Monday, May 19, 2014

நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்?

அக்காலத்தில், இயேசு ... 'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' ... 'நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்? ... 'நீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்' என்றார் பேதுரு. (காண். மத்தேயு 16:13-20)

நாம் கேட்கின்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகளுள் ஒன்று: 'நான் யார்?' இந்தக் கேள்வியைக் கொஞ்சம் விரிவுபடுத்தினால், 'எனக்கு நான் யார்?' 'என் நண்பர்களுக்கு நான் யார்?' 'என் குடும்பத்திற்கு நான் யார்?', 'என் சமூகத்திற்கு நான் யார்?', 'என் கடவுளுக்கு நான் யார்?' என்று கேட்டுக்கொண்டே போகலாம். இது வெறும் சுய அடையாளத்திற்கான கேள்வியாக மட்டுமல்லாமல், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவை, தொடர்பை அடையாளப்படுத்தும் கேள்வியாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கேள்வியை இன்று இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றார். இயேசுவின் இந்தக் கேள்வி தன் அடையாளத்தைத் தான் தெரிந்துகொள்வதற்காக என்று இல்லாமல், தன் அடையாளத்தை மற்றவர்கள் எப்படி காண்கிறார்கள்? என்ற தேடலின் விளைவாகத்தான் அமைகின்றது. இந்தக் கேள்வி இரண்டு படிநிலைகளைக் கொண்டிருக்கின்றது: 1) மக்கள் என்னை யாரெனச் சொல்கிறார்கள்?, 2) நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?

இங்கே சீடர்களின் மறுமொழி ஒட்டுமொத்த சமூகத்தின் அறிக்கையாகவும், பேதுருவின் மறுமொழி சீடர்களின் நம்பிக்கை அறிக்கையாகவும் அமைகின்றது.

இயேசுவின் இந்தக் கேள்வியும், சீடர்களின் பதிலும்; இன்று நமக்கு மூன்று சவால்களை முன்வைக்கின்றன:

1. நம்பிக்கைப் பயணம்
இறைவன் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது ஒரே இரவில் உதித்துவிடும் ஒன்றல்ல. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருக்கின்ற ஒரு பாடம். வாழ்வில் வரும் அனைத்து அனுபவங்களுமே ஏதோ ஒரு வகையில் இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டலாம், அல்லது தளர்த்திவிடலாம். சிறு வயதிலிருந்தே நாம் பெற்ற மறைக்கல்விப் போதனைகள், ஞாயிறு வகுப்புகள், மற்ற அருளடையாளப் பயிற்சி வகுப்புகள் வழியாக நாம் இறைவனைப் பற்றிய அடையாளத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் 'மற்றவர்கள்' இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்ற முதல் நிலைதான். இதிலிருந்து நாம் கடந்து செல்ல வேண்டியது 'இறைவன் எனக்கு யார்?' என்பதுதான். இதுவே நம்பிக்கைப் பயணம். மற்றவர்கள் சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு, வெறும் கோட்பாடுகள், இறையியல் என்று நின்றுவிடுவது சுட்டிக்காட்டு;ம் விரலை மட்டும் பிடித்துக்கொண்டு, சுடுபொருளாகிய நிலவை விட்டுவிடுதல் போலாகும்.

2. மார்டின் பியூபர் என்ற ஜெர்மானிய மெய்யியலார் மனிதர்கள் உறவுகொள்ளும் நிலையை இரண்டாகப் பிரிக்கின்றார்: 'நான் - அது' (ஐ – ஐவ), 'நான் - அவர்' (ஐ – வுhழர). இதில் முதல் நிலை உறவு வெறும் தகவல் பரிமாற்றம் சார்ந்ததாக மட்டும் இருப்பதாகவும், இரண்டாம் வகை உறவில்தான் ஆத்மார்த்த உணர்வுகள் பரிமாறப்படுவதாகவும் முன்வைக்கின்றார். இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவும் கூட இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வகை உறவில் நாம் இருக்கும்போது இறைவன் நமக்கு வெறும் உயிரற்ற அடையாளமாக, நம்பிக்கைப் கோட்பாடாம மட்டும் இருக்கலாம். தலைவலிக்கு நாம் எடுக்கும் அநாசின் போல, இறைவனை பிரச்சினைகளின் போது மட்டும் தேடலாம். உடைகளைகத் தூய்மையாக்கும் வாஷிங் மெஷின் போல, நம் உள்ளத்தைப் பாவத்திலிருந்து தூய்மையாக்க மட்டும் தேடலாம். குற்றம் செய்தால் தண்டிக்கும் போலீஸ் போலவும், எப்போதும் அன்பளிப்புகள் வழங்கும் 'சாந்தா கிளாஸ்' போலவும் கூட பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து 'நீ – நான்' என்று அன்பு உறவில் இணைந்திருக்கும் நிலையில் நாம் இருக்கின்றோமா? என்று கேட்க வேண்டியது இரண்டாவது சவால்.

3. பாறை. தன் மேல் நம்பிக்கை அறிக்கை செய்யும் பேதுருவின் மேல் தன் திருச்சபையைக் கட்டுவதாக இயேசு மொழிகின்றார். பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதி எந்தத் திருச்சபை உண்மையானது என்ற வாதத்தின் மையமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரும் பாறைதான். பேதுருவால் எப்படி இயேசுவை இறைமகன் என்று கண்டுகொள்ள முடிந்தது? நாம் இயேசுவை நெருக்கமாக அனுபவிப்பதற்கு என்ன தடையாக இருக்கின்றது? நாம் வாழும் இவ்வுலகம் இன்று கடவுளை வெறும் கோட்பாடாக மட்டுமே பார்க்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை வடிவமைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலரின் வாழ்வில் கடவுள் என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லாவற்றையும் புலன்களுக்குள் அடக்கி வைக்க நினைக்கும் மனமே இறைவனையும் அவ்வாறு அடக்கி வைக்க நினைக்கின்றது.

2 comments:

  1. பல சமயங்களில் நாம் அன்பு செய்பவரிடம் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைவிட அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை காட்டுகிறோம்.நாம் நினைப்பதுபோலவே அவர்களும் சொன்னால் மகிழ்வுதும்,மாற்றிச்சொன்னால் மறுகுவதும் இயல்பு.ஆனால் இறைவனிடம் நமக்குள்ள உறவு 'பாறை' போல் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறது வேதாகம்ம்.எனக்கு உங்களிடம் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்..1.நாம பாறையாக இருப்பதைவிட 'அவர்' பாறையாக இருந்தால்தானே நாம் சாய்ந்து கொள்ள ஒரு தூண் கிடைக்கும்!2.கடவுளை நம்பாத மக்கள் தங்கள் நெருக்கடியான நேரங்களில் யாரைத் தஞ்சம் அடைவார்கள்? பதில் கிடைக்குமா தந்தையே?!

    ReplyDelete
  2. நன்றி தந்தையே....சிறு குழந்தைகளின் கேள்விகள் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் விபரீதமானதல்ல. மாறாக வளர்ச்சியின் அறிகுறிகள். சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் கேட்டுடான் அப்பா அது என்னது? அது கழுகு. அதன் அப்பா,அம்மா எங்கே? அதன் வீடு எங்கே இருக்கிறது? அப்பா சிரித்தார். இக்கேள்விகள் அக்குழந்தையின் அறிவு வளர்ச்சியின் அடையாளங்கள். சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியும், காட்சியில் தோன்றிய ஆண்டவரிடம் சவுல் கேட்ட கேள்வியும் இறை அறிவு பெருவதற்கான முயற்சிகள். தே வேளையில் இக் கேள்விக்கான பதில்கள் கடமையையும் பொருப்பையும் அவர்கள் மேல் சுமத்துகின்றன. பவுலைப்போல கேள்வி கேட்கவும் புனித பேதுரு போல பதில் சொல்லவும் வேண்டும். வெறுமனே கேள்வி கேட்பவனாக மட்டுமிருந்தால், அது பொருப்பற்ற தன்மையின் அடையாளம்.

    நம் கேள்வியும் பதிலும் நம் மேல் பெரும் பொருப்பினைக் கொண்டு வருகிறது. அந்தக் கேள்விக்குப் பின் பவுலடியார் எத்தகு ஆர்வத்தோடு கிறிஸ்துவுக்காகப் பணியாற்றினார் எனப் பாருங்கள். பேதுரு தன் பதிலுக்கு ஏற்ற பணியாற்றியதையும் நாம் அறிவோம். பங்குகளில் பலர் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

    ReplyDelete