வியாழன், 7 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் வியாழன்
கொலோ 1:9-14. லூக் 5:1-11.
அனைத்தையும் விட்டுவிட்டு
இயேசு தம் முதல் சீடரை அழைக்கும் நிகழ்வு மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்திகளில் ஏறக்குறைய ஒன்றுபோலத் தரப்பட்டுள்ளது. யோவான் மற்றும் லூக்கா மிகவும் மாறுபட்ட நிலையில் இதைப் பதிவு செய்கிறார்கள். லூக்கா நற்செய்தியாளரின் பதிவை இன்றைய நற்செய்தி வாசகமாக வாசிக்கிறோம்.
போதனை, வல்ல செயல், அழைத்தல் என்னும் மூன்று நிகழ்வுகளாக அமைந்துள்ளது அழைத்தல் கதையாடல். இயேசு திரளான மக்களுக்குப் போதிக்கிறார். இயேசு சீமோனுடைய படகில் அமர்ந்துகொண்டு மக்களுக்குப் போதிக்கிறார். போதனை முடிந்தவுடன் படகை ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோகச் சொல்கிறார். மிகுதியான மீன்பாட்டை பேதுரு காண்கிறார். 'ஆண்டவரே, நான் பாவி. என்னை விட்டு அகலும்!' என்று இயேசுவிடம் கூறுகிறார் பேதுரு. இந்த நிகழ்வு உயிர்ப்புக்குப் பின் நடந்த நிகழ்வு என்றும், லூக்கா நற்செய்தியாளர் அந்நிகழ்வைத் தன் நற்செய்தியின் தொடக்கத்தில் பதிவிடுகிறார் என்பதும் சிலரின் கருத்து. ஏனெனில், 'பாவி' என பேதுரு குறிப்பிடுவது, அவர் இயேசுவை மறுதலித்த நிகழ்வையே என்பது இவர்களுடைய கருத்து. ஆனால், இறைமையின் முன்னிலையில் தன் குறைவைப் பேதுரு ஏற்றுக்கொண்டதாக நாம் புரிந்துகொள்ளலாம். கதையாடலின் இறுதியில் சீடர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.
'அஞ்சாதே! இது முதல் நீ மனிதனைப் பிடிப்பவன் ஆவாய்!' என்கிறார் இயேசு.
மீன்களைப் பிடித்துக்கொண்டவருடைய பார்வையை அகலமாக்குவதுடன், பேதுருவுக்கான வாழ்வியல் நோக்கு ஒன்றையும் நிர்ணயம் செய்கிறார் இயேசு.
இயேசுவின் போதனை, வல்ல செயல், மற்றும் கட்டளை சீடர்களின் வாழ்வின் போக்கை மாற்றிப் போடுகிறது.
பேதுரு மற்றும் சீடர்கள் பெற்ற இறையனுபவமே இந்த மாற்றத்திற்குக் காரணம். இந்த இறையனுபவம் தயக்கத்தில் தொடங்கி, வியப்பில் முடிகிறது. 'இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை' என்று முதலில் தம் சொற்களைச் சொல்கிறார் பேதுரு. ஆனால், 'உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்று இயேசுவின் சொற்களை முன்வைத்தவுடன் வல்ல செயல் நடந்தேறுகிறது.
நம் சொற்கள் மறைந்து கடவுளின் சொற்கள் நிகழ்வாக மாறினால் நம் வாழ்விலும் வல்ல செயல் நடந்தேறும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
No comments:
Post a Comment