வியாழன், 21 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் வியாழன்
எபே 4:1-7, 11-13. மத் 9:9-13.
புனித மத்தேயு
இன்று திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர் இவர்.
இந்திய மெய்யியலில், 'மார்க்கம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, 'வழி,' 'மோட்சம்' அல்லது 'பேறுபெற்ற நிலையை அடைவதற்கான வழி.' 'ஞான மார்க்கம்' ('அறிவின் வழி மோட்சம்'), 'கர்ம மார்க்கம்' ('செயல் வழி மோட்சம்'), 'பக்தி மார்க்கம்' ('பக்தி அல்லது வழிபாட்டு வழி மோட்சம்). இதன் பின்புலத்தில், மத்தேயு நற்செய்தி ஞானமார்க்கம் என்றும், மாற்கு நற்செய்தி கர்மமார்க்கம் என்றும், லூக்கா நற்செய்தி பக்திமார்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.
'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' (மத் 13:52) என்று இயேசு கூறுவதாக மத்தேயு பதிவு செய்கின்றார்.
இந்தப் பதிவு நமக்கு இரு விடயங்களைக் கூறுகிறது: ஒன்று, 'விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட' அல்லது 'அறிந்துகொள்ளப்பட' வேண்டியது. ஆக, இது அறிவு அல்லது ஞானம் சார்ந்தது. எல்லாரும் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். இரண்டு, இந்தப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரைப் பற்றியே கூறுகின்றது. ஏனெனில், சுங்கச் சாவடியில் வரி வசூல் செய்துகொண்டிருந்த மத்தேயு, விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்டவுடன், தன் இயேசு அனுபவத்திலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வெளியே கொண்டு வந்து நற்செய்தியாகப் பதிவு செய்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-7,11-13), புனித பவுல், 'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுரை கூறுகின்றார். மத்தேயு தான் பெற்ற திருத்தூதர் என்ற அழைப்புக்கு ஏற்ப மூன்று நிலைகளில் வாழ்கின்றார்:
ஒன்று, பழையதை விடுத்துப் புதியதைப் பற்றிக்கொள்கின்றார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' என்கிறார் பவுல் (காண். 1 கொரி 13:10). நிறைவான இயேசு தனக்குக் கிடைத்தவுடன் அரைகுறையான தன் வரிவசூலிப்பவர் பணியை விட்டுவிடுகின்றார்.
இரண்டு, 'இதுதான் நான்!' எனத் துணிச்சலுடன் இயேசுவின்முன் எடுத்துச் சொல்கின்றார். தான் அழைக்கப்பட்டவுடன் முதல் வேளையாக இயேசுவைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கின்றார் மத்தேயு. உணவு என்பது உறவின் அடையாளம். அந்த உறவுத்தளத்தில், மற்றவர்கள் தன்மேல் பதித்த முத்திரைகள் மற்றும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல், தான் யார் என்றும், தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்றும் இயேசுவுக்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு. கடவுளுக்கே விருந்து வைத்த சில விவிலியக் கதைமாந்தர்களில் இவரும் ஒருவர். அடுத்தவருடன் தன் உணவைப் பகிர்ந்துகொள்ள விழைகின்ற பக்குவமே மேன்மையானது. ஏனெனில், பசி என்ற அடிப்படை உணர்வு நம்மை பதுக்கிக்கொள்ளவே தூண்டுகிறது.
மூன்று, 'கடவுள் நம்மோடு' என்னும் நற்செய்தி. மத்தேயு நற்செய்தி நமக்குத் தந்த மாபெரும் செய்தி, 'கடவுள் நம்மோடு' என்பதுதான். மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை. 'உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்' என்று நம்மோடு தங்கிவிடுகின்றார். இந்த மாபெரும் எண்ணத்திற்குச் சொந்தமானவர் மத்தேயு. கடவுளை மனுக்குலம் சிக்கெனப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் மத்தேயு.
மத்தேயு நற்செய்தியில் நாம் இரசிக்க வேண்டிய இன்னும் பல கூறுகள் உள்ளன: இயேசுவின் தலைமுறை அட்டவணை, திருக்குடும்பத்தின் ஒப்பற்ற தலைவர் யோசேப்பு, அவருக்கு மத்தேயு வழங்கிய 'நேர்மையாளர்' என்னும் அழகிய தலைப்பு, கீழ்த்திசை ஞானியர், மலைப்பொழிவு, பேதுரு கடலில் நடத்தல், யூதாசின் வருத்தம், பிலாத்துவின் மனைவியின் கனவு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு, திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு, இறுதித் தீர்ப்பு.
இன்றைய நாளில் நாம் மத்தேயு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.
'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரல் கேட்டவுடன், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார். கணக்குப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றோ, நாளை பார்க்கலாம் என்றோ அவர் சொல்லவில்லை. அவர் தயாராக இருந்தார். எப்போதும்.
'கடவுளின் கொடை' எனப் பொருள்படும் 'மத்தேயு' தன்னையே கடவுளுக்குக் கொடையாகக் கொடுத்துவிடுகின்றார். வெறும் வரவுக் கணக்கை எழுதிக்கொண்டிருந்தவர், மீட்பின் வரவுக் கணக்கை நற்செய்தியாக எழுதி இன்றும் நம்மோடு வாழ்கின்றார்.
No comments:
Post a Comment