Saturday, November 25, 2017

அரசர் - சின்னஞ்சிறிய

கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று எதற்காக இறுதித் தீர்ப்பு பற்றிய நற்செய்தி பகுதி (மத் 25:31-46) கொடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி நமக்கு எழலாம். உலக முடிவின் பின் இப்படித்தான் நடக்குமா? கடவுள் நம்மை இப்படித்தான் இருபுறமும் பிரித்து நிறுத்துவாரா? இந்த இரண்டு புறங்களையும் தாண்டி மூன்றாவது புறம் ஒன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா? நாம் வலப்பக்கம் அனுப்பப்படுவோமா? அல்லது இடப்பக்கம் அனுப்பப்படுவோமா? முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

இறப்புக்குப் பின் அல்லது எல்லாரும் இறந்தபின் நடக்கும் இறுதித் தீர்ப்பு உண்டு என விளக்க அல்லது மெய்ப்பிக்கப் பயன்படும் நற்செய்திப் பகுதியே மத் 25:31-46. இந்த நற்செய்திப் பகுதிக்கும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கும் என்ன தொடர்பு?

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:

அ. 'அரியணை' 

'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். மற்ற இருக்கைகளில் அவை இருக்காது. அல்லது சிங்க உருவங்கள் உள்ள இருக்கையில் அரசன் மட்டுமே அமர உடையும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். 
மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பட்டினத்தார் பாடல் ஒன்றில் பட்டினத்தார் அரசனைப் பார்த்து, 'நீ நிற்க நான் அமர' என்று இருக்கும். அதாவது யார் அமர்கிறாரோ அவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார். ஆகையால்தான், இன்றும் விசுவாச பிரகடனங்களை அதிகாரப்பூர்வமாக திருத்தந்தையர் அறிவிக்க வேண்டியிருந்தால் அவர்கள் உரோம் தூய லாத்தரன் பேரலாயத்தில் உள்ள அரியணையில் 'அமர்ந்து' அறிவிக்க வேண்டும். அதிகாரம் கொண்டிருக்கும் ஒருவர் எந்நேரமும் அமர்ந்துகொள்ள முடியும். அல்லது எந்நேரமும் அமர்ந்திருக்கும் ஒருவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார் - அரசராக இருக்கின்றார்.

ஆ. 'அரசன்' 

'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.

இ. 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை'

'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை 'அரசர்' என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே:

இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்: 
ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல். (காண். யோவா 2:48-49)
இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார். 

நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசராக' என்று சொல்லவில்லை.

இயேசு தன்னையே 'அரசர்' என்று வெளிப்படையாகச் சொல்லும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் மட்டுமே. அவரின் 'அரசர்' தன்மை எப்படிப்பட்டது என்பது இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம்:

1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது.

'அதிகாரம்' என்றவுடன் நாம் அது வேறொருவரால் நமக்குத் தரப்பட வேண்டும் என நினைக்கிறோம். அது தவறு. ஏன்? நாம் ஓட்டுப்போட்டு அரசாட்சி செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நம் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அதிகாரம் எங்கிருந்து வருகிறது. மக்களாகிய நம்மிடமிருந்து. இந்த அதிகாரம் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த அதிகாரத்தை எந்நேரமும் மக்கள் அவர்களிடமிருந்து பிடுங்கிவிட முடியும். மேலும் இந்த அதிகாரத்தில் ஒரு கட்டு இருக்கும். அதாவது, அவர்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இந்த அதிகாரம் இடத்திற்கும், நேரத்திற்கும் கட்டுப்பட்டது. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரம் தமிழகத்திற்குள் இருக்கும் வரைதான். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரைதான். 
ஆக, வெளியிலிருந்து வரும் அதிகாரம் ஒருவரை உண்மையான அரசராக ஆக்குவதில்லை.

எந்த அதிகாரம் ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர் ஆக்குகிறது. எடுத்துக்காட்டாக, நாசரேத்தூர் இயேசு, திருத்தூதர் பவுல், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, நீங்கள், நான் என எல்லாரும். அதாவது, தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக் கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல் செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான் அடங்கியிருக்கிறது. நான் எந்த எதிர்மறை நிகழ்வுகள் அல்லது உணர்வுகளால் ஆட்கொள்ளப்படாத போது நான் அரசராக இருக்கிறேன்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 15:20-26,28) பார்க்கின்றோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்குகின்ற பவுல், அங்கே அதிகாரம் மற்றும் ஆட்சி செலுத்துதல் மறைந்து, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்' என விளக்குகின்றார். ஆக, எல்லாரும் தங்களை வென்றவர்களாக, தங்களிடம் கடவுள் தன்மையைக் கண்டவர்களாக, அதே கடவுள் தன்மையை மற்றவரிடம் பார்ப்பவர்களாக மாறுவர். அப்படி இருப்பதுதான் உண்மையான அரச நிலை.

