Tuesday, November 7, 2017

மூன்று காரணங்கள்

இன்று காலை எங்கள் வளாகத்தில் உள்ள பள்ளி விடுதி மாணவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றச் சென்றிருந்தேன். இவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் ஞானஒளிவுபுரம் பத்தாம் பத்திநாதர் ஆயத்தக் குருமடத்தில் 9 முதல் 12 வகுப்புகள் வரை படித்ததுதான் நினைவிற்கு வரும். இன்று சில மாணவர்கள் ஸ்வெட்டர் அணிந்து வந்திருந்தார்கள். 'குளிர்கிறதா?' என்று நான் கேட்ட கேள்வி எனக்கே சிரிப்பாக இருந்தது. குளிர்வதால்தானே ஸ்வெட்டர் போடுறாங்க!

எனக்குள் சிரித்துக்கொண்டே திருப்பலியைத் தொடர்ந்தேன்.

இன்றைய நற்செய்தி வாசகம் இன்னும் கிளுகிளுப்பாக இருந்தது:

ஒருவர் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர்.

அ. வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.
ஆ. ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அதை நான் ஓட்டிப் பார்க்க வேண்டும்.
இ. எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று. ஆகையால் என்னால் வர முடியாது.

வயல் வாங்கியவர் அதைப் போய் பார்க்க வேண்டும் எனவும், ஏர் மாடு வாங்கியவர் ஓட்டிப்பார்க்க வேண்டும் என்றும் சொன்னவர், திருமணம் ஆனது என்று மட்டும் நிறுத்திக்கொள்கின்றார்.

நிற்க.

இவர்கள் மூவரும் சொன்ன காரணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

இவர்கள் தங்கள் மனதுக்குப்பட்டதை அப்படியே சொல்லிவிட்டார்கள். தங்களை விருந்திற்கு அழைத்தவரை திருப்திப்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் விருந்து முக்கியம் இல்லைதான். இவர்களுக்குத் தங்கள் உழைப்பும், தங்கள் குடும்பமும் பெரிதாகத் தெரிகின்றது.

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ப்ரையாரிட்டி இருக்கத்தான் செய்கின்றது. இதை நிர்ணயம் செய்பவர் நாம்தான்.

இந்த ப்ரையாரிட்டி மிக முக்கியம்.

இது தெளிவாக இல்லாதபோது நாம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்போமே தவிர, நமக்குத் தேவையானதைச் செய்ய மாட்டோம்.

முக்கியமில்லாத ஒன்றுக்கு நான் ஆம் என்று சொல்லும்போதெல்லாம் முக்கியமான ஒன்றுக்கு நான் இல்லை என்று சொல்கிறேன்.

இல்லையா?

ஆனால்,

ஒருவருடைய ப்ரையாரிட்டி அடுத்தவருக்கு எக்ஸ்க்யூஸ்.

இதுதான் வாழ்க்கை.

1 comment:

  1. தந்தை சகஜ நிலைக்கு வந்து விட்டார் என்பதை அந்த " கிளுகிளுப்பான" என்ற வார்த்தை மூலம் உணர முடிகிறது. தந்தைக்கு என் பாராட்டுக்கள்! நம்வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரையாரிட்டி உண்டு என்பதும், இதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதும் உண்மைதான்.ஆனால் என்றைக்கோ ஒருநாள் நமது ப்ரையாரிட்டியைப் புறந்தள்ளி விட்டு நமக்கடுத்தவரின் ப்ரையாரிட்டியை நமதாக்கிப் பாருங்களேன்..அதில் கிடைக்கும் சுகமும் அலாதிதான்.ஒருவருடைய ப்ரையாரிட்டி அடுத்தவருக்கு எக்ஸ்க்யூஸ்...One man's flesh is another man's meat' என்பதைப்போல.வாழ்க்கை இனிக்க இந்த வெரைட்டி கூடத் தேவைதானே! சுவை மிகுந்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete