Sunday, May 11, 2014

அம்மா எனும் கவிதை

இன்று மாலை நற்கருணை கொடுப்பதற்காக லெயோனார்டோ என்ற பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன். அவருக்கு வயது 88. நற்கருணை கொடுத்து விட்டு எழும்போது 'நான் கொஞ்சம் உங்களோட பேசலாமா?' என்றார். 'சரி' என்று அமர்ந்தேன்.

'எனக்கு செபமாலை மாதாவை ரொம்ப பிடிக்கும்' என்றார். தொடர்ந்து அவர் சொன்னது இதுதான்:

'எனக்கு ஏன் மாதாவைப் பிடிக்கும் தெரியுமா? ஏனென்றால் எனக்கு என் அம்மா யாரென்று தெரியாது? நான் பிறந்த ஒரு வயதில் என் அப்பா இறந்து விட்டார். இரண்டாவது வயதில் என் அம்மா இறந்து விட்டார். என் உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். நான் தான் கடைசி. என்னை ஒரு விடுதியில் சேர்த்து விட்டார்கள். என் அப்பாவின் போட்டோ இருக்கின்றது. ஆனால் என் அம்மாவின் ஃபோட்டோ இல்லை. அவள் அழகா, அசிங்கமாக எனக்கு எதுவும் தெரியாது. என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். இன்னும் நான் மட்டும் தான் உயிரோடு இருக்கிறேன். என் அம்மாவைப் பார்த்து நான் அடிக்கடி கோபிப்பேன்: 'ஏன் என்னை அநாதையாக விட்டுவிட்டு நீயும் போய் விட்டாய்? எல்லாரையும் எடுத்துக் கொண்டாய்?'

நான் நர்ஸ் வேலை பார்த்தேன். 58 வயதில் வேலையை முடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன்.'

'உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா?' நான் இடைமறித்தேன்.

'எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை. என் அம்மா என்னை அநாதையாக விட்டது போல நானும் என் குழந்தைகளை விட்டுச்செல்ல வேண்டுமா என்ன? சுற்றியிருக்கும் திருமணங்களைப் பாருங்கள். எல்லாம் உடைந்து விடுகின்றன. திருமணம் முடிக்காமல் இருப்பதே நலம் - உங்களைப் போல!'

'கார் ரிப்பேர் ஆகும் என்பதற்காக காரே வாங்காமல் இருந்தாலோ, காரில் பயணம் செய்யாமலே இருந்தாலோ இலக்கை அடையுமா?' என மறுபடியும் இடைமறித்தேன்.

... ....

சிறிது நேர மௌனம். மீண்டும் தொடர்ந்தார்.

எனக்கு 18 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. என்னால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியாது.

இறப்புச் சான்றிதழுக்கான பணம் செலுத்திவிட்டேன்.

அடக்கச் சடங்க நிகழ்வு நடத்தும் ஏஜென்சியிலும் புக் செய்துவிட்டேன்.

அடக்கத் திருப்பலிக்கும் பணம் கட்டி ரசீது வைத்திருக்கிறேன்.

என் அடக்கத்திற்கான பொக்கே மற்றும் மலர் வளையங்களுக்கும் பணம் கொடுத்துவிட்டேன்.

இனி நான் இறக்க வேண்டியதுதான் பாக்கி...

என்று அவர் சொன்னபோது அவர் கண்ணிலும், என் கண்ணிலும் சேர்ந்து கண்ணீர் வந்தது.

ஒருவர் எவ்வளவு விரக்தி அடைந்திருந்தால் இதையெல்லாம் செய்திருப்பார்? தன் இறப்புச் சான்றிதழில் எல்லாம் எழுதப்பட்டு தேதி மட்டும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அவர் மனநிலை எப்படி இருக்கும்?

இப்படி எத்தனை பேர் இருப்பார்கள்?

இந்த நிகழ்வின் பிண்ணனியில் நாளை நாம் கொண்டாடும் தாய்மார்களின் தினத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு அம்மாவும் ஒரு கவிதை.
இரண்டு எழுத்தில் கவிதை கேட்டால் 'தாய்' என்பேன்.
ஒரே எழுத்தில் கவிதை கேட்டால்
அவளை என் முன்னால் நிறுத்தி 'நீ' என்பேன்'

இவ்வாறு எழுதுகிறான் ஒரு கவிஞன்.

'தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை' என்பார்கள்.

எல்லா உறவுகளுக்கும் அடிப்படையான உறவு தாய்-பிள்ளை உறவு. தாய் இல்லாமல் இவ்வுலகில் எவரின் இருப்பும் சாத்தியமில்லை.

கடவுள் எல்லா இடத்தில் இருக்க முடியாது என்பதற்காகத்தான் தாயைப் படைத்தார் எனச் சொல்வார்கள்.

பெண்மை பெற்ற ஒரு மாபெரும் கொடை தாய்மை.

தாய் ஒரு விநோதமான படைப்பு. அவள் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. கடைசிச் சோற்றுப் பருக்கையையும் தன் பிள்ளைக்கோ, கணவனுக்கோ வைத்துவிட்டு, மண்பானையில் தண்ணீர் முகர்ந்து குடித்துவிட்டு கட்டாந்தரையில் தூங்கும் தாய்மார்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னதான் 'தாயுமானவனே' என்று ஆண்களின் தாய்மையைக் கொண்டாடினாலும் அதில் ஒரு வெறுமை இருக்கவே செய்கின்றது. பெண் மட்டுமே தாய்மையை நிறைவு செய்கிறாள்.

ஒரே ஒரு விடயம்.

தாயைவிட பிள்ளைகள் வேகமாக வளர்கின்றார்கள். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு தாய்மார்களால் ஈடுகொடுக்க முடியாது.

'என்னம்மா...ஒரு ஃபோன் அட்டன் பண்ண தெரியாதா?

'ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாதா?

'ஸ்கைப்பில் கால் அட்டன் பண்ண தெரியாதா?

'இங்கிலீஷ் தெரியாதா?

'பஸ் போர்ட் வாசிக்கத் தெரியாதா?

'கணக்குப் பார்த்துப் பணம் கொடுக்கத் தெரியாதா?

என்று வெகு எளிதாக அவர்களின் அறியாமையைச் சாடி விடுகிறோம். நானே இப்படிப் பலமுறை என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்.

ஆனால் ஒரு தாய்க்கும் ஒரு வரலாறு இருக்கிறது என்பதையோ, ஒரு இறந்தகாலம் இருக்கிறது என்பதையோ பிள்ளைகள் நாம் மறந்து விடுகிறோம். என்றாவது ஒரு நாள் அவர்களிடம், 'அம்மா...நீங்கள் எங்கு படித்தீர்கள்? உங்க முதல் வகுப்பு டீச்சர் பேர் என்ன? உங்களுக்குப் பிடித்த கலர் என்ன? உங்களுக்கு யாரையாவது ரொம்ப பிடிக்குமா? உங்க பிரண்ட்ஸ் எங்கிருங்காங்க...' என்று கேட்டது கிடையாது. ஆனால் அவளுக்குத் தன் பிள்ளைகளைப் பற்றி எல்லாம் தெரியும்.

ஒரு குழந்தையைக் கருவில் தாங்கும் அன்றே அவள் வாழ்நாளின் துன்பத்திற்குத் தன்னையே தயாராக்கிக் கொள்கின்றாள். நாம் திட்டும்போதும், உதாசீனப்படுத்தும்போதும், எரிந்து விழும்போதும், கோபப்படும்போதும் மௌனம் காக்கிறாள். பின் வழக்கம்போல, 'ஏதாச்சும் சாப்பிடுறியா?' என்றுதான் அவள் கேட்கின்றாள்.

நிக்கதேம் இயேசுவைப் பார்த்துக் கேட்பார்: 'வயதான பின் எப்படி ஒருவர் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்க முடியும்?'

அப்படி ஒருவர் பிறக்கும் போதுதான் ஒரு தாயின் உன்னதத்தை ஒருவரால் உணர முடியும் போல!

அவள் நன்றாகச் சமைத்தால்...ஹோட்டலில் வாங்கியதா என்று கேட்பார்கள்.

அவள் நன்றாகச் சமைக்கவில்லையென்றால்...என்னம்மா சமைக்கிறீங்க என்று புலம்புவார்கள்.

அவள் காலையில் எழுப்பினால்...ஏம்மா தொந்தரவு பண்றீங்க என்பார்கள்.

அவள் காலையில் எழுப்பவில்லையென்றால்...ஐயோ உங்களாலதான் லேட் என்பார்கள்.

அவள் நம் உடல்நலன் மேல் அக்கறை காட்டினால்...ஐயோ படுத்தாதிங்கமா என்பார்கள்.

அவள் அக்கறை காட்டவில்லை என்றால்...ஐயோ உங்களால தான் ஃபுட் பாய்சன் என்பார்கள்.

'எங்கே போகிறாய்?' என்று கேட்டால்...'நான் எங்க போனா என்னமா?' என்று கேட்பார்கள்.

கண்டுகொள்ளவில்லையென்றால்...'நான் எப்படிப் போனாலும் உங்களுக்குக் கவலையில்லையா?' என்பார்கள்.

அவள் துவைத்த துணியில் கறை காண்பார்கள்.

அவள் சமைத்த உணவில் தலைமுடி காண்பார்கள்.

அவள் கூட்டிய அறையில் குப்பை காண்பார்கள்.

அவள் எழுதும் தமிழில் குறை காண்பார்கள்.

ஆனால்...

அவள் இறந்து அடக்கம் செய்யப்பட்டவுடன்...

அவளின் வெற்றிடத்தை நிரப்ப யாருமில்லை...

'தாய்மை தின வாழ்த்துக்கள்...'

2 comments:

  1. இரண்டெழுத்துக்கவிதையான 'தாய்'யின் துர்பாக்கியங்கள் பற்றிக்கூறி என் கண்களைக் குளமாக்கியது மட்டுமல்ல..உங்களுக்குள்ளும் ஒரு தாய் ஒளிந்திருப்பதை உணர்த்திவிட்டீர்கள்....
    "தாய்மை"யைப்போற்றும் அனைவருக்கும் "அன்னையர் தின்" வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆம், வாசிக்கும் போதே என் கண்கள் கலங்கின. உயில் எழுத்தில் "அ" எடுத்து, மெய் எழுத்தில் "ம்" (மெய்-உடல்) உயிர்மெய் எழுத்தில் "மா" எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து "அம்மா". உடலையும் உயிரையும் இணைத்துக்கொடுப்பதால் உன்னை அழகுபடுத்துகிறது தமிழ். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete