் அவரது அழைத்தலை உணர்ந்தேன்!' என்று சொல்லும் சாட்சியங்களை எல்லாம் இன்னும் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை.

'இறைவன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. தான் தேர்ந்தெடுப்பவர்களை அவர் தகுதியாக்கிக் கொள்கிறார்' என்று சிலர் சொல்கிறார்கள். ஏன் அவர் தகுதியானவர்களையே தேர்ந்துகொள்ளவேண்டியதுதானே!

மேலும், இப்படி பச்சைப் பிள்ளைகளைக் கூட்டி வந்து, முழங்கால் போடு, முக்காடு போடு, சாம்பிராணி போடு, தூபம் போடு என்று சொல்வது பாவம் இல்லையா? யார் வீட்டு குழந்தையோ என்று இருக்கப்போய்தானே இப்படி நடத்துகிறோம். என் வீட்டு தங்கையோ, அண்ணன் மகளோ, தம்பி மகளோ என்றால் நான் இப்படி அவரை அழைத்துக் கொண்டு வந்து இப்படிச் செய்வேனா?

'இயேசுதான் உன்னை அழைக்கிறார்!' என்று சொல்லி ஒரு மறைமாவட்ட ஆயர் தன் மறைமாவட்டத்துக்கென ஆள்களை தேர்ந்து கொள்வதும், அல்லது துறவற சபை பொறுப்பாளர் தேர்ந்து கொள்வதும் உண்மைதானா!

இறையழைத்தல் - குருத்துவம் அல்லது துறவறம் என்ற மேட்டிமையைத் தக்கவைத்துக்கொள்ள யாரோ கண்டுபிடித்த மந்திரச்சொல்.

Tuesday, September 13, 2016

வந்தநாள் முதல்

புனேக்கு வந்து சேர்ந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகிவிட்டன.

வந்தநாள் முதல் தொண்டையும் சரியில்லை. நாக்கும் சரியில்லை.

காய்ச்சல், உடல்வலி, ஸ்பான்டிலிட்டிஸ் என்று எல்லாம் வந்து மாத்திரை எடுத்து, ஊசி போட்டு ஐந்து நாட்கள் (20 பாடவேளைகள்) வகுப்பும் எடுத்தாயிற்று.

எல்லாம் சரியாகி இன்று வகுப்பிற்குப் போனவுடன்,

'என்ன ஃபாதர் உடல்நிலை சரியில்லையா? ஒரு மாதிரி இருக்கீங்க!' என்றார் மாணவர் ஒருவர்.

'மறுபடியும் முதல்ல இருந்தா!' என்று கேட்கணும்போல இருந்தது.

'இன்று நான் நல்லா இருக்கணும்!' அப்படி என்று காலையில் நான் எழும் அதே நேரத்தில்,

'இன்று இவன் நல்லா இருக்கக் கூடாது!' என்று அந்தப் பக்கம் கடவுள் எழுவார்போல!

Saturday, September 3, 2016

கேள்விக்கென்ன பதில் - 3

கேள்வி: பிரிவினை சபை அன்பர்கள் இயேசுவை 'அப்பா' என அழைத்து, 'இயேசப்பா' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றனர். இதைக் கேட்கும் நம்மவர்கள் அச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்துவது சரியா?

பதில்: 'மண்ணுலகில் நீங்கள் ஒருவரையும் 'தந்தை' ('அப்பா') என அழைக்க வேண்டாம். ஏனெனில் விண்ணுலகில் உள்ள தந்தை ஒருவரே உங்கள் தந்தை' (மத் 23:9) என கற்பித்த இயேசு, தன்னை தன் சமகாலத்தவர்கள் 'அப்பா' என அழைப்பதை விரும்பியிருக்க மாட்டார்.

இயேசுவின் சமகாலத்தில் போதகர்களை 'அப்பா' என அழைத்ததாக ஜோசப் ப்ளேவியுஸ் வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. மற்ற போதகர்கள் பெறும் 'போலி' மரியாதையை தான் பெற விரும்பாத இயேசு ஒருவேளை அந்த டைட்டில் தனக்கு வேண்டாம் என சொல்லியிருக்கலாம்.

ஆனால், இயேசு தன் வானகத்தந்தையை மட்டுமே 'அப்பா' என அழைத்தார். வானகத்தந்தையும் இயேசுவை 'மகன்' என அழைக்கின்றார்.

இயேசு மனிதர் என்னும் நிலையில் நம் சகோதரர், அண்ணன். இதை எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியரும், 'அவர் (இயேசு) நம்மை சகோதரர்கள் என அழைக்க வெட்கப்படவில்லை' (எபி 2:11) என எழுதுகின்றார்.

