Saturday, April 23, 2016

நாடுகடத்தப்பட்ட சிறுமி

சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்' என்றாள். (2 அரசர்கள் 5:2-3)

பவுலோ கோயலோ தன் தந்தையின் இறப்பிற்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கின்றார்:

'என் தந்தை இறந்தபின் நாங்கள் அவரை எரித்தோம். ஏனெனில், 'நான் இறந்தபின் என் உடலை எரித்து நான் அதிகம் இரசித்த கடற்கரையின் ஓரங்களில் என் சாம்பலைத் தூவி விடுங்கள். அப்படித் தூவும்போது இந்த சிடியை சிடி பிளேயரில் போட்டுப் பாட வையுங்கள்' என்றார். அவரின் சாம்பல் நிரம்பிய ஜாடியை எடுத்துக்கொண்டு, அவர் குறிப்பிட்ட கடற்கரைக்குச் சென்றோம். கொஞ்ச தூரத்திற்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு, ஜாடி, சிடி பிளேயர், சிடி என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றோம். ஜாடியைத் திறந்து பார்த்தால் உள்ளே இன்னொரு திருகு ஆணி ஆடிக்கப்பட்டிருந்தது. அதை எப்படித் திறக்க என இங்குமங்கும் அலைந்தோம். அந்த நேரத்தில் பிச்சைக்காரர் ஒருவர் அவ்வழியே வந்தார். அவரின் கையில் ஒரு ஸ்க்ரு டிரைவர் இருந்தது. அதை எங்களிடம் நீட்டிய அவர், 'இது பயன்படுமா என்று பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்தான் நான் இதைக் கண்டெடுத்தேன். இறந்து போனவர் உண்மையிலேயே நல்லவராய் இருந்திருப்பார்!' என்று அதைக் கொடுத்துவிட்டு வழிநடந்தார். என் அப்பா உயிரோடு இருக்கும் போது என்னிடம் அடிக்கடி சொல்வார், 'நீ செய்கின்ற எந்த ஒரு நல்ல செயலும் உன்னைப் பின்தொடர்ந்து வரும்!''

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை:

அ. நாம் செய்த நன்மை நம்மைப் பின்தொடரும்.

ஆ. ஸ்க்ரு டிரைவர் சிறியது என்றாலும், அதன் பயன்பாடு அவசியமாகிறது.

இறைவாக்கினர் எலிசா காலத்தில் அப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது. சிரியா நாட்டு இராணுவத்தலைவன் நாமானுக்கு தொழுநோய் பிடித்து விடுகிறது. அதிகாரம், ஆற்றல், பணம் என எல்லாம் இருந்தாலும், தொழுநோய் இவரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் இவரால், இவரது இராணுவத்தால் அடிமையாக அழைத்துவரப்படும் எபிரேய சிறுமி ஒருத்தி இவர் வீட்டுக்கு வேலைக்கு வருகிறாள். வந்த இடத்தில் தன் தலைவர் இப்படி வருந்துவதைப் பார்த்து, 'எங்கள் ஊரில் உள்ள இறைவாக்கினரிடம் போய்க் காட்டுங்கள். அவர் சரியாக்கிவிடுவார்!' என்கிறார்.

சிறுமியின் பேச்சைக் கேட்டுப் புறப்பட்டுச் செல்லும் நாமான் நலம் பெறுகிறார்.

இந்த அப்பாவி அடிமைச் சிறுமி என்னை மூன்று விதங்களில் வியக்க வைக்கிறாள்:

அ. 'எனக்கு கெட்டது நடந்தாலும், நான் அடுத்தவருக்கு நல்லது செய்வேன்.' ஒரு இளவல் நாடுகடத்திச் செல்லப்படுவது மிகவும் கொடுமையானது. அவள் தன் குடும்பத்தை இழந்துவிட்டாள். தன் சொத்துக்களை இழந்து விட்டாள். தன் தாய் மண்ணை இழந்துவிட்டாள். இப்படி தனக்கு எல்லாம் துன்பமாகவே நடந்தாலும், தன்னை அடிமைப்படுத்தியவனின் வீட்டிலேயே வேலை கிடைத்தாலும், 'இவன் தொழுநோய் வந்த நல்லா கஷ்டப்படட்டும்!' என்று மனதுக்குள் கடிந்து கொள்ளாமல், அடிமைப்படுத்தியவனுக்கும் நல்லது நினைக்கிறாள். 'நீ கெட்டவனாய் இருக்கிறது என்பதற்காக நான் நல்லவளாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா?' என்றுதான் தன் மனதுக்குள் கேட்டிருப்பாள். அடுத்தவர் ஆற்றும் வினைக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிராமல், தன் ஆற்றலை அழித்துக் கொள்ளாமல், தானே தான் விரும்பியதை செயல்படுத்துகிறாள். அவளின் உடல் வேண்டுமானால் அடிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவளின் உள்ளம் யாருக்கும் அடிமையல்ல.

ஆ. 'என் கடவுளின் மேல் உள்ள நம்பிக்கை.' அந்தக் காலத்தில் ஒரு நாட்டிற்கும், மற்ற நாட்டிற்கும் இடையே நடக்கும் போரானது, இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போராக அல்ல, மாறாக, இரண்டு கடவுளர்களுக்கு இடையே நடக்கும் போராகவே பார்க்கப்பட்டது. ஆக, சிரியாவின் கடவுள் வெற்றிபெற்றவர்போல தெரிந்தாலும், அவரால் தலைவனின் தொழுநோயைக் குணமாக்க முடியவில்லை. அந்த ஆற்றலைப் பெற்றவர் தன் கடவுள்தான் என்று நம்புகின்ற சிறுமி, 'என் கடவுளால் உன்னைக் குணமாக்க முடியும்!' என்று தலைவனை நோக்கிச் சொல்வது தலைவனுக்கு பெரிய அவமானமாகவே இருந்திருக்கும். தன் கடவுளே நலம் நல்கும் கடவுள் என நம்புகிறாள் சிறுமி.

இ. 'எனக்கு இறைவாக்கினரைத் தெரியும்!' இறைவாக்கினர்கள் என்பவர்கள் அரசவையில் தான் அதிகம் ஒட்டியிருப்பர். பாமர மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்காது. எலிசா இந்தப் பெண்ணால் அறியப்படுகிறாள் என்றால், அவர் பாமர மக்களிடம் பழகியிருப்பார். அல்லது, இந்தச் சிறுமி உலக விஷயங்கள் அறிந்தவளாக இருந்திருப்பாள். ஆக, கடவுளோ, இறைவாக்கினரோ, எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கும் இப்பெயரில்லா சிறுமி அந்தக்காலத்து பி.ஆர்.ஓ.

'சிறுகுழந்தையின் பேச்சைக் கேட்டு இஸ்ரயேலுக்கு வழி நடந்த நாமானின் தொழுநோய் பிடித்த உடலும் சிறுகுழந்தையின் தோல் போல மாறியது' (2 அர 5:14).

1 comment:

  1. சிரியா நாட்டினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு அனாமிகா இன்று நமக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறாள்.இவளுக்குக் கெடுதல் மட்டுமே செய்த இராணுவத்தின் தலைவன் நாமானுக்குப் படை பலம்,பணபலம் எல்லாமிருந்தும் தன் தொழுநோய் காரணமாக யாதுமில்லாதவனாகிறான்..என்ன செய்தால்,யாரைச் சந்தித்தால் அவனது நோய் நீங்கும் என்பதற்கு வழி சொல்கிறாள் இந்தச்சிறுமி. இவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அழகாக அச்சில் ஏற்றுகிறார் தந்தை." என் இறைவன் மேல் கொண்ட நம்பிக்கையால் எனக்கெது வரினும் நான் அடுத்தவருக்கு, அவர் எனக்குத் தீமை செய்தவரேயாயினும் அவருக்குக் கைமாறாக நன்மையே செய்வேன்". 'மடு'வாக மற்றவர் நினைத்த சிறுமியின் மன உறுதி ' மலையான' நாமானின் தொழுநோய் நீங்கத்துணை நிற்கிறது.இய்தச் சிறுமியும் சரி, பவுலோ கோயலோ அவர்களின் அனுபவமும் சரி...நமக்குக் கற்றுத்தரும் மேலான பாடம்..." சிறு குச்சியும் பல் குத்த உதவும்" ஆம் எதையும், யாரையும் அதன் வெளித் தோற்றத்தை வைத்து எடை போடுதல் அழகல்ல..ஏனெனில் " appearance is very often deceptive" அழகானதொரு பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete