Thursday, April 14, 2016

தாமார்

அபிகாயிலுக்குப் பின் நாம் சந்திக்கும் பெண் பெத்சேபா.

மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த இந்தப் பெண்ணைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டதால் ஒரு ஜம்ப் பண்ணி 2 சாமு 13க்குச் செல்வோம்.

அங்கே தாமார் என்ற பெண்ணைப் பார்க்கிறோம்.

தாவீதின் மகன் அப்சலோமின் சகோதரி என்று இவள் அறிமுகம் செய்யப்படுகிறாள் (2 சாமு 13:1). தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் இவள் மேல் மோகம் கொள்கிறான்.

'சகோதரி' என்பது 'தங்கை' அல்லது 'அக்கா' என்று பொருள்கொள்ளப்படத் தேவையில்லை. 'அத்தை மகள்,' 'மச்சாள்,' 'மச்சினி,' 'அக்கா,' 'கொழுந்தியா' என எல்லா உறவுகளும் 'சகோதரி' என்ற வார்த்தையால்தான் அழைக்கப்பட்டன.

மேலும், இங்கே சொல்லப்படும் சகோதரி தாமார் அம்னோனிடம், 'அரசரிடம் கேள். அவர் என்னை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பார்' என்கிறார். ஆக, இவர் உடன் பிறந்த சகோதரி அல்ல. மாறாக, திருமண உறவில் இணையும் உறவுநிலைக்காரர்.

தாமாரை தன் உரிமையாக்க வேண்டும் என்று அம்னோன் ஆசைப்படுகிறான்.

'ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை ஒருவனின் உடலை உருக்கிவிடும்' என்ற கம்பரின் கூற்று அம்னோனில் உண்மையாகிறது. துரும்பாய் இழைக்க ஆரம்பிக்கிறான். இதைப் பார்க்கும் இவனது கிரிமினில் நண்பன் யோனதாபு ஒரு மோசமான அட்வைஸ் கொடுக்கிறான்.

'நீ படுத்துக்கொண்டு நோய்வாய்ப்பட்டது போல நடி. உன் அப்பா உன்னை விசாரிக்க வருவார். அந்த நேரத்தில் தாமாரை உன்னிடம் அனுப்பி வைக்கச் சொல்' என்பதுதான் அந்த அட்வைஸ்.

அம்னோனும் நடிக்கிறான். தாவீது வருகிறார். வந்து பார்த்தவர் தாமாரை அனுப்பி வைக்கிறார்.

ஒன்றுமறியாத தாமார் வந்து அம்னோனுக்காக பனியாரங்கள் சுடுகின்றாள். சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு போகிறாள். 'நீ உள்ளறைக்கு வந்து உன் கையால் எனக்கு ஊட்டி விட வேண்டும்' என்கிறான் அம்னோன்.

உள்ளறைக்குச் சென்றவுடன் அவள்மேல் பாய்ந்து, 'என்னோடு படு!' என்கிறான்.

அவள், 'வேண்டாம்!' என சொல்கிறாள்.

அவன் அவளது குரலுக்குச் செவிமடுக்கவில்லை. அவளை விட வலிமையாயிருந்ததால் அவன் அவளைக் கற்பழிக்கிறான். (2 சாமு 13:14)

தொடர்ந்து நடப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அவளைத் தொட்ட அடுத்த நொடியில் அம்னோன் அவளை வெறுக்கத் தொடங்குகிறான்.

'எழுந்து சென்றுவிடு!' என்கிறான்.

'என்னை அனுப்பிவிடுவது நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையைவிட மோசமானது!' என்று கதறுகிறாள் தாமார்.

ஆனால், அம்னோன் தம் பணியாளர்களைக் கொண்டு அவளை வெளியே துரத்தித் தாழிடுகிறான்.

வெளியே வந்தவள் அழுதுகொண்டே தன் உடைகளைக் களைந்து விரதமிருக்கிறாள். அவளது சகோதரன் அப்சலோம் நடந்ததைக் கேள்வியுற்று, தன் சகோதரர் அம்னோனைக் கொன்று பழிதீர்க்கின்றான்.

'உன் வாள் உன் கூடாரத்தை விட்டு நீங்காது!' என்று ஆண்டவர் தாவீதைச் சபித்தபின் நடந்த முதல் நிகழ்வு இது.

அதாவது, உரியாவின் மனைவி பெத்சேபாவை தான் உரிமையாக்கி உறவு கொண்டது மட்டுமல்லாமல், அவளின் கணவனை வாளுக்கு இரையாக்குகிறார் தாவீது.

'பிறர்க்கின்னா முற்பகல் செய்த' தாவீது 'தமக்கின்னாவை பிற்பகல்' தானே அறுவடை செய்கின்றார்.


1 comment:

  1. ஆண்கள் பெண்களைத்தொடுவதும் பின் விடுவதும்....இது விவிலியத்தில் மட்டுமின்றி இன்றும் கூட வெகு சாதாரணமாகிவிட்ட ஒரு தொடர் நிகழ்வு.தாமாரின் மேல் கொண்ட காதல் அம்னோனைப் படுக்கையில் தள்ளிவிட்ட நிலையில் தன் நண்பனின் துணையோடு அவளைப் பலவந்தத்தில் அடைந்தவன் பின் அவளை ஏன் வெறுக்கிறான் என்று தெரியவில்லை.இதைக்கேள்வியுற்ற அவளது சகோதரன் அப்சலோம் அம்னோனைக் கொன்று விடுகிறான் என்பது பெண்களின்இதயத்திலிருந்துவரும்'கண்ணீரின்'வலிமையைக்காட்டுகிறது.அப்சலோம் அம்னோனைக் கொன்ற இந்த செயலை, பெத்சபாவைத் தாவீது தன் உரிமையாக்கிப் பின் அவள் கணவன் உரியாவையும் வாளுக்கிரையாக்கிய சம்பவத்தோடு முடிச்சுப் போடுகிறார் தந்தை.ஆம்....தாய் தந்தையர் முற்பகலில் செய்த ' பிறர்க்கின்னா' தனயரைப் பிற்பகலில் 'தமக்கின்னா'வாக வந்தடைந்தே தீரும் என்ற வள்ளுவன் வாக்கை மெய்யாக்குகிறது இன்றையப் பதிவு.நிகழ்வுகளை ஒன்றோடு ஒன்றாக தொடர்பு படுத்தி அவற்றைப் பாங்குடன் படைக்கும் தந்தையின் 'நேர்த்திக்கு' ஒரு சபாஷ்!!!

    ReplyDelete