நாம் யாரும் யாரையும் ஆளப்பிறக்கவில்லை? எதற்காக நாம் மற்றவர்களை அரசாள வேண்டும்? மற்றவர்களை அரசாள நான் முயலும்போது நான் அவரை அடிமையாக்கி அவரின் இயல்பை நான் மறுதலிக்கிறேன். மாறாக, கடவுள் அனைத்திலும் அனைவரிலும் இருப்பதை நான் கண்டுகொள்ளும்போது எல்லாருடைய கட்டின்மையையும் நான் மதிக்கத் தொடங்குகிறேன். அதைத்தான் இயேசுவும் செய்தார். 

மனித உணர்வுகளில் எப்போதும் தலைதூக்கும் தலைவன் உணர்வைச் சரி செய்யத்தான் இயேசு இன்னொரு எக்ஸ்ட்ரீம் எல்லைக்குச் செல்கின்றார்: 'நீ மற்றவரின் பாதங்களைக் கழுவு'. நான் மற்றவரின் பாதங்களைக் கழுவும்போது நான் எவ்வளவு உயரமானவராக இருந்தாலு; என் தலை மற்றவரின் தலைக்குக் கீழ் வந்துவிடுகிறது. அதிகாரம் மறைந்துவிடுகிறது.

ஆக, எல்லாரிடமும் இருக்கும் கடவுள்தன்மையைக் கண்டுகொள்ளும்போது, எல்லாரையும் அரசர் என்று நினைக்கும்போது நாமும் அரசராகிறோம்.

2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர்

இன்று அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்கிறார்கள்? தங்கள் உறவினர்களோடு, தங்களைவிட அதிக பணம் அல்லது அதிகாரம் கொண்டிருப்பவர்களோடு. ஆனால் இயேசு இங்கே முற்றிலும் மாறுபடுகின்றார். தன் அதிகாரத்தை அல்லது அரசதன்மையை தன்னைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில் வரையறுக்கின்றார்.

ஆறு சொல்லாடல்கள் வழியாக சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை:
அ. 'பசி' - அரசன் பசியாய் இருந்ததாக அல்லது இருப்பதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அரசன் அதிகம் சாப்பிட்டதால் அவதிப்படுவானே தவிர அவன் என்றும் பசியோடு இருப்பதில்லை. அவனது உணவுமேசை எப்போதும் நிரம்பியே இருக்கும். ஊரில் கொடும் பஞ்சம் நிலவினாலும் அரசன் உண்பதற்குச் சோறு இருக்கும்.

ஆ. 'தாகம்' - ஊரெல்லாம் வறட்சி என்றாலும் மினிஸ்டர் வீட்டு தண்ணீர் பைப் ஓடிக்கொண்டுதான் இருக்கும். தனக்கென குளம், ஏரி, ஆறுகளைத் திருப்பிக்கொண்ட அரச வரலாறுகள் அதிகம்.
இ. 'ஆடையின்மை' - அரசன் பல்வேறு ஆடைகள் அணியக்கூடியவன். அரசவைக்கு ஒன்று, போருக்கு ஒன்று, அந்தப்புரத்திற்கு ஒன்று, பொழுதுபோக்கிற்கு ஒன்று என எண்ணற்ற ஆடைகளை வைத்திருப்பவன் அவன்.

ஈ. 'அந்நியம்' - அரசன் யாருக்கும் அந்நியம் இல்லை. அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் முன்பின் பாhத்திராதவர்கள் கூட அரசன் என்றவுடன் அவனைக் கண்டுகொண்டு வரவேற்று உபச்சாரம் செய்வர்.

உ. 'நோய்' - எடப்பாடியாருக்கும், ஓபிஎஸ்சுக்கும் டெங்கு காய்ச்சல் வருவதில்லை. ஊரெல்லாம் டெங்கு பரவினாலும் அது ஒன்றும் செய்யாது.

ஊ. 'சிறை' - சிறை என்பது கட்டு. ஆனால் அரசனை யாரும் சிறையிட முடியாது. அவன் தான் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்திற்குச் செல்வான். அவன் மற்றவர்களைச் சிறையிடுவானே தவிர அவனை யாரும் சிறையிட முடியாது.

இப்படியாக, அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக் கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு. 'பசித்திருப்போர்,' 'தாகமுற்றோர்,' 'ஆடையின்றி இருப்போர்,' 'அந்நியர்,' 'நோயுற்றோர்,' 'சிறையிலிருப்போர்' என அனைவரையும் தன் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்த வரையறை அரசத்தன்மையை எல்லாருக்கும் பொதுவானதாக்குகின்றது.

