இந்த வாரம் நான் இரசித்த பட்டினத்தார் பாடல் ஒன்றை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
பட்டினத்தார் துறவு மேற்கொண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருக்க, காவிரிப்பூம்பட்டிணத்தில் இருந்த அவரது தாய் இறந்து விடுகிறார். தன் தாய் இறந்த நிகழ்வை தானாகவே உணர்ந்து தன் சொந்த ஊர் வருகின்றார் பட்டினத்தார். இறந்த தாயின் உடலை தகனம் செய்வதற்காக ஊரார் ஏற்கனவே இடுகாட்டில் கூடியிருக்கின்றனர். 'பட்டினத்தார் வருவாரா? மாட்டாரா?' என எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அங்கே வந்து சேர்கின்றார் பட்டினத்தார். தாயின் உடலைத் தகனம் செய்யுமாறு அவரின் கைகளில் கொள்ளியைக் கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் அவர் குரலெழுப்பி பாடிய பாடலே இது.
'எப்படி நான் தீ இடுவேன்?' என்ற கேள்விகளால் நிறைந்திருக்கும் இப்பாடல் பட்டினத்தாருக்கு தாயின் மேலிருந்த பாசத்தை நினைவுபடுத்துகிறது.
தாயின் பண்புகளாக அவர் நான்கைக் குறிப்பிடுகின்றார்:
அ. 'பையல் என்றபோதே பரிந்து எடுத்துச் செய்ய...'
'பிறந்திருப்பது பையன் என்றபோதே பரிவோடு எடுத்தார்' என்பது பொருள். 'பையன்' என்பதற்காக எடுத்தார் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. 'பரிவு' என்ற வார்த்தையைத்தான் நாம் இங்கே பார்க்க வேண்டும். ஒரு தாய்க்கு தன் குழந்தையின் மேல் ஏற்படும் முதல் உணர்வு அன்பு அல்லது பாசம் அல்ல. மாறாக, பரிவு. அதாவது, பரிவு என்ற வார்த்தையில் அடுத்தவரின் சார்பு நிலை அடங்கியிருக்கிறது. குழந்தையின் மேல் யார் வேண்டுமானாலும் அன்பு காட்டலாம். அல்லது, அன்பு செய்வதில் சார்பு நிலை தேவையில்லை. ஒரு குழந்தை தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள முடியாது. முற்றிலும் அடுத்தவரை சார்ந்தே அது இருக்கின்றது. அந்த சார்பு நிலைக்கு தாய் தரும் உடனிருப்பே பரிவு.
ஆ. 'வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னை காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகில் இட்டு தீ மூட்டுவேன்'
'வட்டில்' என்பது 'பிறந்தவுடன் குழந்தையை கிடத்தியிருக்கும் வட்ட வடிவமான தட்டு.' இது இன்றும் நகரத்தார் சமூகத்தவரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கிடத்தும்போது குழந்தையின் தண்டுவடம் நேராகிறது. கழுத்தின் அமைப்பு, பின் தலையின் அமைப்பு நேராகிறது. வட்டில், தொட்டில், மார்பு, தோள், கட்டில் என்னும் வார்த்தைகள் ஒரு குழந்தை அடையும் வளர்ச்சியைக் குறிக்கின்றது. குழந்தையின் எல்லா வளர்ச்சியையும் சரியாகக் கவனித்து அதை அக்கறை எடுத்துப் பார்க்கிறாள் தாய். வட்டிலில் போட வேண்டிய குழந்தையை தோள்மேலும், தோள்மேல் போட வேண்டிய குழந்தையை தொட்டிலிலும் போட்டால் வளர்ச்சி எசகுபிசகாவிடும்.
மேலும், பரிவுக்கு அடுத்தபடியாக தாய் குழந்தையின் மேல் காட்டும் உணர்வு 'காதல்'. அதாவது, காதல் செய்யும் ஒருவர், தான் காதலிக்கும் நபர்மேல் சார்ந்திருக்கத் தொடங்குகின்றார். பரிவின் அடுத்த பரிணாமம் காதல். பரிவில் கீழிருப்பவர் மேல் நோக்கி சார்ந்திருக்கிறார். காதலில் மேலிருப்பவர் கீழ்நோக்கி சார்ந்திருக்கிறார். காதலும், பரிவும் ஒரு தாயின் இரண்டு பண்புகளாக இருக்கின்றன.
இ. 'அரிசியோ நான்இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப்பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வதிரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு'
வாய்க்கு அரிசியிடல் என்பது சைவ அடக்கச் சடங்கின் ஒரு பகுதி. இதை கிறிஸ்தவ மரபிலும் சில இடங்களில் கடைப்பிடிக்கின்றனர். இந்த வாயினால்தான் தன் தாய் தன்னைக் கொஞ்சினாள் என நினைவுகூறுகின்றார் பட்டினத்தார்.
எப்படி வாழ்த்தினாராம் தாய்? ருசியுள்ள தேனே, அமிர்தமே, செல்வமே, திரவியமே, பூவே, மானே என வாய்நிறைய பட்டினத்தாரை அழைத்திருக்கின்றார் அவரின் தாய்.
மேலும், 'ஆத்தாள்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகின்றார். 'ஆத்தா' என்பது இன்றும் சிலர் அம்மாவை அழைக்க பயன்படுத்தும் வார்த்தை. 'ஆள்' ('ஆட்கொள்') என்ற வினைச்சொல், அல்லது 'அத்' ('பெற்றெடுத்தல்' என்று அர்த்தம் அக்காடிய மொழியில்) என்ற பெயர்சொல்லை தொடக்கமாகக் கொண்டு, இந்த வார்த்தை வந்திருக்கலாம். மேலும், பெண் தெய்வங்களுக்கும் இந்தப் பெயர்தான் முதலில் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட முடியுமா? நாம் இன்றழைக்கும் மாரியம்மன், செல்லம்மாள் என்பவர்களெல்லாம் தொடக்கத்தில் மாரியாத்தா, செல்லாத்தா என இருந்தவர்கள்தாம்.
ஈ. 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு'
இன்றும் என் கிராமங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தையை தங்களுக்கு நேர்முகமாக பிடித்துக்கொண்டு, தங்கள் நெற்றியை குழந்தையின் நெற்றியோடு இணைத்து, 'முட்டு...முட்டு...' என விளையாடுவார்கள். இது 'முத்து...முத்து...' என்று அந்த குழந்தைக்கு கேட்கும். இந்த விளையாட்டில் குழந்தை அழகாக புன்முறுவல் செய்யும். இந்த விளையாட்டு சாதாரணமாக தெரிந்தாலும், இந்த விளையாட்டில்தான் தன் சிரிப்பை தன் குழந்தைக்குத் தருகிறாள் தாய். சிரிப்பு என்பது ஒரு பழக்கம். அதை நாம் கற்றால்தான் நமக்கு இயல்பாக வரும். மேலும், தாயின் முகம் குழந்தையினுள் அப்படியே பதிவதும் இந்த நேரத்தில்தான்.
இந்த விளையாட்டைத்தான் 'முகம்மேல் முகம் வைத்து முத்தாடி' என்கிறார் பட்டினத்தார்.
(இத்துடன் புழக்கத்தில் உள்ள இன்னொரு விளையாட்டு என்னவென்றால், குழந்தையை தாய் தன் முதுகில் போட்டு, தன் கழுத்துக்குப்பின் அதன் இரு கைகளையும் போட்டுக்கொள்வாள். குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னும் சாய்ந்து, 'சாய்ந்தாடம்மா...சாய்ந்தாடு...' என்று பாடுவாள். இந்த விளையாட்டில் குழந்தையின் கைகள் வலுப்பெறுகின்றன. மேலும், குழந்தையைப் பெற்றெடுத்தபின் பெண்களின் வயிற்றில் பதிந்திருக்கும் சுருக்கம் மறைகிறது. ஆக, இந்தக் குழந்தையில் தாயும், சேயும் ஒருசேர பயன்பெறுகின்றனர். இப்படி எளிதான வழிகளை விடுத்துவிட்டு, இன்று நம் மகளிர் ஜிம் நோக்கி விரைகின்றனர்.)
இறுதியாக,
'வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறுஆனாள் பால்தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்...'
என முடிக்கின்றார்.
ஒரே பாடலில் தன் தாயின்மேலுள்ள பாசத்தையும், தான் சிவனுக்காக மேற்கொண்ட துறவையும் சொல்லி முடிக்கின்றார் பட்டினத்தார்.