Thursday, November 30, 2017

அறிக!

நாளைய நற்செய்தி: அறிக!

நம் தொடக்கப்பெற்றோரின் முதல் ஆசையே 'அறிந்துகொள்ளுதல்'தான். 

'நன்மை - தீமை அறிய' ஆசைகொண்டதால் விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர்.

அறிந்துகொள்ளுதல் எப்படி இவர்களின் முதல் ஆசையோ, இப்படியே இவர்களின் முதல் ஆசியும் இதுவே.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:29-33)

'... பார்க்கும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

... காணும்போது இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள்.'

என்கிறார் இயேசு.

அறிதலுக்கான முதல் படி 'அனுமானம்' என்கிறது இந்திய மெய்யியல். ஆங்கிலத்தில் 'இன்ஃபெரன்ஸ்.'

அப்படி என்றால் என்ன?

காணக்கூடிய ஒன்றிலிருந்து காண முடியாத ஒன்றை அறிந்து கொள்வது.

எடுத்துக்காட்டாக, நம் கண்முன் இருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்து நம் கண்ணால் காணாத அதை உருவாக்கியவரின் கைவேலைப்பாடை அறிந்துகொள்வது.

நம் கண்களால் பார்க்கின்ற அனைத்தும் கண் காணாத ஒன்று பற்றிய அறிதலுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன. 
கண்காணாமல் இருப்பது அனுபவம் தொடர்புடையது. கோடைக்காலத்தை நம்மால் பார்க்க முடிக்க முடிவதில்லை. ஆனால், அனுபவிக்கிறோம். அது போலவே இறையாட்சியும் பார்க்க முடியாதது. ஆனால் அனுபவிக்க முடிவது.
இன்று நான் என் வாழ்வில் காண்கின்ற பல நிகழ்வுகளை வைத்து காணாத ஒன்றை அறிய முடிகிறதா?
அந்த அறிதல் அனுபவித்தின் வழிதான் வருகிறது என்பதை நான் உணர்கிறேனா?

இன்று அறிதல்தான் ஆற்றல். யார் ஒருவர் அதிகம் அறிந்திருக்கிறாரோ அவர்தான் ஆற்றல்மிக்கவராக இருக்கிறார். அது நாம் சார்ந்த புலமாக இருந்தாலும் சரி. அல்லது பொதுவான வாழ்க்கை அறிவு என்றாலும் சரி.
அறிதலின் ஒரு வழி அனுபவம்.

இந்த அனுபவத்திற்கு நம் கண்களைத் திறக்க அழைக்கிறது நாளைய நற்செய்தி.

Wednesday, November 29, 2017

அறிமுக ஆன்மீகம்

நாளைய நற்செய்தி: அறிமுக ஆன்மீகம்

யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, 'மெசியாவைக் கண்டோம்' என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். (யோவான் 1:40-42அ)

அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, 'இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?' என்றார். (யோவான் 6:8-9)

கிரேக்கர் சிலர் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, 'ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்' என்று கேட்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் அதுபற்றிச் சொன்னார். அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர். (யோவான் 12:20-23)

இந்த மூன்று வசனங்களையும் வாசிக்கும்போது என்ன தெரிகிறது? இந்த மூன்று நிகழ்வுகளிலும் பிரசன்னமாகி இருப்பவர் யார்?

'அந்திரேயா!'

நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நற்செய்தி நூல்களில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களில் எனக்கு பிடித்தமானவர்களில் ஒருவர் அந்திரேயா. யோவான் நற்செய்தியில் மட்டும்தான் இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இவரின் பெயரை வெறும் திருத்தூதர்களின் பெயர்களில் ஒன்றாக மட்டுமே குறிப்பிடுகின்றனர் (காண்க. மத்தேயு 10:1-4, மாற்கு 3:13-19, லூக்கா 6:12-16). யோவான் மட்டுமே இவரைப் பற்றி எழுதக் காரணம் ஒருவேளை யோவானுக்கு நெருங்கிய நண்பராகக் கூட இவர் இருந்திருக்கலாம்.

மேற்காணும் மூன்று நிகழ்வுகளிலும் அந்திரேயா ஒரு நல்ல பி.ஆர்.ஓ வாக இருக்கிறார். இயேசுவின் வாழ்வின் முக்கியமான கட்டங்களில் மூன்று பேரை அவரிடம் கூட்டி வந்து அறிமுகம் செய்கின்றார். 'ரெஃபரன்ஸ்' என்பது மேலாண்மையியலில் மிக முக்கியமான ஒன்று. நாம் டிவி, செய்தித்தாளில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விளம்பரங்களைப் பார்க்கின்றோம். அதில் வலம்வரும் பிரபலங்களும், மாடல்களும் நமக்கு தயாரிப்புகளை 'ரெஃபர்' செய்கிறார்கள் அல்லது 'அறிமுகம்' செய்கிறார்கள். 'அறிமுகத்தை' பொருத்தே அந்தத் தயாரிப்புகளின் விற்பனையும் இருக்கிறது. நம்மையறியாமலேயே நாமும் தினமும் பலவற்றை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்: 'பட்டு எடுக்கணும்னா நல்லி சில்க்ஸ் போங்க!' 'நகை வாங்கணும்னா ஜோய் ஆலுக்காஸ் போங்க!', 'கறி தோசை சாப்பிடனும்னா கோனார் மெஸ் போங்க!', 'அந்தக் கடை பனியாரம் நல்லா இருக்கும்!', 'இந்த பிராண்ட் ஃபோன் நல்லா இருக்கும்!' என நாம் அனுபவித்ததை பிறருக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம்.

ஆக, அறிமுகம் செய்து வைப்பதற்கு முதல் தேவை அனுபவம். ஒரு தயாரிப்பை அல்லது சேவையை அல்லது ஒரு நபரின் உறவை நாம் அனுபவித்தால் தான் அதை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய முடியும். நபர்களை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது அனுபவம் இன்னும் அதிகத் தேவையாகிறது. அங்கே இரண்டு வகை அனுபவம் வேண்டும். அறிமுகப்படுத்தும் நபரையும் நாம் அறிந்திக்க வேண்டும். யாரிடம் அறிமுகப்படுத்துகிறோமோ அந்த நபரையும் அறிந்திருக்க வேண்டும். அந்திரேயாவுக்கு இந்த அனுபவம் நிறையவே இருந்திருக்கிறது போல. தன் சகோதரையும் அறிந்து வைத்திருக்கிறார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த சிறுவனையும் அறிந்து வைத்திருக்கிறார். திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்களையும் அறிந்து வைத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவையும் அறிந்து வைத்திருக்கிறார்.

இரண்டாவதாக, இன்றைக்கு இயேசுவை நான் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதை விட, மற்றவர்களை இயேசுவிடம் அறிமுகம் செய்ய வேண்டும். இயேசுவை நாம் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும்போதுதான் இந்த மனமாற்றம், கோயில் இடிப்பு, பலாத்காரம், கொள்ளை போன்ற பிரச்சினைகள் எல்லாம் வருகின்றன. ஒரு சேஞ்சுக்கு, இருப்பவர்கள் இருப்பது போல இருக்கட்டும். ஆனா இவங்க எல்லாத்தையும் பற்றி நாம் இயேசுவிடம் பேசிப் பார்க்கலாமே! இவங்க எல்லாத்தையும் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கலாமே!

Tuesday, November 28, 2017

முன்னதாகவே

நாளைய நற்செய்தி: முன்னதாகவே

'அடுத்த வாரம் இந்நேரம் நான் ஃப்ளைட்ல பறந்துகிட்டு இருப்பேன்'

'போன வாரம் இந்நேரம் அந்த ஓட்டலில் பீட்சா சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்'

'இப்போது புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்'

மனித மூளை அல்லது மனம் அபாரகரமானது.

