சனி, 23 செப்டம்பர் 2023
பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் சனி
1 திமொ 6:13-16. லூக் 8:4-15.
நல்ல நிலமாக
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் பற்றிய உவமை, (ஆ) உவமைகள் கூறப்படுவதன் நோக்கம், மற்றும் (இ) இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.
'இறைவார்த்தை' என்பதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏனெனில், 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14), என்று நம் நடுவே இறங்கி வந்தவர் இயேசு. இயேசுவே இறைவனின் வார்த்தை. இரண்டு, 'இறைவன் சொன்ன வார்த்தை' அல்லது 'இயேசுவின் வார்த்தை அல்லது நற்செய்தி.' இவை இயேசுவின் காலத்தவர்களின் காதுகளில் நேரடியாக அவர் வாயிலிருந்து விழுந்தன. இயேசுவைத் தொடர்ந்த காலத்தில் இவை திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்டன. நமக்கு இவை விவிலியம் வழியாக வருகின்றன. இறைவார்த்தை பற்றிய விளக்கவுரைகள் மற்றும் மறையுரைகள் வழியாக வருகின்றன. மூன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவின்மேல் ஒருவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. இது அன்றைய காலத்தவர்களுக்கும் நமக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பாறை நிலம் போல இருப்பவர்கள் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டவுடன் உடனடியாக தங்கள் வாழ்க்கையை மாற்றுவர், ஆலயம் வருவர், திருப்பலி காண்பர். ஆனால், நம்பிக்கை சோதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.
மனித வார்த்தைகள் நம்மில் மாற்றம் கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனம் சோர்வுற்று நிற்கும் வேளையில் திடீரென நண்பர் ஒருவர் அழைக்க அவர் பேசும் உற்சாக வார்த்தைகள் நம் உள்ளத்திற்கு எழுச்சி தருகின்றன. அல்லது நாம் கேட்கும் பாடல், வாசிக்கும் புத்தகம் என இவற்றில் நாம் கேட்கும் அல்லது காணும் வார்த்தைகள் ஏதோ ஒரு சலனத்தை உள்ளத்தில் ஏற்படுத்தவே செய்கின்றன.
'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்னும் இறைவார்த்தையை நான் கேட்கிறேன் என வைத்துக்கொள்வோம். இது என் வாழ்வில் எப்படி பயன் தரும்? 'ஆண்டவரை என் ஆயர் போல ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரையே என் நிறைவு எனக் கொண்டு வாழ்வதன் வழியாகவும் பயன் தரும்.'
நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் கொடுத்ததாக லூக்கா எழுதுகின்றார். விதைப்பவர் உவமையை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்தாலும், லூக்கா மட்டுமே 'நூறு மடங்கு பலன்' என்று பலன் தருதலை முழுமையாகக் குறிப்பிடுகிறார். மற்ற நற்செய்தியாளர்கள் முப்பது, அறுபது, நூறு எனப் பதிவு செய்கிறார்கள். லூக்காவைப் பொருத்தவரையில் பலன் தருதல் என்றால் முழுமையாகப் பலன் தருதலே ஆகும். மேலும், பலன் கொடுப்பதற்கான மூன்று படிகளையும் அவரே முன்மொழிகின்றார்: (அ) நல் உள்ளத்தோடு கேட்டல், (ஆ) கேட்டதைக் காத்தல், (இ) மனவுறுதியுடன் இருத்தல். லூக்கா நற்செய்தியில் நாம் காணும் மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு போன்றோர் நூறு மடங்கு பலன் தருகிறார்கள்.
இந்த உவமை தருகின்ற செய்தி இதுதான்: விதை ஒருபோதும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. நிலம் தான் எப்படி இருக்கிறது என்பதை தானே வரையறுத்துக்கொள்ள முடியும். விதைப்பவரும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. கடவுள் நம் தனிமனித விருப்புரிமையை, ஆன்மிகக் கட்டின்மையை மதிக்கின்றார். நான் என்னையே மாற்றிக்கொள்வதன் வழியாக விதையை ஏற்றுக் கனி தர முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் திமொத்தேயுவிடம், 'எந்தவிதக் குறைச்சொல்லுக்கும் ஆளாகாமல் நம்பிக்கையைக் காத்து வா!' எனக் கட்டளையிடுகின்றார்.
கேட்டு, காத்து, மனவுறுதியுடன் இருக்கின்ற திமொத்தேயு நிறையவே பலன் தருகின்றார்.
No comments:
Post a Comment