Saturday, May 17, 2014

உண்மையில் என்னதான் நடந்தது?

மக்களை அனுப்பிவிட்டு இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ... அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார் ... 'ஐயோ! பேய்!' என்று அலறினர் ... 'துணிவோடிருங்கள். நான்தான்' ... 'வா' ... 'ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்' ... 'நம்பிக்கை குன்றியவனே!' ... 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர். (காண். மத்தேயு 14:22-33)

நற்செய்தியாளர்கள் செய்திகளை உடனுக்குடன் பதிவு செய்யும் பத்திரிக்கை நிருபர்கள் அல்லர். மாறாக, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு செய்திகளைத் தணிக்கை செய்யும் எடிட்டர்கள். நிகழ்ந்த ஒன்றைத் தன் பார்வையில், தன் செய்தித்தாளின் நோக்கத்திற்கும், அதை வாசிப்பவர்களின் ரசனைக்கும் ஏற்ப மாற்றிக் கொடுப்பதே எடிட்டரின் வேலை. இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு வகையில், தங்களின் குழுமத்தின் தேவைக்கேற்றவாறு தணிக்கை செய்து கொடுக்கின்றனர். மாற்கு நற்செய்தியில் வரும் இன்றைய நற்செய்திப் பகுதியில் நிறைய தகவல்கள் சொல்லப்படவில்லை. இயேசுதான் என்றதும் பேதுரு இறங்கி ஓடியதும், அவரை ஆண்டவரே என்று அழைத்ததும், 'இறைமகன்' என்று சீடர்கள் அறிக்கையிட்டதும் மத்தேயுவின் சேர்க்கைள்.

அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? 'ஆண்டவரே' மற்றும் 'இறைமகன்' என்னும் பட்டங்கள் இயேசுவுக்கு அவரின் உயிர்ப்பிற்கு மேல் அவரின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் கொடுத்தது. அந்த டைட்டில்கள் எப்படி இந்த நிகழ்வுக்குள் வந்தன?

மத்தேயு நற்செய்தியின் இயேசு எப்போதும் 'கடவுள் நம்மோடு' எனவே இருக்கின்றார். ஆனால் இன்றைய நிகழ்வில் தன் இல்லாமையைத் தன் சீடர்கள் மேல் சுமத்துகின்றார். தன் சீடர்களோடு தான் மட்டும் படகில் ஏறி வந்த இயேசு இப்போது தான் மட்டும் கரையில் இருக்க அவர்களை மட்டும் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றார். தான் செய்யப்போகும் அறிகுறிக்குத் தயாரிப்பாக இதைச் செய்தாரா? அல்லது இயேசுவின் இல்லாமையை உணர்ந்த தொடக்கத் திருச்சபை இந்த நிகழ்வை ஒரு உருவகமாக எழுதியதா? படகு என்பது திருச்சபை. கடல் என்பது உலகம். சீடர்கள் திருச்சபையின் போதகர்கள். தண்ணீரில் இறங்கி நிற்கும் பேதுரு திருச்சபையின் தலைவர்.

இன்றைய நற்செய்தி 'இல்லாமை - இருமை' என்ற அடிப்படையிலும், இயேசுவின் பெயர் என அடிப்படையிலும் சிந்திப்போம்.

முதலில் 'இல்லாமை - இருமை'. இந்த இரட்டிப்புத்தன்மை மூன்று படிகளாக நிகழ்கின்றது. முதலில் இயேசு சீடர்களோடு இல்லை. அடுத்ததாக அவர்களின் பார்வையில் இருக்கின்றார். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக அவர்களோடு இருக்கின்றார். 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது முதல் நிலை. 'கடவுள் நமக்கருகில்' என்பது இரண்டாம் நிலை. 'கடவுள் நம்மோடு' என்பது மூன்றாம் நிலை.

இரண்டாவதாக 'இயேசுவின் பெயர்'. இயேசுவை முதலில் 'பேய்' என அழைக்கின்றனர். இரண்டாவதாக, ஆண்டவர் என அழைக்கின்றனர். இறுதியாக 'இறைமகன்' என அழைக்கின்றனர்.

இந்த இரண்டு புரிதல்களும் நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?

1. இறைவேண்டல். 'தனித்திரு - விழித்திரு - செபித்திரு' என்ற விவேகானந்தரின் வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகின்றன. மக்கள் கூட்டத்தோடு இருந்த அளவிற்குத் தனிமையிலும் இருக்கத் துணிகின்றார் இயேசு. தனிமையில் நாம் நம்மையே கண்டுகொள்கிறோம். தனிமை நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ஆகையால்தான் தனிமை பல நேரங்களில் நமக்குப் பயமாக இருக்கின்றது. தனிமையான அந்த நேரத்தை தன் தந்தையோடு செலவழிக்கின்றார். இயேசு எப்போதும் 'உடன்' இருப்பவராக இருக்கின்றார் - மக்களோடு, சீடர்களோடு, தந்தையோடு. இன்று நம் பிரசன்னம் எப்படி இருக்கின்றது?

2. இயேசு தண்ணீரில் மேல் நடப்பது புவிஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு நிகழ்வு. ஒன்றின் மேல் நடப்பது என்பது அதன்மேல் ஒருவர் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் காட்டுகிறது (காண். யோபு 9:8, 38:16, திபா 77:19, எசா 43:16, 51:9-10, அபக்கூக்கு 3:5). பேதுரு தண்ணீரின் மேல் நடக்க நினைத்தது இயேசுவைப் போல ஆக வேண்டும் என்ற ஆசையால் அல்ல. மாறாக, இயேசுவுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தான். இறைவனைத் தேடிச் செல்லும் ஆர்வம் நமக்கு இருக்கிறதா?

3. நம்பிக்கை. 'நம்பிக்கை குன்றியவனே!' என்று பேதுருவை அழைக்கின்றார் இயேசு. நம்பிக்கை என்றால் என்ன? நம் வாழ்க்கை என்ற கடலில் அலையே வீசாது என்பதும், நம் படகு கவிழாது என எண்ணுவதும், நாமும் தண்ணீரில் நடக்க முடியும் என நினைப்பதும் நம்பிக்கை அல்ல. மாறாக அலை வீசினாலும், புயல் அடித்தாலும் விரைவில் இயேசு அங்கு வருவார் என்று உறுதியாக இருப்பதே நம்பிக்கை.

4. இயேசு நமக்கு யார்? அரண்டவனின் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, அவர்களோடு இருந்த இயேசுவே அவர்களின் பார்வைக்குப் பேயாக இருக்கின்றாரா? கடலில் பேய்கள் வாழ்வதாக யூதர்கள் நம்பினார்கள். இன்றும் அப்படியே நம்புகிறார்கள். கடலின் கோரம் அவர்களுக்கு இயேசுவையே மறைத்துவிடுகிறது. இன்று இயேசுவை நம் பார்வையிலிருந்து மறைக்கும் காரணிகள் என்ன?

5. 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' இயேசுவின் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்வின் சாயங்காலங்களில் நமக்கு நம்பிக்கை ஒளி தருகின்றது. இந்த இரண்டு வார்த்தைகளை இறைவன் நம்மிடம் சொல்வது போல நாமும் ஒருவர் மற்றவரிடமும் சொல்வதற்குக் கடமை உண்டு தானே!

1 comment:

  1. தனிமைத்துயரில் இருப்பவர்களைத் தட்டி எழுப்பி,அவர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் பகுதி.பிறப்பால் இல்லையெனினும் வாழ்க்கையில் கிறிஸ்துவைப் பிரதிபலித்தவனின் வார்த்தைகள்."தனித்திரு-விழித்திரு-செபித்திரு"....ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றன.தனிமை செபத்திற்காக(personal prayer) பல முயற்சிகள் எடுப்பினும்,என்னதான் அதற்காக நேரம் ஒதுக்கினும் ஏதோ காரணங்களுக்காக அந்த முயற்சி இன்னும் அடுத்த கட்டத்தைத் தாண்டவில்லை.இன்று தங்களது நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மீண்டும் என்னை 'முயன்று' பார்க்க அல்ல,களத்தில் இறங்க அழைப்பு விடுக்கிறது.என்னாலும் கூட 'கடவுள் எனக்கருகில்','கடவுள் என்னோடு' என்று உரக்க சொல்ல முடியும் . என்னில் இந்த விதைகளை விதைத்த தந்தைக்கு என் நன்றிகள்..

    ReplyDelete