Saturday, September 9, 2023

அடுத்தவரை வெற்றிகொள்தல்!

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு

எசே 33:7-9. உரோ 13:8-10. மத் 19:15-20.

அடுத்தவரை வெற்றிகொள்தல்!

இன்றைய முதல் வாசகத்தில் எச்சரிக்கையும் பொறுப்புணர்வும் வழங்கப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலை இஸ்ரயேல் வீட்டாரின் காவலாளியாக நியமிக்கிறார். அவர் மனமாற்றத்தின் செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

எசேக்கியேல் இறைவாக்கினர் இங்கே 'காவலாளி' என அழைக்கப்படுகிறார். பண்டைக்கால மேற்கு ஆசியச் சமூகத்தில், காவலாளி என்பவர் நகரின் வாயிலருகே அல்லது கோபுரத்தின்மேல் நின்றுகொண்டு நகருக்கு வரவிருக்கிற ஆபத்துகள் பற்றி மக்களை எச்சரிப்பார். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் ஓர் ஆன்மிகக் காவலாளிபோல நின்றுகொண்டு மக்களை எச்சரித்து வழிநடத்த வேண்டும். கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினருக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுக்கிறார். அந்தப் பொறுப்பு என்னவெனில் இஸ்ரயேல் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி, அவர்களுடைய தீய வழியிலிருந்து அவர்களைத் திருப்புவது. மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் செய்தியை அவர்களுக்கு அறிவிப்பது காவலாளியின் பணி. எசேக்கியேல் இறைவாக்கினரும் அவ்வாறே பொறுப்புடன் செயல்பட வேண்டும். தீயோர் தம் வழியைவிட்டுத் திரும்புவதே இறைவாக்கினர் முன்மொழியும் அழைத்தல். இருந்தாலும் ஒவ்வொருவரும் அவருடைய தீயவழியை விட்டுவிடுவது அவருடைய கையில்தான் இருக்கிறது.

ஆக, பொறுப்புணர்வு என்னும் கருத்துருவை மையமாகக் கொண்டிருக்கிறது முதல் வாசகம். இறைவாக்கினர் எசேக்கியேலின் பொறுப்புணர்வு மக்களுக்குக் காவலாளியாக இருப்பதில் அடங்கியுள்ளது. ஒவ்வொருவருடைய மனமாற்றத்தின் பொறுப்புணர்வு தனிநபர் சார்ந்ததாக இருக்கிறது. எசேக்கியேல் அவருடைய இறைவாக்குப் பணியால் மக்களை வெற்றிகொள்ள வேண்டும். தொடக்கநூலில், 'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எனக் கேட்கிற காயின் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார் (காண். தொநூ 4:1-9). ஆனால், யோசேப்பு தன் சகோதரர்கள் அனைவருடைய வாழ்வுக்கும் பொறுப்பேற்கிறார் (காண். தொநூ 37-50).

புனித பவுல் உரோமையருக்கு எழுதும் தனது கடிதத்தின் நிறைவில், கிறிஸ்தவ வாழ்வு பற்றிய அறிவுரையைத் தருகின்றார். அதில், 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்றும், 'அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்கிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில், அன்பு செய்யும் ஒருவர் அனைத்துத் திருச்சட்டங்களையும் கடைப்பிடிப்பவர் ஆகிறார். இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான், புனித அகுஸ்தினாரும், 'அன்பு செய். பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். ஆக, நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு நாம் ஒருபோதும் தீங்கு நினைக்கவோ, தீங்கிழைக்கவோ செய்யாது. ஏனெனில், 'அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது ... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (காண். 1 கொரி 13:5,7). ஆக, அன்பு என்னும் சொல், வெறும் உணர்வு என்ற நிலையில் இல்லாமல், செயல்வடிவம் பெற பவுல் அழைக்கிறார். கட்டளைகளை மீறுதல் என்பது முதலில் அன்புப் பிறழ்வே என்பது பவுலின் புரிதல்

அன்பின் வழியாக ஒருவர் மற்றவரை வெற்றிகொள்தல் அவசியம்.

இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியாளரின் குழுமப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) தவறு செய்யும் நம்பிக்கையாளரின் குற்றம் கடிந்து அவரை மீண்டும் குழுமத்துக்குள் ஏற்றுக்கொள்தல். (ஆ) இறைவேண்டலில் மனம் ஒத்திருத்தல். (இ) இயேசுவின் திருமுன்னிலையின் இடமாகக் குழுமம் திகழ்தல்.

மனிதர்கள் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் சமூகம் தேவைப்படுகிறது. சமூகத்தால் அவர்கள் மாற்றம் பெறுகிறார்கள். சமூகத்தை அவர்கள் மாற்றுகிறார்கள். ஆனால், மனிதர்கள் குழுமமாக வாழும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. அவற்றுள் முதன்மையான ஒன்று ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பது. தீங்கு நினைப்பதும் தீங்கு செய்வதும் மனிதர்கள் செய்யும் முதற்குற்றமாக இருக்கிறது. ஒருவர் நமக்குத் தீங்கு நினைத்தால் அல்லது தீங்கு செய்தால் அவரை நம் உறவு வட்டத்திலிருந்து தள்ளி வைக்க விரும்புகிறோம். ஆனால், இயேசுவோ தீங்கு செய்கிற நபரை வெற்றிகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.  நம்பிக்கையாளர்களின் குழுமத்தில் ஏற்படும் உறவு உரசல்களை எப்படி சரி செய்வது என்பதை இயேசு எடுத்துரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். இது மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) ஒற்றைக்கு ஒற்றை சந்தித்து உரையாடுவது. (ஆ) ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிச் சென்று உரையாடுவது. (இ) திருச்சபையிடம் சொல்வது. இந்த மூன்று படிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணிகள் மூன்று: (அ) அடுத்தவரை இழப்பது அல்ல, மாறாக, வெற்றி கொள்வதே நம்  முதன்மையான இலக்காக இருக்க வேண்டும், (ஆ) நான்தான் ஒப்புரவுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். (இ) தனிமனித மாண்பும் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

நாம் இறைவேண்டல் செய்யும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தில் நம் தேவைகளைக் கடவுளிடம் எடுத்துரைக்கிறோம். ஆனால், தனிநபர் வாழ்வைத் தாண்டி குழுமத்தின் வழியாகவும் நாம் இறைவேண்டல் செய்ய முடியும் என்பது இயேசுவின் பாடம். இருவர் இந்த உலகில் மனம் ஒத்துக் கடவுளிடம் கேட்டாலே அது அவர்களுக்கு அருளப்படும்.

மேலும், மனிதர்கள் தங்கள் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒருவர் மற்றவரோடு சமரசம் செய்து வாழ்ந்தால் அங்கே இறைவன் பிரசன்னமாக இருக்கிறார். 

ஆக, குழும வாழ்வில் எவரையும் நாம் விட்டுவிடல் ஆகாது. அனைவரையும் உள்ளடக்கிய குழுமத்தை உருவாக்க வேண்டுமெனில், அனைவரையும் குறிப்பாகத் தீங்கிழைப்பவர்களைக் கடிந்துரைத்து அவர்களை வெற்றிகொள்தல் அவசியம்.

இந்த நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) காவலாளி என்னும் நம் பெயர்

நாம் ஒவ்வொருவரும் 'காவலாளியாக' இருக்கிறோம் - குடும்பத்தில் மற்றும் குழும வாழ்வில். காவலாளியாக இருக்கிற நபர் இயல்பாகவே மற்றவர்கள்மேல் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்டவராக இருக்கிறார். காவலாளி என்னும் நிலை சமூக மதிப்புக்குரிய நிலை அல்ல. மாறாக, கடமைகள் நிறைந்த நிலை. காவலாளியாக இருக்கிற நபர் அனைவரையும் எதிர்கொள்கிறார். எந்தவொரு தீங்கையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

(ஆ) அன்பே திருச்சட்டத்தின் நிறைவு

அன்பு என்பது நமக்குள் எழுகிற அல்லது ஒருவர் மற்றவர் உறவுநிலையில் எழுகிற ஓர் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத செயல்பாடு. மனிதர்களாகிய நம்மிடம் எழும் பொறாமை மற்றும் போட்டி மனப்பான்மை மற்றவர்களுக்குத் தீங்கிழைக்குமாறு நம்மைத் தூண்டுகின்றன. மற்றவர்களுக்குத் தீமை நினைப்பதன் வழியாக அல்லது செய்வதின் வழியாக அவர்களுடைய வளர்ச்சியை அல்லது மேன்மையை நாம் சிதைக்க நினைக்கிறோம். ஆனால், அனைத்தையும் அன்பினால் எதிர்கொள்பவர் அனைவரையும் வெற்றிகொள்கிறார்.

(இ) குழுமத்தின் அவசியம்

இன்றைய உலகம் நம்மைத் தனிநபர்களாக வாழுமாறு அறிவுறுத்துகிறது. சிறுநுகர் வாழ்வு என்பது இன்று உறவுநிலைகளிலும் புகுத்தப்படுகிறது. குறைவான நபர்களிடம் உறவாடி, நிறைவாகத் தனிமை போற்றுவது நலம் என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால், குழுமம் என்பது நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டுகிற ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியின் துணை கொண்டு நாம் நம்மைத் திருத்திக்கொள்ள இயலும். மேலும், குழும வாழ்வே கடவுளின் பிரசன்னத்தை நம் நடுவில் கொண்டுவருகிறது.


No comments:

Post a Comment