Monday, May 19, 2014

எது சரி? எது சுகம்?

'பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்' ... 'நீ எனக்குத் தடையாக இருக்கிறாய்!' ... 'தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்!' (காண். மத்தேயு 16:21-27)

பிலிப்பு, செசாரியாப் பகுதியில் தன் சீடர்களிடம் தான் யார் என்று சொல்லக் கேட்டவுடன், தொடர்ந்து அவர்களிடம் பேசும் பகுதியே இன்றைய நற்செய்தி. இந்ந நற்செய்தி மூன்று உட்பகுதிகளைக் கொண்டுள்ளது: 1. இயேசு பாடுகளை முன்னறிவிக்கின்றார். 2. பேதுரு இயேசுவின் பாடுகளைக் கடிந்து கொள்கின்றார். 3. இயேசு சீடத்துவத்தின் அர்த்தம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

1. இயேசு பாடுகளை அறிவிக்கின்றார். இயேசுவுக்கு எருசலேமின் பாடுகளும், சிலுவைச் சாவும் திடீரென நிகழ்ந்த ஒரு வியப்பு அல்ல. அது அவருடைய வாழ்வின் நிறைவு. தன் பணி வாழ்வு முழுவதிலும் சிலுவை அவருக்கு முன்னேயே நின்றிருக்கிறது. சிலுவை என்ற வார்த்தைக்குப் பதிலாக கொலை என்ற வார்த்தையை மத்தேயு நற்செய்தியாளர் இங்கே பயன்படுத்துகின்றார். இதே வார்த்தைதான் எருசலேமின் ஆலயத்தில் ஆடுகள் பலியிடப்படுவதைச் சொல்லும் வார்த்தை. தன் இறப்பு மற்றவர்களின் பார்வையில் ஒரு கொலையாகத் தெரிந்தாலும், தன் பார்வையிலும், இறைவனின் பார்வையிலும் அது ஒரு மேலான பலி எனவும், அந்தப் பலியால் பலரும் மீட்புப் பெறுவர் என்பது இயேசுவின் பார்வை. தன் இறப்பு பற்றி மட்டுமல்ல, உயிர்ப்பு பற்றியும் முன்னுரைக்கின்றார். இயேசுவின் இலக்குத் தெளிவு இதில் வெளிப்படுகின்றது. வாழ்க்கையை வாழும்போது நம் இறுதி எப்படி இருக்கும் என நினைத்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்று குறிப்பிடுவார்கள். நம் இறுதியை நாமே எழுதிவிட்டு அதன்படி ரிவர்ஸ் செய்து வாழ்ந்தால் வாழ்வு செம்மையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது மேலாண்மையியல்.

2. சீமோன் இயேசுவைக் கடிந்து கொள்கின்றார். 'நீ பாறை!' என்று சற்றமுன் சீமோன் பேதுருவை அழைத்த இயேசு 'அப்பாலே போ சாத்தானே!' என அவரைக் கடிந்து கொள்கின்றார். 'இது வேண்டாம்! உமக்கு நடக்கவே கூடாது!' என்பது ஒரு நலவிரும்பியின் வார்த்தைகள். நம் அன்பிற்குரியவர்கள் யாராவது தனக்குத் துன்பம் வரப்போகிறது என்று புலம்பினால் நம் மனநிலை எப்படி இருக்கும்? பேதுருவைப் போல நாமும் அக்கறையோடுதான் 'அப்படியெல்லாம் நடக்காது!' என்று சொல்வோம். இயேசுவைப் பேதுரு புரிந்து கொள்ளவில்லை என்பதை விட பேதுருவை இயேசு புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. மனிதர் பார்க்கும் பார்வைக்கும், கடவுள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. மனிதர்கள் பகுதியாகப் பார்க்கின்றனர். கடவுள் மொத்தமாகப் பார்க்கின்றார். இயேசுவின் பாடுகளை வேண்டாம் எனச் சொல்லும் பேதுரு, உயிர்ப்பையும் வேண்டாம் என்றுதானே சொல்கின்றார். கடவுளின் பார்வையில் பாடுகள் என்பது உயிர்ப்போடு இணைந்திருப்பது. இறைவனின் பேங்கில் நாணயத்தின் இரண்டு பக்கங்களும் அவசியம். ஒன்றை மட்டும் டெபாசிட் செய்ய முடியாது. பேதுரு வாழ்க்கை என்ற நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கின்றார். நம் வாழ்வில் நாம் துன்பங்கள் வரும்போது உடனடியாக நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நம் வாழ்விற்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது.

3. பேதுருவின் குறுகிய பார்வையைத் தான் இயேசு கடிந்து கொள்கிறாரே தவிர, பேதுருவை இயேசு கடிந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றாற் போல நடக்காத போது நாம் அவர்களைக் கடிந்து கொள்கின்றோம். நம் கடிந்து கொள்ளுதல் ஒரு நபரின் செயலை நோக்கியதாக இருக்கின்றதா அல்லது ஒரு நபரையே நோக்கியதாக இருக்கின்றது. செயல்களை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். செயல்களை நோக்கி இருந்தால் அதற்குப் பெயர் 'குட்டிக் கோபம்'. அதுவே நபரை நோக்கி இருந்தால் அதுதான் 'குட்டி வெறுப்பு'. வெறுப்பு வந்து விடும் இடத்தில் அந்த நபரையே நம் வாழ்விலிருந்து நாம் துடைத்துவிடுகின்றோம்.

4. சீடத்துவம். தொடர்ந்து இயேசு சீடத்துவத்தின் விலை பற்றித் தன் சீடர்களுக்குப் போதிக்கின்றார். சீடத்துவம் என்பதில் மூன்று பண்புகள் அடங்கியிருக்கின்றன: அ. தன்னைத் துறக்க வேண்டும். ஆ. தன் சிலுவையைத் தூக்க வேண்டும். இ. இயேசுவைப் பின்பற்ற வேண்டும். இந்த மூன்றையும் தலைகீழாகப் பார்த்தால் தான் முழு அர்த்தம் வருகின்றது. முதலில் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். எப்படிப் பின்பற்ற வேண்டும்? சிலுவையைத் தூக்கிக் கொண்டு. சிலுவை என்றால் என்ன? தன்னைத் துறப்பது. இதில் முதல் இரண்டைக் கூடச் செய்து விடலாம். ஆனால் 'தன்னைத் துறப்பது' என்பதுதான் மிகவும் கடினமான ஒன்று. ஆகையால் தான் இயேசு இதை முதலில் சொல்கிறாரோ என்னவோ? மூன்று வாரங்களாக ஒரு அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே நாளில் முடிக்க வேண்டிய ஒன்று. ஆனால் என்னவோ அதை எழுதவே முடியவில்லை. அதை எழுதலாம் என்று நினைத்தவுடன் மனம் தான் விரும்பியதைத் தான் செய்கிறதே தவிர, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய மறுக்கிறது. யாராவது எழுதிக்கொடுத்தால் நன்றாக இருக்குமே எனவும் எண்ணத் தொடங்கிவிட்டது. இந்தப் போராட்டம் எல்லா நேரங்களிலும் வரும். அலார்ம் அடித்தவுடன் எழ வேண்டும் என்று இரவில் சொல்கின்ற மனம், காலையில் அலார்ம் அடித்தவுடன் 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் என்ன?' எனக் கேட்கிறது. நன்றாகப் படிக்க வேண்டும் எனச் சொல்கின்ற மனம், 'படித்துப் படித்து என்னத்தைக் கண்டோம். நீ இன்று சொல்வதை உனக்கு முன் என்றோ, யாரோ சொல்லிவிட்டார்கள்' என்றும் சொல்கின்றது. நம் மூளையும், உடலும் பல நேரங்களில்; தங்களுக்கு எது எளிதோ அதை மட்டுமே செய்கின்றன. எது சரி? என்று கேட்பதை விட எது சுகம்?' என்றே உடல் கேட்கின்றது. எது சரி என்பதற்கும், எது சுகம் என்பதற்கும் இடையேயான போராட்டத்தின் பெயரே சிலுவை. சுகத்தைத் துறப்பதே தன்னலம் துறப்பது. எது சரி என்பது ஆன்மா, எது சுகம் என்பது உலகம். பல நேரங்களில் இந்த உலகம் முழுவதையும் எனக்கு உரிமையாக்கிக் கொள்ளவே நினைக்கிறேன்: அதாவது எல்லா நண்பர்களிடமும் ஃபோன் செய்கிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன். 'உதவி!' என்று யார் கேட்டாலும் ஓடுகிறேன். ஆனால் நாளின் இறுதியில் அமர்ந்து இன்று என் மனம் விரும்பும் ஒன்றைச் செய்தேனா? என்று கேட்டால் மௌனமே மிஞ்சுகிறது. 'என் சுகம்!' எதையோ அதைத் தான் செய்கிறேனே தவிர, 'என் சரி!' என்பதை நான் செய்வதில்லை. இதைத்தான் இயேசு 'உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' எனக் கேட்கின்றார். 'அவசியம் - அவசரம்' என்ற கட்டத்தில் வாழ்க்கை அவசியமானதை விடுத்து அவசரத்தை மட்டுமே நம்மைச் செய்யச் சொல்கிறதென்றால் ஆபத்து நம் அருகிலேயே இருக்கின்றது.

2 comments:

  1. நம் இறுதியை நாமே எழுதி விட்டு அதன்படி வாழ்ந்தால் வாழ்வு செம்மையாக இருக்கும்.உண்மைதான்.ஆனால் நாம் தவறி விழுந்து அதிலிருந்து எழுந்து வாழும் வாழ்க்கை இன்னும் மேலானதல்லவா? ஒருவரின் செயலைக்கடிந்து கொள்வதற்கும்(குட்டிக்கோபம்) ஒருவரையே கடிந்துகொள்வதற்கும்(குட்டிவெறுப்பு) உள்ள வேறுபாடு அழகான பதிவு.தங்களது அன்றாட செயல்கள் பற்றிக குறிப்பிட்டுள்ளீர்கள.அவையே 'சரியான' செயல்கள் எனில் அவையே 'சுகமான' செயல்களாகவும் இருக்கலாமே! ஓவரா யோசிப்பது மட்டுமல்ல..யோசிக்கவும் வைக்கிறீர்கள்.பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. ம்ம்...அழகான பதிவு நன்றி. இறுதியாக ஒரு வாசனம் கூறினீர்கள் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' இவ் வாசனம் அல்லவா இரு பெரும் புனிதர்களை நமக்கு தந்த வாசனம். எனக்கும் இந்த வாசனம் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete