Saturday, May 31, 2014

ஏன் என்னைக் கைவிட்டீர்?

திபா 22 நமக்கு மிகவும் பரிச்சயமான திருப்பாடல். கல்வாரியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிய போது அவரே தன் மரண வேதனையில் முணுமணுத்ததாக நற்செய்தியாளர்கள் எழுதும் பாடல்.

இப்பாடலை இயேசு செபித்திருக்கலாம். ஒவ்வொரு யூதரும் திருப்பாடல்களை செபங்களாக செபிப்பது வழக்கம். இந்தத் திருப்பாடலில் வரும் பல்வேறு சொல்லாடல்கள் இயேசுவின் சிலுவைச்சாவோடு மிகவும் ஒத்துப் போவதால் இயேசு இதை முணுமுணுத்ததாக எழுதவும் வாய்ப்பிருக்கிறது.

பாடகர் தன் பாடலை எப்படித் தொடங்குகின்றார்?

தன் மனதில் அமைதி இல்லையாம்.

காலையிலும் மன்றாடுகின்றார். மாலையிலும் மன்றாடுகின்றார். ஆனால் இறைவன் மௌனம் சாதிக்கின்றார். இறைவனின் மௌனம் தன் மனத்தின் அமைதியைக் குலைக்கிறது.

இறைவன் தனக்கு செவிசாய்க்காவிடினும் அவருக்கு இரண்டு நம்பிக்கைகள் இன்னும் இருக்கின்றன:

அ. கடவுள் என் மூதாதையருக்குச் செவிசாய்த்தார். ஆகையால் எனக்கும் செவிசாய்ப்பார்.

ஆ. கடவுள் என் இறந்த காலத்தில், அதாவது என் பிறப்பு முதல் இன்று வரை, என் உடன் இருந்திருக்கின்றார். ஆகவே இன்னும் உடனிருப்பார்.

இந்த இரண்டு நம்பிக்கையையும் சீர்குலைப்பதாக இருப்பது அவரைச் சுற்றியிருக்கும் தீங்கு. இந்தத் தீங்கு என்ன என்று நமக்குத் தெரியவில்லை: போரா, இயற்கைச் சீற்றமா, எதிரிகளின் படையெடுப்பா, அழிக்க முடியாத கொள்ளை நோயா, பசியா, பஞ்சமா? ஆனால் உயிர் போகுமளவிற்கு துயரம் இருப்பது உண்மை.

பாடகரைச் சுற்றியிருக்கும் தீமைக்குப் பல உருவகங்கள் கொடுக்கப்படுகின்றன: காளைகள், பாசானின் கொழுத்த எருதுகள், சிங்கங்கள், தீமை செய்வோரின் கூட்டம், சாவின் புழுதி, நாய்கள், உடைந்த எலும்புகள், வாள். இதில் ஏதாவது ஒன்று வந்தாலே நம்மால் தாங்க முடியாது. அப்படியிருக்க நம் திபா ஆசிரியருக்கு இவ்வளவும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்கும்? பாவம்!

தன் இயல்பைப் பற்றிச் சொல்லும் போது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகின்றார்:

அ. கொட்டப்பட்ட நீர் போல ஆனேன்.
ஆ. என் இதயம் மெழுகு போல ஆயிற்று.
இ. என் வலிமை ஓடுபோல காய்ந்தது.
ஈ. என் நா மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது.

இந்த நான்கு அறிகுறிகளும் நமக்கும் வரும். எப்போது? பயம் வரும்போது.

நம் உடலுக்கும், உணர்வுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் நம் உடலில் உள்ள 'சுரப்பிகளின்' செயல்பாட்டை வைத்து விளக்குகிறது. ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவு இருந்ததை இத்திருப்பாடல் விளக்குகிறது.

ஆசிரியரின் பயம் என்ற உணர்வு அவரின் இரண்டு சுரப்பிகளின் இயக்கத்தைத் தடைசெய்கிறது:

தைராய்டு சுரப்பியின் செயல் இழப்பு நாக்கையும், உடலையும் வறண்டு போகச் செய்கிறது. எலும்பின் வலிமையைக் குறைக்கிறது.

அட்ரீனல் சுரப்பியின் குறைபாடு இதயத்தின் துடிப்பைப் பாதிக்கிறது.

இது உளவியலால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிக பய குணம் கொண்டவர்களுக்கு, இதயத்தில் அதிக வருத்தத்தைச் சுமப்பவர்களுக்கு இந்த இரண்டு சுரப்பிகளின் இயக்கும் குறைவாகவே இருக்கின்றது.

நம் உணர்வுகள் நம் உடலை அதிகமாகவே பாதிக்கின்றன.

இதுவரை வழிநடத்தி வந்த இறைவன் இனி வழி நடத்தாமாலா போய்விடுவார்? என்று நம்பிக்கை வளரும் போது பயம் குறைகின்றது.

'ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று புலம்பும் ஆசிரியர் வெகு சீக்கிரமாகவே 'உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்!' என்று துள்ளி எழுகின்றார்.

1 comment:

  1. இத்திருப்பாடலின் முற்பகுதியில் வரும் புலம்பலை விரிவாக்க் கூறிவிட்டு துள்ளளோடு கூடிய பின் பகுதியைச் சுறுக்கிவிட்டீர்கள்.இறைவன் நம்மருகில் இல்லாத்துபோல் சமயங்களில் தோன்றினும்,"அவர் எளியோரின் சிறுமையை அற்பமாக எண்ணவில்லை;தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி மன்றாடுகையில் அவர்களுக்கு செவிசாய்த்தார்" என்று கூறும் பகுதி நம்மை ஆற்றுப்படுத்தும் பகுதி. நாளமில்லா சுரப்பிகளின் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவருக்குறிய தெளிவோடு விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.



    டத

    ReplyDelete