Thursday, April 7, 2016

தெலீலா

தெலீலா சிம்சோனிடம், 'மனம் திறந்து பேசாமல் நீர் என்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை' என்றாள். அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். (நீத 16:15-16)

வீட்டிற்கு அடிக்கடி வந்து பாலைக் குடித்துவிட்டுச் செல்லும் பூனையை திருத்துவதற்கு கிராமத்தில் ஒரு வழிமுறையைப் பின்பற்றுவார்கள். பாலை நன்றாகச் சுட வைத்து, கொதிக்க கொதிக்க அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைப்பார்கள். அதில் நாக்கை வைத்துச் சுட்டுக்கொள்ளும் பூனை மறுபடி பாலின் பக்கமே செல்லாது.

பூனை கற்றுக்கொள்ளும் அளவிற்குக் கூட சிம்சோன் கற்றுக்கொள்ளவில்லை.

திம்னாத்தில் உள்ள பெண்ணால் சூடுபட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு என நிறைய 'பட்டாலும்' சிம்சோன் இப்போது மூன்றாவதாக ஒரு பெண்ணிடம் தொடர்பு கொள்கின்றார். அவர் தொடர்பு கொண்ட இரண்டாம் பெண் காசாவின் விலைமகள். தான் முதலில் ஏமாற்றப்பட்டபோது, அது அந்தப் பெண்ணுக்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும், அந்தப் பெண்ணின் ஊருக்கும் அழிவாய் முடிகிறது. இவ்வளவு அழிவு என்னால் நேர்ந்துவிட்டதே! என்ற வருத்தம் சிம்சோனிடம் அறவே இல்லை.

ஆகையால்தான் தெலீலாவின் மடியில் போய் விழுகின்றார்.

'தெலீலா' என்றால் 'மென்மை' அல்லது 'மென்மையானவள்' என்பது பொருள்.

சிம்சோனின் வீக்னஸ் என்ன என்பதை தெரிந்துகொள்ள, அவரின் வீக்னஸையே பயன்படுத்துகின்றனர் பெலிஸ்தியர். ஆம், பெண் என்ற வீக்னஸைப் பயன்படுத்தி, அவரின் திறன் எதில் அடங்கி இருக்கிறது என காண விழைகின்றனர். இந்த டீலை முடித்துக் கொடுக்க தெலீலாவுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை 'ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள்.'

'உன் ஆற்றல் எதில் அடங்கியுள்ளது?' என்று தெலீலா மும்முறை கேட்க, மும்முறையும் 'அங்கே, இங்கே' என ஏமாற்றி விடுகிறார் சிம்சோன். முதல் முறை இவர் ஏமாற்ற, பெலிஸ்தியர் அவர்மேல் பாய்ந்தபோது, அவர் சுதாரித்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கலாம். ஏமாற்றப்படுவதற்காக தன்னையே வலிந்து தருகின்றார். நான்காம் முறை, தெலீலா ரொம்பவே உருக, உயிர் போகுமளவிற்கு நச்சரிக்கப்படும் சிம்சோன், தன் ஆற்றலின் இரகசியத்தைச் சொல்லிவிடுகின்றார்.

'என்னிடம் மறைக்கிறீர்! என்னை ஏமாற்றுகிறீர்!' என்று உருகும் தெலீலா, தானும் அவரிடமிருந்து மறைக்கும் தன் இரகசிய திட்டம் பற்றி ஒன்றும் சொல்லாமல் விடுகின்றார்.

இந்த நேரத்தில் சிம்சோன் சபை உரையாளரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்திருந்திருந்தால், தப்பியிருப்பார்:

'சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும். உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்...மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையும் நான் கண்டதில்லை.' (சஉ 7:26-28) (சபை உரையாளரின் இந்த வார்த்தைகள் இன்றுவரை மறைபொருளாகவே இருக்கின்றன!)

தெலீலா ஒரு புத்திசாலி! சிம்சோனின் காம வேட்கையை வைத்து பணம் சம்பாதித்து விடுகிறாள்.

'தம்பி சிம்சோன் ஒன்றைப் புரிந்துகொள்: 'there is no such thing as a free lunch. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை நீ கொடுக்க வேண்டும்!'' எனச் சொல்லாமல் சொல்கிறாள் தெலீலா.




1 comment:

  1. "வாளை எடுத்தவன் அந்த வாளாலேயே மடிவான்" என்பதற்கிணங்க பெண்ணிடம் சுகம் காண்பதைப் பழக்கமாய்க் கொண்டவனும் அப்படி ஒரு பெண்ணாலேயே மடிவான் என்று நம்பத்தோன்றுகிறது.தெலீலாவிடம் தான் தேடும் சுகத்திற்குத்,தானும் அவளுக்கு ஒரு விலை கொடுத்தாக வேண்டும் என்பது சிம்சோனுக்குத்்தெரிந்திருக்கவில்லை.இந்த நேரத்தில் சிம்சோன் சபை உரையாளரின் வார்த்தைகளை நினைவில் கொண்டிருந்தால் தெலீலா விரித்த வலையிலிருந்து தப்பியிருக்கலாம் எனக்கூறிவிட்டு " சபை உரையாளரின் வார்த்தைகள் இன்றுவரை மறைபொருளாகவே இருக்கின்றன" என்று தந்தை கூறுவதைப்பார்த்தால் ஆணோ,பெண்ணோ தங்கள் உறவுகளில் காக்க வேண்டிய புனிதம் பற்றி எச்சரிக்கப்படுவதாகே தெரிகிறது." மனிதன் என்பவனை ஆயிரத்தில் ஒருவனாகக் கண்டதாகவும்,பெண் என்பவள் அதுவுமில்லை" என்று கூறுவதும் மிகக் கொடூரமான வார்த்தைகள். எங்கோ இருக்கும் ஒரு தெலீலாவை நினைத்து அனைத்துப் பெண்களையும் சபை உரையாளர் தரம் தாழ்த்தியிருக்க வேண்டாம். "மனமிருப்பின் பூனையிடமிருந்தும் நாம் பாடம் படிக்க விஷயங்கள் உள்ளன"... தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete