Friday, October 16, 2015

தூய ஆவியாருக்கு எதிரான பாவம்

நான் ஒப்புரவு அருளடையாளம் நிறைவேற்றும்போதெல்லாம் என்னில் நெருடலாக இருக்கும் நற்செய்தி வாசகம் நாளைய நற்செய்தி வாசகம்தான் (லூக்கா 12:8-12).

'எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்' என்று சொல்லும் இயேசு 'தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் மட்டும் மன்னிக்கப்படாது' என்கிறார். இதை லூக்கா மட்டுமல்ல, மத்தேயுவும், மாற்கும் பதிவு செய்கின்றனர்.

தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் என்றால் என்ன?

மேலும் இந்தப் பாவம் இயேசுவின் சமகாலத்தில் மட்டும் இருந்ததா? அல்லது இன்றும் இருக்கிறதா?

எபேசு நகருக்கு எழுதும் திருமடலில் 'தூய ஆவியானவருக்கு துயரம் வருவிக்காதீர்கள்' (4:30) என அறிவுறுத்துகிறார் பவுல்.

இந்தப் பாவம் பற்றி அறிந்து கொள்ள நாளைய முதல்வாசகத்தின் கதாநாயகன் நமக்குத் துணைவருவார்.

நாளைய முதல்வாசகத்தில் (காண். உரோ 4:13,16-18) தூய பவுல் ஆபிரகாம் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி எழுதுகின்றார்.

'எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினாலும், அவர் எதிர்நோக்கினார்.
தயங்காமல் நம்பினார்.'

தயக்கம்தான் தூய ஆவியானவருக்கு எதிரான பாவம்.

சின்ன வயதில் ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த உலகை அழிப்பது எப்படி என்று பேய்க்குட்டிகள் கூட்டம் போட்டு யோசித்தனவாம். ஒரு பேய் சொன்னதாம்: 'நான் எல்லார் மனதிலும் கோபத்தை உருவாக்கிவிடுகிறேன். எல்லாரும் ஒருவரையொருவர் அழிப்பார்கள்!' ஆனால் இது யாருக்கும் பிடிக்கவில்லை. இன்னொரு பேய் சொன்னதாம்: 'நல்லது சொல்பவர்களை அல்லது நல்லது செய்பவர்களைக் கொன்றுவிடலாம். தீமை மட்டுமே நிலைக்கும்!' இந்த யோசனையையும் யாரும் விரும்பவில்லை. எல்லாப் பேய்களும் இப்படிச் சொல்லிக்கொண்டே சென்றன. ஆனால் எதுவும் நன்றாகப் படவில்லை. கடைசியில் ஒரு குட்டிப்பேய் சொன்னதாம்: 'நான் உலகிற்குப் போகிறேன். எல்லாரிடமும் போய் கடவுளை நம்புங்கள், நல்லது செய்யுங்கள் என்று சொல்வேன்!' எல்லாருக்கும் ஷாக். 'ஐயயோ!' என்றன எல்லாப் பேய்களும். 'கொஞ்சம் பொறுங்க!' என்று சொல்லி குட்டிப்பேய் தொடர்ந்து சொன்னது: 'ஆனால், இன்றே நம்ப வேண்டுமா! இன்றே நன்மை செய்ய வேண்டுமா! என்று தயக்கத்தை விதைப்பேன்!'

தயக்கம் தங்கிவிட்டால் நாமும் இருக்கும் இடத்தில் தங்கிவிடுகிறோம். வாழ்க்கை தேங்கி விடுகிறது. ஆகையால்தான் 'தங்குதலும்' 'தேங்குதலும்' தொடர்புடைய வார்த்தைகளாக இருக்கின்றன.

ஆபிரகாம் தயக்கம் காட்டியிருந்தால் தன் சமவயதினர்போல மறைந்திருப்பார். ஆனால், தயங்காமல் நம்பினார்.

இன்று என்னை ஏற்றுக்கொள்வதிலும், என் நண்பர்களை ஏற்றுக்கொள்வதிலும், என் இறைவனை ஏற்றுக்கொள்வதிலும் நான் தயக்கம் காட்டுகிறேனா?

இந்தத் தயக்கம் என்னுள் குடியிருக்கும் தூய ஆவியானவருக்குத் துயரம் வருவிக்கிறது!


2 comments:

  1. என்னை அடிக்கடி யோசிக்க வைக்கும் ஒரு விஷயம்....தமத்திருத்துவத்தில் இந்தத் " தூய ஆவிக்கு"மட்டும் கொஞ்சம் கூடுதலான இம்பார்டன்ஸ் என்று.இன்று தந்தையின் வலைப்பதிவும் அதையே உறுதிப்படுத்துகிறது.நாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் 'தயக்கம்' என்ற ஒரு விஷயம் இவ்வளவு நெகட்டிவானது என்பதை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கிடினும் அபிரகாம் பற்றித் தூய பவுல் எழுதும் " எதிர் நோக்குக்கு இடம் இல்லாத்து போல் தோன்றினாலும் அவர் எதிர் நோக்கினார்; தயங்காமல் நம்பினார்" ....எனும் வார்த்தைகள் நம்மை அந்தத் தயக்கத்தைப்
    போக்குகின்றன. நம்மைத் தேக்க நிலைக்கு இட்டுச்செல்லும் தயக்கத்தைத் தூய ஆவி நம்மிடமிருந்து அறவே எடுத்துப் போடுவாராக! ஆண்டவனையும்,அவரின் அனைத்துப் படைப்புக்களையும் அன்பு செய்வதன்மூலம் தூயாவியானவரின் துயரம் போக்கி அவரை மகிழச் செய்வோமாக! நல்லதொரு பதிவைக் கொடுத்த தந்தைக்கு என் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம், "தூய ஆவியாருக்கு எதிரான பாவம்" ஒரு அருமையான பதிவு . நம் இறைவன் மனிதனுக்குக் கொடுத்துள்ள மிகப்பெரிய கொடை "தூய ஆவி". அதாவது இறைவன் தனது ஞானம், படைப்பாற்றல், அருள், சுருங்கச் சொன்னால் தன்னுடைய அனைத்திலும் மனிதனுக்குப் பங்கு கொடுத்துள்ளார். படைப்பில் தொடங்கிய இப் பங்களிப்பு மீட்பில் முழுமையடைகிறது. இவ்வுண்மையை ஏற்று மனிதன் முன்னிலையில் இக்கொடையைப் பகிர்ந்து, சான்று பகர்ந்து வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.தந்தை கூறியவாறு தயக்கத்தை தகர்த்தெறிந்து தூய ஆவிக்குரிய வாழ்கை வாழ்வோம்.வாழ்த்துவோம் தந்தையை.

    ReplyDelete