ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு
எசா 55:6-9. பிலி 1:20-24, 27. மத் 20:1-16.
கண்ணோட்ட மாற்றம்
'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல' என இறைவாக்கினர் எசாயா வழியாக அறிவிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எண்ணங்களும் வழிமுறைகளும் மாற்றம் பெற்றால் செயல்பாடுகளில் மாற்றம் வரும். இன்றைய முதல் வாசகப் பகுதி இறைவாக்கினர் எசாயா நூலின் இரண்டாம் பகுதியின் இறுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்த்தப் போகும் வல்ல செயல்கள் மற்றும் மறுவாழ்வுக்கு முன்னுரையாக அமைகிறது இந்தப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழிவுக்குக் காரணம் தாங்கள் செய்த பாவங்களே என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், ஆண்டவராகிய கடவுள் தங்கள் குற்றங்களுக்கு ஏற்ப நடத்துவார் என்று அச்சம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, 'ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்' எனச் சொல்வதுடன், ஆண்டவருடைய எண்ணங்களும் மனித எண்ணங்களும், அவருடைய வழிமுறைகளும் நம் வழிமுறைகளும் முற்றிலும் மாறுபட்டவை என உரைக்கிறார்.
நம் கண்ணோட்டம் மாற்றம் பெறும்போது இறைவனின் இரக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பற்றிய உவமை ஒன்றை முன்மொழிகிறார். இது உவமையாக இருந்தாலும், மத்தேயு நற்செய்தியின் உவமைப் பகுதியில் இல்லாமல், அதற்கு வெளியே திருஅவைப் பொழிவில் உள்ளது.
மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சினையை இந்த உவமையின் வழியாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் நம்பிக்கையாளர்களாக மாறியவர்கள் உயர்ந்தவர்கள், தாமதமாக மாறியவர்கள் தாழ்ந்தவர்கள், அல்லது முதலில் வந்த யூதர்கள் சிறந்தவர்கள், தாமதமாக வந்த புறவினத்தார்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணம் நிலவிய சூழலில், அனைவரும் ஒன்றே, அனைவருக்கும் வழங்கப்படும் பரிசு ஒன்றே என உரைக்கிறது இந்த உவமை. மேலும், கடவுள் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் கொண்டவராக இருக்கிறார் என்பதையும் இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.
திராட்சைத் தோட்ட வேலையாள்கள் - முதலில் வந்தவர்கள் மற்றும் இறுதியில் வந்தவர்கள், திராட்சைத் தோட்ட மேற்பார்வையாளர் எனப் பல கதைமாந்தர்கள் உவமையில் இருந்தாலும், முதன்மையான கதைமாந்தர் திராட்சைத் தோட்ட உரிமையாளரே. இவர் நிலக்கிழார் (20:1), ஆண்டவர் (20:8), தலைவர் (20:11) என்னும் மூன்று பெயர்களால் அழைக்கப்பெறுகிறார்.
திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்துவதற்காக ஆள்களைத் தேடிச் செல்கிறார் தலைவர். எத்தகைய வேலை என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. திராட்சைத் தோட்டத்தில் மூன்று வகை வேலைகளுக்கு மட்டுமே அதிக நபர்கள் தேவைப்பட்டனர்: திராட்சைச் செடி நடுவதற்கு, களைகள் பிடுங்கித் தோட்டத்தைப் பரமாரிப்பதற்கு, திராட்சைக் கனிகள் பறிப்பதற்கு. இந்த மூன்று வேலைகளுமே ஒரே நாளுக்குள் முடிக்கப்பட வேண்டியவை. ஆக, நிறைய வேலையாள்கள் இவருக்குத் தேவைப்படுகிறார்கள். அதிகாலையிலேயே வேலையாள்களைத் தேடி இவர் புறப்படுகிறார். ஏனெனில், நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள் சீக்கிரமாகவே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர். இன்று நம் ஊர்களில் இருப்பது போல, நகரின் பொதுவிடத்தில் ஆள்கள் ஒன்றாகக் கூடி நிற்பர். அவர்கள் வேலைக்கான அழைப்பு பெறுவர்.
காலை ஆறு மணி, ஒன்பது மணி, நண்பகல், மாலை மூன்று மணி, ஐந்து மணி என ஐந்து முறை வேலையாள்களைத் தேடிச் செல்கிறார். மாலை ஆறு மணிக்கு அனைவருக்கும் கூலி தரப்படுகிறது. ஆக, முதலில் வந்தவர்கள் 12 மணி நேரங்களும், இரண்டாவது வந்தவர்கள் 9 மணி நேரங்களும், மூன்றாவது வந்தவர்கள் 6 மணி நேரங்களும், நான்காவது வந்தவர்கள் 3 மணி நேரங்களும், ஐந்தாவது வந்தவர்கள் 1 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். வேலை செய்த நேரம் வேறுபட்டதாக இருந்தாலும் வழங்கப்படும் ஊதியம் அனைவருக்கும் சமமாக (ஒரு தெனாரியம்) இருக்கிறது. இது வேலைக்காரர்களுக்கும் வாசகர்களாகிய நமக்கும் நெருடலை ஏற்படுத்துகிறது. ஆனால், எந்தவொரு நெருடலும் தலைவருக்கு இல்லை. தாம் செய்வதை அறிந்தவராகவும், எந்தக் கட்டாயத்திற்கும் ஆள்படாமல் அதை நிறைவேற்றுபவராகவும் அவர் இருக்கிறார்.
'கடைசியில் வந்தவர் தொடங்கி முதல் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்று வரிசையை மாற்றுகிறார் தலைவர். முதலில் வந்தவர் முதலில் வெளியேறுவர் என்பதை மாற்றி, கடைசியில் வந்தவர் முதலில் என மாற்றுகிற தலைவர், அனைவருக்கும் ஒரே ஊதியம் என்றும் வரையறுக்கிறார்.
முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் எனத் தங்களுக்குள் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு தெனாரியம் மட்டுமே வழங்கப்பட்டதால் முணுமுணுக்கிறார்கள். இறுதியில் வந்தவர்களுக்குத் தலைவர் காட்டிய இரக்கம் தங்களுக்கும் இருக்கும் என அவர்கள் நினைத்தபோது, 'நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?' என்று நீதியை அவர்களுக்குக் காட்டிப் புரட்டிப்போடுகிறார் தலைவர். உவமையின் முதல் பகுதியில் வெளியே ஒவ்வொரு முறை நடந்துசென்ற தலைவர், இரண்டாவது பகுதியில் அவர் ஒரே இடத்தில் நிற்க வேலையாள்கள் அவரிடம் வரிசையாக வருகிறார்கள்.
தம்மை நோக்கி முணுமுணுத்தவர்களைத் 'தோழரே' என அழைக்கிறார் தலைவர். மத்தேயு நற்செய்தியில் 'தோழரே' என்னும் சொல் மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமண விருந்து எடுத்துக்காட்டில் திருமண உடை அணிந்து வராத நபரும் (22:12), இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நிகழ்வில் யூதாசு இஸ்காரியோத்தும் (26:49), 'தோழரே' என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, தலைவருக்குத் தோழராக இருக்க வேண்டியவர்கள் தோழராக இல்லை என்பதே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
முதலில் வந்தவர்கள் முணுமுணுப்பதற்கான காரணம் என்ன?
அவர்கள் தங்கள் கண்முன் நின்ற தலைவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் கைகளிலிருந்த தெனாரியத்தைப் பார்த்தார்கள். தங்கள் தலைவர் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் காட்டக் கூடியவர் என்பதை மறந்துவிட்டார்கள்.
தலைவரைப் பொருத்தவரையில், தலைவருக்கு அனைத்து வேலையாள்களும் முதன்மையானவர்களாகத் தெரிகிறார்கள். அனைவருடைய தேவையும் ஒன்று என அறிந்தவராக இருக்கிறார் தலைவர்.
பணியாளரின் கண்ணோட்டம் விடுத்து, தலைவரின் கண்ணோட்டம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
இக்கேள்விக்கான விடையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தருகிறார் பவுல். தன் வாழ்வில் இருத்தலுக்கும் இறப்புக்குமான இழுபறி நிலையை உணர்கிற பவுல், இவை இரண்டுக்கும் இடையே தாம் படும் துன்பத்தை உணர்ந்தவராக, 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே' என்கிறார். அதாவது, தம் இருத்தலுக்கும் இறப்புக்கும் பொருள் தருபவர் கிறிஸ்துவே என்பது அவருடைய புரிதல்.
ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ளும்போது நம் கண்ணோட்டம் மாறுகிறது.
தெனாரியத்தை சற்றே ஒதுக்கிவிட்டு, தலைவரையும் மற்ற வேலையாள்களையும் நாம் பார்க்கத் தொடங்குகிறோம். வாழ்க்கை அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை என்பதை உணரத் தொடங்குகிறோம். பொறுமை காக்கப் பழகுகிறோம். முணுமுணுத்தலால் ஒரு பயனும் இல்லை என்பதால் புன்னகை பூக்கத் தொடங்குகிறோம். வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிக்கொள்ளப் பழகுகிறோம். கணிதத்தின் லாஜிக் அல்ல கடவுளின் மேஜிக்கே நம் வாழ்வை மாற்றுகிறது என உணரத் தொடங்குகிறோம்.
No comments:
Post a Comment