Monday, September 11, 2023

திருத்தூதர் குழுமம்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 12 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் செவ்வாய்

கொலோ 2:6-15. லூக் 6:12-19.

திருத்தூதர் குழுமம்

இயேசுவுடைய பணிவாழ்வின் முதன்மையான நிகழ்வு ஒன்று இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்துள்ளது. 

இயேசு பன்னிருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்குத் திருத்தூதர்கள் எனப் பெயரிடுகிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் இயேசு போதித்துக்கொண்டும் வல்ல செயல்கள் ஆற்றிக்கொண்டும் இருக்கிறார். அவருடைய எதிரிகள் அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யத் தொடங்குகிறார்கள். இந்த நேரத்தில் தம் குழுமத்தை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தகிறார் இயேசு.

திருத்தூதர்களைத் தெரிவு செய்யுமுன் இரவெல்லாம் மலைமேல் தனித்திருந்து இறைவேண்டல் செய்கிறார் இயேசு. லூக்கா நற்செய்தி இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இயேசு தம் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் இறைவேண்டல் செய்பவராகக் காட்டப்படுவதுதான். முக்கியமான முடிவுகளைத் தேர்ந்து தெளிவதற்கு இறைவேண்டல் தகுந்த தளமாக அமைகிறது. 

இயேசு பன்னிருவரைத் தெரிவு செய்கிறார். '12' என்ற எண் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலங்களைக் குறித்துக்காட்டியது. இந்த எண் வழியாக, தம் பணிக்கும் இஸ்ரயேல் மக்களின் வேர்களுக்கும் நெருக்கம் உண்டு என்பதைக் காட்டுவதோடு, தாம் புதிய இஸ்ரயேலை இவர்கள் வழியாக முன்னெடுக்கப்போவதையும் அடையாளப்படுத்துகிறார் இயேசு.

'பின்பற்றுபவர்' (சீடர், கிரேக்கத்தில் 'மத்தேதெஸ்') என்று இருந்தவர்களுக்குத் 'அனுப்பப்படுபவர்' (திருத்தூதர், 'அப்போஸ்தொலோஸ்') என்று பெயர் கொடுக்கிறார் இயேசு. புதிய பெயர் என்பது புதிய பணியையும் பயணத்தையும் குறிக்கிறது. மேலும், இதுவரை இயேசுவை நோக்கி வழி நடந்த இவர்கள், இனிமேல் இயேசுவைவிட்டுப் புறப்பட்டுச் சென்று பணி செய்வர்.

இயேசு பன்னிருவராகத் தேர்ந்துகொள்ளும் அனைவரும் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறான பின்புலத்தைக் கொண்டிருக்கிறார்கள்: மீன்பிடிப்பவர்கள், வரி தண்டுபவர், தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர், மெசியாவை எதிர்நோக்கியவர். வேறு வேறான பின்புலத்தை இவர்கள் கொண்டிருந்தாலும் இவர்களை இணைக்கிற புள்ளி இயேசு கிறிஸ்துவே. திருத்தூதுப் பணியில் விளங்கக் கூடிய பன்முகத்தன்மையையும் இது காட்டுகிறது.

மலைமேல் நின்றிருந்த இயேசு தம் திருத்தூதர்களுடன் சமவெளியில் வந்து நிற்கிறார். ஒரே நேரத்தில் மலை அனுபவம், மக்கள் அனுபவம் என்னும் இரு அனுபவங்களைத் தம் திருத்தூதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். நம் கால்கள் மலையில் மண்டியிட்டுக் கிடந்தாலும், அவை அதிக நேரம் நிற்க வேண்டியது சமவெளியில்தான். ஆக, மலையும் சமவெளியும் ஒன்றையொன்று நிரப்பக்கூடியதாக இருத்தல் வேண்டும். 

இயேசுவின் பிரசன்னம் பல்வேறு வகையான மக்களை அவரை நோக்கி இழுக்கிறது. குறிப்பாக நோயுற்றவர்கள் அவரைத் தேடி வந்து நலம் பெறுகிறார்கள். அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். 

இந்த நிகழ்வு சீடத்துவத்துக்கான பாடத்தையும் கற்றுத்தருகிறது. இயேசு அழைத்தவுடன் பன்னிருவரும் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார்கள். மேலும், இயேசுவுக்குச் சான்று பகருமாறு புறப்பட்டுச் செல்லவும் தயாராக இருக்கிறார்கள்.

இறைவேண்டல், தேர்ந்து தெளிதலின் அவசியம், கூட்டுப்பொறுப்புணர்வு, பணிப்பகிர்வு, அழைக்கப்பட்டவர்களின் தயார்நிலை மற்றும் பன்முகத்தன்மை, மலை-மக்கள் அனுபவம், இயேசுவின் ஆற்றல்மிகு பிரசன்னம் என்று பல்வேறு கருத்துருகளை நமக்குத் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் இறப்பு கொண்டு வந்த மீட்பு பற்றிக் கொலோசை நகர் திருஅவைக்கு எடுத்துரைக்கிற பவுல், கிறிஸ்துவோடு இணைந்து வாழுமாறு அவர்களை அழைக்கிறார்.


No comments:

Post a Comment