Tuesday, November 28, 2017

முன்னதாகவே

நாளைய நற்செய்தி: முன்னதாகவே

'அடுத்த வாரம் இந்நேரம் நான் ஃப்ளைட்ல பறந்துகிட்டு இருப்பேன்'

'போன வாரம் இந்நேரம் அந்த ஓட்டலில் பீட்சா சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்'

'இப்போது புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்'

மனித மூளை அல்லது மனம் அபாரகரமானது.

நினைத்த நேரத்தில் எதிர்காலத்தில், கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் என எந்த நேரத்திற்கும் அதனால் கடக்க முடியும்.

கணிணியில் நிறைய டேப்களை திறந்து வைத்து அல்லது ஆன்ட்ராய்ட் ஃபோனில் நிறைய ஆப்ஸ்களை திறந்து வைத்து சிஃப்ட்-டேப் அல்லது டேப் கீ கொண்டு நினைத்த மாத்திரத்தில் எந்த டேபையும், ஆப்-பையும் திறக்கவும், மூடவும் செய்வது போல மனம் தான் எதை விரும்புகிறதோ அதை நினைக்க முடியும்.

காலத்திற்கு முன்னதாகவே பயணம் செய்யும் இந்த மனம் மனித இனத்திற்கு ஒரே நேரத்தில் வரமும், சாபமுமாக இருக்கிறது.

வரம் - ஏனெனில் வரவிருக்கும் மகிழ்வை முன்னதாகவே முன்சுவைக்க முடியும்.

சாபம் - ஏனெனில் வரவிருக்கும் கவலையை முன்னதாகவே நினைத்து கலங்கிவிட முடியும்.

'அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று தன் சீடர்களை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:12-19) எச்சரிக்கை செய்கிறார் இயேசு.

எச்சரிக்கையோடு, 'அந்நேரத்தில் நானே உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்' என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

இன்று நான் எதைக் குறித்தெல்லாம் முன்னதாக கவலைப்படுகிறேன்?

என் தேர்வு, என் அடுத்த பணிமாற்றம், என் உடல்நிலை, என் நட்பு அல்லது உறவு வட்டம் என என் எண்ண ஓட்டங்களைப் பிடித்துக்கொள்வது எது?

இந்த முன்னதாகவே உள்ளவைகளுக்கு நேரம் கொடுக்கும்போதெல்லாம் நான் என் 'இன்றைக்கான' நேரத்தை அழிக்கிறேன்.

நேற்று சிந்திய பாலுக்காக நீ வருத்தப்படவேண்டாம் என்று சொல்வதைவிட இன்னும் ஒருபடி மேலே போய், 'நாளை பால் சிந்திவிடுமோ!' என்று பதற்றப்படாதே என்கிறார் இயேசு.

இப்போது கொதித்துக்கொண்டிருக்கும் பாலின்மேல் எண்ணமும், கண்களும் இருக்கட்டும்!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆம்....காலத்திற்கு முன்னதாகவே பயணம் செய்யும் இந்த மனித மனம், மனித இனத்திற்கு ஒரே நேரத்தில் வரமும்,சாபமுமாக இருக்கிறது. மிகச்சரியே! இன்று என்னை மகிழ்விக்கக் கூடிய எத்தனையோ விஷயங்கள் என் கைக்கெட்டிய தூரத்திலிருக்க " நாளைக்கும் இவையெல்லாம் நமக்கு சாத்தியப்படுமா?" எனும் கலக்கத்திலேயே நாட்களை ஓட்டுவது என் போன்றவர்களுக்கு வாடிக்கை."நீங்கள் ஜெபத்தில் என்ன வேண்டும் என்று கேட்குமுன்னரே,இன்னவென்று தெரிந்திருக்கிற உங்கள் தந்தை அதை உங்களுக்கு அளிப்பார்" எனும் விவிலியத்தின் வார்த்தைகளை நாம் தகுந்த சமயம் வரும்போது நம்புகிறோமா என்றால் பலருக்கு 'இல்லை' என்றே நம் மனம் சொல்லும்.சில சமயங்களில்...ஏன் நம் இரத்த உறவுகளிடம் பேசத்தயங்கும் தருணங்களில் அந்நேரத்தில் "நானே உங்களுக்கு நாவன்மையையும்,ஞானத்தையும் கொடுப்பேன்" எனும் வார்த்தைகளை நம்பினால் முறிந்த நம் உறவுகள் எத்தனை சுமுகமாக இணையும்.அழகாகச் சொல்கிறார் தந்தை...."நேற்று சிந்திய பாலுக்காகவும்,நாளை சிந்தப்போகும் பாலுக்காகவும் கவலைப்படாமல் இன்று கொதிக்கும் பாலின் மேல் மட்டும்உங்கள் எண்ணமும்,கண்களும் இருக்கட்டும்." எத்தனை பெரிய வாழ்க்கைத் த்த்துவத்தை எத்தனை இலகுவாக எடுத்து வைக்கிறார். "இன்றைய நாளைப் பார்த்துக்கொள்ளுங்கள்; நாளையப்பொழுதை நாளை பார்த்துக்கொள்ளும்" இந்த வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.அழகான ஒரு வாழ்வியலை வார்த்தைகளில் வடித்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete