Wednesday, April 6, 2016

திமினாத்தின் இளம்பெண்

சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், 'நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுதலை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே' என்றாள். அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர்முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்துவிட்டாள். (நீத 14:16-17)

சிம்சோனுக்கு இளம் வயது ஆகிவிட்டது. திம்னாத் என்ற பெலிஸ்தியரின் ஊருக்குச் செல்கின்றார். அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார். 'அவளை எனக்கு மணம் முடியுங்கள்!' என தன் அம்மா-அப்பாவிடம் சொல்கிறார். 'தம்பி, நம்ம சொந்தத்திலேயே எவ்ளோ பொண்ணுங்க இருக்க, நீ அந்த விருத்தசேதனம் செய்யாதவன் வீட்டுலயா பொண்ணு எடுக்கணும்?' என்று புலம்பித் தவிக்கிறாள் அம்மா. மகன் விடுவதாயில்லை. 'எனக்கு அவா தான் வேணும்!' என்று அடம்பிடிக்கிறான் மகன். பெற்றோர்-பிள்ளை சகிதம் பெண் பார்க்கப் போகிறார்கள்.

'நீங்க போய்கிட்டே இருங்க, நான் வர்றேன்!' என சொல்லிவிட்டு கொஞ்சம் பின் நடக்கும் சிம்சோன், தன்னைத் தாக்க வந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொல்கின்றார்.

திம்னாத்துக்குப் போகிறார். பெண்ணுடன் பேசுகிறார். அவள் அவருக்குப் பிடித்தவராகத் தெரிகிறார்.

சில நாள்களுக்குப் பின் அவளைக் கூட்டிச் செல்ல பெற்றோர்-மகன் என மறுபடியும் திம்னாத் செல்கின்றனர். வழியில் தான் கொன்ற சிங்கத்தின் நிலை என்னாயிற்று என பார்க்கிறார் சிம்சோன். தேனீக்கள் சிங்கத்தின் பிணத்தில் கூடுகட்டியிருக்கின்றன. அந்தத் தேனை எடுத்து தான் நக்கியதும் அல்லாமல், தன் பெற்றோருக்கும் கொடுக்கின்றார்.

சிம்சோனின் முதல் தீட்டு இது. கடவுளுக்கான நாசீராக இருப்பவர் எந்தப் பிணத்தின் அருகிலும் செல்லக்கூடாது. அப்படியிருக்க, சிம்சோன் சிங்கத்தின் பிணத்தின் அருகில் சென்றதோடல்லாமல், அதில் கட்டியிருந்த தேனையும் பருகுகின்றார்.

திருமண வீடு. முப்பது நண்பர்கள். நன்றாகக் குடிக்கின்றார் சிம்சோன். குடித்தல் இரண்டாம் தீட்டு. வந்திருந்த நண்பர்களுக்கு விடுகதை ஒன்றைப் போடுகின்றார்:

'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது.'

விடை சொன்னால் நான் உங்களுக்கு 30 நார்ப்பட்டாடை (இன்றைய மதிப்புக்கு 30 லட்சம் ரூபாய்). சொல்லாவிட்டால் நீங்க எனக்கு கொடுக்கணும்.

விடை தெரியாத உறவுக்காரப் பையன்கள் சிம்சோனின் காதலி-மனைவியிடம் சென்று பயமுறுத்துகிறார்கள். 'நீ விடையைக் கேட்டுச் சொல். இல்லையென்றால் உன்னையும் உன் வீட்டையும் கொளுத்திவிடுவோம்!'

தன் கையிலிருந்த ஒரே ஆயுதமான அழுகையைப் பயன்படுத்தி விடுகதையின் விடையை சிம்சோனிடம் கேட்டுப்பெறுகிறாள் இளம்பெண்.

அவள் அவர்களிடம் சொல்ல, அவர்கள் அவனிடம் சொல்கிறார்கள்.

நம் கதாநாயகனுக்குக் கோபம் வந்துவிட்டது. வேகமாக அஸ்கலோன் சென்று அங்கிருந்த 30 பிலிஸ்தியர்களைக் கொன்று, அவர்களின் நார்ப்பட்டாடைகளைக் கொண்டு வந்து வந்து குவிக்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து தன் மனைவியைப் பார்க்க ஓர் ஆட்டுக்குட்டியுடன் வருகின்றார்.

இதற்கிடையில் அவரின் மனைவியை அவரின் மணமகன்தோழனுக்கு தாரை வார்த்துவிடுகிறார் அவளின் அப்பா. 'நீ அவளோடு தங்கையைக் கட்டிக்கொள்!' என்கிறார். மறுபடியும் கோபம் கொண்ட சிம்சோன் திம்னாத் நகரின் வயலைத் தீக்கிரையாக்குகிறார். கோபம் கொண்ட ஊர் மக்கள் இளம்பெண்ணையும், அவளின் அப்பாவையும் நெருப்பில் எரிக்கின்றனர்.

பார்க்கிறாள். பேசுகிறாள். அழுகிறாள். இரகசியம் உடைக்கிறாள். தீக்கிரையாகிறாள்.திம்னாத்தின் இளம்பெண்.

இந்தப் பெண்ணின் இறப்புக்கு யார் காரணம்?

இந்த நிகழ்வில் வரும் எல்லாரையும் காரணமாகச் சொல்லலாம். நாம் எங்கே நின்று பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து குற்றவாளி மாறுவார்.

சிம்சோன் மயக்க நினைத்தார். அந்த மயக்கத்தை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

கணவனா? உறவுக்கார பையன்களா? என்ற கேள்வி வரும்போது, கணவனைக் கைகழுவுகின்றாள் பெண்.

விடுகதைக்கு விடையும் கேள்வியாகவே இருக்கின்றது:

'தேனினும் இனியது எது?
சிங்கத்தினும் வலியது எது?'


1 comment:

  1. நாம் எத்தனையோ பேரைப் பார்த்திருப்போம்....உலகமே மெச்சும் அளவுக்கு சூரப்புலிகளாக இருப்பார்கள்.ஆனால் அவர்களிடம் அவர்களுக்கே தெரியாத முறையில் இருக்கும் ஏதோ ஒன்று அவர்களின் அழிவிற்குக் காரணமாகிவிடும்.சிம்சோன் விஷயத்திலும் கூட இதைத்தான் பார்க்கிறோம்.இறைவனுக்கு நாசீராக ஒப்புக்கொடுக்கப்பட்ட இவர் இறைவனுக்குதவாத தீட்டான விஷயங்களை அடுத்தடுத்து செய்கிறார்.மனைவியின் கண்ணீரின் முன் கரைந்து போகும் இவர் அவளின் அந்தரங்கத்தை அறியாமலேயே தன்' பலத்தின்' இரகசியத்தை உளறிவிடுகிறார். அவரின் நாச அழிவுக்கு அவரே பிள்ளையார் சுழியும் போட்டுக்கொள்கிறார்..கணவனானால்என்ன....மனைவியானால் என்ன!? எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கிறது என்பதை யாரறிவார்?தந்தையின் கேள்விக்கு பதில் ஒரு வேளை இதுவாக இருக்குமோ? தேனினும் இனியது ...சிம்சோனின் மனைவி!? சிங்கத்தினும் வலியது....சிம்சோனின் முடியின் வலிமை!? தப்பு என்றால் கோபம் வேண்டாம் தந்தையே! ஒரு ஆர்வக்கோளாறு ...அவ்வளவே! நன்றிகள்!!!

    ReplyDelete