இயேசு உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்களை திபேரியக் கடலருகே பார்த்து, 'பிள்ளைகளே, மீன் ஒன்றும் படவில்லையா?' எனக் கேட்கின்றார். 'பிள்ளைகளே' என்பது யோவான் நற்செய்தியாளர் 'அன்பிற்குரியவர்களே' என்ற பொருளில் பயன்படுத்தும் வார்த்தை. இந்த வார்த்தையை இவர் தன் திருமடல்களில் அதிகம் கையாளுகின்றார். இந்த ஒரு நிகழ்வை வைத்து இயேசு நம்மை 'பிள்ளைகள்' என்றால், அவரை நாம் 'அப்பா' என்று சொல்வது சரி என்று சொல்லிவிட முடியாது.

நம் தமிழ் மரபில் இறைவனை அம்மையே அப்பா என்று பார்த்துவிட்டதால், இயேசு என்ற இறைவனையும் 'அப்பா' என்று அழைக்க நம் மனம் துடிக்கிறது.

ஆக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை யாரோ 'அப்பா-மகன்.மகள்' என பார்க்கத் தொடங்கியதன் விளைவே இயேசுவை 'அப்பா' என்று அழைப்பது.

எனக்குத் தெரிந்த மொழிகளில் - 'இயேசப்பா' என்ற சொல்லாடல் இல்லை. இத்தாலியன் மற்றும் ஜெர்மன் வழிபாடுகளில் இப்படிப்பட்ட வார்த்தை இல்லை.

ஏன்! மலையாளத்தில் 'இயேசுவாகிய பிதாவே' 'பிதாவாகிய இயேசுவே' என்று அழைத்துப் பார்த்தால் அது வித்தியாசமாக தெரிகிறது.

இன்னொரு விளக்கம்.

முதல் ஏற்பாட்டு இறைவனை நாம் 'ஆண்டவர்' என அழைக்கிறோம். அந்த ஆண்டவர்தான் 'தந்தையாகிய அப்பா'.

இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவை 'ஆண்டவர்' என அழைக்கின்றோம்.

ஆண்டவர் - அப்பா என்றால்

ஆண்டவர் - இயேசு என்றால்

இயேசு - அப்பா தானே!

மேஜிக் இல்லா லாஜிக்.

Friday, September 2, 2016

மன்மதன் அம்பு

'முன்பெல்லாம் மன்மதன்கள் அம்புகளை வைத்துக் கொண்டு
காதலியரைப் பின்தொடர்ந்தனர்.
இன்றோ அரிவாள்களை வைத்துக் கொண்டு பின்தொடர்கிறார்கள்!'

- கொஞ்ச வாரங்களுக்கு முன்பாக வந்த இந்த டுவிட்டர் கீச்சு தான் இப்போ நடைமுறையா போச்சு.
சுவாதி - ராம்குமார் தொடங்கி, பிரான்சினா - கீகன் என தொடர்ந்து கொண்டே போகிறது.

மானம், வீரம், காதல் என்று மூன்று பண்புகளையும் உயிர்போல் நினைத்து வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு ஏன் இந்த சோதனையோ?

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்று நினைத்ததால்தான் தெய்வப்புலவனும் இந்த மூன்றை வாழ்க்கையின் மையமாக வைத்துப் பாடிவிட்டுச் சென்றான்.

காலையில் எழுந்து வேலைக்கு ரயிலில் சென்ற சுவாதியும், ஆலயத்திற்குச் சென்ற பிரான்சினாவும் தங்கள் முடிவு மாலையில் மருத்துவமனை பிரேதக்கூடத்தில் இருக்கும் என்று நினைத்திருப்பார்களா?

காதல் ஓர் ஆண்மகனை அடுத்தவரின் உயிரை எடுக்கும் அளவிற்கு ஆட்டுவிக்குமா?

அகநானூறு பாடல்களில் ஒன்றில்கூட இத்தகு வன்முறை இல்லையே.

தான் காதலித்தவர்களை நோக்கி கத்தியை வீசும் அந்த நொடி அவர்கள் கண்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? யார் தெரிந்திருப்பார்கள்?

'நான் உன்னைக் காதலித்ததால் நீ என்னைக் காதலிக்க வேண்டும்' என்று ஒருவர் சொல்கிறார் என்றால், உண்மையில் அவர் மற்றவரைக் காதலிக்கவில்லை. மாறாக, அடுத்தவரில் காணும் தன்னை மட்டுமே காதலித்திருக்கின்றார். ஆக, அடுத்தவரில் வெட்டியது அவர் தன்னையே.

'நீ எனக்குதான்!' என மற்றவரின்மேல் உரிமை கொண்டாட முடியுமா?

அப்படி உரிமை கொண்டாடினால் நாம் அடுத்தவரை ஒரு பொருளாக அல்லவா பார்க்கிறோம். ஒருவர் ஒரு வீட்டையோ, ஆட்டையோ, காட்டையோதான் தனக்க உரிமையாக்க முடியுமே தவிர, தன்னைப் போன்ற உயிருள்ள ஒருவரை எப்படி உரிமையாக்க முடியும்?

வன்முறை எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பாய்கின்றது.

மேலிருப்பவர் கொடூரமாக நடக்கின்றார். கீழிருக்கிறவர் பணிந்து போகிறார்.

ஒருவர் வன்முறையில் வாளெடுக்கும்போது மற்றவர் வாழக் கூடாதவர் அல்லது தகுதியில்லாதவர் என முடிவெடுக்கின்றார். அடுத்தவர்களுக்கு உயிரை நம்மால் கொடுக்க முடியாதபோது அதை அவர்களிடமிருந்து எடுக்கும் உரிமை எங்கிருந்து வந்தது?

கொல்லப்பட்டது தனி உயிர் என்றாலும் பாதிப்பு என்னவோ ஒட்டுமொத்த சமூகத்திற்கே!

தமிழ் இனம் எங்கே தடம் மாறியது என்று பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம் நாம்.

நமக்கு அடுத்திருப்பவரை நம்மைப் போல பார்க்கும் பக்குவம்,
பார்வையில் வக்கிரம் அல்லது வன்முறை இல்லாமல் பார்க்கும் பக்குவம்,
ஒவ்வொருவரும் வாழ, நினைத்ததை செய்யும் கட்டின்மை கொண்டவர் என ஏற்றுக் கொள்ளும் பக்குவம்,
சினிமா மற்றும் விளம்பரங்களில் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் முகம்திருப்பும் பக்குவம்
என நாம் பக்குவப்படுதல் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

மன்மதன்கள் இனி அம்புகளையும் எடுக்க வேண்டாம்!

Thursday, September 1, 2016

சைக்கிள்

எனக்கு எங்க அப்பா மேல நிறைய நாளு ஒரு கோபம் இருந்துச்சு!

நான் பள்ளிக்குப் போன நாட்களில் எனக்கு அவர் சைக்கிள் சொல்லிக் கொடுக்கவில்லை.

என் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த கடற்கரை, சங்கர், மோகன் என எல்லாரும் சைக்கிள் படிக்க சென்றபோதும்கூட என்னை அனுப்ப மறுத்துவிட்டார்.

நான் புனேவிற்கு மெய்யியல் படிக்கச் சென்றபின்தான் (என் 19வது வயதில்) சைக்கிளே பயின்றேன்.

நிற்க.

இன்று வீட்டிற்கு போய்விட்டு வரலாம் என மதுரையிலிருந்து புறப்பட்டேன்.

இராஜபாளையத்தில் இறங்கி என் சிற்றூருக்கான பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருந்தேன். காலை 8:15 மணி. நிறைய ஸ்கூல் வேன்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. குழந்தைகள் ஆயாவின் மடியில் உட்கார்ந்திருந்தன. நிறைய வேன்களில் 'இன்டர்நேஷனல் ஸ்கூல்' என எழுதப்பட்டிருந்தது. அப்படி என்ன அங்கே 'இன்டர்நேஷனல்' என்று தெரியவில்லை?

சில குழந்தைகள் தங்கள் அப்பாக்களின் டூவிலர்களில் தொங்கிக் கொண்டு போனார்கள்.

சில ஆட்டோக்காரர்களும் தங்களால் முயன்ற அளவு குழந்தைகளைத் திணித்து அள்ளிக் கொண்டு போனார்கள்.

மூன்று இளவல்கள் சைக்கிள்கள் ஓட்டிக் கொண்டு சென்றனர்.

அவர்கள் ஓரமாகத்தான் சென்றார்கள். ஆனால், அவர்களுக்குப் பின்னால் ஹாரன் அடித்துக் கொண்டே வந்த லாரி ஒன்றின் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த அவர்களில் ஒருத்தி பேலன்ஸ் தவறி கீழே விழுந்துவிட்டாள். 'ஐயயோ!' என்று அவளை நோக்கி ஓடியவர்களில் நானும் ஒருவன். ஒன்றுமே நடக்காதது போல கடந்துவிட்டது லாரி.

அவளைத் தூக்கிவிட்டு, கொட்டிய தண்ணீர் பாட்டிலையும், டிபன் பாக்ஸையும் மூடி அவளுடைய நண்பிகளுடன் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் நிறுத்தத்திற்கு வந்தவுடன் டக்கென்று என் அப்பா நினைவு வந்தது.

'இப்படி நானும் விழுந்துவிடுவேன்!' என நினைத்துத்தான் பள்ளி நாட்களில் எனக்கு அவர் சைக்கிள் சொல்லிக் கொடுக்கவில்லையோ?

ஏனெனில் மாதம் 1200 ரூபாய் சம்பளம் வாங்கிய அவர் 300 ரூபாயை என் பேருந்து செலவிற்காக கொடுத்துவிட்டார். அவர் நினைத்திருந்தால், மூன்று மாதங்களில் சைக்கிளை வாங்கிக் கொடுத்துவிட்டு, காசை மிச்சப்படுத்தியிருக்கலாம்!

அன்றாட சம்பளம் வாங்கிய நாட்களில்கூட என்னைப் பேருந்தில் ஏற்றி என் கால் வலிக்காமல், உடல் வியர்க்காமல் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

சைக்கிள் பழகாதது நல்லதே!

அப்பாக்கள் என்றும் ஆச்சர்யங்களே.