Tuesday, April 12, 2016

மீக்கால்

சவுல் தன் மூத்த மகள் மேராபை தாவீதுக்கு மணம் முடித்துக் கொடுக்க நினைக்கிறார். மூத்த மகளின் பெயர் 'மேராபு.' 'மேராபு' என்றால் 'அதிகமான' அல்லது 'நிறைய' என்பது பொருள்.

எல்லாம் கூடி வரும் நேரம், அவள் வேறொருவருக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுகின்றாள்.

அவளின் அடுத்த மகளின் பெயர் 'மீக்கால்.' 'மீக்கால்' என்றால் 'நீரோடை' என்று பொருள்.

இவளைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால், மணமகள்-விலையாக பெலிஸ்தியரின் 100 நுனித்தோல்களைக் கொண்டு வர வேண்டும் என்று சவுல் தாவீதுக்குக் கட்டளையிடுகின்றார்.

பெலிஸ்தியருக்கு எதிராக தாவீதைக் கிளப்பிவிட்டு, அவரைக் கொலை செய்யும் நோக்குடன் சவுல் இப்படிக் கட்டளையிடுகின்றார். ஆனால், தாவீது வெற்றிகரமாக 100 தோல்களுடன் வந்து மீக்காலை மணம் முடிக்கின்றார் (1 சாமு 18:20-28).

சவுல் தாவீதைக் கொல்லத் தேடியபோது, அவரை சவுலிடமிருந்து காப்பாற்றுகின்றாள் மீக்கால் (1 சாமு 19:12-17). தாவீது தப்பி ஓடியபின் அவள் வேறொருவருக்கு - பல்தியேல் - மனைவியாகிறாள் (1 சாமு 25:44). ஆனால் திரும்ப வந்த தாவீது அவளை மீண்டும் தன் மனைவியாக்கிக்கொள்கிறார் (2 சாமு 3:13-16).

ஆனால், சில நாட்களில் அவர்களுக்குள் மனத்தாங்கல் வந்துவிடுகிறது.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்தபோது, தாவீது அரசர் ஆடி வருகின்றார் (2 சாமு 6:20-23).

மீக்கால் தாவீதை எதிர்கொண்டு, 'நீர் ஏன் இப்படி பைத்தியம் பிடித்ததுபோல ஆடி உன்னையே தாழ்த்திக்கொள்கிறாய்?' எனக் கேட்கின்றாள்.

'நான் ஆடினேன். இன்னும் ஆடுவேன். கடையனாகிய என்னை என் ஆண்டவர் தேர்ந்தெடுத்தார். இன்னும் நான் தாழ்த்திக் கொள்வேன். பணிப்பெண்களைவிட நான் தாழ்த்திக்கொள்வேன்' என்கிறார் தாவீது.

இப்படி மீக்கால் பேசியதால் அவளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை.

அவளுக்கு குழந்தைப் பேறு இல்லாததை விளக்குவதற்கு எழுதப்பட்ட கதையாகக்கூட இது இருக்கலாம்.

ஆனால், தான் மனிதர்கள் முன் நல்லவனாய் இருப்பதைவிட, கடவுள்முன் நல்லவனாய் இருப்பதையே விரும்புகிறார் தாவீது.

மீக்கால் - அதை அறியாத அப்பாவியாக இருக்கிறாள்.

1 comment:

  1. 'மேராபு', 'மீக்கால்'... இவை இரண்டுமே முதல் முறையாக அறியப்படும் பெயர்கள்." "தான் மனிதர்கள் முன் நல்லவனாய் இருப்பதை விட,கடவுள் முன் நல்லவனாய் இருப்பதையே விரும்புகிறார் தாவீது" ...என்கிறது இன்றையப்பதிவு.ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் முன் ஆடி வந்து தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் கடவுளின் முன் தாவீது நல்லவரென்று நிருபிக்கப்படக் கூடுமென்றால் தன் கணவனைக் கொல்லத்தேடிய தன் தந்தையிடமிருந்து தன் கணவனைக் காப்பாற்றிய போதும், தப்பி ஓடிய தன் கணவன் பல்தியேல் என்றவளுக்குக் கணவனான நிலையிலும், மீண்டும் மீக்காலைத் தேடி வந்தபோது அவனைத் தன்னிடம் சேர்த்துக்கொண்டபோதும் அவள் கடவுள் முன்னிலையில் நல்லவளாய் நிருபிக்கப்பட முடியாதவளா என்ன? இங்கும் கூட பெண்கள் ஓரங்கட்டப் படுவதைத் தான் பார்க்கிறோம்.கண்டிப்பாக 'மீக்கால்' ஒரு அப்பாவி தான்.ஆனாலும் புதிய,புதிய பெண்களை அறிமுகப்படுத்துவதற்காக தந்தைக்கு ஒரு 'சபாஷ்' போட்டேயாக வேண்டும்!!!

    ReplyDelete