3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள்
இன்றைய முதல்வாசகத்தில் தன் கடவுள் அல்லது ஆண்டவர் தன்மையை மிக எளியை வார்த்தைகளில் விளக்குகின்றார் கடவுள். எப்படி? தன்னை ஓர் ஆயனாக உருவகம் செய்து, 'சிதறுண்ட ஆடுகளைத் தேடுவேன்,' 'மந்தாரமான நேரத்தில் மீட்டு வருவேன்,' 'மேய்ப்பேன்,' 'இளைப்பாறச் செய்வேன்,' 'காணாமல் போனதை தேடுவேன்,' 'அலைந்து திரிவதை திரும்ப கொண்டு வருவேன்,' 'காயத்திற்கு கட்டுப்போடுவேன்,' 'நலிந்தவற்றை திடப்படுத்துவேன்' என ஓர் ஆடுமேய்ப்பவர் செய்யும் சாதாரண செயல்களைச் செய்பவராகக் காட்டுகின்றார்.
ஆக, அரசர்நிலை அல்லது அரசத்தன்மை என்பது போருக்குச் செல்வதிலும், பிற உயிர்களை அழிப்பதிலும், அணுஆயுதங்கள் தயாரிப்பதிலும், அமைதி உடன்படிக்கைகளில் கையெழுத்து இடுவதிலும், நிறைய இயற்கை வளங்களை வளைத்துப் போடுவதிலும், கோடிக்கணக்காக சொத்து மட்டும் நிலங்களை உடைமையாக்குவதிலும் இல்லை. உண்மையில் இவைகள் எல்லாம் அடிமையின் தன்மைகள்.

பின் எதில் அடங்கியிருக்கின்றன?
நாம் செய்யும் எல்லா சின்னஞ்சிறு செயல்களிலும்: பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதில், வீணாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விசிறியை அணைப்பதில், வழிதெரியாத ஒருவருக்கு வழி சொல்வதில், சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடுவதில், மற்றவருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில், தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதில், அலைபேசியில் உள்ள மிஸ்டு கால்களை திரும்ப அழைப்பதில், நாம் வைக்கும் அலார்மிற்கு சரியாக எழுவதில் என சின்னஞ்சிறியவைகளைச் செய்வதில்தாம் அரசத்தன்மை நிரம்பி வழிகின்றது.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே குனிந்து பார்ப்போம்.
நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும் எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.
நீங்களும், நானும் அரசர்களே!

'ஆளுநன் இயேசுவை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார்.' (மத் 27:11)

1 comment:

  1. அழகான,ஆழமிக்கதொரு பதிவு.பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறான இன்று இந்த ஆண்டிற்கே மணிமகுடம் சூட்டினாற்போல் 'கிறிஸ்து அரசரின்' திருவிழாவைக் கொண்டாடுவது சாலச்சிறந்தது.இன்றைய வாசகங்களோடு சம்பந்தப்பட்ட அரசன்,அரியணை,அதிகாரம் போன்ற வார்த்தைகள் தந்தையின் எழுத்தில் தவழ்ந்து விளையாடினும்,இந்தப் பதிவிற்கு அழுத்தம் சேர்ப்பது "சின்னஞ்சிறியவர்" யாரென்பதற்குத் தந்தை தரும் விளக்கம் என்றே நினைக்கிறேன்.அரசு தன்மைக்கு முற்றிலும் மாறுபட்ட பசித்திருப்போர்,தாகமுற்றோர்,ஆடையின்றி இருப்போர்,அந்நியர்,நோயுற்றோர்,சிறையிலிருப்போர் போன்றோர்தான் அந்த 'சின்னஞ்சிறுவர்களென' வரையறுப்பதோடு நின்றுவிடாமல், இவர்களை நேசிக்கும் அனைவருமே 'அரசர்' ஆகலாம் என்பது இப்பதிவை வாசிக்கும் அனைவருமே பெருமைப் பட வேண்டிய விஷயம்.எப்பொழுதுமே அண்ணாந்து பார்ப்பதை விடுத்து சிலசமயங்களில் நமக்குக் கீழேயும் குனிந்து பார்த்தால் " நீங்களும் நானும் அரசர்களே!" தந்தையின் வார்த்தைகளில் ஒளிந்திருப்பது பெருமிதம் சேர்ந்த அழகு.தந்தை இந்தப் பதிவில் கோடிட்டுக்காட்டும் "பிறரைப் பார்த்து புன்னகைப்பது,வழி தெரியாத ஒருவருக்கு வழி சொல்வது,இல்லாதாரோடு பகிர்ந்து கொள்வது" போன்ற அனைத்து விஷயங்களையும் இல்லாவிடினும் ஒரு சிலவற்றையாவது வாழ்ந்து காட்டினால்,பிறர் நம்மைப்பார்த்து "நீங்களும் அரசர்களா?" என்று கேட்பதை விடுத்து " நீங்களும் அரசர்களே!" எனத் திண்ணமாகக் கூறுவார்கள் என்று சொல்லாமல் சொல்லும் தந்தையை இறைவன் அனைத்து நலன்களாலும் நிரப்புவாராக! அனைவருக்கும் "கிறிஸ்து அரசர்" திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete