Saturday, September 30, 2023

எண்ணத்தை மாற்றிக்கொண்டு

இன்றைய இறைமொழி 

ஞாயிறு, 1 அக்டோபர் 2023

பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு

எசேக்கியேல் 18:25-28. பிலிப்பியர் 2:1-11. மத்தேயு 21:28-32

எண்ணத்தை மாற்றிக்கொண்டு

இன்றைய முதல் வாசகம் (காண். எசே 18:25-28) எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசேக்கியேல் இறைவாக்கினர் எரேமியாவின் சம காலத்தவர். இவர் தன் எருசலேம் நகர மக்களோடு பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார். தங்களது நகரமும் ஆலயமும் தகர்க்கப்பட்டதை கண்முன்னே கண்டவர்களுள் இவரும் ஒருவர். நாடுகடத்தப்பட்டவர்கள் தங்களது இந்த நிலைக்குக் காரணம் தங்கள் முன்னோர்களின் பாவம் என்றும், கடவுள் தங்களை அநீதியாக நடத்துகிறார் என்றும் முறையிடுகின்றனர். அந்த முறையீட்டுக்கு ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகத் தரும் பதிலிறுப்பே முதல் வாசகம். அவர்களின் செயலுக்கு அவர்களே பொறுப்பு என்று எடுத்துரைக்கின்றார் எசேக்கியேல். மேலும், இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டு மனம்திரும்ப வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:1-11), பவுல் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பி நகரத் திருஅவைக்கு சில அறிவுரைகளை வழங்குகின்றார். பிலிப்பி நகர மக்கள் தன்னல பேராவல்களாலும், இறுமாப்பு மற்றும் பெருமித உணர்வாலும் அலைக்கழிக்கப்பட்டு, பிரிவினைகள் மற்றும் சண்டை சச்சரவுகளை வளர்த்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு நிலைகளில் பவுல் அறிவுறுத்துகிறார்: (அ) தாழ்ச்சியோடு ஒருவர் மற்றவரோடு உறவாட வேண்டும். (ஆ) கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்து, தங்களுக்குள்ளே சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட வேண்டும். இரண்டாம் ஏற்பாட்டில் காணப்படும் கிறிஸ்தியல் பாடல்களில் மிகவும் அழகானதாக இருக்கின்ற ஒரு பாடலை எடுத்தாளுகின்ற பவுல், கிறிஸ்து கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையை எந்தவொரு சாக்குப் போக்கும் சொல்லிப் பற்றிக்கொள்ளவில்லை என்றும், தன் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி நம்மைப் போல ஒருவரானார் என்றும் நினைவுறுத்துகின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டை இயேசு முன்வைக்கின்றார். இயேசுவின் உவமைகளில், இது 'தன்னாய்வு உவமை வகையை' சார்ந்தது. அதாவது, உவமையைக் கேட்கும் ஒருவர், அந்த உவமையின் கதைமாந்தருள் ஒருவரோடு தன்னைப் பொருத்திப் பார்த்தி ஆய்வு செய்து அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம் சொன்ன, 'குடியானவனும் ஆட்டுக்குட்டியும்' என்னும் உவமையும் இவ்வகை உவமையைச் சார்;ந்ததே. ஆகையால்தான் உவமையைக் கேட்டு முடித்தவுடன், 'இச்செயலைச் செய்தவன் உடனே சாக வேண்டும்!' எனத் துள்ளி எழுகின்றார் தாவீது. 

மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கும் இந்த உவமைக்கும், மத்தேயு நற்செய்தியாளரின் சில கூறுகளுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன:

(அ) இளையமகன் ஏற்பு

இஸ்ரயேல் மக்கள் தங்கள் இலக்கியங்களில் பேணி வளர்த்த ஓர் அழகிய வாழ்வியல் கூறு இது: இளைய மகன் ஏற்பு. இஸ்ரயேல் தன் சமகாலத்தில் தன்னைச் சுற்றியிருந்த நாடுகள் அல்லது மக்களினங்கள் நடுவே மிகவும் சிறியதாக இருந்தது. மிகவும் சிறியதாக இருக்கும் தன்னை மட்டுமே ஆண்டவராகிய கடவுள் தேர்ந்துகொண்டு உடன்படிக்கை செய்ததாக பெருமைப்பட்டுக் கொண்டது. விவிலியத்தின் கதையாடல்கள் அனைத்திலும் இந்தக் கூறு மிளிர்ந்தது: ஆபிரகாமின் இல்லத்தில் மூத்தவரான இஸ்மயேல் தள்ளப்படுகிறார், ஈசாக்கு அள்ளப்படுகிறார். ஈசாக்கின் வீட்டில் ஏசா தள்ளப்படுகிறார், யாக்கோபு அள்ளப்படுகிறார். யாக்கோபின் வீட்டில் மூத்தவர்கள் தள்ளப்பட 11-ஆவது மகனான யோசேப்பு அள்ளப்படுகிறார். லூக்கா நற்செய்தியாளரின் 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டிலும், 'இளையமகன் ஏற்புடையவராகி இல்லம் திரும்புகின்றார். மூத்த மகனோ முணுமுணுத்தவாறு நிற்கின்றார்.' மத்தேயு நற்செய்தியின் தலைமுறை அட்டவணையிலும் இளையமகன்களே அதிகம் தென்படுவர். ஆனால், இங்கே, இந்த உவமையில் தந்தைக்கு ஏற்புடையவராக மாறுபவர், 'இளைய மகன்' அல்ல, மாறாக, மூத்த மகன்.

(ஆ) இறையாட்சி

மத்தேயு நற்செய்தியாளர் பெரும்பாலும் 'விண்ணரசு' என்னும் சொல்லாட்சியையே பயன்படுத்துகிறார். இங்கே அவர், 'இறையாட்சி' என்று பயன்படுத்துவது நம் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. 'இறையாட்சி' அல்லது 'இறையரசு' என்பது மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாட்சி.

(இ) வரிதண்டுவோரும் விலைமகளிரும்

'வரிதண்டுவோரும் பாவிகளும்' என்னும் சொல்லாட்சியே பெரும்பாலும் நற்செய்தி நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்க, இந்த இடத்தில் மட்டும், 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. 'விலைமகளிர்' என்னும் வார்த்தை தனியாக, 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டில் வருகிறது. அங்கே, இளைய மகனைச் சுட்டிக்காட்டி மூத்த மகன் இந்த வார்த்தையைச் சொல்கிறார் (காண். லூக் 15:30). 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாடல் வழியாக, மத்தேயு நற்செய்தியாளர் தன்னையும், முதல் ஏற்பாட்டு இராகாபையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில், மத்தேயுவின் சமகாலத்தவர்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபோது அவரே இயேசுவை முதலில் ஏற்றுப் பின்தொடர்கிறார். எரிக்கோ நகரை உளவு பார்க்கச் சென்ற இஸ்ரயேல் மக்களின் ஒற்றர்களை வரவேற்ற கானானிய விலைமகள் இராகாபு ஆண்டவராகிய கடவுளைத் தன் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார். 

மேற்காணும், மூன்று சொல்லாட்சிகளும் இயேசுவின் சமகாலத்தில் அவருடைய இந்த உவமையைக் கேட்ட தலைமைக்குருக்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் பெரிய இடறலாக இருந்திருக்க வேண்டும்.

'வரிதண்டுவோரையும் விலைமகளிரையும்' அவர்களைவிட மூத்தவர்கள் என அழைப்பதோடு, இளைய மகன் ஒதுக்கப்படுகிறான் என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.

இளைய மகனிடம் சொல் இருந்தது, ஆனால், செயல் இல்லை.

மூத்த மகனிடம் சொல் இல்லை, ஆனால், செயல் இருந்தது. 

'சொல் பெரிதல்ல' என்பதை இங்கே, மலைப்பொழிவின் பின்புலத்தில் புரிந்துகொண்டால், 'என்னை நோக்கி, 'ஆண்டவரே! ஆண்டவரே!' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை' (காண். மத் 7:21) என்னும் வாக்கியத்தின் வழியாக, சொல்லை விட செயலே முக்கியம் என்பது தெளிவாகிறது.

இந்த உவமை நமக்குச் சொல்வது என்ன?

இந்த உவமையில் வரும் இளைய மகன், தவறான வாக்குறுதி தருகிறான் அல்லது தந்த வாக்குறுதியை மீறுகிறான். முகதுதிக்காக, தன் தந்தையை, 'ஆண்டவரே!' என அழைக்கிறான். ஆனால், தான் விரும்பியதைச் செய்கிறான்.

மூத்த மகன் ஒன்றே ஒன்றைச் செய்தான்: 'தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்'

அதாவது, தன் விருப்பத்திற்கு முரணாக அப்பாவின் விருப்பம் இருந்தாலும், அப்பாவின் விருப்பம் நோக்கித் தன் மனத்தைத் திருப்புகிறான்.

இதையே எதிர்மறையாக இயேசு அவர்களிடம், 'நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை' என்று தன் உவமையைக் கேட்பவர்களிடம் சொல்கின்றார்.

இன்று, நான் என் எண்ணத்தை இறைவிருப்பம் நோக்கி மாற்றிக்கொள்ளத் தயரா? 

இறைவிருப்பத்திற்கு நான் முதலில், 'நோ!' ('இல்லை') என்று சொன்னாலும் பரவாயில்லை. என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள கடவுள் எனக்கு நேரம் கொடுக்கிறார். புனித அகுஸ்தினார் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இல்லையா?

நிற்க.

இன்று நம் தாய்த் திருஅவை கூட்டியக்கத்துக்கான மாமன்றத்தின் இறுதி கட்டத்திற்குள் (முதல் அமர்வு) நுழைகிறது. மாமன்றத்தின் செயல்பாடுகளை ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து அவருடைய தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.


Thursday, September 28, 2023

கடவுளின் உடனிருப்பு

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 29 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் வெள்ளி

தானியேல் 7:9-10, 13-14. யோவான் 1:47-51.

அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் - விழா

கடவுளின் உடனிருப்பு

அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார். (யோவான் 1:51)

இன்று அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள். இவர்கள் மேலுலக்கும் மானிடர் உலகுக்கும் இடையே செல்பவர்கள், இரண்டையும் இணைப்பவர்கள்.

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.

ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார். அதாவது, தன் வாழ்வின் தனிமையில்தான் கடவுள் அனுபவம் பெறுகிறார் யாக்கோபு.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே. இதை இன்றைய திருநாள் நிறைவுசெய்வதாக.


Wednesday, September 27, 2023

ஏரோது குழப்பமுற்றார்!



இன்றைய இறைமொழி 

வியாழன், 28 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் வியாழன்

ஆகாய் 1:1-8. லூக்கா 9:7-9.

ஏரோது குழப்பமுற்றார்!

'நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் கேள்வியுற்று மனம் குழம்பினான்' என்னும் வாக்கியத்தோடு தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். புதிய ஏற்பாட்டில் நாம் ஐந்து ஏரோதுக்களைக் காண்கிறோம். (அ) பெரிய ஏரோது – குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடியவர் இவர். (ஆ) ஏரோது அர்க்கெலா – திருக்குடும்பம் எகிப்திலிருந்து திரும்பியபோது யூதேயாவை ஆட்சி செய்தவர். (இ) ஏரோது அந்திபா – திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தவர். (ஈ) ஏரோது பிலிப்பு - இவருடைய மனைவியைத்தான் ஏரோது அந்திபா தன் மனைவியாகக் கொண்டார். (உ) ஏரோது அக்ரிப்பா – பெரிய ஏரோதுவின் பேரனான இவரையே பவுல் சந்திக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் நாம் காண்பவர் ஏரோது அந்திபா ஆவார்.

இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிற ஏரோது, 'யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?' எனக் குழப்பமுற்று அவரைக் காண வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.

யோவானின் தலை வெட்டப்படும் நிகழ்வு இயேசுவுக்காகக் காத்திருக்கிற மரண தண்டனையையும் இங்கே வாசகருக்கு நினைவுபடுத்துகிறது. 

கேள்விப்படுதல், குழப்பமுறுதல், வாய்ப்பு தேடுதல் என்று மூன்று செயல்கள் இங்கே குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். 

இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும் மக்களுடைய பேசு பொருளாக மாறுகின்றன. அவை ஆளுநரின் காதுகளை எட்டுகின்றன. இயேசு சாதாரண மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பேசுபொருளாக மாறுகிறார். இயேசுவைப் பற்றி மக்கள் வேறு வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர் மெசியாவாகவோ அல்லது இறைவாக்கினராகவோ இருக்கலாம் என நினைக்கிறார்கள். 

ஏரோது தேடிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. இயேசுவைக் காண்கிறார் அவர். தான் திருமுழுக்கு யோவானுக்குச் செய்தது போலவே இயேசுவுக்கும் செய்கிறார். அவரை இறப்புக்குக் கையளிக்கிறார்.

முதல் வாசகத்தில், தமக்கு ஆலயம் கட்டுமாறு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆகாய் வழியாகச் செய்தி அனுப்புகிறார். முந்தைய மாட்சியைவிட பிந்தைய மாட்சி மேன்மையானதாக இருக்கும் என்கிறார் ஆண்டவர்.

இறைவார்த்தையைக் கேட்கும்போது நாம் குழப்பம் அடைகிறோம்? குழப்பம் சில நேரங்களில் நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. சில நேரங்களில் நம் உள்ளத்தைக் கடினமாக்குகிறது.


Tuesday, September 26, 2023

அவர்களை அனுப்பினார்


இன்றைய இறைமொழி 

புதன், 27 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் புதன்

எஸ்ரா 9:5-9. லூக்கா 9:1-6.

அவர்களை அனுப்பினார்

இன்றைய நற்செய்தி வாசகம் 'அதிகாரம்,' 'அறிவுரை,' 'அறிக்கை' என்னும் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. தம் பன்னிருவரையும் தம்மிடம் அழைக்கிற இயேசு பேய்கள் மற்றும் பிணிகள்மேல் தமக்கு உள்ள அதிகாரத்தை அவர்களுக்கும் அளிக்கிறார். இவ்வாறாக, அவர்களைத் தம் பணியின் பங்காளர்களாக மாற்றுகிறார். நற்செய்தி அறிவிக்குமாறு அவர்களை அனுப்புகிறார். அழைக்கப்படுபவர் அனைவருமே அனுப்பப்படுவர். அழைத்தலும் அனுப்பப்படுதலும் பணிவாழ்வு என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என உணர்த்துகிறார் இயேசு. 

இரண்டாவதாக, அறிவுரைப் பகுதி. பணம் மறுப்பு, ஒரே அங்கி, வரவேற்கப்படுகிற இடத்தில் குடியிருப்பு, நிராகரிப்பை ஏற்றுக்கொள்தல் என்று அறிவுரை வழங்குகிறார் இயேசு. அனுப்பப்படுகிறவர் தன் வசதி வாய்ப்புகளைப் பற்றிய கவலையை விடுக்க வேண்டும், கடவுள் நம்மைப் பராமரிப்பவர் என்பதை உணர வேண்டும், மற்றவர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்வதன் வழியாக அவர்கள்மேல் சார்புநிலையை உருவாக்கிக் கொண்டாட வேண்டும், தங்களைச் சுற்றியிருக்கும் சூழல்கள் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தாதவாறு தற்காத்துக்கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் வெளியேறுவது என்பதை அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பது இயேசுவுடைய அறிவுரையின் உட்கூறுகள் ஆகும்.

மூன்றாவதாக, அனுப்பப்பட்ட பன்னிருவரும் ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்து உடல்நலமற்றவர்களுக்கு நலம் தருகிறார்கள். அதாவது, இயேசு தந்த அதிகாரமும், அறிவுரையும் உடனடியாகச் செயல்படுத்தப்படுகிறது.

திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் சீடர்கள் வட்டத்துக்குள் நுழைகிறோம். இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு, பேய்கள் ஓட்டுதல், நலம் தருதல் என்னும் பணிகளில் நமக்கும் பங்கு உண்டு. தீய ஆவிகள்மேலும் நோய்கள்மேலும் நமக்கும் அதிகாரம் உண்டு. இவற்றை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பயன்படுத்தப்படாத எதுவும் அழிந்துபோகும் என்பது பரிணாமக்கொள்கையின் கூறு. நாம் பெற்றிருக்கிற கொடைகள் பற்றிய அக்கறை நமக்கு வேண்டும்.

இரண்டாவதாக, சிறுநுகர் வாழ்வு மற்றும் கடவுளின் பராமரிப்பின்மேல் நம்பிக்கை. இன்று பல இடங்களில் சிறுநுகர் வாழ்வு வாழ வேண்டுமென்று அறிவுரை வழங்கப்படுகிறது. உலகம் முன்மொழியும் சிறுநுகர் வாழ்வு பொருளாதாரம் சார்ந்ததாக, தற்சார்பை மையப்படுத்தி இருக்கிறது. ஆனால், இயேசு முன்மொழியும் வாழ்வு கடவுளையும் ஒருவர் மற்றவரையும் நாம் சார்ந்த சிறுநுகர் வாழ்வாக இருக்கிறது.

மூன்றாவதாக, நற்செய்தி அறிவிப்பு என்பது சான்றுவாழ்வு என மலர வேண்டும்.

முதல் வாசகத்தில், புதிய ஆலயத்தில் மக்கள் நடுவே நிற்கிற எஸ்ரா அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். கடவுள் தங்களை அடிமைத்தனத்திற்குக் கையளித்தும், அடிமைகளாகவே ஆக்கிவிடவில்லை எனக் கடவுளின் கருணையைப் புகழ்கிறார். வாழ்வின் நிகழ்வுகளைப் பின்நோக்கிப் பார்க்கும்போது கடவுளின் கருணையே நம்மை ஆண்டுநடத்தி வந்ததை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.


Monday, September 25, 2023

தாயும் சகோதரர்களும்

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 26 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் செவ்வாய்

எஸ்ரா 6:7-8, 12, 14-20. லூக்கா 8:19-21.

தாயும் சகோதரர்களும் 

இயேசுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஒன்றை இங்கே வாசிக்கிறோம். லூக்கா நற்செய்தியில், இயேசுவும் அவருடைய தாயும் சந்திக்கும் நிகழ்வு எருசலேம் ஆலயத்தில் நிகழ்கிறது. அதைத் தொடர்ந்து, அவருடைய பணிவாழ்வில் அவர்கள் இருவரும் சந்தித்த நிகழ்வு இங்கேதான் நடக்கிறது. இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி வருகிறார்கள். அவர்கள் வருவதற்கான நோக்கம் பற்றி நற்செய்தியாளர் பதிவுசெய்யவில்லை. 

இயேசுவுக்கு அருகில் உள்ள கூட்டம் அவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையே தடையாக இருக்கிறது. இதைத் தடை என்று பார்ப்பதற்குப் பதிலாக, இயேசுவுடைய உறவு வட்டம் புதிய மக்களால் நிரம்புகிறது. உறவினர்களின் வருகை இயேசுவுக்கு அறிவிக்கப்பட்டவுடன், 'இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே தாயும் சகோதரர்களும்' என்று புதிய உறவு வட்டத்தை வரையறுக்கிறார் இயேசு. உடல்சார் உறவுநிலையைத் தாண்டி ஆன்மிகம்சார் உறவுநிலையைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.

மேலும், இந்த நிகழ்வு வழியாக மரியா இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்பட்டதாலேயே தம் தாயாக உயர்ந்தார் என அழுத்தம் தருகிறார் இயேசு.

இறைவார்த்தைக்குப் பலன் தருதல், இறைவார்த்தையை அனைவருக்கும் வெளிப்படுத்துதல் என்னும் இயேசுவின் போதனைகளைத் தொடர்ந்து, இறைவார்த்தையைக் கேட்டுச் செயல்படுத்துவதன் வழியாக இறைஉறவு நிலைக்கு உயர்தல் பற்றிப் பேசுகிறார் இயேசு.

முதல் வாசகத்தில், பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்புகிற மக்கள் தங்களுக்கென ஆலயத்தைக் கட்டி முடிப்பதை வாசிக்கிறோம். ஆலய அருள்பொழிவு நிகழ்வு அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு அவர்களுடைய வாழ்க்கைக்குப் புதிய பொருளும் தருகிறது.


Sunday, September 24, 2023

ஒளி கிடைக்கும்படி

இன்றைய இறைமொழி 

திங்கள், 25 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 25-ஆம் வாரத்தின் திங்கள்

எஸ்ரா 1:1-6. லூக்கா 8:16-18.

ஒளி கிடைக்கும்படி

நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிடவும் அதற்குச் சான்று பகரவும் நம்மை அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். 

'விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை' என்னும் உருவகத்தோடு தொடங்குகிறது வாசகம். ஒளி என்பது இறைவார்த்தை, உண்மை, நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒளியை ஏற்றுதல் என்பதை நம்பிக்கையைப் பெற்றுக்கொள்தல் என்று பொருள்கொள்ளலாம்.

நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட ஒருவர் அதைத் தனக்குத்தானே மூடிவைத்துக்கொள்ள இயலாது. விளக்கு ஏற்றப்படுவதன் நோக்கம் அது மற்றவர்களுக்கு ஒளி தருவதற்குப் பயன்படுவதற்காகவே. பாத்திரத்தால் மூடி வைக்கும்போது விளக்கு அதன் பயனை இழப்பதோடு, விளக்கு அணைந்துவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

விளக்கு தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஒளிர்விப்பதுபோல, நம்பிக்கையும் நம்மைச் சுற்றியிருக்கிற அனைத்தையும் ஒளிர்விக்கிறது. அப்படி ஒளிர்விக்கப்படும் அனைத்தும் அனைவருடைய கண்களுக்கும் தெளிவாகத் தெரிகின்றன. ஆக, எதுவும் யாருக்கும் மறைபொருளாக இருக்க முடியாது. நம்பிக்கை வழியாக நாம் நம்மைச் சுற்றியிருப்பவற்றைத் தெளிவாகக் காண்பதுபோல, நம்மைச் சுற்றியிருப்பவர்களும் நம்மை எவ்வித மறைபொருளும் இல்லாமல் காண்கிறார்கள்.

'நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்' என அறிவுறுத்துகிறார் இயேசு. ஏனெனில், நாம் கேட்கும் மனநிலையைப் பொருத்தே இறைவார்த்தை கனி தருகிறது. இயேசுவின் இந்த அறிவுரை விதைகளும் நான்கு நிலங்களும் என்னும் உவமையை நமக்கு நினைவூட்டுகிறது. 

தொடர்ந்து மேலாண்மையியல் பாடம் ஒன்றையும் மொழிகிறார் இயேசு: 'உள்ளவருக்குக் கொடுக்கப்படும்.' இது 'ஸ்னோபால் இஃபெக்ட்' ('பனிஉருண்டை விளைவு') என அழைக்கப்படுகிறது. அதாவது, மலைமேல் உருவாகிற பனிக்கட்டி உருண்டை கீழே வர வர நிறையப் பனியைத் தன்னோடு சேர்த்துக்கொள்வதோடு, அதன் வேகமும் கூடுகிறது. அறிவு, ஞானம், நம்பிக்கை அனைத்தும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கின்றன. அதே வேளையில், அவை குறையும்போது எல்லாம் வற்றிவிடுகின்றன.

நாம் பெற்றிருக்கிற நம்பிக்கையை உயிரோட்டமாக வைக்கவும், இறைவார்த்தைக்குக் கவனமுடன் செவிமடுக்கவும் நம்மை அழைக்கிறது நற்செய்தி வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாரசீக அரசர் சைரசு இஸ்ரயேல் மக்களை மீண்டும் எருசலேமுக்கு அனுப்பும் நிகழ்வை வாசிக்கிறோம். தம்மை விண்ணகக் கடவுளே இப்பணியைச் செய்யச் சொன்னதாக மொழிகிறார் அவர். ஆண்டவராகிய கடவுள் பாபிலோனியர்களைப் பயன்படுத்தி இஸ்ரயேலரை நாடுகடத்துகிறார். பாரசீகப் பேரரசரைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் நாடு திரும்பச் செய்கிறார். இவ்வாறாக, 'கொல்வதும் நானே, வாழ்வுதருவதும் நானே' எனத் தன்னை முன்நிறுத்துகிறார் கடவுள்.


Saturday, September 23, 2023

கண்ணோட்ட மாற்றம்

இன்றைய இறைமொழி 

ஞாயிறு, 24 செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு

எசா 55:6-9. பிலி 1:20-24, 27. மத் 20:1-16.

கண்ணோட்ட மாற்றம்

'என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல. உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல' என இறைவாக்கினர் எசாயா வழியாக அறிவிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எண்ணங்களும் வழிமுறைகளும் மாற்றம் பெற்றால் செயல்பாடுகளில் மாற்றம் வரும். இன்றைய முதல் வாசகப் பகுதி இறைவாக்கினர் எசாயா நூலின் இரண்டாம் பகுதியின் இறுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழ்த்தப் போகும் வல்ல செயல்கள் மற்றும் மறுவாழ்வுக்கு முன்னுரையாக அமைகிறது இந்தப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழிவுக்குக் காரணம் தாங்கள் செய்த பாவங்களே என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், ஆண்டவராகிய கடவுள் தங்கள் குற்றங்களுக்கு ஏற்ப நடத்துவார் என்று அச்சம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, 'ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்' எனச் சொல்வதுடன், ஆண்டவருடைய எண்ணங்களும் மனித எண்ணங்களும், அவருடைய வழிமுறைகளும் நம் வழிமுறைகளும் முற்றிலும் மாறுபட்டவை என உரைக்கிறார்.

நம் கண்ணோட்டம் மாற்றம் பெறும்போது இறைவனின் இரக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பற்றிய உவமை ஒன்றை முன்மொழிகிறார். இது உவமையாக இருந்தாலும், மத்தேயு நற்செய்தியின் உவமைப் பகுதியில் இல்லாமல், அதற்கு வெளியே திருஅவைப் பொழிவில் உள்ளது. 

மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சினையை இந்த உவமையின் வழியாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் நம்பிக்கையாளர்களாக மாறியவர்கள் உயர்ந்தவர்கள், தாமதமாக மாறியவர்கள் தாழ்ந்தவர்கள், அல்லது முதலில் வந்த யூதர்கள் சிறந்தவர்கள், தாமதமாக வந்த புறவினத்தார்கள் தாழ்ந்தவர்கள் என்னும் எண்ணம் நிலவிய சூழலில், அனைவரும் ஒன்றே, அனைவருக்கும் வழங்கப்படும் பரிசு ஒன்றே என உரைக்கிறது இந்த உவமை. மேலும், கடவுள் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் கொண்டவராக இருக்கிறார் என்பதையும் இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் - முதலில் வந்தவர்கள் மற்றும் இறுதியில் வந்தவர்கள், திராட்சைத் தோட்ட மேற்பார்வையாளர் எனப் பல கதைமாந்தர்கள் உவமையில் இருந்தாலும், முதன்மையான கதைமாந்தர் திராட்சைத் தோட்ட உரிமையாளரே. இவர் நிலக்கிழார் (20:1), ஆண்டவர் (20:8), தலைவர் (20:11) என்னும் மூன்று பெயர்களால் அழைக்கப்பெறுகிறார். 

திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு அமர்த்துவதற்காக ஆள்களைத் தேடிச் செல்கிறார் தலைவர். எத்தகைய வேலை என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை. திராட்சைத் தோட்டத்தில் மூன்று வகை வேலைகளுக்கு மட்டுமே அதிக நபர்கள் தேவைப்பட்டனர்: திராட்சைச் செடி நடுவதற்கு, களைகள் பிடுங்கித் தோட்டத்தைப் பரமாரிப்பதற்கு, திராட்சைக் கனிகள் பறிப்பதற்கு. இந்த மூன்று வேலைகளுமே ஒரே நாளுக்குள் முடிக்கப்பட வேண்டியவை. ஆக, நிறைய வேலையாள்கள் இவருக்குத் தேவைப்படுகிறார்கள். அதிகாலையிலேயே வேலையாள்களைத் தேடி இவர் புறப்படுகிறார். ஏனெனில், நன்றாக வேலை செய்யக் கூடியவர்கள் சீக்கிரமாகவே வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவர். இன்று நம் ஊர்களில் இருப்பது போல, நகரின் பொதுவிடத்தில் ஆள்கள் ஒன்றாகக் கூடி நிற்பர். அவர்கள் வேலைக்கான அழைப்பு பெறுவர். 

காலை ஆறு மணி, ஒன்பது மணி, நண்பகல், மாலை மூன்று மணி, ஐந்து மணி என ஐந்து முறை வேலையாள்களைத் தேடிச் செல்கிறார். மாலை ஆறு மணிக்கு அனைவருக்கும் கூலி தரப்படுகிறது. ஆக, முதலில் வந்தவர்கள் 12 மணி நேரங்களும், இரண்டாவது வந்தவர்கள் 9 மணி நேரங்களும், மூன்றாவது வந்தவர்கள் 6 மணி நேரங்களும், நான்காவது வந்தவர்கள் 3 மணி நேரங்களும், ஐந்தாவது வந்தவர்கள் 1 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். வேலை செய்த நேரம் வேறுபட்டதாக இருந்தாலும் வழங்கப்படும் ஊதியம் அனைவருக்கும் சமமாக (ஒரு தெனாரியம்) இருக்கிறது. இது வேலைக்காரர்களுக்கும் வாசகர்களாகிய நமக்கும் நெருடலை ஏற்படுத்துகிறது. ஆனால், எந்தவொரு நெருடலும் தலைவருக்கு இல்லை. தாம் செய்வதை அறிந்தவராகவும், எந்தக் கட்டாயத்திற்கும் ஆள்படாமல் அதை நிறைவேற்றுபவராகவும் அவர் இருக்கிறார். 

'கடைசியில் வந்தவர் தொடங்கி முதல் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்று வரிசையை மாற்றுகிறார் தலைவர். முதலில் வந்தவர் முதலில் வெளியேறுவர் என்பதை மாற்றி, கடைசியில் வந்தவர் முதலில் என மாற்றுகிற தலைவர், அனைவருக்கும் ஒரே ஊதியம் என்றும் வரையறுக்கிறார்.

முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் எனத் தங்களுக்குள் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரு தெனாரியம் மட்டுமே வழங்கப்பட்டதால் முணுமுணுக்கிறார்கள். இறுதியில் வந்தவர்களுக்குத் தலைவர் காட்டிய இரக்கம் தங்களுக்கும் இருக்கும் என அவர்கள் நினைத்தபோது, 'நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக்கொள்ளவில்லையா?' என்று நீதியை அவர்களுக்குக் காட்டிப் புரட்டிப்போடுகிறார் தலைவர். உவமையின் முதல் பகுதியில் வெளியே ஒவ்வொரு முறை நடந்துசென்ற தலைவர், இரண்டாவது பகுதியில் அவர் ஒரே இடத்தில் நிற்க வேலையாள்கள் அவரிடம் வரிசையாக வருகிறார்கள்.

தம்மை நோக்கி முணுமுணுத்தவர்களைத் 'தோழரே' என அழைக்கிறார் தலைவர். மத்தேயு நற்செய்தியில் 'தோழரே' என்னும் சொல் மூன்று இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமண விருந்து எடுத்துக்காட்டில் திருமண உடை அணிந்து வராத நபரும் (22:12), இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நிகழ்வில் யூதாசு இஸ்காரியோத்தும் (26:49), 'தோழரே' என அழைக்கப்படுகிறார்கள். அதாவது, தலைவருக்குத் தோழராக இருக்க வேண்டியவர்கள் தோழராக இல்லை என்பதே இங்குக் குறிப்பிடப்படுகிறது. 

முதலில் வந்தவர்கள் முணுமுணுப்பதற்கான காரணம் என்ன?

அவர்கள் தங்கள் கண்முன் நின்ற தலைவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் கைகளிலிருந்த தெனாரியத்தைப் பார்த்தார்கள். தங்கள் தலைவர் ஒரே நேரத்தில் நீதியும் இரக்கமும் காட்டக் கூடியவர் என்பதை மறந்துவிட்டார்கள்.

தலைவரைப் பொருத்தவரையில், தலைவருக்கு அனைத்து வேலையாள்களும் முதன்மையானவர்களாகத் தெரிகிறார்கள். அனைவருடைய தேவையும் ஒன்று என அறிந்தவராக இருக்கிறார் தலைவர்.

பணியாளரின் கண்ணோட்டம் விடுத்து, தலைவரின் கண்ணோட்டம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்விக்கான விடையை இன்றைய இரண்டாம் வாசகத்தில் தருகிறார் பவுல். தன் வாழ்வில் இருத்தலுக்கும் இறப்புக்குமான இழுபறி நிலையை உணர்கிற பவுல், இவை இரண்டுக்கும் இடையே தாம் படும் துன்பத்தை உணர்ந்தவராக, 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது ஆதாயமே' என்கிறார். அதாவது, தம் இருத்தலுக்கும் இறப்புக்கும் பொருள் தருபவர் கிறிஸ்துவே என்பது அவருடைய புரிதல்.

ஆண்டவரை நாம் பற்றிக்கொள்ளும்போது நம் கண்ணோட்டம் மாறுகிறது.

தெனாரியத்தை சற்றே ஒதுக்கிவிட்டு, தலைவரையும் மற்ற வேலையாள்களையும் நாம் பார்க்கத் தொடங்குகிறோம். வாழ்க்கை அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை என்பதை உணரத் தொடங்குகிறோம். பொறுமை காக்கப் பழகுகிறோம். முணுமுணுத்தலால் ஒரு பயனும் இல்லை என்பதால் புன்னகை பூக்கத் தொடங்குகிறோம். வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிக்கொள்ளப் பழகுகிறோம். கணிதத்தின் லாஜிக் அல்ல கடவுளின் மேஜிக்கே நம் வாழ்வை மாற்றுகிறது என உணரத் தொடங்குகிறோம்.


Friday, September 22, 2023

நல்ல நிலமாக

இன்றைய இறைமொழி 

சனி, 23 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் சனி

1 திமொ 6:13-16. லூக் 8:4-15.

நல்ல நிலமாக

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் பற்றிய உவமை, (ஆ) உவமைகள் கூறப்படுவதன் நோக்கம், மற்றும் (இ) இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.

'இறைவார்த்தை' என்பதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏனெனில், 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14), என்று நம் நடுவே இறங்கி வந்தவர் இயேசு. இயேசுவே இறைவனின் வார்த்தை. இரண்டு, 'இறைவன் சொன்ன வார்த்தை' அல்லது 'இயேசுவின் வார்த்தை அல்லது நற்செய்தி.' இவை இயேசுவின் காலத்தவர்களின் காதுகளில் நேரடியாக அவர் வாயிலிருந்து விழுந்தன. இயேசுவைத் தொடர்ந்த காலத்தில் இவை திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்டன. நமக்கு இவை விவிலியம் வழியாக வருகின்றன. இறைவார்த்தை பற்றிய விளக்கவுரைகள் மற்றும் மறையுரைகள் வழியாக வருகின்றன. மூன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவின்மேல் ஒருவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. இது அன்றைய காலத்தவர்களுக்கும் நமக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பாறை நிலம் போல இருப்பவர்கள் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டவுடன் உடனடியாக தங்கள் வாழ்க்கையை மாற்றுவர், ஆலயம் வருவர், திருப்பலி காண்பர். ஆனால், நம்பிக்கை சோதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.

மனித வார்த்தைகள் நம்மில் மாற்றம் கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனம் சோர்வுற்று நிற்கும் வேளையில் திடீரென நண்பர் ஒருவர் அழைக்க அவர் பேசும் உற்சாக வார்த்தைகள் நம் உள்ளத்திற்கு எழுச்சி தருகின்றன. அல்லது நாம் கேட்கும் பாடல், வாசிக்கும் புத்தகம் என இவற்றில் நாம் கேட்கும் அல்லது காணும் வார்த்தைகள் ஏதோ ஒரு சலனத்தை உள்ளத்தில் ஏற்படுத்தவே செய்கின்றன.

'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்னும் இறைவார்த்தையை நான் கேட்கிறேன் என வைத்துக்கொள்வோம். இது என் வாழ்வில் எப்படி பயன் தரும்? 'ஆண்டவரை என் ஆயர் போல ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரையே என் நிறைவு எனக் கொண்டு வாழ்வதன் வழியாகவும் பயன் தரும்.'

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் கொடுத்ததாக லூக்கா எழுதுகின்றார். விதைப்பவர் உவமையை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் பதிவு செய்தாலும், லூக்கா மட்டுமே 'நூறு மடங்கு பலன்' என்று பலன் தருதலை முழுமையாகக் குறிப்பிடுகிறார். மற்ற நற்செய்தியாளர்கள் முப்பது, அறுபது, நூறு எனப் பதிவு செய்கிறார்கள். லூக்காவைப் பொருத்தவரையில் பலன் தருதல் என்றால் முழுமையாகப் பலன் தருதலே ஆகும். மேலும், பலன் கொடுப்பதற்கான மூன்று படிகளையும் அவரே முன்மொழிகின்றார்: (அ) நல் உள்ளத்தோடு கேட்டல், (ஆ) கேட்டதைக் காத்தல், (இ) மனவுறுதியுடன் இருத்தல். லூக்கா நற்செய்தியில் நாம் காணும் மரியா, யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு போன்றோர் நூறு மடங்கு பலன் தருகிறார்கள்.

இந்த உவமை தருகின்ற செய்தி இதுதான்: விதை ஒருபோதும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. நிலம் தான் எப்படி இருக்கிறது என்பதை தானே வரையறுத்துக்கொள்ள முடியும். விதைப்பவரும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. கடவுள் நம் தனிமனித விருப்புரிமையை, ஆன்மிகக் கட்டின்மையை மதிக்கின்றார். நான் என்னையே மாற்றிக்கொள்வதன் வழியாக விதையை ஏற்றுக் கனி தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் திமொத்தேயுவிடம், 'எந்தவிதக் குறைச்சொல்லுக்கும் ஆளாகாமல் நம்பிக்கையைக் காத்து வா!' எனக் கட்டளையிடுகின்றார்.

கேட்டு, காத்து, மனவுறுதியுடன் இருக்கின்ற திமொத்தேயு நிறையவே பலன் தருகின்றார்.

Thursday, September 21, 2023

பெண்களின் சீடத்துவம்

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 22 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் வெள்ளி

1 திமொ 6:2-12. லூக் 8:1-13.

பெண்களின் சீடத்துவம்

இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடன் பயணித்த பெண்கள் மற்றும் அவர்களுடைய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் போதனைகள் மற்றும் வல்ல செயல்கள் பற்றிப் பலர் பரவசம் அடைந்தாலும், அவரைப் பின்பற்றியவர்கள் என்னவோ சிலர்தாம். அவர்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் சீடத்துவம் பற்றி இன்று சிந்திப்போம்.

இயேசுவைப் பின்பற்றிய பெண்கள் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார் லூக்கா. இவர்கள் வெறும் பார்வையாளர்கள் அல்ல, மாறாக, பணியில் பங்கேற்பாளர்கள். இயேசுவுக்கு ஆன்மிக அளவிலும், பொருள் அளவிலும் துணைநின்றார்கள். 

இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்த காலம் இருந்தது. அந்த இறந்தகாலத்திலிருந்து அவர்கள் விடுபட்டிருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் விடுதலை பெற்ற பெண்கள், ஏழு பேய்களிடமிருந்து விடுபட்ட மகதலா மரியா என ஒவ்வொருவருக்கும் ஓர் இறந்தகாலம் இருந்தது. இயேசுவின் பரிவாலும் இரக்கத்தாலும் அவர்கள் மாற்றம் பெற்றார்கள்.

இவர்கள் தாராள உள்ளம் கொண்டவர்களாக இருந்தார்கள். இயேசுவின் பணிகளையும் பயணங்களையும் செலவினங்களையும் தங்கள் தாராள உள்ளத்தால் தாங்கிக்கொண்டவர்கள் இவர்கள். இவர்களுடைய வாழ்வில் இயேசு ஏற்படுத்திய மாற்றத்திற்கான கைம்மாறாகவோ, அல்லது நம்பிக்கை மற்றும் நன்றியுணர்வின் அடிப்படையாலோ அவ்வாறு செய்தனர். 

இவர்கள் இயேசுவின் சொற்களுக்கு வெறுமனே செவிமடுத்து நகர்ந்து செல்லவில்லை. மாறாக, தங்கள் நற்செயல்களால் அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்தார்கள். 

யாருடைய கருத்துக்காகவும், விமர்சனத்துக்காகவும் உட்பட்டு தங்களின் வாழ்க்கையின் போக்கை அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சமூகத்தில் ரபிக்களைப் பெண்கள் பின்பற்றுவது ஏற்புடையது அல்ல எனக் கருதப்பட்டாலும் அவர்கள் துணிவுடன் செயல்பட்டார்கள் பயந்து பின்வாங்கவில்லை.

சீடத்துவம் என்பது பாலினத்தையும் சமூக நிலையையும் பழைய வாழ்க்கையையும் சார்ந்தது அல்ல, மாறாக, அவற்றைக் கடந்தது என்பதை இவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். தம்மேல் அன்புகூறும் நம்பிக்கை கொள்ளும் அனைவரையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். சீடத்துவம் என்பது தனிநபர் வாழ்வு மாற்றத்தையும் கடவுளின் அரசில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தவர்களாக இருந்தார்கள் இவர்கள். 

இன்றைய நற்செய்திப் பகுதி நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) பெண்களின் பங்கேற்பு நம் வாழ்வுக்கும் பணிக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். அவர்கள் செய்கிற பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

(ஆ) இப்பெண்கள் போல நாமும் தாராள உள்ளம் கொண்டவர்களாக நம் ஆற்றல், நேரம், பொருள் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

(இ) நம் எப்படி இருந்தோம் அல்லது இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே கடவுள் நம்மிடம் விரும்புவது என்பதை உணர்தல் வேண்டும்.

(ஈ) சீடத்துவம் என்பது வெறும் சொற்களில் அல்ல, மாறாக, செயல்களில் அடங்கியுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்' என்கிறார் பவுல். பொருள் ஆசையை தங்களுடைய பகிர்ந்தளிக்கும் பண்பால் வெற்றிகொண்டு, நற்செயல்களுக்குப் பயன்படுத்துகிறார்கள் நற்செய்தியில் நாம் காணும் பெண்கள்.


Wednesday, September 20, 2023

புனித மத்தேயு

இன்றைய இறைமொழி 

வியாழன், 21 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் வியாழன்

எபே 4:1-7, 11-13. மத் 9:9-13.

புனித மத்தேயு

இன்று திருத்தூதரும் நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். வங்கியாளர்கள், காசாளர்கள், மற்றும் தணிக்கையாளர்களின் பாதுகாவலர் இவர்.

இந்திய மெய்யியலில், 'மார்க்கம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, 'வழி,' 'மோட்சம்' அல்லது 'பேறுபெற்ற நிலையை அடைவதற்கான வழி.' 'ஞான மார்க்கம்' ('அறிவின் வழி மோட்சம்'), 'கர்ம மார்க்கம்' ('செயல் வழி மோட்சம்'), 'பக்தி மார்க்கம்' ('பக்தி அல்லது வழிபாட்டு வழி மோட்சம்). இதன் பின்புலத்தில், மத்தேயு நற்செய்தி ஞானமார்க்கம் என்றும், மாற்கு நற்செய்தி கர்மமார்க்கம் என்றும், லூக்கா நற்செய்தி பக்திமார்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.

'விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்' (மத் 13:52) என்று இயேசு கூறுவதாக மத்தேயு பதிவு செய்கின்றார். 

இந்தப் பதிவு நமக்கு இரு விடயங்களைக் கூறுகிறது: ஒன்று, 'விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட' அல்லது 'அறிந்துகொள்ளப்பட' வேண்டியது. ஆக, இது அறிவு அல்லது ஞானம் சார்ந்தது. எல்லாரும் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொள்ள முடியும். இரண்டு, இந்தப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரைப் பற்றியே கூறுகின்றது. ஏனெனில், சுங்கச் சாவடியில் வரி வசூல் செய்துகொண்டிருந்த மத்தேயு, விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்டவுடன், தன் இயேசு அனுபவத்திலிருந்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் வெளியே கொண்டு வந்து நற்செய்தியாகப் பதிவு செய்கின்றார். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபே 4:1-7,11-13), புனித பவுல், 'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்' என்று எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுரை கூறுகின்றார். மத்தேயு தான் பெற்ற திருத்தூதர் என்ற அழைப்புக்கு ஏற்ப மூன்று நிலைகளில் வாழ்கின்றார்:

ஒன்று, பழையதை விடுத்துப் புதியதைப் பற்றிக்கொள்கின்றார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்' என்கிறார் பவுல் (காண். 1 கொரி 13:10). நிறைவான இயேசு தனக்குக் கிடைத்தவுடன் அரைகுறையான தன் வரிவசூலிப்பவர் பணியை விட்டுவிடுகின்றார். 

இரண்டு, 'இதுதான் நான்!' எனத் துணிச்சலுடன் இயேசுவின்முன் எடுத்துச் சொல்கின்றார். தான் அழைக்கப்பட்டவுடன் முதல் வேளையாக இயேசுவைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கின்றார் மத்தேயு. உணவு என்பது உறவின் அடையாளம். அந்த உறவுத்தளத்தில், மற்றவர்கள் தன்மேல் பதித்த முத்திரைகள் மற்றும் பழிச்சொற்களைப் பொருட்படுத்தாமல், தான் யார் என்றும், தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்றும் இயேசுவுக்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு. கடவுளுக்கே விருந்து வைத்த சில விவிலியக் கதைமாந்தர்களில் இவரும் ஒருவர். அடுத்தவருடன் தன் உணவைப் பகிர்ந்துகொள்ள விழைகின்ற பக்குவமே மேன்மையானது. ஏனெனில், பசி என்ற அடிப்படை உணர்வு நம்மை பதுக்கிக்கொள்ளவே தூண்டுகிறது.

மூன்று, 'கடவுள் நம்மோடு' என்னும் நற்செய்தி. மத்தேயு நற்செய்தி நமக்குத் தந்த மாபெரும் செய்தி, 'கடவுள் நம்மோடு' என்பதுதான். மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை. 'உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்' என்று நம்மோடு தங்கிவிடுகின்றார். இந்த மாபெரும் எண்ணத்திற்குச் சொந்தமானவர் மத்தேயு. கடவுளை மனுக்குலம் சிக்கெனப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவராக இருக்கின்றார் மத்தேயு.

மத்தேயு நற்செய்தியில் நாம் இரசிக்க வேண்டிய இன்னும் பல கூறுகள் உள்ளன: இயேசுவின் தலைமுறை அட்டவணை, திருக்குடும்பத்தின் ஒப்பற்ற தலைவர் யோசேப்பு, அவருக்கு மத்தேயு வழங்கிய 'நேர்மையாளர்' என்னும் அழகிய தலைப்பு, கீழ்த்திசை ஞானியர், மலைப்பொழிவு, பேதுரு கடலில் நடத்தல், யூதாசின் வருத்தம், பிலாத்துவின் மனைவியின் கனவு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு, திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டு, இறுதித் தீர்ப்பு.

இன்றைய நாளில் நாம் மத்தேயு நற்செய்தியின் சில பகுதிகளையாவது வாசிக்க முயற்சி செய்வோம்.

'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரல் கேட்டவுடன், அப்படியே அனைத்தையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றார். கணக்குப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றோ, நாளை பார்க்கலாம் என்றோ அவர் சொல்லவில்லை. அவர் தயாராக இருந்தார். எப்போதும்.

'கடவுளின் கொடை' எனப் பொருள்படும் 'மத்தேயு' தன்னையே கடவுளுக்குக் கொடையாகக் கொடுத்துவிடுகின்றார். வெறும் வரவுக் கணக்கை எழுதிக்கொண்டிருந்தவர், மீட்பின் வரவுக் கணக்கை நற்செய்தியாக எழுதி இன்றும் நம்மோடு வாழ்கின்றார்.


Monday, September 18, 2023

எழுந்திடு!

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 19 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் செவ்வாய்

1 திமொ 3:1-13. லூக் 7:11-17.

எழுந்திடு!

1. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை உயிர்பெற்றெழச் செய்கிறார். நயீன் கைம்பெண்ணின் மகன் உயிர்பெறுதல் என்று நாம் வாசிக்கும்போதே நம் உள்ளம் சாரிபாத்துக் கைம்பெண் மகன் இறைவாக்கினர் எலியாவால் உயிர்பெற்றதையும், சூனேம் நகரச் செல்வந்தப் பெண்ணின் மகன் இறைவாக்கினர் எலிசாவால் உயிர்பெற்றதையும் எண்ணிப்பார்க்கிறது. இலக்கிய அடிப்படையில் பார்க்கும்போது, நற்செய்தியாளர் லூக்கா, இயேசுவை முதல் ஏற்பாட்டுப் பெரிய இறைவாக்கினர்களின் வரிசையில் பதிவு செய்ய விரும்புகிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆகையால்தான், நிகழ்வின் இறுதியில், கூடியிருந்த மக்கள் கூட்டம் அச்சமுற்றவர்களாக, 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்துள்ளார்' என முழக்கமிடுகிறார்கள். எலியா, எலிசா என்னும் பெரிய இறைவாக்கினர்களின் வரிசையில் இயேசுவும் ஓர் இறைவாக்கினராக அறிமுகம் செய்யப்படுகிறார். 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் ஆன்மிகப் பொருள் என்ன?

(அ) நயீன் நகரத்துக் கைம்பெண் அழுதுகொண்டிருக்கிறார். நம் வாழ்வில் ஈடுசெய்ய முடியாத இழப்பு அல்லது வருத்தம் நேரும்போது நம் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. இந்த இளவல் தன் கணவரையும் தன் ஒரே மகனையும் இழந்தவராக இருக்கிறார். தன் கையறுநிலையில் அவர் கண்ணீர் வடிக்கும்போது இயேசு அவர்மீது பரிவு கொண்டு அவரை நோக்கி, 'அழாதீர்!' என்கிறார். இயேசு நிகழ்த்தவிருந்த வல்ல செயலை இது முன்குறிக்கிறது. நம் வாழ்வின் கையறுநிலையில் நாம் கண்ணீர் வடித்துக்கொண்டே வழிநடக்கும்போது, வழியில் நம்மைத் திடீரென எதிர்கொள்கிற கடவுள் நம்மேல் பரிவுகொள்கிறார்.

(ஆ) அடுத்து இயேசுவின் பார்வை இறந்தவரைத் தூக்கிச் செல்கிற பாடையின்மேல் படுகிறது. பாடையைத் தொடுகிறார். தூக்கிச் சென்றவர்கள் நிற்கிறார்கள். இறந்தோர் எடுத்துச்செல்லப்படுகிற பாடை நிறுத்தப்படுவதை எந்தக் கலாச்சாரமும் ஏற்பதில்லை. அதை ஒரு பெரிய எதிர்அடையாளமாகவே பார்ப்பார்கள். நின்றவர்கள் உள்ளத்தில் குழப்பமும் எரிச்சலும் ஒருசேர எழுந்திருக்கும். இவர்களைப் பொருத்தவரையில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட வேண்டியவர். அவ்வளவுதான்! ஆனால், இயேசுவைப் பொருத்தவரையில் இறந்தவருக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட முடியும். நாமும் சில நேரங்களில், 'நான் இவ்வளவுதான்! என் வாழ்க்கை இவ்வளவுதான்!' என நம் இறந்தகாலத்தைத் தூக்கிச் சுமக்கிறோம். ஆனால், நமக்கு ஒரு நிகழ்காலமும் எதிர்காலமும் உண்டு.

(இ) 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திடு!' என்று இறந்த இளைஞனைப் பார்த்துச் சொல்கிறார் இயேசு. இறந்த இளைஞனுடைய காதுகளில் இச்சொற்கள் விழுகின்றன. 'ஒளி உண்டாகுக!' என்று சொல்லும்போதே ஒளி உண்டானதுபோல, 'எழுந்திடு!' என்று இயேசு சொல்லும்போதே எழுகிறான் இளைஞன். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்குகிறார். அதாவது, அவருடைய முழு உடலும் உடனடியாக இயக்கம் பெறுகிறது. பாடையில் எடுத்துக்கொண்டு வரப்பட்டவர் தானே எழுந்து செல்கிறார் தன் தாயோடு. கடவுள் நம் அருகில் நின்று, 'எழுந்திடு!' என்கிறார். நாமாகவே அக்கட்டளைக்குப் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.

2. இன்றைய முதல் வாசகத்தில், சபைக் கண்காணிப்பாளர் ('எபிஸ்கோபோஸ்', ஆயர்) மற்றும் திருத்தொண்டர் ('டியாகோனோஸ்') கொண்டிருக்க வேண்டிய பண்புநலன்களைப் பற்றி திமொத்தேயுவுக்கு எடுத்துரைக்கிறார் பவுல். இவர்களுடைய பணி நம்பிக்கையை அறிக்கையிடுவதும், அதற்குச் சான்றுபகர்வதுமே ஆகும்.

3. ஆண்டவராகிய கடவுள் நமக்கும் தன் பரிவுள்ளத்தைக் காட்டுகிறார். அவருடைய திருமுன்னிலையில் கண்ணீர், அச்சம், குழப்பம், எரிச்சல், இறப்பு, இழப்பு அனைத்தும் மறைந்துவிடுகின்றன. திடீரென நம்மை எதிர்கொள்கிற அவர் நம் வாழ்க்கைப் பயணத்தின் திசையையும் போக்கையும் மாற்றிப் போடுகிறார். நாம் அழைக்கப்பட்ட நிலையில் நம்பிக்கையை அறிக்கையிடவும் அதற்குச் சான்று பகரவும் நம்மைத் தூண்டுகிறார்.


Sunday, September 17, 2023

நம்பிக்கை நெருக்கம்

இன்றைய இறைமொழி 

திங்கள், 18 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் வாரத்தின் திங்கள்

1 திமொ 2:1-8. லூக் 7:1-10.

நம்பிக்கை நெருக்கம்

நூற்றுவர் தலைவரின் பணியாளர் ஒருவருக்கு இயேசு நலம் தரும் நிகழ்வை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவு செய்கிறார்கள். 'தூரத்திலிருந்தே நலம் தருதல்' என்னும் வல்ல செயலாக இது வகைப்படுத்தப்படுகிறது. நூற்றுவர் தலைவர் இயேசுவிடம் நேரடியாக வருவதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். ஆனால், லூக்கா நற்செய்தியாளர், சற்றே மாறுபட்டு, நூற்றுவர் தலைவர் முதலில் யூதரின் மூப்பர்களையும், தொடர்ந்து நண்பர்களையும் அனுப்பி வைப்பதாகப் பதிவு செய்கிறார். நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை கண்டு இயேசு வியப்படைகிறார்.

இயேசுவுக்கும் நூற்றுவர் தலைவருக்கும் இடையே தூரம் இருக்கிறது. ஆனால், அந்தத் தூரத்தை நம்பிக்கை குறைக்கிறது. 

(அ) நூற்றுவர் தலைவர் தம் பணியாளர்மேல் அக்கறைகொண்டவராக இருக்கிறார். ஆக, தமக்குக் கீழ் இருக்கும் பணியாளரை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்காமல், மாண்புக்கும் மதிப்புக்கும் உரிய நபராகக் காண்கிறார் நூற்றுவர் தலைவர். அவருக்கு நலம் வேண்டி இயேசுவிடம் ஆட்களை அனுப்புகிறார்.

(ஆ) யூத மூப்பர்களின் வருகை. யூத மூப்பர்கள் நூற்றுவர் தலைவரின் நற்குணங்களையும், நன்மைச் செயல்களையும் இயேசுவிடம் எடுத்துரைத்து அவருக்காகப் பணிந்துரை செய்கிறாhகள். நூற்றுவர் தலைவர் உரோமையராக இருந்தாலும் யூதர்களோடு நெருக்கம் கொண்டவராக இருக்கிறார். இயேசுவிடம் வருகிற யூத மூப்பர்களும் எந்தவித முற்சார்பு எண்ணமும் பயமும் இன்றி இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்கள்.

(இ) நண்பர்களின் வருகை. இயேசு தம் இல்லம் நெருங்குவதை அறிகிற நூற்றுவர் தலைவர் தம் நண்பர்களை அனுப்புகிறார். நண்பர்களின் சொற்களில் தம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தாம் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்பதையும், அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும் எவரும் அதிகாரம் பெறுகிறார் என்பதையும் அறிந்தவராக இருக்கிறார்.

(ஈ) நம்பிக்கை. 'ஒரு சொல் போதும்! வருகை தேவையில்லை' என்பது நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையாக இருக்கிறது. இயேசுவின் சொற்களுக்கு உரிய அதிகாரத்தை நூற்றுவர் தலைவர் அறிந்தவராக இருக்கிறார். முதலில் தம் செயல்களை எடுத்துச் சொல்லி நலம் பெற விரும்பியவர், பின் தம் நம்பிக்கையால் நலம் பெற்றுக்கொள்கிறார் தம் பணியாளருக்கு!

(உ) தொடர்புகளும் உதவிகளும். இந்நிகழ்வில் வரும் இயேசு, யூத மூப்பர்கள், நண்பர்கள் ஆகியோர் நூற்றவர் தலைவருக்கு உதவி செய்கிறார்கள். நாம் மேற்கொள்ளும் மனிதத் தொடர்புகள் நமக்குத் தகுந்த வேளையில் நமக்குத் துணைநிற்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே உள்ள இணைப்பாளர் கிறிஸ்துவே என மொழிகிற பவுல், மற்றவர்களுக்காகப் பரிந்துபேச வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.


Saturday, September 16, 2023

மன்னிப்பின் வழி மன்னிப்பு


இன்றைய இறைமொழி 

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு

சீஞா 27:30-28:7. உரோ 14:7-9. மத் 18:21-35.

மன்னிப்பின் வழி மன்னிப்பு

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் குழுமப் பொழிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். குழுமத்தில் தமக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருரை எத்தனை முறை மன்னிப்பது என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது. யூத மரபில் ஏழு என்பது நிறைவின் அடையாளம் மட்டுமல்ல தாராள உள்ளத்தின் அடையாளமும் கூட. 

'டோமினோ விளைவு' அல்லது 'தொடர் வினை' அல்லது 'தொடர் விளைவு' என நாம் கேள்விப்பட்டுள்ளோம். நிறைய இடங்களில் விளையாட்டுச் சீட்டு அட்டைகளை வைத்து இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இப்படிப்பட்ட ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். 'என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறைய மன்னிக்க வேண்டும்?' எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, 'ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை' என்கிறார். மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவன் எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றார்.

பணியாளன் ஒருவன் தன் அரசனால் தன்னுடைய ஏறக்குயை 510 கோடி ரூபாய்க் கடன் மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளனால் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க் கடனை மன்னிக்க மறுக்கின்றான். நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

இயேசு சொல்கின்ற டோமினோ விளைவு என்னவென்றால், அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சகப் பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் ... என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டில் ஒரு அட்டை தடைபடும்போது ஒட்டுமொத்த விளையாட்டும் பாதியிலேயே முடிந்துவிடுகிறது. 

ஆக, முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொநூ 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில், ஒரு செயல் தொடர் பழக்கமாக மாறும் வரை செய்ய வேண்டும் என்ற பொருளில்தான் இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால், 22ஆம் நாள் எந்தவொரு எழுப்பியும் இல்லாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம். ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது. இந்தவொரு பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார். மன்னிப்பதை நம் பழக்கமாக்கிக் கொள்வது.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார். எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!

இயேசு வழங்கும் உவமையில் அரசர் தன் பணியாளரை மன்னிக்கின்றார். ஆனால், அந்தப் பணியாள் தன் சகபணியாளை மன்னிக்க மறுக்கின்றார். தான் மன்னிக்கப்பட்டதை மறக்கின்றார். அவருடைய மன்னிக்காத செயல் அவருக்கு எதிராகத் திரும்புகிறது.

ஏன் அந்தப் பணியாளரால் மன்னிக்க இயலவில்லை? இரக்கம் என்பதை மறந்து நீதி என்ற தளத்தில் செயலாற்றினான் அவன்.

எனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருக்கு நான் தீங்கிழைப்பது நீதியே. ஆனால், இரக்கம் என்பது நீதியைத் தாண்டுகிறது. அரசரைப் போல இருக்க வாய்ப்புக் கிடைத்தும், அந்தப் பணியாளன் ஒரு பணியாளனாகவே இருக்க முற்பட்டான். அரச நிலைக்கு உயர்ந்தால், நம் எண்ணங்கள் உயர்ந்தால் மன்னிப்பு நம் இரண்டாம் இயல்பாகிவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'வெகுளி, சினம் ஆகியவை வெறுப்புக்குரியவை' என மொழிகிற ஆசிரியர், நாம் மன்னிப்பதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் அன்பு செய்வதற்கும் மூன்று காரணங்களைத் தருகின்றார்: (அ) பழிவாங்குவோர் ஆண்டவரின் பழியைப் பெறுவர். மன்னிப்போர் ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவர். (ஆ) மன்னிப்பவருடைய மன்றாட்டுகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. (இ) நம் வாழ்வின் முடிவை நாம் மனத்தில் கொண்டவர்களாக வாழ்தல்.

இரண்டாம், வாசகத்தில், நாம் இருந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறக்கிறோம் என்கிறார் பவுல். ஆண்டவருக்கென்றே வாழ்கிற நாம் அவரைப் போல வாழ்வதற்கான ஒரு வழியே இரக்கம் காட்டுதல்.

மன்னிக்க இயலாதவர்களுக்கு மறுக்கப்படுகிற ஐந்து விடயங்கள் பற்றிப் பேசுகிறது விவிலியம்:

(அ) மன்னிக்காதவர்களின் இறைவேண்டல் கேட்கப்படுவதில்லை (காண். மத் 11:24).

(ஆ) மன்னிக்காதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை (காண். சீஞா 28:1).

(இ) மன்னிக்காதவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை (காண். யாக் 2:13).

(ஈ) மன்னிக்காதவர்களின் நோய்கள் குணமாவதில்லை (காண். சீஞா 28:3, நீமொ 17:22).

(உ) மன்னிக்காதவர்களின் பலிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (காண். மத் 5:23-24).

மன்னிக்கும் வழக்கத்தை உருவாக்குவது எப்படி?

(அ) நம் பகைவர்களுக்காக, நமக்கு எதிராகக் குற்றம் செய்வோக்காக இறைவேண்டல் செய்வது (காண். மத் 5:44).

(ஆ) அவர்களைப் பற்றிய நல்ல விடயங்களைப் பார்ப்பது, பகிர்வது.

(இ) அவர்களுக்கு நன்மை செய்வது (காண். உரோ 12:17-21).



Thursday, September 14, 2023

மரியாவின் ஏழு துயரங்கள்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 15 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் வெள்ளி

1 திமொ 1:1-2,12-14. யோவா 19:25-27.

மரியாவின் ஏழு துயரங்கள்

இன்று புனித கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நினைவுகூர்கின்றோம். கிபி 1232ஆம் ஆண்டில் தொஸ்கானா பகுதியின் ஏழு இளவல்கள் ('மரியின் ஊழியர்கள்') தங்களுடைய 'மரியின் ஊழியர் சபையை' தோற்றுவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மரியின் ஏழு துயரங்களை நினைவுகூர்ந்தவர்களாக, சிலுவையின் அடியில் நிற்கின்ற அன்னை கன்னி மரியாவைத் தங்களுடைய பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டனர். ஏழு துயரங்களின் செபமாலை, ஏழு துயரங்களின் உத்தரியம், துயர்மிகு அல்லது வியாகுல அன்னைக்கான நவநாள் போன்ற பக்தி முயற்சிகளையும் இவர்கள் தோற்றுவித்தனர். 

1913ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது, திருச்சிலுவை மகிமையின் திருவிழாவுக்கு அடுத்த நாள் கொண்டாடுமாறு வழிபாட்டு ஆண்டை நெறிப்படுத்தினார். 

துன்பம் அல்லது துயரம் என்ற உணர்வு பற்றிய நம் புரிதல் மூன்று நிலைகளில் அமையலாம்: (அ) ஆன்மீகமயமாக்கல் - அதாவது, நான் இன்று துன்புற்றால், கடவுள் அத்துன்பத்திற்கு தகுந்த இன்பத்தைத் தருவார் என நினைப்பது. (ஆ) அறநெறிமயமாக்கல் - இந்தப் புரிதலில் என் துன்பம் என்பது எனது பாவம் அல்லது குற்றத்திற்கான தண்டனை என நான் நினைப்பேன். (இ) எதார்த்த புரிதல் - அதாவது, இன்பத்தைப் போன்று துன்பம் என்பது ஒரு வகையான இயல்பான உணர்வு. அதற்கு மேல் எதுவும் இல்லை.

துன்பம் நமக்கு ஏன் வருகிறது? (அ) நம் தெரிவுகளால் - அதாவது, நான் செய்த தவறான தெரிவுகள் அல்லது நான் எடுத்த தவறான முடிவுகள் எனக்குத் துன்பம் தரலாம். எடுத்துக்காட்டாக, காய்ச்சல் அடிப்பது போல இருக்கிறது. மருத்துவரிடம் செல்லாமல் எனக்கு நானே மருந்து எடுத்துக்கொள்கிறேன். அது என் நிலையை இன்னும் கடினமாக்குகிறது. இத்துன்பம் என் தெரிவால் வந்தது. (ஆ) நம் இருத்தல்நிலையால் - அதாவது, நான் தமிழ் மொழி பேசுகிறேன் என்பதற்காக, அல்லது நான் தமிழன் என்பதற்காக என் பக்கத்து மாநிலம் எனக்குத் தண்ணீர் தராமல் எனக்குத் துன்பம் தருவது. தமிழனாய்ப் பிறந்தது என் இருத்தல்நிலையால் வந்தது. இருந்தாலும், அதற்காக நான் துன்புற நேருகிறது. (இ) சமூகச் சூழ்நிலையால் - தவறான மற்றும் தன்னலமான அரசியல், பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள் எனக்குத் துன்பம் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நான் ஓர் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயி. அரிசிக்கான கொள்முதல் விலையை அரசு குறைத்ததால் நான் துன்பத்திற்கு ஆளாகிறேன். (ஈ) இயற்கைப் பேரழிவுகள் - தொற்றுநோய், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் வரும் துன்பம். (உ) மனித பேரழிவுகள் - போர், அணுஆயுதம், தன்னலம் போன்ற காரணிகளால் வரும் துன்பம். மற்றும் (ஊ) அப்பாவிகளின் துன்பம் - இறப்பு அல்லது இழப்பால் வரும் துன்பம். திருட்டு, கொள்ளை நோய் போன்றவை நம் இல்லங்களில் ஏற்படுத்தும் துன்பம். நாம் நல்லதே செய்தாலும் நமக்குத் துன்பம் வருவது.

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிறார் புத்தர். மேலும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியும் இருக்கிறது என்கிறார் அவர்.

ஆனால், வலி இல்லாமல் வழி இல்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.

விவிலியத்தின் ஞானநூல்கள் துன்பம் வழியாகவே ஒருவர் நேர்மையான வாழ்வுக்குப் பயிற்றுவிக்கப்படுவதாகச் சொல்கின்றன. இயேசுவே தான் இறைமகனாக இருந்தும் தன் துன்பத்தின் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கின்றார் (காண். எபி 5). 

இன்று துன்பத்துக்கான நம் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் உள்ளது:

(அ) துன்பத்தோடு போராடு - அதாவது, துன்பம் வேண்டாம் என நினைத்து அதைத் தவிர்க்கும் விதத்தில் அதனோடு போராடுவது. நம் தலையில் தோன்றும் வெள்ளை முடி என்பது இயற்கை நிகழ்வு. ஆனால், 'வெள்ளை முடியோடு போராடுங்கள்!' எனச் சொல்கிறது இந்துலேகா. தாய்மைப்பேறின்மை, வயது மூப்பு போன்றவை இன்று நோய்களாகப் பார்க்கப்பட்டு, இத்துன்பங்கள் அகல்வதற்கு மருத்துவ உலகம் நம்மையும் போராடச் செய்கிறது.

(ஆ) துன்பத்திலிருந்து தப்பி ஓடு - அதாவது, நம் துன்பத்தை நாம் மறப்பதற்கு இன்று நிறைய மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மது, போதை, டிவி சீரியல்கள், செய்திகள், காணொளிகள், புத்தகங்கள், பாடல்கள் என நாம் எதையாவது பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க வேண்டும் என உலகம் கற்பிக்கிறது. இப்படியாக, துன்பத்திலிருந்து நம்மைத் தப்பி ஓடச் சொல்கிறது. ஆனால், இது தற்காலிகமான ஓடுதலாக மட்டுமே இருக்க முடியும்.

(இ) துன்பத்தை நேருக்கு நேர் எதிர்கொள் - இதுதான், இயல்பான பதிலிறுப்பு. இதுவே, உண்மையான, நலமான பதிலிறுப்பு. துன்பம் என்பது நம் இருத்தல் மற்றும் இயக்கத்தின் ஒரு இன்றியமையாத பகுதி என நினைத்து, நம் துன்பங்களை எதிர்கொள்வது.

மரியாளின் ஏழு துயர நிகழ்வுகள் ஏழு வகையான துன்ப உணர்வுகளை அவருள் எழுப்புகின்றன:

(1) சிமியோனின் இறைவாக்கு - காத்திருத்தல் என்னும் துன்பம்

(2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல் - திக்கற்ற நிலை என்னும் துன்பம்

(3) இயேசு ஆலயத்தில் காணாமற்போதல் - இழப்பு என்னும் துன்பம்

(4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல் - கையறுநிலை என்னும் துன்பம்

(5) இயேசுவின் சிலுவை இறப்பு - அவமானம் என்னும் துன்பம்

(6) இறந்த இயேசுவை மடியில் ஏந்துதல் - பலிகடா ஆதல் என்னும் துன்பம்

(7) இயேசுவின் அடக்கம் - வெறுமை என்னும் துன்பம்

மேற்காணும் ஏழு துன்பங்களும் நாமும் அனுபவிக்கும் துன்பங்களே. 

'துன்பம் மறைந்து போகும், அழகு என்றும் நிலைக்கும்!'

எனவே, துன்பங்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அதை நோக்கிப் புன்முறுவல் பூத்தல் நலம்.

ஏனெனில், என் துன்பத்தை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்றுமுறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்றார் (காண். 2 கொரி 12:9).

இத்திருவிழா நமக்குத் தருகின்ற செய்தி என்ன?

(அ) துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம்

பாவத்தின் வழியாகவே துன்பம் வருகின்றது என்று நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆனால், பாவம் அறியாத மரியா துன்பம் ஏற்கின்றார். ஆன்மிக நிலையில் அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்றாலும், மனித வாழ்வின் எதார்த்த நிலையில் அவர் துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆக, துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம். இயேசுவின் துன்பம் நம் பாவங்களுக்காக என்று பல நேரங்களில் நாம் இறையியலாக்கம் செய்கின்றோம். ஆனால், மரியாவின் துன்பங்களை நாம் அப்படி இறையியலாக்கம் செய்வதில்லை. மரியா துன்புற்றார். அவ்வளவுதான்! அதுதான் எதார்த்தம். பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக துன்பங்கள் அனுபவிப்பதாக நாம் சொல்வது அனைத்தும் தவறு. நாம் யாரும் யாருக்காகவும் துன்பங்கள் அனுபவிக்க முடியாது. நாம் துன்பங்கள் அனுபவிக்கிறோம்! அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு புரிதல் வந்தால்தான் நாம் துன்பத்திற்கு ஆன்மிக அல்லது அறநெறிச்சாயம் பூசுவதை நிறுத்துவோம்.

(ஆ) துன்பம் ஒரு மேலான உணர்வு

'சிரிப்பை விடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 7:3). துன்புறுதல் என்பது செயல். துயரம் அல்லது துன்பம் என்பது ஓர் உணர்வு. எடுத்துக்காட்டாக, நான் வழியில் செல்லும்போது கால் பிசகிவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது நான் துன்புறுகிறேன். கால் சரியாகிவிட்டால் துன்பம் மறைந்துவிடுகின்றது. ஆக, துன்பம் அல்லது துயரம் என்பது துன்புறுதல் என்னும் செயல் இருக்கும் வரை இருக்கின்றது. என் அப்பா இறந்தபோது நான் துன்பமுற்றேன். ஆனால், அவரின் இழப்பு அப்படியே ஒரு துயரமாக என் மனத்தில் படிந்துவிடுகிறது. துன்பமுறுதல் என்னும் செயல் ஒரு நாளில் முடிந்தாலும் அது உணர்வாக இன்றுவரை நீடிக்கிறது. மரியாவின் துயரம் நமக்கு இத்தகைய உணர்வைத்தான் சொல்கிறது. துயரம் என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வு உள்ளத்தைப் பண்படுத்தும் அல்லது உழும். அதாவது, உழும்போது நிலத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நிலம் புதிய காற்றைச் சுவாசிக்கின்றது. விதையையும், உரத்தையும், நீரையும் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறது. நாம் துன்புறும்போதும் உள்ளத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நாம் புதிய அனுபவங்களை உள் வாங்குகிறோம். அந்தக் கீறல் வழியாகவே நாம் நம்மையே முழுமையாகப் பார்க்கின்றோம். ஆதாம்-ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோர் இன்பத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே, ஆதாம் தன் மனைவி ஏவாளுக்கு, 'தாய்' என்ற பெயரைக் கொடுக்கின்றார். அதாவது, காயினைப் பெற்றெடுக்கும் முன்னரே ஏவாள் 'தாய்' என்னும் பெயர் பெறுகிறாள். துன்பம் ஏற்கும் எவரும் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்கின்றனர்.

(இ) துன்பம் என்பது நினைவு

நம் நினைவுகளே துன்பமாக மாறுகின்றன என்று இந்திய மெய்யியல் கற்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நம் சுண்டு விரல். இது என்றாவது நம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், கதவுக்கு இடையில் அதைக் கொடுத்து நாம் நசுக்கிவிட்டால், அது எந்நேரமும் நம் நினைவில் நிற்கிறது. ஆக, துன்பம் என்ற உணர்வு மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. நான் அணியும் செருப்பு என் காலுடன் பொருந்திவிட்டால் அதை நான் நினைப்பதே இல்லை. அது பொருந்தவில்லை என்றால் அது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது எனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக, பொருந்துகின்ற ஒன்று வலி தருவதில்லை. வலி தராத ஒன்று நம் நினைவில் நிற்பதில்லை. துயரப்படுகிறவர்கள் மது அருந்தக் காரணம் என்ன? அல்லது வாழ்வில் இழப்பை அனுபவிப்பவர்கள் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லக் காரணம் என்ன? தங்களுடைய நினைவுகளை மறக்கவும் மாற்றவும்தான். 

அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நாம் வெறுமனே போற்றிப் புகழ்ந்து அவரை அந்நியப்படுத்திவிட வேண்டாம். அவை வெறும் மறையுரைக் கருத்துகள் அல்ல. மாறாக, அவர்கள் நகர்ந்து வந்த வாழ்க்கைப் பாதைகள். 

நம் உள்ளத்தை, உடலை, நினைவை பல வாள்கள் அன்றாடம் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டும், சிலவற்றுக்கு மருந்திட்டும், சில வாள்களை அப்படியே தூக்கிக்கொண்டும், சில வாள்களைப் பிடுங்கும்போது பாதி வாள் உடைந்தும் பாதி வாள் இன்னும் நம் உடலில் மாட்டிக்கொண்டும், காயத்தின் ரணங்களோடு நாம் நடந்துகொண்டே இருக்கின்றோம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடிய எதார்த்தங்கள். ஆனால், துன்பமே நீடித்த, உண்மையான எதார்;த்தம். எனக்கு ருசியாக இருந்து எனக்கு இன்பம் தரும் உணவு அஜீரணமாக மாறினால் துன்பம் வந்துவிடுகிறது. பசி என்னும் துன்பம் நான் உணவு உண்டவுடன் மறைந்துவிடுகிறது.

இன்பம் தருகின்ற ஒன்று கண்டிப்பாகத் துன்பமாக மாறும்.

துன்பம் தருகின்ற ஒன்று துன்பமாகவே நீடிக்கிறது. இன்பத்திற்குப் பின்னரும்!


Wednesday, September 13, 2023

திருச்சிலுவையின் மகிமை

இன்றைய இறைமொழி

வியாழன், 14 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் வியாழன்

எண் 21:4-9. பிலி 2:6-11. யோவா 3:13-17.

திருச்சிலுவையின் மகிமை

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளம் ஒன்றில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான அடையாளம் எது என்று காண ஒரு சர்வே நடத்தப்பட்டது. இஸ்ரயேலைக் குறிக்கும் நட்சத்திரம், கிறிஸ்தவர்களைக் குறிக்கும் சிலுவை, பௌத்தர்களைக் குறிக்கும் சக்கரம், மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்' என்னும் எழுத்து என நிறைய அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன. இறுதியில் மெக்டொனால்டைக் குறிக்கும் 'எம்' என்னும் எழுத்தே மிகவும் பரிச்சயமானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல, மாறாக, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டு ஓர் அடையாளம் திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த விழாவின் பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது என்ன? கிபி இரண்டு முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு அறையப்பட்டு உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே இருந்தது. இதன்படி 326-ஆம் ஆண்டு எருசலேமில், கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை பல இடங்களுக்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தில்தான் திருச்சிலுவையின் மகிமை விழா தொடங்கியது.

திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக, இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே வீற்றிருக்கின்றது.

இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார் என்பதையும், பவுல் எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம் உரையாடுகின்ற இயேசு, 'பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்' என்கிறார். 'உயர்த்தப்படுதல்' என்பதுற்கு யோவான் நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்) பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத் தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல் எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார். வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர். உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது. சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு தருகின்றார். 

தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.

இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின் நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.

இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது. பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக் கொண்டிருந்ததால்தான், 'ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்' என்று இயேசுவைத் தடுக்கின்றார்.

இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும் குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது.

இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.


பேறுபெற்றோர்

இன்றைய இறைமொழி

புதன், 13 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் செவ்வாய்

கொலோ 3:1-11. லூக் 6:20-26.

பேறுபெற்றோர்

புதிதாகத் தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுடன் சமவெளியில் நிற்கிற இயேசு, அவர்களை நோக்கியும் தம்மைச் சுற்றி நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கியும் உரையாற்றுகிறார். இந்த உரை சமவெளிப் பொழிவு என அழைக்கப்படுகிறது. நான்கு பேறுபெற்ற நிலைகள், நான்கு கேடுற்ற நிலைகள் என எடுத்துரைக்கிறார் இயேசு. ஞானநூல் இலக்கியக் கூற்றின் பின்புலத்தில் நோக்கினால், இரு நிலைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள்ள அழைக்கிறார் இயேசு. 

1. உண்மையான பேறுபெற்றநிலை

'ஏழையரே நீங்கள் பேறுபெற்றவர்கள்' என்று தம் முன் நிற்கிற மக்கள் கூட்டத்தை அழைக்கிறார் இயேசு. பொருளாதார ஏழ்மை மட்டுமல்ல, ஆன்மிக ஏழ்மையும், இறைச்சார்புநிலையும் இங்கே குறிக்கப்படுகிறது. தன்னிறைவில் அல்ல, மாறாக, இறைச்சார்புநிலையே நமக்கு நிறைவான மகிழ்ச்சி தருகிறது. கடவுளே அனைத்து வளங்களின் ஊற்று என்பதை ஏற்றுக்கொள்ளவும் தாழ்ச்சி கொள்ளவும் அழைக்கிறது இந்நிலை.

2. பசி என்னும் கொடை

பசித்திருப்போர் அனைவரும் நிறைவுபெறுவர் என்கிறார் இயேசு. நீதிக்காகவும், நேர்மைக்காகவும் பசித்திருக்கிறவர் நிறைவு பெறுகிறார்.

3. துன்பம் தழுவுதல்

வாழ்வின் துன்பங்கள் மறுதலிக்க இயலாதவை. நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு வாழ்தல் அவசியம். மற்றவர்களின் துன்பம் கண்டு அழுபவர், அத்துன்பத்திற்கு ஆறுதல் தர நினைப்பதோடு, அத்துன்பம் களையவும் பணி செய்கிறார். 

4. துயரத்தில் துணிவு

நாம் மற்றவர்களால் துன்பத்துக்கு உள்ளாகும்போது, நிராகரிக்கப்படும்போது துணிவு கொள்தல் அவசியம்.

5. உலகப் போக்கிலான தேடல்கள் பற்றிய எச்சரிக்கை

'ஐயோ! கேடு!' என்னும் பகுதியில், செல்வத்தின்மேல் பற்றுறுதி, தன்இன்பத் தேடல், பொழுதுபோக்கு நாடுதல், புகழ்ச்சியை விரும்புதல் போன்றவை பற்றி எச்சரிக்கிறார் இயேசு. உலகமைய வெற்றி நம் ஆன்மிகப் பயணத்திற்குத் தடையாக இருக்கிறது.

நம் முன்பாக இருநிலை வாழ்க்கை முறைகளை வைக்கிற இயேசு, அவற்றில் ஒன்றைத் தெரிவுகொள்ள நம்மை அழைக்கிறார். 

இன்றைய முதல் வாசகத்தில், 'மேலுலகு சார்ந்தவற்றையே நாடுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். மேன்மையானவற்றை நாம் நாடும்போது தாழ்வானவை மறைந்துபோகின்றன.


Monday, September 11, 2023

திருத்தூதர் குழுமம்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 12 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் செவ்வாய்

கொலோ 2:6-15. லூக் 6:12-19.

திருத்தூதர் குழுமம்

இயேசுவுடைய பணிவாழ்வின் முதன்மையான நிகழ்வு ஒன்று இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்துள்ளது. 

இயேசு பன்னிருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்குத் திருத்தூதர்கள் எனப் பெயரிடுகிறார். இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதியில் இயேசு போதித்துக்கொண்டும் வல்ல செயல்கள் ஆற்றிக்கொண்டும் இருக்கிறார். அவருடைய எதிரிகள் அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யத் தொடங்குகிறார்கள். இந்த நேரத்தில் தம் குழுமத்தை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தகிறார் இயேசு.

திருத்தூதர்களைத் தெரிவு செய்யுமுன் இரவெல்லாம் மலைமேல் தனித்திருந்து இறைவேண்டல் செய்கிறார் இயேசு. லூக்கா நற்செய்தி இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கப்படக் காரணம் இயேசு தம் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எல்லாம் இறைவேண்டல் செய்பவராகக் காட்டப்படுவதுதான். முக்கியமான முடிவுகளைத் தேர்ந்து தெளிவதற்கு இறைவேண்டல் தகுந்த தளமாக அமைகிறது. 

இயேசு பன்னிருவரைத் தெரிவு செய்கிறார். '12' என்ற எண் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலங்களைக் குறித்துக்காட்டியது. இந்த எண் வழியாக, தம் பணிக்கும் இஸ்ரயேல் மக்களின் வேர்களுக்கும் நெருக்கம் உண்டு என்பதைக் காட்டுவதோடு, தாம் புதிய இஸ்ரயேலை இவர்கள் வழியாக முன்னெடுக்கப்போவதையும் அடையாளப்படுத்துகிறார் இயேசு.

'பின்பற்றுபவர்' (சீடர், கிரேக்கத்தில் 'மத்தேதெஸ்') என்று இருந்தவர்களுக்குத் 'அனுப்பப்படுபவர்' (திருத்தூதர், 'அப்போஸ்தொலோஸ்') என்று பெயர் கொடுக்கிறார் இயேசு. புதிய பெயர் என்பது புதிய பணியையும் பயணத்தையும் குறிக்கிறது. மேலும், இதுவரை இயேசுவை நோக்கி வழி நடந்த இவர்கள், இனிமேல் இயேசுவைவிட்டுப் புறப்பட்டுச் சென்று பணி செய்வர்.

இயேசு பன்னிருவராகத் தேர்ந்துகொள்ளும் அனைவரும் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறான பின்புலத்தைக் கொண்டிருக்கிறார்கள்: மீன்பிடிப்பவர்கள், வரி தண்டுபவர், தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர், மெசியாவை எதிர்நோக்கியவர். வேறு வேறான பின்புலத்தை இவர்கள் கொண்டிருந்தாலும் இவர்களை இணைக்கிற புள்ளி இயேசு கிறிஸ்துவே. திருத்தூதுப் பணியில் விளங்கக் கூடிய பன்முகத்தன்மையையும் இது காட்டுகிறது.

மலைமேல் நின்றிருந்த இயேசு தம் திருத்தூதர்களுடன் சமவெளியில் வந்து நிற்கிறார். ஒரே நேரத்தில் மலை அனுபவம், மக்கள் அனுபவம் என்னும் இரு அனுபவங்களைத் தம் திருத்தூதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். நம் கால்கள் மலையில் மண்டியிட்டுக் கிடந்தாலும், அவை அதிக நேரம் நிற்க வேண்டியது சமவெளியில்தான். ஆக, மலையும் சமவெளியும் ஒன்றையொன்று நிரப்பக்கூடியதாக இருத்தல் வேண்டும். 

இயேசுவின் பிரசன்னம் பல்வேறு வகையான மக்களை அவரை நோக்கி இழுக்கிறது. குறிப்பாக நோயுற்றவர்கள் அவரைத் தேடி வந்து நலம் பெறுகிறார்கள். அவரைத் தொடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். 

இந்த நிகழ்வு சீடத்துவத்துக்கான பாடத்தையும் கற்றுத்தருகிறது. இயேசு அழைத்தவுடன் பன்னிருவரும் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார்கள். மேலும், இயேசுவுக்குச் சான்று பகருமாறு புறப்பட்டுச் செல்லவும் தயாராக இருக்கிறார்கள்.

இறைவேண்டல், தேர்ந்து தெளிதலின் அவசியம், கூட்டுப்பொறுப்புணர்வு, பணிப்பகிர்வு, அழைக்கப்பட்டவர்களின் தயார்நிலை மற்றும் பன்முகத்தன்மை, மலை-மக்கள் அனுபவம், இயேசுவின் ஆற்றல்மிகு பிரசன்னம் என்று பல்வேறு கருத்துருகளை நமக்குத் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், இயேசுவின் இறப்பு கொண்டு வந்த மீட்பு பற்றிக் கொலோசை நகர் திருஅவைக்கு எடுத்துரைக்கிற பவுல், கிறிஸ்துவோடு இணைந்து வாழுமாறு அவர்களை அழைக்கிறார்.


கை நலமடைந்தது!

இன்றைய இறைமொழி

திங்கள், 11 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 23-ஆம் வாரத்தின் திங்கள்

கொலோ 1:24-2:3. லூக் 6:6-11.

கை நலமடைந்தது!

ஓய்வுநாள் ஒன்றில் தொழுகைக்கூடத்தில் ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. சூம்பிய கை உடைய ஒருவருக்கு நலம் தருகிறார். இந்த நிகழ்வை லூக்கா மற்றும் மாற்கு பதிவு செய்கிறார்கள். இந்த நிகழ்வு இயேசுவின் எதிரிகளாகத் திகழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் கோபத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது. 

இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாள் அனுசரிப்பு என்பது முதன்மையான சமயக் கடமையாகப் போற்றப்பட்டது. இந்த நாளில் எந்தவித வேலையும் தடைசெய்யப்பட்டது. வல்ல செயல் நிகழ்த்தி நலம் தருதல் என்பது வேலையாகக் கருதப்பட்டதால் அதுவும் தடைசெய்யப்பட்டதாக இருந்தது. 

நிகழ்வில் அமர்ந்திருக்கிற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவையும் அவருடைய சொற்களையும் செயல்களையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அல்லது குற்றம் காணும் நோக்குடன் அவ்வாறு செய்கிறார்கள். இவர்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளை மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்கிறவர்கள். இயேசுவோ சட்டத்தின் எழுத்தைப் பொருட்படுத்தாமல், அதன் உயிர் அல்லது ஆன்மாவை நேசிப்பவர். அன்பு, இரக்கம், கனிவு போன்றவை திருச்சட்டத்தைவிட மேலானவை எனக் கருதுபவர்.

'ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?' என்னும் கேள்விகளை எழுப்புகிறார் இயேசு. இக்கேள்விகள் வழியாக தம் எதிரிகளைத் தன்னாய்வு செய்துபார்க்க அழைக்கிறார். ஆனால், அவர்கள் மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இலக்கியக்கூற்றின் அடிப்படையில், இக்கேள்விகள் விடை வேண்டிக் கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல. ஏனெனில், இக்கேள்விகளுக்கான விடைகள் கேள்விகளிலேயே அடங்கியுள்ளன: 'ஓய்வுநாளில் நன்மை செய்ய வேண்டும், உயிரைக் காக்க வேண்டும்.' 

சூம்பிய கை உடையவரைப் பார்த்து இயேசு, 'உம் கையை நீட்டும்!' எனச் சொல்ல, அவர் கையை நீட்டுகிறார். கை நலம் பெறுகிறது. ஒரே நேரத்தில் இயேசு நோய்களின்மேல் தமக்கு உள்ள அதிகாரத்தையும், ஓய்வுநாளை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த முடியும் என்னும் போதனையையும் அருள்கிறார் இயேசு. 

இந்நிகழ்வைக் காண்கிற பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் உள்ளங்கள் கடினமாகின்றன. கடின உள்ளம் நம்ப மறுக்கிறது. கடின உள்ளம் மற்றவர்களுக்குத் தீங்கை நாடுகிறது. 

இயேசு ஓய்வுநாளின் தலைவர் என்னும் செய்தி இங்கே கற்பிக்கப்படுகிறது. தொடக்ககாலத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இதன் பின்புலத்தில் பார்க்கும்போது, இயேசு தொழுகைக்கூடத்தையும் விட மேலானவர் என்னும் செய்தியும் இங்கே கற்பிக்கப்படுகிறது.

முதல் வாசகத்தில், தான் நற்செய்தியின் தொண்டன் என்பதை மீண்டும் ஒருமுறை குறிப்பிடுகிறார் பவுல். நற்செய்திக்குத் தொண்டாற்றுதல் என்பது ஊக்கம் தருவதிலும் அன்பினால் ஒருங்கிணைக்கப்படுவதிலும் அடங்கியுள்ளது என்பது பவுலின் கருத்து.

இன்று நாம் சட்டங்கள் மற்றும் மரபுகளை எப்படிக் காண்கிறோம்? இயேசுவின் கண்கள் கொண்டா? அல்லது பரிசேயர்களின் கண்கள் கொண்டா?

நமக்கு முன்னால் நடக்கும் நன்மைகளைக் காணும்போது நம் உள்ளம் கடினப்படுவது ஏன்? நாம் பொறாமையாலும் கோபத்தாலும் ஆட்கொள்ளப்படுவது ஏன்?

நாம் பெற்றுள்ள நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டர் பணி பற்றி நாம் அறிந்துள்ளோமா? அப்பணியைச் செய்கிறோமா?


Saturday, September 9, 2023

அடுத்தவரை வெற்றிகொள்தல்!

இன்றைய இறைமொழி

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு

எசே 33:7-9. உரோ 13:8-10. மத் 19:15-20.

அடுத்தவரை வெற்றிகொள்தல்!

இன்றைய முதல் வாசகத்தில் எச்சரிக்கையும் பொறுப்புணர்வும் வழங்கப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேலை இஸ்ரயேல் வீட்டாரின் காவலாளியாக நியமிக்கிறார். அவர் மனமாற்றத்தின் செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

எசேக்கியேல் இறைவாக்கினர் இங்கே 'காவலாளி' என அழைக்கப்படுகிறார். பண்டைக்கால மேற்கு ஆசியச் சமூகத்தில், காவலாளி என்பவர் நகரின் வாயிலருகே அல்லது கோபுரத்தின்மேல் நின்றுகொண்டு நகருக்கு வரவிருக்கிற ஆபத்துகள் பற்றி மக்களை எச்சரிப்பார். இந்தப் பின்புலத்தில் எசேக்கியேல் ஓர் ஆன்மிகக் காவலாளிபோல நின்றுகொண்டு மக்களை எச்சரித்து வழிநடத்த வேண்டும். கடவுள் எசேக்கியேல் இறைவாக்கினருக்கு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுக்கிறார். அந்தப் பொறுப்பு என்னவெனில் இஸ்ரயேல் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி, அவர்களுடைய தீய வழியிலிருந்து அவர்களைத் திருப்புவது. மக்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் செய்தியை அவர்களுக்கு அறிவிப்பது காவலாளியின் பணி. எசேக்கியேல் இறைவாக்கினரும் அவ்வாறே பொறுப்புடன் செயல்பட வேண்டும். தீயோர் தம் வழியைவிட்டுத் திரும்புவதே இறைவாக்கினர் முன்மொழியும் அழைத்தல். இருந்தாலும் ஒவ்வொருவரும் அவருடைய தீயவழியை விட்டுவிடுவது அவருடைய கையில்தான் இருக்கிறது.

ஆக, பொறுப்புணர்வு என்னும் கருத்துருவை மையமாகக் கொண்டிருக்கிறது முதல் வாசகம். இறைவாக்கினர் எசேக்கியேலின் பொறுப்புணர்வு மக்களுக்குக் காவலாளியாக இருப்பதில் அடங்கியுள்ளது. ஒவ்வொருவருடைய மனமாற்றத்தின் பொறுப்புணர்வு தனிநபர் சார்ந்ததாக இருக்கிறது. எசேக்கியேல் அவருடைய இறைவாக்குப் பணியால் மக்களை வெற்றிகொள்ள வேண்டும். தொடக்கநூலில், 'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' எனக் கேட்கிற காயின் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார் (காண். தொநூ 4:1-9). ஆனால், யோசேப்பு தன் சகோதரர்கள் அனைவருடைய வாழ்வுக்கும் பொறுப்பேற்கிறார் (காண். தொநூ 37-50).

புனித பவுல் உரோமையருக்கு எழுதும் தனது கடிதத்தின் நிறைவில், கிறிஸ்தவ வாழ்வு பற்றிய அறிவுரையைத் தருகின்றார். அதில், 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்றும், 'அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. அன்பே திருச்சட்டத்தின் நிறைவு' என்கிறார். ஆக, பவுலைப் பொருத்தவரையில், அன்பு செய்யும் ஒருவர் அனைத்துத் திருச்சட்டங்களையும் கடைப்பிடிப்பவர் ஆகிறார். இந்த வார்த்தைகளின் பின்புலத்தில்தான், புனித அகுஸ்தினாரும், 'அன்பு செய். பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்!' என்கிறார். ஆக, நாம் அன்பு செய்யும் ஒருவருக்கு நாம் ஒருபோதும் தீங்கு நினைக்கவோ, தீங்கிழைக்கவோ செய்யாது. ஏனெனில், 'அன்பு இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது ... அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்' (காண். 1 கொரி 13:5,7). ஆக, அன்பு என்னும் சொல், வெறும் உணர்வு என்ற நிலையில் இல்லாமல், செயல்வடிவம் பெற பவுல் அழைக்கிறார். கட்டளைகளை மீறுதல் என்பது முதலில் அன்புப் பிறழ்வே என்பது பவுலின் புரிதல்

அன்பின் வழியாக ஒருவர் மற்றவரை வெற்றிகொள்தல் அவசியம்.

இன்றைய நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியாளரின் குழுமப் பொழிவு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) தவறு செய்யும் நம்பிக்கையாளரின் குற்றம் கடிந்து அவரை மீண்டும் குழுமத்துக்குள் ஏற்றுக்கொள்தல். (ஆ) இறைவேண்டலில் மனம் ஒத்திருத்தல். (இ) இயேசுவின் திருமுன்னிலையின் இடமாகக் குழுமம் திகழ்தல்.

மனிதர்கள் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் சமூகம் தேவைப்படுகிறது. சமூகத்தால் அவர்கள் மாற்றம் பெறுகிறார்கள். சமூகத்தை அவர்கள் மாற்றுகிறார்கள். ஆனால், மனிதர்கள் குழுமமாக வாழும்போது சில சிக்கல்கள் எழுகின்றன. அவற்றுள் முதன்மையான ஒன்று ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பது. தீங்கு நினைப்பதும் தீங்கு செய்வதும் மனிதர்கள் செய்யும் முதற்குற்றமாக இருக்கிறது. ஒருவர் நமக்குத் தீங்கு நினைத்தால் அல்லது தீங்கு செய்தால் அவரை நம் உறவு வட்டத்திலிருந்து தள்ளி வைக்க விரும்புகிறோம். ஆனால், இயேசுவோ தீங்கு செய்கிற நபரை வெற்றிகொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.  நம்பிக்கையாளர்களின் குழுமத்தில் ஏற்படும் உறவு உரசல்களை எப்படி சரி செய்வது என்பதை இயேசு எடுத்துரைப்பதாக மத்தேயு பதிவு செய்கிறார். இது மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) ஒற்றைக்கு ஒற்றை சந்தித்து உரையாடுவது. (ஆ) ஒன்று அல்லது இரண்டு பேரைக் கூட்டிச் சென்று உரையாடுவது. (இ) திருச்சபையிடம் சொல்வது. இந்த மூன்று படிகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற காரணிகள் மூன்று: (அ) அடுத்தவரை இழப்பது அல்ல, மாறாக, வெற்றி கொள்வதே நம்  முதன்மையான இலக்காக இருக்க வேண்டும், (ஆ) நான்தான் ஒப்புரவுக்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். (இ) தனிமனித மாண்பும் தனியுரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

நாம் இறைவேண்டல் செய்யும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தில் நம் தேவைகளைக் கடவுளிடம் எடுத்துரைக்கிறோம். ஆனால், தனிநபர் வாழ்வைத் தாண்டி குழுமத்தின் வழியாகவும் நாம் இறைவேண்டல் செய்ய முடியும் என்பது இயேசுவின் பாடம். இருவர் இந்த உலகில் மனம் ஒத்துக் கடவுளிடம் கேட்டாலே அது அவர்களுக்கு அருளப்படும்.

மேலும், மனிதர்கள் தங்கள் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒருவர் மற்றவரோடு சமரசம் செய்து வாழ்ந்தால் அங்கே இறைவன் பிரசன்னமாக இருக்கிறார். 

ஆக, குழும வாழ்வில் எவரையும் நாம் விட்டுவிடல் ஆகாது. அனைவரையும் உள்ளடக்கிய குழுமத்தை உருவாக்க வேண்டுமெனில், அனைவரையும் குறிப்பாகத் தீங்கிழைப்பவர்களைக் கடிந்துரைத்து அவர்களை வெற்றிகொள்தல் அவசியம்.

இந்த நாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) காவலாளி என்னும் நம் பெயர்

நாம் ஒவ்வொருவரும் 'காவலாளியாக' இருக்கிறோம் - குடும்பத்தில் மற்றும் குழும வாழ்வில். காவலாளியாக இருக்கிற நபர் இயல்பாகவே மற்றவர்கள்மேல் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்டவராக இருக்கிறார். காவலாளி என்னும் நிலை சமூக மதிப்புக்குரிய நிலை அல்ல. மாறாக, கடமைகள் நிறைந்த நிலை. காவலாளியாக இருக்கிற நபர் அனைவரையும் எதிர்கொள்கிறார். எந்தவொரு தீங்கையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

(ஆ) அன்பே திருச்சட்டத்தின் நிறைவு

அன்பு என்பது நமக்குள் எழுகிற அல்லது ஒருவர் மற்றவர் உறவுநிலையில் எழுகிற ஓர் உணர்வு அல்ல. மாறாக, அது ஒரு செயல்பாடு. அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத செயல்பாடு. மனிதர்களாகிய நம்மிடம் எழும் பொறாமை மற்றும் போட்டி மனப்பான்மை மற்றவர்களுக்குத் தீங்கிழைக்குமாறு நம்மைத் தூண்டுகின்றன. மற்றவர்களுக்குத் தீமை நினைப்பதன் வழியாக அல்லது செய்வதின் வழியாக அவர்களுடைய வளர்ச்சியை அல்லது மேன்மையை நாம் சிதைக்க நினைக்கிறோம். ஆனால், அனைத்தையும் அன்பினால் எதிர்கொள்பவர் அனைவரையும் வெற்றிகொள்கிறார்.

(இ) குழுமத்தின் அவசியம்

இன்றைய உலகம் நம்மைத் தனிநபர்களாக வாழுமாறு அறிவுறுத்துகிறது. சிறுநுகர் வாழ்வு என்பது இன்று உறவுநிலைகளிலும் புகுத்தப்படுகிறது. குறைவான நபர்களிடம் உறவாடி, நிறைவாகத் தனிமை போற்றுவது நலம் என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால், குழுமம் என்பது நம்மை நமக்கே பிரதிபலித்துக் காட்டுகிற ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியின் துணை கொண்டு நாம் நம்மைத் திருத்திக்கொள்ள இயலும். மேலும், குழும வாழ்வே கடவுளின் பிரசன்னத்தை நம் நடுவில் கொண்டுவருகிறது.


கட்டின்மை போற்றி!

இன்றைய இறைமொழி

சனி, 9 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் சனி

கொலோ 1:21-23. லூக் 6:1-5.

கட்டின்மை போற்றி!

இன்றைய நற்செய்தி வாசக நிகழ்வு ஓய்வுநாளன்று நடந்தேறுகிறது. யூத மரபில் ஓய்வுநாள் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனித நிகழ்வு. இந்த நாளன்று எந்தவகை வேலையும் தடைசெய்யப்பட்டது. இன்றும்கூட இஸ்ரயேல் நாட்டில் சனிக்கிழமை அன்று யூதர் ஒருவர் நம்முடன் லிஃப்டில் ஏறினால், அவர் இறங்க வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்துமாறு நம்மிடம் கேட்பார். சில இடங்களில் சனிக்கிழமை அன்று எல்லா மின்தூக்கிகளும் தாமாகவே அனைத்துத் தளங்களிலும் நின்று செல்லும். இவ்வாறாக, தம் கையைச் சற்றே உயர்த்தி எண்ணை அழுத்துவதும் ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பரிசேயர் ஓய்வுநாளை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கடைபிடித்தனர். ஆகையால்தான், ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் கதிர்கள் கொய்து உண்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சீடர்களை இயேசு கடிந்துகொள்ளாமல் இருந்தது அவர்களுக்கு இன்னும் நெருடலாக இருந்தது. 

பரிசேயர்களின் நெருடலுக்குப் பதிலிறுப்பு செய்கிற இயேசு, பழைய ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் அர்ப்பணம் செய்யப்பட்ட அப்பங்களை உண்ட நிகழ்வை (காண். 1 சாமு 21:26) சுட்டிக்காட்டுகிறார் இயேசு. மனிதர்களின் தேவை சடங்குமுறைகளைவிட முதன்மையானது என்பதைத் தம் சமகாலத்துப் பரிசேயர்களுக்குப் புரிய வைக்கிறார் இயேசு. மேலும், தாவீது பற்றிய நிகழ்வை எடுத்துக்கூறியதன் வழியாக, தாம் தாவீதின் மகன் என்பதையும், கடவுள் என்ற நிலையில் ஓய்வுநாளும் (அனைத்து நேரமும்) தமக்குக் கட்டுப்பட்டதே என்றும் சொல்கிறார் இயேசு. 

இந்த நிகழ்வின் வழியாக இயேசு இரு பாடங்களை நமக்குக் கற்றுத் தருகிறார். ஒன்று, நீதியும் இரக்கமும் சமநிலையில் நம் வாழ்வில் இருக்க வேண்டும். சடங்கு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு ஒருவர் காட்டுகிற அக்கறையை, மற்றவர்கள்மேல் இரக்கம் மற்றும் கனிவாகவும் காட்ட வேண்டும். ஓய்வுநாளின் முக்கியத்துவத்தைப் போற்றுகிற இயேசு மனிதத் தேவையையும் இரக்கத்தையும் முதன்மைப்படுத்துகிறார். இரண்டு, ஓய்வுநாள் என்பது மனிதர்களைக் கட்டி வைக்கிற சுமையாக அல்ல, மாறாக, கட்டின்மையின் வெளிப்படையாக அமைய வேண்டும். கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்துள்ள கொடையே ஓய்வுநாள். இந்த நாளின் வழியாக மனிதர்கள் புத்துணர்வு பெற வேண்டுமே அன்றி, குற்றவுணர்வு பெறக் கூடாது. கடவுளை நோக்கித் திரும்ப வேண்டுமே தவிர, தங்களை நோக்கியே திரும்பக் கூடாது, தங்கள்மேலும் மற்றவர்கள்மேலும் கனிவும் இரக்கமும் காட்டவேண்டுமே தவிர, தங்களையும் மற்றவர்களையும் தீர்ப்பிடுதல் கூடாது.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் தம்மையே 'நற்செய்தியின் திருத்தொண்டர்' என அழைக்கிறார். திருத்தொண்டர் நிலையில் அவர் நற்செய்திக்கும் இறைமக்களுக்கும் பணி ஆற்றினார்.


Thursday, September 7, 2023

அன்னை கன்னி மரியாவின் பிறப்பு

இன்றைய இறைமொழி

வெள்ளி, 8 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 22-ஆம் வாரத்தின் வெள்ளி

உரோ 8:28-30. மத் 1:1-16, 18-23.

அன்னை கன்னி மரியாவின் பிறப்பு

நம் தாய்த் திருஅவை மூன்று பேரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் (டிசம்பர் 25). அவருடைய முன்னோடி திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் (ஜூன் 24). அவருடைய தாய் கன்னி மரியாவின் பிறந்தநாள் (செப் 8). நம் மண்ணில் இன்றைய நாளை ஆரோக்கிய அன்னையின் திருநாள் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் மகிழ்ச்சி தருகிறது. கன்னி மரியாவின் பிறப்பு நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ஏனெனில், இவர் வழியாகவே நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு பிறக்குமாறு தந்தையாகிய கடவுள் திருவுளம் கொள்கிறார். 

இன்றைய முதல் வாசகம் (உரோ 8:28-30) கடவுளின் திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களுக்கு நிகழும் நன்மை பற்றிப் பவுல் எழுதுவதை நம் முன் கொண்டுவருகிறது. மரியா கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவராக இருக்கிறார். அவருடைய நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். முன்குறித்து வைத்த அவரை கடவுள் அழைத்தார். அழைத்த அவரைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருக்குத் தம் மாட்சியில் பங்குதந்தார்.

கன்னி மரியாவின் பிறப்பு அமல உற்பவத்துடன் தொடர்புடையது. அவர் பாவம் இல்லாதவராகப் பிறக்கிறார். இதுதான் கடவுளிடமிருந்து அவர் பெற்ற நன்மை. தூய ஆவியாரின் துணையால் கடவுளின் திருமகனை வயிற்றில் தாங்குகிறார். திருஅவையின் தாயாக பெந்தகோஸ்தே நிகழ்வில் நிற்கிறார். இறுதியில், விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையை மத்தேயு பதிவு செய்கிறார். இரண்டாவது பிரிவில், இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைத் தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனும் என அழைக்கிறார் மத்தேயு. 'மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு' என்று எழுதுவதன் வழியாக மரியாவுக்கும் தலைமுறை அட்டவணையில் இடம் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில், 'அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்' என மரியா பெற்றிருக்கிற சிறப்பைப் பதிவு செய்கிறார். 

அன்னை கன்னி மரியாவின் பிறந்தநாள் நமக்குத் தருகிற செய்தி என்ன?

(அ) ஒவ்வொருவருடைய பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மரியாவுடைய பிறப்பின் நோக்கம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால், நம் வாழ்வின் நோக்கத்தை நாமே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. 

(ஆ) நம் வாழ்வின் இலக்கை கடவுளின் நோக்கத்தோடு இணைத்து வழிநடக்கும்போது தூய ஆவியார் நம் நன்மைக்காகச் செயலாற்றுகிறார். கடவுளின் திருவுளமே நம்மை ஆண்டு நடத்துகிறது. நாம் தனி நபர் அல்லர். நமக்கு முன்னால் பெரிய தலைமுறை இருக்கிறது. நாம் வாழும் நேரம் மற்றும் இடத்திலும் நம்மைப் போன்ற மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய வாழ்வில் நோக்கம் மற்றும் இலக்கு இருக்கிறது. அவர்களை நாம் உள்ளடக்கி நம் வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.

(இ) மேலானவற்றுக்கான அழைப்பைத் தெரிவுகொள்ள கீழானவற்றை விட்டுவிட வேண்டும். இல்லை என்றால் நாம் கீழானவற்றிலேயே சிக்கிக்கொள்வோம்.