வெள்ளி, 15 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் வெள்ளி
1 திமொ 1:1-2,12-14. யோவா 19:25-27.
மரியாவின் ஏழு துயரங்கள்
இன்று புனித கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நினைவுகூர்கின்றோம். கிபி 1232ஆம் ஆண்டில் தொஸ்கானா பகுதியின் ஏழு இளவல்கள் ('மரியின் ஊழியர்கள்') தங்களுடைய 'மரியின் ஊழியர் சபையை' தோற்றுவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மரியின் ஏழு துயரங்களை நினைவுகூர்ந்தவர்களாக, சிலுவையின் அடியில் நிற்கின்ற அன்னை கன்னி மரியாவைத் தங்களுடைய பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டனர். ஏழு துயரங்களின் செபமாலை, ஏழு துயரங்களின் உத்தரியம், துயர்மிகு அல்லது வியாகுல அன்னைக்கான நவநாள் போன்ற பக்தி முயற்சிகளையும் இவர்கள் தோற்றுவித்தனர்.
1913ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது, திருச்சிலுவை மகிமையின் திருவிழாவுக்கு அடுத்த நாள் கொண்டாடுமாறு வழிபாட்டு ஆண்டை நெறிப்படுத்தினார்.
துன்பம் அல்லது துயரம் என்ற உணர்வு பற்றிய நம் புரிதல் மூன்று நிலைகளில் அமையலாம்: (அ) ஆன்மீகமயமாக்கல் - அதாவது, நான் இன்று துன்புற்றால், கடவுள் அத்துன்பத்திற்கு தகுந்த இன்பத்தைத் தருவார் என நினைப்பது. (ஆ) அறநெறிமயமாக்கல் - இந்தப் புரிதலில் என் துன்பம் என்பது எனது பாவம் அல்லது குற்றத்திற்கான தண்டனை என நான் நினைப்பேன். (இ) எதார்த்த புரிதல் - அதாவது, இன்பத்தைப் போன்று துன்பம் என்பது ஒரு வகையான இயல்பான உணர்வு. அதற்கு மேல் எதுவும் இல்லை.
துன்பம் நமக்கு ஏன் வருகிறது? (அ) நம் தெரிவுகளால் - அதாவது, நான் செய்த தவறான தெரிவுகள் அல்லது நான் எடுத்த தவறான முடிவுகள் எனக்குத் துன்பம் தரலாம். எடுத்துக்காட்டாக, காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறது. மருத்துவரிடம் செல்லாமல் எனக்கு நானே மருந்து எடுத்துக்கொள்கிறேன். அது என் நிலையை இன்னும் கடினமாக்குகிறது. இத்துன்பம் என் தெரிவால் வந்தது. (ஆ) நம் இருத்தல்நிலையால் - அதாவது, நான் தமிழ் மொழி பேசுகிறேன் என்பதற்காக, அல்லது நான் தமிழன் என்பதற்காக என் பக்கத்து மாநிலம் எனக்குத் தண்ணீர் தராமல் எனக்குத் துன்பம் தருவது. தமிழனாய்ப் பிறந்தது என் இருத்தல்நிலையால் வந்தது. இருந்தாலும், அதற்காக நான் துன்புற நேருகிறது. (இ) சமூகச் சூழ்நிலையால் - தவறான மற்றும் தன்னலமான அரசியல், பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் எனக்குத் துன்பம் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நான் ஓர் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயி. அரிசிக்கான கொள்முதல் விலையை அரசு குறைத்ததால் நான் துன்பத்திற்கு ஆளாகிறேன். (ஈ) இயற்கைப் பேரழிவுகள் - தொற்றுநோய், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் துன்பம். (உ) மனித பேரழிவுகள் - போர், அணுஆயுதம், தன்னலம் போன்ற காரணிகளால் வரும் துன்பம். மற்றும் (ஊ) அப்பாவிகளின் துன்பம் - இறப்பு அல்லது இழப்பால் வரும் துன்பம். திருட்டு, கொள்ளை நோய் போன்றவை நம் இல்லங்களில் ஏற்படுத்தும் துன்பம். நாம் நல்லதே செய்தாலும் நமக்குத் துன்பம் வருவது.
'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிறார் புத்தர். மேலும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியும் இருக்கிறது என்கிறார் அவர்.
ஆனால், வலி இல்லாமல் வழி இல்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.
விவிலியத்தின் ஞானநூல்கள் துன்பம் வழியாகவே ஒருவர் நேர்மையான வாழ்வுக்குப் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொல்கின்றன. இயேசுவே தான் இறைமகனாக இருந்தும் தன் துன்பத்தின் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கின்றார் (காண். எபி 5).
இன்று துன்பத்துக்கான நம் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் உள்ளது:
(அ) துன்பத்தோடு போராடு - அதாவது, துன்பம் வேண்டாம் என நினைத்து அதைத் தவிர்க்கும் விதத்தில் அதனோடு போராடுவது. நம் தலையில் தோன்றும் வெள்ளை முடி என்பது இயற்கை நிகழ்வு. ஆனால், 'வெள்ளை முடியோடு போராடுங்கள்!' எனச் சொல்கிறது இந்துலேகா. தாய்மைப்பேறின்மை, வயது மூப்பு போன்றவை இன்று நோய்களாகப் பார்க்கப்பட்டு, இத்துன்பங்கள் அகல்வதற்கு மருத்துவ உலகம் நம்மையும் போராடச் செய்கிறது.
(ஆ) துன்பத்திலிருந்து தப்பி ஓடு - அதாவது, நம் துன்பத்தை நாம் மறப்பதற்கு இன்று நிறைய மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மது, போதை, டிவி சீரியல்கள், செய்திகள், காணொளிகள், புத்தகங்கள், பாடல்கள் என நாம் எதையாவது பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க வேண்டும் என உலகம் கற்பிக்கிறது. இப்படியாக, துன்பத்திலிருந்து நம்மைத் தப்பி ஓடச் சொல்கிறது. ஆனால், இது தற்காலிகமான ஓடுதலாக மட்டுமே இருக்க முடியும்.
(இ) துன்பத்தை நேருக்கு நேர் எதிர்கொள் - இதுதான், இயல்பான பதிலிறுப்பு. இதுவே, உண்மையான, நலமான பதிலிறுப்பு. துன்பம் என்பது நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஒரு இன்றியமையாத பகுதி என நினைத்து, நம் துன்பங்களை எதிர்கொள்வது.
மரியாளின் ஏழு துயர நிகழ்வுகள் ஏழு வகையான துன்ப உணர்வுகளை அவருள் எழுப்புகின்றன:
(1) சிமியோனின் இறைவாக்கு - காத்திருத்தல் என்னும் துன்பம்
(2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல் - திக்கற்ற நிலை என்னும் துன்பம்
(3) இயேசு ஆலயத்தில் காணாமற்போதல் - இழப்பு என்னும் துன்பம்
(4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல் - கையறுநிலை என்னும் துன்பம்
(5) இயேசுவின் சிலுவை இறப்பு - அவமானம் என்னும் துன்பம்
(6) இறந்த இயேசுவை மடியில் ஏந்துதல் - பலிகடா ஆதல் என்னும் துன்பம்
(7) இயேசுவின் அடக்கம் - வெறுமை என்னும் துன்பம்
மேற்காணும் ஏழு துன்பங்களும் நாமும் அனுபவிக்கும் துன்பங்களே.
'துன்பம் மறைந்து போகும், அழகு என்றும் நிலைக்கும்!'
எனவே, துன்பங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அதை நோக்கிப் புன்முறுவல் பூத்தல் நலம்.
ஏனெனில், என் துன்பத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்றுமுறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார் (காண். 2 கொரி 12:9).
இத்திருவிழா நமக்குத் தருகின்ற செய்தி என்ன?
(அ) துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம்
பாவத்தின் வழியாகவே துன்பம் வருகின்றது என்று நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆனால், பாவம் அறியாத மரியா துன்பம் ஏற்கின்றார். ஆன்மிக நிலையில் அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்றாலும், மனித வாழ்வின் எதார்த்த நிலையில் அவர் துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆக, துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம். இயேசுவின் துன்பம் நம் பாவங்களுக்காக என்று பல நேரங்களில் நாம் இறையியலாக்கம் செய்கின்றோம். ஆனால், மரியாவின் துன்பங்களை நாம் அப்படி இறையியலாக்கம் செய்வதில்லை. மரியா துன்புற்றார். அவ்வளவுதான்! அதுதான் எதார்த்தம். பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக துன்பங்கள் அனுபவிப்பதாக நாம் சொல்வது அனைத்தும் தவறு. நாம் யாரும் யாருக்காகவும் துன்பங்கள் அனுபவிக்க முடியாது. நாம் துன்பங்கள் அனுபவிக்கிறோம்! அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு புரிதல் வந்தால்தான் நாம் துன்பத்திற்கு ஆன்மிக அல்லது அறநெறிச்சாயம் பூசுவதை நிறுத்துவோம்.
(ஆ) துன்பம் ஒரு மேலான உணர்வு
'சிரிப்பை விடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 7:3). துன்புறுதல் என்பது செயல். துயரம் அல்லது துன்பம் என்பது ஓர் உணர்வு. எடுத்துக்காட்டாக, நான் வழியில் செல்லும்போது கால் பிசகிவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது நான் துன்புறுகிறேன். கால் சரியாகிவிட்டால் துன்பம் மறைந்துவிடுகின்றது. ஆக, துன்பம் அல்லது துயரம் என்பது துன்புறுதல் என்னும் செயல் இருக்கும் வரை இருக்கின்றது. என் அப்பா இறந்தபோது நான் துன்பமுற்றேன். ஆனால், அவரின் இழப்பு அப்படியே ஒரு துயரமாக என் மனத்தில் படிந்துவிடுகிறது. துன்பமுறுதல் என்னும் செயல் ஒரு நாளில் முடிந்தாலும் அது உணர்வாக இன்றுவரை நீடிக்கிறது. மரியாவின் துயரம் நமக்கு இத்தகைய உணர்வைத்தான் சொல்கிறது. துயரம் என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வு உள்ளத்தைப் பண்படுத்தும் அல்லது உழும். அதாவது, உழும்போது நிலத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நிலம் புதிய காற்றைச் சுவாசிக்கின்றது. விதையையும், உரத்தையும், நீரையும் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறது. நாம் துன்புறும்போதும் உள்ளத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நாம் புதிய அனுபவங்களை உள் வாங்குகிறோம். அந்தக் கீறல் வழியாகவே நாம் நம்மையே முழுமையாகப் பார்க்கின்றோம். ஆதாம்-ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோர் இன்பத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே, ஆதாம் தன் மனைவி ஏவாளுக்கு, 'தாய்' என்ற பெயரைக் கொடுக்கின்றார். அதாவது, காயினைப் பெற்றெடுக்கும் முன்னரே ஏவாள் 'தாய்' என்னும் பெயர் பெறுகிறாள். துன்பம் ஏற்கும் எவரும் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்கின்றனர்.
(இ) துன்பம் என்பது நினைவு
நம் நினைவுகளே துன்பமாக மாறுகின்றன என்று இந்திய மெய்யியல் கற்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நம் சுண்டு விரல். இது என்றாவது நம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், கதவுக்கு இடையில் அதைக் கொடுத்து நாம் நசுக்கிவிட்டால், அது எந்நேரமும் நம் நினைவில் நிற்கிறது. ஆக, துன்பம் என்ற உணர்வு மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. நான் அணியும் செருப்பு என் காலுடன் பொருந்திவிட்டால் அதை நான் நினைப்பதே இல்லை. அது பொருந்தவில்லை என்றால் அது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது எனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக, பொருந்துகின்ற ஒன்று வலி தருவதில்லை. வலி தராத ஒன்று நம் நினைவில் நிற்பதில்லை. துயரப்படுகிறவர்கள் மது அருந்தக் காரணம் என்ன? அல்லது வாழ்வில் இழப்பை அனுபவிப்பவர்கள் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லக் காரணம் என்ன? தங்களுடைய நினைவுகளை மறக்கவும் மாற்றவும்தான்.
அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நாம் வெறுமனே போற்றிப் புகழ்ந்து அவரை அந்நியப்படுத்திவிட வேண்டாம். அவை வெறும் மறையுரைக் கருத்துகள் அல்ல. மாறாக, அவர்கள் நகர்ந்து வந்த வாழ்க்கைப் பாதைகள்.
நம் உள்ளத்தை, உடலை, நினைவை பல வாள்கள் அன்றாடம் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டும், சிலவற்றுக்கு மருந்திட்டும், சில வாள்களை அப்படியே தூக்கிக்கொண்டும், சில வாள்களைப் பிடுங்கும்போது பாதி வாள் உடைந்தும் பாதி வாள் இன்னும் நம் உடலில் மாட்டிக்கொண்டும், காயத்தின் ரணங்களோடு நாம் நடந்துகொண்டே இருக்கின்றோம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடிய எதார்த்தங்கள். ஆனால், துன்பமே நீடித்த, உண்மையான எதார்;த்தம். எனக்கு ருசியாக இருந்து எனக்கு இன்பம் தரும் உணவு அஜீரணமாக மாறினால் துன்பம் வந்துவிடுகிறது. பசி என்னும் துன்பம் நான் உணவு உண்டவுடன் மறைந்துவிடுகிறது.
இன்பம் தருகின்ற ஒன்று கண்டிப்பாகத் துன்பமாக மாறும்.
துன்பம் தருகின்ற ஒன்று துன்பமாகவே நீடிக்கிறது. இன்பத்திற்குப் பின்னரும்!
No comments:
Post a Comment