Sunday, November 26, 2017

கோபமும் கொடுத்தலும்

நாளைய நற்செய்தி: கோபமும் கொடுத்தலும்

எங்கள் அலுவலகத்திற்கு உதவி கேட்டு நிறையப்பேர் வருவதுண்டு.

அப்படி ஒருவர் கடந்த மாதம் வந்தார். பெயர், மதம், ஊர் தெரியவில்லை. தன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், வீட்டில் ஒன்றும் இல்லை என்றும் சொன்னார். கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினோம்.

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டார். முன்பின் தெரியாத அந்த நபருக்கு அப்படியே அவர் கேட்ட முழு தொகையையும் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

இன்று மீண்டும் ஃபோன் செய்தார்.

நாளை தான் வருவதாகவும் தனக்கு பணம் வேண்டும் என்றும் சொன்னார்.

'நாங்கள் இங்கே இல்லை என்றும், அடுத்தவாரம் வரலாம்' என்றும் சொன்னேன்.

'யாரிடமாவது கொடுத்துவிட்டுப் போங்கள். நான் வாங்கிக்கொள்கிறேன்' - என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

நிற்க.

உதவி கேட்டு வருபவர்களை நான் சில நேரங்களில் தொந்தரவு அல்லது வேலையின் மும்முரம் காரணமாக, 'இல்லை' என்று அனுப்பி வைத்ததுண்டு.

இன்று அமர்ந்து யோசித்தால் ஒன்று தெளிவாகிறது. அதாவது, 'கோபம் வரும்போது என்னால் கொடுக்க முடிவதில்லை'

கோபம் என்னைக் கொடுக்க விடாமல் தடுத்துவிடுகிறது.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 21:1-4) ஏழைக் கைம்பெண்ணின் எளிய காணிக்கை நிகழ்வை வாசிக்கின்றோம்.

'தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்' என்ற லூக்காவின் பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

இந்தக் கைம்பெண்ணுக்கு ஏற்கனவே பற்றாக்குறை இருக்கிறது.

தனக்கு அருகில் நின்று பணம் போடும் செல்வந்தர்களையும், அவர்களின் பகட்டான உடைகளையும், அணிகலன்களையும் கண்டிப்பாக பார்த்திருப்பார். இவர் வெறுங் கழுத்தாய், ஒடுங்கிய தேகமாய், நசுங்கிய சேலை அணிந்தவராய் நின்றிருப்பார். மற்ற செல்வந்தரோடு தன்னை அவர் ஒப்பிட்டுப் பார்க்கவில்லையா?

'எனக்கு ஏன் கடவுள் எதுவும் தரவில்லை? என் கணவரையும் ஏன் எடுத்துக்கொண்டார்? எனக்கு மட்டும் ஏன் பற்றாக்குறை?' - என்று இவர் கேள்விகள் கேட்கவே இல்லையா?

கேட்கவில்லை.

கடவுளிடம் கைம்பெண் கோபப்படவில்லை.

கடவுளையே மன்னித்துவிட்டாள் இந்தக் கைம்பெண்.

மற்ற செல்வந்தர்கள் ஏதோ ஒரு பற்றாக்குறையை உணர்ந்தனர். அந்தப் பற்றாக்குறைக்குக் காரணமான கடவுள்மேல் கோபம் கொண்டனர்.

ஆனால், இந்தக் கைம்பெண் பரந்த மனத்தாள்.

ஆகையால்தான், துணிந்து கொடுக்கிறாள்.

கோபம் இல்லை என்றால் கொடுத்தல் தானே வந்துவிடும் -

இது இந்த பெயரில்லாப் பெண் பயிற்றுவிக்கும் பாடம்.


2 comments:

  1. தனக்கு அருகே நிற்கும் செல்வந்தர்களையும்,அவர்களது பகட்டையும் பார்த்தாலும்,தன்னையே தனக்கு மட்டும் 'ஏன் இந்தப்பற்றாக் குறை?' எனக் கேட்டுக்கொண்டாலும், கடவுளிடம் கோபப்படவில்லை அந்தக்கைம்பெண் என்பதும்,அவள் கடவுளையே மன்னித்து விட்டாள் என்பதும் உண்மைதான். "போற்றப்பட வேண்டியவள்தான் அந்தக்கைம்பெண்" என்பதும் கூட ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்தான்.ஆனாலும் அதற்காக பணம் கேட்ட ஒருவருக்குத் தந்தை கொடுக்க முடியாமல் போனது கோபத்தினால் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.ஏற்கனவே இருமுறை தங்களிடம் உதவி பெற்றதன் ருசியின்காரணத்தால்தான் " நீங்கள் ஊருக்குப் போனாலும் பரவாயில்லை; பணத்தைக் கொடுத்துவிட்டுப் போங்கள்" எனக்கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒருவருக்குத் தந்தை கொடுக்க முடியாமல் போனதற்கு 'கோபம்' காரணம் என்பதை என்றால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மரம் காய்க்கிறது என்பதற்காக அம்மரத்தை வேரோடு பிடுங்கினால் என்ன? என்று நினைப்பவர்கள் நிறைந்த காலம் இது.கண்களில் நீர்வரும் அளவுக்கு கதை சொன்னவர்களிடம் ஏமாந்து போன பலபேரைப் பார்த்திருக்கிறேன்.அதில் நானும்தான் அடக்கம்.கண்டிப்பாக உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ வேண்டும்தான்.மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுவது விவேகம்.அதனால் தந்தையைக் கொடுக்க விடாமல் தடுத்தது " கோபம் " என எனக்குத் தோன்றவில்லை.ஏனெனில் ' கொடுத்தலின்' சுகம் கண்டவர்களுக்கு எதுவுமே தடையாயிருக்க முடியாது என்பது நான் கற்ற பாடம்.அந்தக் கைம்பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை அழகாக சித்தரித்த தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு ஒரு வார்த்தை....இங்கு "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.'பிச்சை' என்பது கொடுப்பதைக் குறிக்கிறதே தவிர ஏழை அல்லது பணக்காரனை அல்ல.நன்றி!

    ReplyDelete