நினைத்த நேரத்தில் எதிர்காலத்தில், கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் என எந்த நேரத்திற்கும் அதனால் கடக்க முடியும்.

கணிணியில் நிறைய டேப்களை திறந்து வைத்து அல்லது ஆன்ட்ராய்ட் ஃபோனில் நிறைய ஆப்ஸ்களை திறந்து வைத்து சிஃப்ட்-டேப் அல்லது டேப் கீ கொண்டு நினைத்த மாத்திரத்தில் எந்த டேபையும், ஆப்-பையும் திறக்கவும், மூடவும் செய்வது போல மனம் தான் எதை விரும்புகிறதோ அதை நினைக்க முடியும்.

காலத்திற்கு முன்னதாகவே பயணம் செய்யும் இந்த மனம் மனித இனத்திற்கு ஒரே நேரத்தில் வரமும், சாபமுமாக இருக்கிறது.

வரம் - ஏனெனில் வரவிருக்கும் மகிழ்வை முன்னதாகவே முன்சுவைக்க முடியும்.

சாபம் - ஏனெனில் வரவிருக்கும் கவலையை முன்னதாகவே நினைத்து கலங்கிவிட முடியும்.

'அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று தன் சீடர்களை நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:12-19) எச்சரிக்கை செய்கிறார் இயேசு.

எச்சரிக்கையோடு, 'அந்நேரத்தில் நானே உங்களுக்கு நாவன்மையையும், ஞானத்தையும் கொடுப்பேன்' என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

இன்று நான் எதைக் குறித்தெல்லாம் முன்னதாக கவலைப்படுகிறேன்?

என் தேர்வு, என் அடுத்த பணிமாற்றம், என் உடல்நிலை, என் நட்பு அல்லது உறவு வட்டம் என என் எண்ண ஓட்டங்களைப் பிடித்துக்கொள்வது எது?

இந்த முன்னதாகவே உள்ளவைகளுக்கு நேரம் கொடுக்கும்போதெல்லாம் நான் என் 'இன்றைக்கான' நேரத்தை அழிக்கிறேன்.

நேற்று சிந்திய பாலுக்காக நீ வருத்தப்படவேண்டாம் என்று சொல்வதைவிட இன்னும் ஒருபடி மேலே போய், 'நாளை பால் சிந்திவிடுமோ!' என்று பதற்றப்படாதே என்கிறார் இயேசு.

இப்போது கொதித்துக்கொண்டிருக்கும் பாலின்மேல் எண்ணமும், கண்களும் இருக்கட்டும்!

Monday, November 27, 2017

முழுமையாய் பார்க்க

நாளைய நற்செய்தி: முழுமையாய் பார்க்க

நம்ம சொந்தக்காரங்க ஒருத்தருக்கு குழந்தை பிறந்திருக்கு என வைத்துக்கொள்வோம். நாம அந்தக் குழந்தையைப் பார்க்கப் போறோம். குழந்தை அழகா, குட்டியா (குழந்தைன்னா குட்டியாதானே பாஸ் இருக்கும்!), புஸ் புஸ்னு, கண்ண உருட்டி உருட்டி பார்த்துகிட்டு இருக்கு. குழந்தைக்கு பக்கத்துல உட்கார்ந்திருக்கவங்க, 'என்ன அழகு குழந்தை! என்ன மூக்கு! என்ன முழி!' என பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில நாம, 'குழந்தை! மூக்கு! முழியா! இன்னும் கொஞ்ச நாள்ல இதுக்கு உடம்பு சரியில்லாம போகும், வயசாகி கூன் விழும், தோல் எல்லாம் சுருங்கும், பல் எல்லாம் கொட்டிப் போகும்!' அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? அங்க இருக்கிறவங்க நம்மள சும்மா விடுவாங்களா?

