Sunday, October 23, 2016

அன்பின் இயல்பு

'கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.' (காண். எபே 4:32-5:8)

இயேசு கல்வாரியில் இறந்த 40 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட எபேசியர் திருமடல் இயேசுவின் இறப்பை எப்படி வர்ணிக்கிறது பாருங்கள்?

'நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாக'

நற்செய்தி நூல்களில் நாம் இயேசுவின் இறப்பு பற்றிய நிகழ்வுகளை வாசித்தோம் என்றால் அங்கே அவர் ஆடையின்றி, வெட்ட வெளியில், எல்லார் முன்னிலையிலும் இகழப்பட்டு, தூசிக்குள், காற்றுக்குள்ளும் துவண்டுபோய் நிர்கதியினராய் இறந்து போகின்றார்.

ஆனால், அதை பவுலோ அல்லது அவரின் சீடரோ அப்படியே 'குருத்துவ' சொல்லாடலில் மாற்றிப் பதிவு செய்கின்றனர்.

ஆலயத்தில் குரு செலுத்தும் காணிக்கை அல்லது பலிப்பொருள்கள் எந்நேரமும் சாம்பிராணியின் துணை கொண்டே செய்யப்பட்டன. அதாவது, சாம்பிராணிப் புகை நறுமணம் தருவது மட்டுமல்ல. அது பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆகையால்தான் ஆடுகளுகம், மாடுகளும், பறவைகளும் வெட்டப்படும் இடத்தில் சாம்பிராணி போடப்படுகின்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சாம்பிராணியாக நறுமணம் வீசியது அவரின் அன்பே.

'வலி மறைந்து போகும். அழகு என்றும் நிற்கும்!' என்று சொல்வார்கள்.

சிலுவையும் அதன் கொடூரமும் மறைந்துவிட்டது.

இயேசுவின் அன்பு நறுமணமாய் இருக்கிறது.

அன்பின் இயல்பும் இதுவோ!

1 comment:

  1. இயேசுவின் இறப்பு பற்றிய 'நறுமணம்' வீசும் பலியும்,காணிக்கையுமாக' எனும் விவிலிய வரிகள் ஒரு விதத்தில் அழகு எனில் அவ்வரிகளை விவரிக்கும் தந்தையின்
    ' இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சாம்பிராணியாக நறுமணம் வீசியது அவரின் அன்பே' எனும் வரிகள் அந்த அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ஆமாம்! அவரை முன்னிட்டு நாம் அனுபவிக்கும் சிறுமை,அவமானம் இவற்றின் வலிகளும்,வேதனையும், இன்ன பிற சிறுமைகளும் மறைந்து போகும்...ஆனால் நம் செயலின் பின்னால் ஒளிந்துள்ள 'அழகு என்றும் நிற்கும்!' 'அன்பு'
    தான் அழகு எனில் அந்த 'அன்பை' ஏன் நாம் அணியக்கூடாது? யோசிக்க வைத்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete