Tuesday, May 13, 2014

நிலம் என்ன செய்யும்?

'விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் போது சில விதைகள் வழியோரம் விழுந்தன...சில விதைகள் பாறைப்பகுதிகளில் விழுந்தன...சில விதைகள் முட்செடிகள் இடையே விழுந்தன...சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன...' (காண் மத்தேயு 13:1-23)

இன்றைய நற்செய்தி இயேசுவின் உவமை, உவமைக்கான நோக்கம் மற்றும் உவமையின் விளக்கம் என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இயேசுவே உவமைக்கான விளக்கம் கொடுத்து விடுகிறார். ஆகையால் இன்னொரு விளக்கம் தேவையா? ஒரு உவமைக்கு ஒரு பொருள்தான் இருக்க முடியுமா?

முதலில் உவமை என்றால் என்ன? தெரிகின்ற பொருளை வைத்து தெரியாமல் இருக்கும் ஒன்றை விளக்குவதே உவமை. ஒன்று மற்றொன்றுக்கு உருவகமாகத் தரப்படுகின்றது. உவமை என்றால் ஒரு கதை. நாம் ஒவ்வொருவருமே ஒரு கதையைத் தான் வாழ்கின்றோம். சத்தியாகிரகம் என்பது காந்தி வாழ்ந்த கதை. தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகள் வாழ்ந்த கதை. உண்மை என்பது அரிச்சந்திரன் வாழ்ந்த கதை. சிரிப்பு என்பது சார்லி சாப்ளின் வாழ்ந்த கதை. வன்முறை என்பது நீரோ வாழ்ந்த கதை. இப்படியாக ஒவ்வொரு மதிப்பீட்டையும் நாம் நம் வாழ்க்கையின் கதையாக அமைத்துக்கொள்ள முடியும். உவமையின் நோக்கம் இதுதான். உவமையைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அதைக் கேட்கும் ஒருவர் தான் உவமையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, ஊதாரி மகன் உவமையை வாசிக்கும் போதே இந்தக் கதையில் நான் யார் என்று நம் உள்ளம் கேட்கத் தொடங்கிவிடுகிறது. இதுதான் உவமையின் சிறப்பு. உவமை பன்முகம் கொண்டது. அதற்குப் பல அர்த்தங்கள் கொடுக்க முடியும். உவமை நீண்ட கதையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஒற்றைவரியாகக் கூட இருக்கலாம். உவமை எப்போதும் ஆன்மீகம் சார்ந்த பொருளை மட்டும் தரும் என்று நினைக்கத் தேவையில்லை. உவமை உலகம் சார்ந்த பொருளையும் தரலாம். இயேசு உவமைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் சாதாராணமானவை, உலகுசார்ந்தவை: உப்பு, ஒளி, மலை, நகரம், புளிப்பு மாவு, புதையல், வலை, விதை போன்றவை.

இயேசுவின் உவமைகளுக்கு பல வருடங்களாக ஆன்மீகப் பொருள் மட்டுமே கொடுக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு, உலகியல் வாழ்வுக்கு அது ஒவ்வாததாகக் கருதப்பட்டது. ஆனால் உண்மையில் இயேசுவின் உவமைகள் நம் அன்றாட உலக வாழ்வுக்குப் பயன்தரக்கூடியவை.

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உவமைக்குத் தரும் விளக்கம் அவருடையது அல்ல என்றும், மாறாக தொடக்கத் திருச்சபையில் இறைவார்த்தையை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய நிலையில் நற்செய்தியாளர்களே இதை எழுதி இயேசுவே சொன்னதாக அவர் வாயில் சொற்களைத் திணிக்கிறார் என்றும் தற்போதைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அலகை, தீய நாட்டம், இன்னல், தடுமாற்றம், செல்வமாயை போன்ற வார்த்தைகள் எல்லாம் தொடக்கக் கிறித்தவர்களின் மத்தியில் நிலவிய சமகாலப் பிரச்சினைகளைக் குறிப்பிடுகின்றன.

இந்த நற்செய்தியை வாசித்தவுடன், இந்த நான்கு நிலங்களில் நான் யார்? என்று பல நேரங்களில் மறையுரைகளை முடித்துவிடுகிறோம். நன்றாகக் கவனியுங்கள். இதற்கு நற்செய்தியாளர் கொடுக்கும் தலைப்பு 'நானிலங்களின் உவமை' அல்ல. மாறாக, 'விதைப்பவர் உவமை'. பிரச்சினை இங்கு விதைப்பவர் மேல் தான். பாவம் விதைகள் என்ன செய்யும்? நிலம் என்ன செய்யும்? விதைப்பவர் நல்ல நிலத்தில் விதைத்திருந்தால் எல்லா விதைகளுமே பலன் கொடுத்திருக்குமே? இந்த உவமையில் உள்ள மற்றொரு நெருடல்: முப்பது மடங்கோ, அறுபது மடங்கோ, நூறு மடங்கோ என்பதுதான். பாலஸ்தீனத்தில் நடைபெறும் விவசாயத்தில் எந்த ஒரு விவசாயமும் முப்பது, அறுபது, நூறு எனப் பலன் தருபவை அல்ல. ஒருபோகம், இருபோகம் விளைவதே அரிது. மேலும் ஒரே நிலத்தில் விழுந்த விதைகளுக்குள் பலன் தருவதில் என்ன வேறுபாடு? விதையில் பிரச்சினையா? அல்லது மண்ணில் பிரச்சினையா? நல்ல நிலத்திற்குள்ளேயே பாகுபாடு என்றால் ரொம்ப நல்ல நிலம், சுமாரான நல்ல நிலம், கொஞ்ச நல்ல நிலம் என்று பிரிக்க முடியுமா?

