Tuesday, October 27, 2015

யூதா ததேயு

நாளை திருத்தூதர்களான சீமோன்-யூதா திருவிழா.

இந்த இரண்டு திருத்தூதர்களும் ஒன்றாக மறைசாட்சியம் தழுவியதால் திருஅவை இருவரின் திருநாளையும் ஒரே நாளில் கொண்டாடுகின்றது.

உரோமையில் நான் பணி செய்யும் பங்கின் திருவிழாவும் நாளைதான். என் பங்கின் பாதுகாவலர் யூதா ததேயு.

யார் இந்த யூதா ததேயு?

யூதா இஸ்காரியோத்து என்ற சீடரிடமிருந்து இவரைப் பிரித்துக் காட்டவே யூதா ததேயு என அவர் அழைக்கப்படுகின்றார். 'ததேயு' என்றால் அரமேயத்தில் 'இதயம்' அல்லது 'இதயத்திற்கு நெருக்கமானவர்' என்பது பொருள்.

இவரை இயேசுவின் சகோதரர் என்றும், இவரின் திருமணம்தான் கானாவில் நடந்தது என்றும், இந்தத் திருமணத்திற்குதான் இயேசுவும், அவர் தாயும், அவரின் சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தார்கள் என்றும் சொல்கிறது பாரம்பரியம்.

இவரின் உருவங்களில் ஐந்து கூறுகள் இருக்கும்:

1. உச்சந்தலையில் நெருப்பு நாக்கு - இவரின் பெந்தகோஸ்தே அனுபவத்தின் அடையாளம்.

2. கையில் நீண்ட தடி - இவரின் மறைபரப்புப் பணியின் அடையாளம்.

3. கைகளில் விரித்துப் பிடித்திருக்கும் இயேசுவின் முகம் பதிந்த துணி - இதைக் கொண்டு எடேசா மன்னனுக்கு உடல் நலம் தந்தார். மேலும், இது வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்த துணி என்றும் சிலர் சொல்கின்றனர்.

4. கையிடுக்கில் இருக்கும் தோற்சுருள் - இவர் எழுதிய திருமுகம் (புதிய ஏற்பாட்டு நூலில் இருக்கிறது)

5. கோடரி - இவரின் மறைசாட்சியத்தின் அடையாளம்

நம்பிக்கை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், கைவிட்டவர்களின் பாதுகாவலராக இருக்கிறார் யூதா ததேயு. இவர்கள் இந்தப் புனிதரை நாடக் காரணம் இவர் 'ததேயு', அதாவது 'நெருக்கமானவர்' - இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்.

காலத்தால், இடத்தால் நாம் இயேசுவைவிட்டு தூரமாக இருந்தாலும், கைவிடப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம் நேரம், ஆற்றல், அரவணைப்பு கொடுத்தால் நாமும் 'ததேயுக்களே' - 'நெருக்கமானவர்களே!'

(படத்தில் காண்பது எங்கள் ஆலயத்தில் வீற்றிருக்கும் யூதா ததேயு திருவுருவம்)


2 comments:

  1. யூதா த்தேயு ...இவர் இயேசுவுக்கு மிக நெருங்கிய உறவினர் என யாரோ சொல்லக்கேட்டது முதல் இவர் மீது பக்தியும்,நெருக்கடியான நேரங்களில் இவரிடம் செபிக்கும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.தந்தைக்கு நன்றி! இன்று அவரைப் பற்றி மேலும் தகவல்கள் கொடுத்ததற்கு.இவரின் படங்களில் இருக்கும் கூறுகளான உச்சந்தலையில் நெருப்பு நாக்கு,கையில் நீண்ட தடி.விரித்துப் பிடித்திருக்கும் இயேசுவின் முகம் பதிந்த துணி,கையிடுக்கில் உள்ள தோல் சுருள்,மற்றும் கோடரி இவை பற்றியும் இவை தாங்கி நிற்கும் விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொண்டது புது அனுபவம்.ஏனெனில் இம்மாதிரித் தகவல்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவரை இயேசுவின் இதயத்திற்கு 'நெருக்கமானவர்' என நம்பும் நாம் கைவிடப்பட்டவர்கள் மற்றும்நம்பிக்கை இழந்தவர்களுக்கு நேரம் ,ஆற்றல்,அரவணைப்பு கொடுப்பதன் மூலம் நாமும் பிறருக்கு 'நெருக்கமானவர்' ஆகலாம் என்பது கூடுதலாக விதைக்கப்பட்ட விதை.இவ்விதையை எம்மனங்களில் விதைத்த தந்தைக்கும்,அவர் தந்த தகவல்களுக்கும் நன்றி! Wishing U Dear Father & All ur Parishioners 'A very Happy Feast of St.Jude Thaddeu!'.... May The Saint intercede for all of us!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.உங்களுக்கு எனது திருவிழா வாழ்த்துக்கள். காலத்தால், இடத்தால் நாம் இயேசுவைவிட்டு தூரமாக இருந்தாலும், கைவிடப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம் நேரம், ஆற்றல், அரவணைப்பு கொடுத்தால் நாமும் 'ததேயுக்களே' - 'நெருக்கமானவர்களே!' ரொம்ப ரொம்ப விலைமதிக்க முடியாத முத்துக்களே உங்கள் வார்த்தைகள்.உங்கள் பதிவு ஒரு கடல் . கடலில் முத்துக்கள் உண்டு ஆனால் உங்கள் கடலில் வித்தியாசமான முத்துக்கள்(வார்த்தைகள்) அவை நெருக்கத்தையும் தாக்கத்தையும் உருவாக்குபவை . அந்த முத்துக்கள் எங்களுக்கு நம்பிக்கை ஒளி தரட்டும் .அப்பொழுது நாங்கள் ஒளிர்வோம் பிறரை வாழ வைக்க . தந்தைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete