Wednesday, November 29, 2017

அறிமுக ஆன்மீகம்

நாளைய நற்செய்தி: அறிமுக ஆன்மீகம்

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)

கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)

இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?

'அந்திரேயா!'

நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நற்செய்தி நூல்களில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தமானவர்களில் ஒருவர் அந்திரேயா. யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, பலாத்காரம், கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!

5 comments:

  1. மதுரையின் பிரபலங்களை மக்களுக்குத் தந்தை அறிமுகப்படுத்துவது போல் இருந்தாலும அந்த விஷயத்திற்குப் பின்னே எத்தனை பெரிய 'வாழும் உண்மையை' நமக்கு எடுத்துவைத்திருக்கிறார்,நானும் கூட யோசித்திருக்கிறேன்....அதெப்படி.....இயேசுவின் பனிரெண்டு அப்போஸ்தலருக்குக் கொடுத்துள்ளது போன்ற முக்கியத்துவம் இந்தத் திருத்தூதர்'அந்திரேயாவுக்கும்' கிடைத்திருக்கிறதென்று? கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்த போதுதான் தெரிந்தது...."இயேசுவே ஆண்டவர்" என பறைசாற்றியதோடு மட்டுமின்றி இயேசுவின் நற்செய்தியைப் பரப்புவதில் தன்னையே கரைத்துக்கொண்டவர் இவர் என்று.இயேசுவை மற்றவருக்கும்,மற்றவரை இயேசுவுக்கும் அறிமுகம் செய்யும் கருவியாக வலம் வந்தது இவரது தனிச்சிறப்பு என்கிறது இன்றையப்பதிவு.இந்தத் திருத்தூதரை நாம் நினைவு கூறும் இந்நன்னாளில் தந்தை நமக்கு எடுத்து வைக்கும் செய்தி புதிதாக மட்டுமல்ல; அழகாகவும் இருக்கிறது." நமக்குத் தெரிந்த இயேசுவிடம் நம்மவர்களைப்பற்றிப் பேசலாமே! அறிமுகம் செய்து வைக்கலாமே!" என்று.ஆமா.....அதை எதற்குத் தள்ளிப்போடணும்? இன்றே செய்யலாமே!கொஞ்ச விஷயம் மட்டுமே தெரிந்த அந்திரேயா பற்றிய மிச்ச விஷயங்களையும் அறிமுகப்படுத்திய தந்தைக்கு என் நன்றியும்! பாராட்டும்!!!

    ReplyDelete
  2. Nice Reflection congrats. Fr..Philo. Pondy

    ReplyDelete
    Replies
    1. Rev and Dear Father,
      Many thanks for visiting the blog. Thanks also for the wishes.
      Please do bless me. YK

      Delete
  3. Nice Reflection congrats. Fr..Philo. Pondy

    ReplyDelete
  4. அப்போஸ்தலர்,திருத்தூதர், மற்றும் அந்திரேயா,ஆன்ட்ரூ எனும் பல பெயர்களால் சற்றே குழம்பி விட்டேன்.பெலவேந்திரன் என்ற ஆன்ட்ரூவின் தமிழாக்கமே 'அந்திரேயாஸ்' என்பதையும்,ஆகவே அவரும் பன்னிரு அப்போஸ்தலர்களுக்குள் அடக்கம் என்பதையும் இப்பொழுதுதான் அறிந்தேன.ஆகவே என் தவறுக்கு வருந்துகிறேன்.மன்னிப்புக் கோருகிறேன. "கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு"......நானே சிறந்த உதாரணம்.!
    .

    ReplyDelete