இந்த நற்செய்தி நமக்கு விதைப்பவரையே முன்வைக்கின்றது. விதைப்பவர் கடவுள் அல்லது கிறிஸ்து. நிலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவரால் பலன் தர வைக்க முடியும். இந்த உலகின் எதார்த்தங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் கடவுளால் செயலாற்ற முடியும். இது கடவுள் மேலோங்கி நிற்கும் நிலையைக் காட்டுகிறது. பல நேரங்களில் நாம் நம் தகுதியற்ற நிலையைத் தான் முன்வைக்கின்றோம். 'நாம் பாவிகளோ, புழுக்களோ, மண்ணோ, சாம்பலோ அல்ல!' இறைவனின் பார்வையில் நாம் அவர் செயலாற்றும் நிலம். அவரால் நம்மில் கண்டிப்பாக பலன் தர வைக்க முடியும்.

அடுத்ததாக, மீட்பு என்பது இறைவன் நமக்குத் தரும் கொடை. நம் பேறுபலன்களாலோ, நல்ல செயல்களாலோ இறைவனின் அரசை உரிமையாக்கிக்கொள்ள முடியாது. அதே நேரத்தில், இறைவனின் செயல்பாடுகளுக்கு நாம் நம் மனம் என்னும் நிலத்தைத் தயார் செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, பறவை என்னும் அலகையும், சுட்டெரிக்கும் சூரியனும், நெருக்கும் முட்செடிகளும் எதிர்மறையாகத் தெரிந்தாலும், அவைகள் சில காலம் நீடிக்கக் கூடியவையே. வரப்போகும் மாட்சியோடு அது ஒப்பிடத் தகுதியற்றது (உரோ 8:18).

இறுதியாக, விதை என்பது நம் வாழ்க்கை. ஒவ்வொரு விதையும் ஒரு மணித்துளி. ஒவ்வொரு விதையும் நம் ஆற்றல். ஒவ்வொரு முறையும் நாம் மணித்துளியை, ஆற்றலை, வாழ்க்கையைச் செலவு செய்யும் போது அதை மற்றொன்றில் முதலீடு செய்கின்றோம். அந்த முதலீற்றுக்கேற்ற பலன் கிடைக்கிறதா? இலத்தின் மொழியில் 'கார்ப தியம்' (carpe diem) என்று ஒரு சொல்லாடல் உண்டு - அதாவது 'பொழுதைப் பிடித்துக்கொள்!' பொழுதும், நாளும் நழுவி ஓடக் கூடியது. அது ஒவ்வொன்றையும் நாம் முழுமையாகப் பிடித்துப் பயன்படுத்தி அனுபவிக்க வேண்டும்.

உவமையில் வரும் மூன்று எதிரிகளைப் பாருங்கள்: 1) பறவை - இத்தகைய எதிரி விதையை, பொழுதை முழுவதும் விழுங்கி விடுகிறது. விதை இருந்ததற்கான தடமே இல்லாமல் போய்விடுகிறது. 2) கதிரவனின் ஒளி - இந்த எதிரி விதையின் உருவைச் சிதைத்து விடுகிறான். 3) முட்செடிகள் - இந்த எதிரி நம்மை வளரச் செய்வது போலத் தெரிந்தாலும் உண்மையில் நம் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொள்கிறான். காலப்போக்கில் நம்மையே நெருக்கி விடுகிறான். வாழ்க்கையை நாம் முழுமையாக வாழவும் தடையாக இந்த குணங்கள் கொண்ட மூன்று எதிரிகள் இருப்பார்கள். கவனமாக இருந்தால் நாமும் பலன் கொடுக்க முடியும். நம் வாழ்வை எதில் முதலீடு செய்கிறோம்? பறவையிலா? கதிரவனின் ஒளியிலா? முட்செடியிலா?


1 comment:

  1. "விதைப்பவர் நல்ல நிலத்தில் விதைத்திருந்தால் எல்லா விதைகளுமே பலன் கொடுத்திருக்குமே"...படைத்தவனையே கேள்வி கேட்பதற்கு ஒரு தைரியமும் துணிச்சலும் வேண்டும்.இவை இரண்டுமே தங்களிடம் சிறிது மிகையாகவே இருப்பது இறைவனிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தையே காட்டுகிறது.நிலமாகிய நம்மைத் தாக்கக்கூடிய பறவை,கதிரவன்,முட்செடி இவைகளுக்கு அஞ்சுவதை விட்டு நாம் பிறருக்கு இவற்றில் எந்த எதிரியாக இருக்கிறோம் என்று யோசிப்போம்."இந்த உலகின் எதார்த்தங்கள் எப்படிப்பட்டவையாக இருப்பினும்,நாம் எப்படிப்பட்ட நிலமாக இருப்பினும் நம்மில் செயலாற்ற இறைவனால் முடியும்"....நம்பிக்கையூட்டும் விதைகளை விதைத்த தந்தைக்கு நன்றிகள்....

    ReplyDelete