புதன், 6 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் புதன்
கொலோ 1:1-8. லூக் 4:38-44.
நம்பிக்கையும் அன்பும்
1. புனித பவுல் கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலின் முதல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது முதல் வாசகம். 'கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்;கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம்' என்கிறார் பவுல். இங்கே, நம்பிக்கை மற்றும் அன்பு என்னும் இரண்டு சொற்கள் முதன்மையானவை. கிறிஸ்து இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கை நம் வாழ்வின் அடித்தளமாக இருக்கும்போது, நாம் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும்.
2. நற்செய்தி வாசகத்தில், இயேசு பேதுருவின் மாமியாருக்கும் ஊராருக்கும் நலம் தருகிறார். தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கிறார். தம் தந்தையின்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருந்து, மற்றவர்களுக்கு அன்புப் பணி செய்தார் இயேசு.
3. நம் வாழ்வின் பயணம் ஒரே நேரத்தில் பின்நோக்கியும் முன்நோக்கியும் இருக்க வேண்டும். பின்நோக்கிப் பார்த்து, நம் நம்பிக்கையை அன்றாடம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். முன்நோக்கிப் பார்த்து நம் அன்புச் செயல்களை விரித்துக்கொண்டே செல்ல வேண்டும். இதை எப்படிச் செய்வது? தனித்திருத்தல் வழியாக. இயேசு தம் தந்தையின் திருமுன்னிலையில் இறைவேண்டல் செய்து தனித்திருக்கிறார். ஆக, இறைவேண்டல் என்பது இறைவனிடம் நம் விண்ணப்பங்களை எழுப்பும் தளம் மட்டும் அல்ல. மாறாக, நம்மையே கண்ணாடிமுன் நிற்க வைத்துப் பார்க்கிற நிலை.
No comments:
Post a Comment