Thursday, October 15, 2015

புளிப்பு மாவு

இட்லி, தோசை, ஆப்பம் என நாம் சுவைக்கும் தென்னிந்திய உணவுகள் சமைப்பதற்கும், ரொட்டி, கேக் போன்ற வெளிநாட்டு உணவுகள் சமைப்பதற்கும் மாவு புளிக்க வேண்டும்.

அதிகம் புளித்தாலும் ஆபத்து. கொஞ்சம்கூட புளிக்காவிட்டாலும் ஆபத்து.

செயற்கையாக புளிப்பை ஊட்ட நாம் 'ஈஸ்ட்' என்னும் பாக்டீரியா சேர்க்கின்றோம். இந்த ஈஸ்ட் மாவில் சேர்க்கப்பட்டுவிட்டால் அதை மற்ற மாவிலிருந்து பிரிக்க முடியாது (inseparable process). மேலும், இந்த ஈஸ்ட் மற்ற மாவில் பரவி அதை புளிப்பேற்றுவதையும் நாம் தடுக்க முடியாது (uncontrollable process). இந்தப் புளிப்பேற்றும் முறை நம் புலன்களுக்கும் அப்பாற்பட்டது. மேலும் புளிப்பேறிய மாவை நாம் மறுபடியும் புளிப்பில்லாமல் ஆக்க முடியாது (irreversible process).

பரிசேயர்களின் 'ஈஸ்ட்' குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்?

அவர்களின் மனப்பாங்கு (attitude) குறித்து எச்சரிக்கையாயிருங்கள்?

நம் ஒட்டுமொத்த தான்மையை ஒரு பெரிய பனிப்பாறை (iceberg) என எடுத்துக்கொண்டால் நம் செயல்கள், சொற்கள் எல்லாம் வெளியில் தெரியும் வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால், வெளியில் தெரியாத 95 சதவிகிதம்தான் நம் மனப்பாங்கு. இதைப் பொறுத்தே நம் செயல்பாடுகள் அமைகின்றன. இதுதான் நம் வாழ்வின் இன்ப, துன்பங்களை நிர்ணயிக்கிறது. நம் வாழ்வை நாம் சமமாக வாழ உதவி செய்கிறது.

பரிசேயரின் மனப்பாங்கு அல்லது வெளிவேடம் புளிக்காரம் போல மற்றவர்கள் மேல் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. நாம் கவனமாக இல்லாவிட்டால் அது வேகமாக பரவி, நம்மையும் புளிப்பேற்றிவிடும். அப்படி நாமும் புளிப்பேறிவிட்டால் நம் மனப்பாங்கை மாற்றுவது மிகவும் கடினம். நம் செயல்கள் அல்லது சொற்களும் புளிப்பேறத் தொடங்கிவிடும். நாமும் அவர்கள்போல வெளிவேடம் போட தொடங்கிவிடுவோம்.

பரிசேயர்களின் புளிப்பு மாவு என்னும் மனப்பாங்கு மட்டுமல்ல, நாம் நமக்கு வெளியிலிருந்து வரும் எல்லா புளிப்பு குறித்தும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நாம் நம் புலன்கள் வழியாக எதை உள்ளே எடுத்துக்கொள்கிறோம் என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.

இதையே தூய பவுல் கொரிந்து நகரத் திருச்சபைக்கு (5:6-8) எழுதுகிறார்:

'நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்புமாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

எனவே புளிப்பு சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்து விடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்புமாவோடு அல்ல. மாறாக, நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக!'

இன்று என் மனப்பாங்கை மாற்றும் புளிப்பு மாவு எது?

2 comments:

  1. புளிப்பு மாவு பதிவில் இட்லி,தோசை,ஆப்பம் என நான் படிக்கும் போதே எனக்குள் ஒரு சந்தோசம் தென்னிந்திய உணவுகள் ரோமையில் இடம் பிடித்துவிட்டன என்று !எனவே பதிவில் என்னை தொட்டவை இன்று என் மனப்பாங்கை மாற்றும் புளிப்பு மாவு எது? நேர்மை என்பதே எனது பதில். ஏனென்றால் , ஒளிவு மறைவற்ற நேர்மையே புனிதம் என்று கூட ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் சிந்தனையாளர்; பகர்ந்துள்ளார். நமது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும்போது, நமது உறவுகளும் மேம்படும். நமது ஆன்மீக வாழ்வின் தரமும் உயரும். எனவே, சொல்லிலும், செயலிலும் ஒளிவுமறைவற்ற தன்மையைக் கடைப்பிடிப்போம். நமது இல்லத்திலும், பணியிடத்திலும் இதை ஒரு கொள்கையாகக் கடைப்பிடிப்போம். இந்த நேர்மையே ஒரு நற்செய்தி அறிவிப்பு என்பதை நினைவில் கொள்வோம்.உண்மை புளிப்பு மாவை உலகுக்கு அடையாளம் காட்ட, தீய புளிப்பு மாவின் வெளிவேடம் களைத்திட,உயிருக்கும் உடலுக்கும் ஆசைப்படாமல் ஆன்மாவைக் காக்கும் செயல்களில் அச்சமின்றி ஈடுபட நேர்மையுடன் செயல்படுவோம். ரோமையில் இருந்தாலும் தாயகத்தை சிறந்த உணவுகள் மூலம் ஞாபகபடுத்தும் தந்தைக்கு பாராட்டுகள்!

    ReplyDelete
  2. ஈஸ்ட் அல்லது புளிக்காரம் என்பது நம் உணவு தயாரிப்பில் இன்றியமையாத ஒன்று.குறைவாக சேர்த்தால் பயனில்லை; அதிகம் சேர்ப்பின் ஆபத்து.இந்தப் புளிக்காரத்தை 95% வெளியில் தெரியாத, நமக்குள் ஒளிந்துள்ள மனப்பாங்கோடு ஒப்பிடுகிறார் தந்தை. வெளியில் தெரியாத இந்த மனப்பாங்கு நம்மைச் சார்ந்துள்ளவர்களின் வாழ்க்கையில் சுவை சேர்க்கிறதா இல்லை அதை நாசமாக்குகிறதா? யோசிக்க வேண்டிய நேரம்தான்.தூய பவுல் நம்மைவிட சிறிதளவு புளிப்பு மாவு சிறப்புத்தன்மை வாய்ந்தது என்று கூறுகிறார் அதன் பலனை வைத்து.நான் பிசைந்த மாவாக இருக்கத்தான் விரும்புகிறேன்.ஆனால் என்னையும் அறியாமல் என்னில் புளிப்புத் தன்மை சேர்ந்து விடுகிறதே...எப்படி? இறைவனின் அருள் ஒன்றே துணை நிற்க முடியும்.வித்தியாசமாக யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete