Monday, November 27, 2017

முழுமையாய் பார்க்க

நாளைய நற்செய்தி: முழுமையாய் பார்க்க

நம்ம சொந்தக்காரங்க ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு என வைத்துக்கொள்வோம். நாம அந்தக் குழந்தையைப் பார்க்கப் போறோம். குழந்தை அழகா, குட்டியா (குழந்தைன்னா குட்டியாதானே பாஸ் இருக்கும்!), புஸ் புஸ்னு, கண்ண உருட்டி உருட்டி பார்த்துகிட்டு இருக்கு. குழந்தைக்கு பக்கத்துல உட்கார்ந்திருக்கவங்க, 'என்ன அழகு குழந்தை! என்ன மூக்கு! என்ன முழி!' என பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில நாம, 'குழந்தை! மூக்கு! முழியா! இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கு உடம்பு சரியில்லாம போகும், வயசாகி கூன் விழும், தோல் எல்லாம் சுருங்கும், பல் எல்லாம் கொட்டிப் போகும்!' அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? அங்க இருக்கிறவங்க நம்மள சும்மா விடுவாங்களா?

புதுசா ஒருத்தர் வீடு கட்டியிருக்கிறார். மாடி வீடு. நம்மள பால் காய்ச்ச கூப்பிடுறாங்க. வந்திருக்கிறவங்க எல்லாம், 'ஆஹா, ஓஹோ' என்று அந்த வீட்டைப் புகழ்கிறார்கள். நாம ஒரு ஓரமா நின்னு, 'இந்த வீடு ஒரு நாள் சாயம் போய்விடும், இடிந்துவிடும், கல்லின்மேல் கல் இருக்காது!' அப்படின்னு சொன்னா நம்மள என்ன நினைப்பாங்க?

இவனைப் போய் கூப்பிட்டோம் பாரு! - என்று நம்மைப் பார்த்து சிரிப்பதுடன், நம்மை எதிர்மறை சிந்தனையாளன் என்றும், நம்ம கண்ணு சரியில்லை என்றும் சொல்வார்கள். இல்லையா?

இதே ஒரு நிகழ்வுதான் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:5-11) நடக்கிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வெளியே உள்ள ரு பள்ளத்தாக்கின் அடுத்த பகுதியில் நின்றுகொண்டிருக்கின்றனர். பள்ளத்தாக்கின் இந்தப் பகுதியில் எருசலேம் ஆலயம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 'அப்பப்பா! என்ன ஒரு ஆலயம்! என்ன ஒரு அழகு! என்ன கவின்மிகு கற்கள்! என்ன நேர்ச்சைப் பொருள்கள்!' என வியந்துகொண்டிருக்கின்றனர். 

ஆனால் இயேசுவோ, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் கற்கள் இராதவாறு எல்லாம் இடிக்கப்படும்!' என்கிறார்.

நிற்க.

இயேசுவின் இவ்வார்த்தைகள் அவரை எதிர்மறை சிந்தனை கொண்டவராகவும், அழகை இரசிக்கத் தெரியாதவர் என்றும் காட்டினாலும் வாழ்க்கையின் ஒரு முக்கியமான உண்மையை இவை கற்றுத்தருகின்றன. அது என்ன? 'வாழ்க்கையை முழுமையாகப் பார்ப்பது!'

எப்படி?

நாம பார்க்கின்ற எல்லாவற்றிலும் ஒரு பக்கத்தைத்தான் பார்க்கிறோம்.

செல்ஃபோனின் முன்பக்கத்தைப் பார்க்கும் அளவுக்கு அதன் பின்பக்கத்தைப் பார்த்ததில்லை.

இலையின் பின்புறம், நோட்டின் பின்புறம், கணிணியின் பின்புறம், பாட்டிலின் அடிப்புறம், மேசையின் கீழ்புறம், மனிதரின் பின்புறம் என நாம் பார்க்கத் தவறுவது பல.

முன்புறமும், பின்பிறமும் சேர்ந்ததுதான் முழுமை.

வாழ்க்கை என்பது முன்புறம் என்றால் இறப்பு என்பது பின்புறம்.

இளமை என்பது முன்புறம் என்றால் முதுமை என்பது பின்புறம்.

வளர்ச்சி என்பது முன்புறம் என்றால் தேய்வு என்பது பின்புறம்.

வாழ்க்கையின் முழுமையைப் பார்க்கத் தெரிந்தவர் ஞானி ஆகிவிடுவார். அவருக்கென்று எந்தப் பற்றும் இருக்காது. எல்லாவற்றையும் அழகென்பார் அவர். எல்லாவற்றையும் இரசிப்பார் அவர். எல்லாவற்றிலும் உடன் செல்வார் அவர். இருக்கின்ற பொழுதை அப்படியே முழுமையாக வாழ்வார் அவர்.

1 comment:

  1. எருசலேம் ஆலயத்தையும், அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கையும் பின்புலமாக வைத்து இயேசுவுக்கும்,அவருடைய சீடர்களுக்குமிடையே நடக்கும் உரையாடலின் உட்கருத்தைக் கவித்துவமாக வடித்திருக்கிறார் தந்தை."முன்புறமும்,பின்புறமும் சேர்ந்ததுதான் முழுமை என்பதை மறந்து நாம் பார்க்கின்ற எல்லாவற்றிலும் ஒரு பக்கத்தைத்தான் பார்க்கிறோம்" இதுவே இன்றையப்பதிவின் கருப்பொருள். இருபதுகளைத் தேடி ஓடும் நம் இளவல்கள் அறுபதுகளில் ஒதுக்கி ஓரங்கட்டுவதும்,வளர்பிறை நிலவை இரசிக்கும் நாம் தேய்பிறையில் ஒன்றும் செய்யக்கூடாதென்று ஒதுங்குவதும்,பச்சை மரத்தை இராசி என்றும் பட்ட மரத்தை அபசகுணம் என்பதும் வாழ்வின் நிதர்சனங்கள்.தந்தை சொல்கிறார்...."எவரொருவர் வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கிறாரோ, உள்ளத்தில் எந்தவொரு பற்றுமின்றி அழகை முழுமையாக இரசிக்கிறாரோ,இருக்கின்ற ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்கிறாரோ அவரே ஞானி!" என்று.தந்தையின் சொற்களில் உள்ள உண்மையை உரசிப்பார்க்க நாமும் வாழ்க்கையை முழுமையாக வாழ முயற்சிப்போம்.தன் இளமையிலேயே முதுமையைக் கண்ட ஒரு ஞானிக்கிணையான தந்தையின் வார்த்தைகளில் உள்ள உண்மைகள் வாழ்க்கையை நேசிக்கவும்,யோசிக்கவும் அழைக்கின்றன..பாராட்டுக்கள்!!!

    ReplyDelete