Thursday, April 21, 2016

இன்னொரு கைம்பெண்

எலிசா அவரை நோக்கி, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல்' என்றார். அதற்கு அவர், 'உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை' என்றார். (2 அர 4:2)

இறைவாக்கினர் எலியா சாரிபாத்தில் கைம்பெண் ஒருவரை எதிர்கொண்டதுபோல, இறைவாக்கினர் எலிசாவும் ஒரு கைம்பெண்ணை எதிர்கொள்கின்றார்.

அங்கே, எலியாவின் பசியைத் தீர்க்கின்றார் கைம்பெண்.

இங்கே, கைம்பெண்ணின் கடனைத் தீர்க்க வழிசெய்கின்றார் எலிசா.

கைம்பெண்ணிடம் இருந்த சிறிது எண்ணெயை அபரிவிதமாகப் பலுகச் செய்கின்றார் எலிசா. தன் வீட்டின் பாத்திரங்கள் மட்டுமல்ல, தன் அடுத்தவரின் வீட்டுப் பாத்திரங்களும் நிரம்பும் அளவுக்கு எண்ணெய் பெருக்கெடுத்து வருகின்றது.

நிரம்பி வழிந்த எண்ணெயை விற்றுக் கடனை அடைத்துவிடுமாறு அறிவுறுத்துகின்றார் எலிசா.

இவர் குடம் குடமாய் எண்ணெயை எடுத்துக் கொண்டு கடன்காரரிடம் சென்றபோது, அந்தக் கடன்காரர் என்ன நினைத்திருப்பார்? இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு குடம் எண்ணெய் எப்படி வந்தது? என்று சந்தேகித்திருக்கலாம். அல்லது அப்படியே வாங்கி வைத்து, 'அப்பாடா, கடன் பணம் கிடைத்துவிட்டது' என மகிழ்ந்திருக்கலாம்.

சிறிதளவு எண்ணெய் இருந்தாலும், எல்லாப் பாத்திரங்களையும் நிரப்பும் அளவுக்கு இருக்கிறது கடவுளின் அருட்செயல்.

இந்த அருட்செயலைக் கைம்பெண் அனுபவிக்க அவள் செய்ததெல்லாம், கடவுளின் அடியவர் சொன்னதை நம்பியதுதான்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. " கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம்" எனக் கேள்விப்பட்டிருப்போம்.இது எப்பொழுது நமக்கு சாத்தியமாகும்? நாம் கடுகளவு விசுவாசத்துடன் கேட்கும் எதுவுமே நமக்கு மலையை நகர்த்துமளவுக்கு கைகொடுக்கும்..என நம்பும்போது மட்டுமே. எங்கெல்லாம் எலியாக்கள்/ எலிசாக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் கைம்பெண்களும் இருப்பதைப் பார்க்கிறோம்.எதற்காக? நமக்குக் ' கொடுக்கும் ' மனம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஒருவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ளவும் ஒரு 'எளிய', 'பரந்த' மனம் வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக.நம் வாழ்வில் நம்மிடம் ஆயிரம் குடங்கள் இருக்கலாம்; அத்தனையும் எண்ணெயால் நிரம்பி வழியலாம்; " தேவை" எனும் ஒரு வார்த்தையே நம் வாழ்வில் தேவையற்றுப்போகலாம்.ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது.'புறத்' தேவைகளைத் தாண்டி அவற்றுக்கிணையான,ஏன் அவற்றையும் விட மேலான 'அகத்' தேவைகளும் நமக்கு உண்டென்பதை.இறைவனை சாட்சிக்கழைத்து நம் வாழ்க்கையின் தேவைகள்,ஓட்டைகள் என்னவென்று அறிவோம்.அவற்றை நிரப்ப ஆண்டவன் அருளை அபரிமிதமாகக் கேட்போம்.வெகு இயல்பான, அழகும்,ஆழமும் நிறைந்ததொரு படைப்பிற்காகத் தந்தையைப் பாராட்டுகிறேன்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete