Wednesday, May 7, 2014

வேறு என்ன வேண்டும்?

நமக்காக நாம் கொடுக்கும் நேரத்தை அடுத்தவர்களுக்காகக் கொடுத்தால் அது அதிகமாகவே நமக்கு மகிழ்ச்சி தருகிறது என்பது சரியா?

பிறருக்காகச் செலவிடும் நேரம் எப்போதும் செலவு கிடையாது. மாறாக அது ஒரு இன்வெஸ்டமெண்ட் என்கிறது இன்றைய மேலாண்மை தத்துவம்.

இன்று நானும் என் நண்பனும் காஃபி குடிக்க ஒரு பாருக்குச் சென்றோம். வித்தியாசமான கேக் ஒன்று இருந்தது. வழக்கமாகச் சாப்பிடும் கொர்னெட்டோவுக்குப் பதில் அந்த கேக் சாப்பிடலாம் என்று நினைத்து பில் போடும் பெண்ணிடம் (வயது 25 இருக்கும்!) சென்றேன். ஒரு கேக் என்றேன்! அந்தப் பெண் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 'என்ன வேண்டும்?' என்று மறுபடியும் கேட்டாள். 'தலைவலிக்கிறதா?' என்றேன். 'ஆம்!' என்று சொன்னவள் தொடர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். 'தவறாகக் கேட்டுவிட்டோமோ' என நினைத்து 'ஸாரி' என்றேன். 'இல்லை! யாருமே என்னை இப்படிக் கேட்டதில்லை!' என்றவள் நன்றாகவே அழுதுவிட்டு பில் போட்டாள். பின் எங்களை அமரச் சொல்லி அவளே அதை மிக நேர்த்தியாகப் பரிமாறினாள். அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளே தண்ணீர் கொண்டு வந்தாள். பேப்பர் கொண்டு வந்தாள். கதவு வரை வந்து வழியனுப்பினாள். என் நண்பனுக்கு ஆச்சர்யம். 'அவளை என்ன வசியம் பண்ணின?' எனக் கேட்டான். 'ஒன்றுமில்லை. தலைவலிக்கிறதா?' என்று கேட்டேன். அவ்வளவுதான். வேறொன்றுமில்லை' என்றேன்.

தலையைப் பிடித்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்தது இப்போதும் என் கண்முன் நிற்கின்றது. நமக்கு முன்பின் தெரியாதவர்களிடம் நான் செலவழித்த ஒரு நிமிடமே இவ்வளவு மகிழ்ச்சியை அவர்களுக்கும், எனக்கும் தருகிறது என்றால், எனக்குப் பிடித்தவர்களிடம், என்மேல் பைத்தியமாய்(!) இருப்பவர்களிடம் நான் என்னையே முழுமையாகத் தந்தால் இன்னும் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன் நான் ஒரு முடிவு எடுத்தேன். நான் செலவழிக்கிற ஒவ்வொரு நிமிடமும், நான் செலவழிக்கிற ஒவ்வொரு பைசாவும், நான் செலவழிக்கிற ஒவ்வொரு கலோரியும் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களை கஷ்டப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

அடுத்தவர்களை நினைக்கும் போது என்னை அறியாமலேயே என் அம்பிஷன் எல்லாம் குறைந்து விடுவதை நான் உணர்கிறேன். போட்டி உணர்வு வருவதில்லை. கோபம் குறைகிறது. வெறுப்பு குறைகிறது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

என்னடா ரொம்ப பேசுறன்னு சொல்றீங்களா?

அண்மையில் 250 என்று ஒரு கொள்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவரின் பின்னால் அவருக்கு நெருக்கமான 250 பேர் இருப்பார்களாம். நாம் ஒருவரை மகிழ்விக்கும் போது அந்த 250 பேருடனும் அவர் இன்னும் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பாராம். அவரின் கண்களில் கண்ணீர் வரவைத்தால் நாம் 250 பேரின் கண்ணீருக்கல்லவா காரணமாகி விடுகிறோம்.

இன்று நான் கற்றது இதுதான். நான் படிக்கும் படிப்போ, பெறும் பட்டமோ, எழுதும் ஆய்வுத்தாளோ உலகை மாற்றப் போவது இல்லை. நான் அன்போடு பேசும் ஒரு வார்த்தை உலகை மாற்றவில்லை என்றாலும் நான் பேசும் அந்த நிமிடத்தில் எனக்கு உலகமாய் இருக்கும் அந்த நபரை மாற்றிவிடுகிறதே.

வேறு என்ன வேண்டும்?

1 comment:

  1. "Joy when shared is doubled; sadness when shared is halved"..என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இதெல்லாம் நமக்கு அடுத்து இருப்பவர் நமக்குத் தெரிந்தவராயிருக்கும் பட்சத்தில் சரிதான்.ஆனால் அதுவே ஒரு புது நபராக அதிலும் ஒரு25 வயதுப் பெண்ணாக் இருக்கும்போது..!!?? பல விஷயங்களை யோசிக்க வேண்டும்." எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ"..." பாத்திரமறிந்து பிச்சை இடு"...இந்த மாதிரி பொன்மொழிகள் எல்லாம் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களுக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆயினும் நாம் ஒருவரை மகிழ்விக்கும் போது அதன்பலன் 250 பேரைச்சென்றடைகிறது என்பது மிகப்பெரிய விஷயம்.இதை எந்தத் தங்கு தடையுமின்றி தாராளமாகப் பின்பற்றுவோம்.தகவலுக்கு மிக்க நன்றி தந்தையே!

    ReplyDelete