புதுசா ஒருத்தர் வீடு கட்டியிருக்கிறார். மாடி வீடு. நம்மள பால் காய்ச்ச கூப்பிடுறாங்க. வந்திருக்கிறவங்க எல்லாம், 'ஆஹா, ஓஹோ' என்று அந்த வீட்டைப் புகழ்கிறார்கள். நாம ஒரு ஓரமா நின்னு, 'இந்த வீடு ஒரு நாள் சாயம் போய்விடும், இடிந்துவிடும், கல்லின்மேல் கல் இருக்காது!' அப்படின்னு சொன்னா நம்மள என்ன நினைப்பாங்க?

இவனைப் போய் கூப்பிட்டோம் பாரு! - என்று நம்மைப் பார்த்து சிரிப்பதுடன், நம்மை எதிர்மறை சிந்தனையாளன் என்றும், நம்ம கண்ணு சரியில்லை என்றும் சொல்வார்கள். இல்லையா?

இதே ஒரு நிகழ்வுதான் நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 21:5-11) நடக்கிறது.

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வெளியே உள்ள ரு பள்ளத்தாக்கின் அடுத்த பகுதியில் நின்றுகொண்டிருக்கின்றனர். பள்ளத்தாக்கின் இந்தப் பகுதியில் எருசலேம் ஆலயம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 'அப்பப்பா! என்ன ஒரு ஆலயம்! என்ன ஒரு அழகு! என்ன கவின்மிகு கற்கள்! என்ன நேர்ச்சைப் பொருள்கள்!' என வியந்துகொண்டிருக்கின்றனர். 

ஆனால் இயேசுவோ, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின்மேல் கற்கள் இராதவாறு எல்லாம் இடிக்கப்படும்!' என்கிறார்.

நிற்க.

இயேசுவின் இவ்வார்த்தைகள் அவரை எதிர்மறை சிந்தனை கொண்டவராகவும், அழகை இரசிக்கத் தெரியாதவர் என்றும் காட்டினாலும் வாழ்க்கையின் ஒரு முக்கியமான உண்மையை இவை கற்றுத்தருகின்றன. அது என்ன? 'வாழ்க்கையை முழுமையாகப் பார்ப்பது!'

எப்படி?

நாம பார்க்கின்ற எல்லாவற்றிலும் ஒரு பக்கத்தைத்தான் பார்க்கிறோம்.

செல்ஃபோனின் முன்பக்கத்தைப் பார்க்கும் அளவுக்கு அதன் பின்பக்கத்தைப் பார்த்ததில்லை.

இலையின் பின்புறம், நோட்டின் பின்புறம், கணிணியின் பின்புறம், பாட்டிலின் அடிப்புறம், மேசையின் கீழ்புறம், மனிதரின் பின்புறம் என நாம் பார்க்கத் தவறுவது பல.

முன்புறமும், பின்பிறமும் சேர்ந்ததுதான் முழுமை.

வாழ்க்கை என்பது முன்புறம் என்றால் இறப்பு என்பது பின்புறம்.

இளமை என்பது முன்புறம் என்றால் முதுமை என்பது பின்புறம்.

வளர்ச்சி என்பது முன்புறம் என்றால் தேய்வு என்பது பின்புறம்.

வாழ்க்கையின் முழுமையைப் பார்க்கத் தெரிந்தவர் ஞானி ஆகிவிடுவார். அவருக்கென்று எந்தப் பற்றும் இருக்காது. எல்லாவற்றையும் அழகென்பார் அவர். எல்லாவற்றையும் இரசிப்பார் அவர். எல்லாவற்றிலும் உடன் செல்வார் அவர். இருக்கின்ற பொழுதை அப்படியே முழுமையாக வாழ்வார் அவர்.

Sunday, November 26, 2017

கோபமும் கொடுத்தலும்

நாளைய நற்செய்தி: கோபமும் கொடுத்தலும்

எங்கள் அலுவலகத்திற்கு உதவி கேட்டு நிறையப்பேர் வருவதுண்டு.

அப்படி ஒருவர் கடந்த மாதம் வந்தார். பெயர், மதம், ஊர் தெரியவில்லை. தன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், வீட்டில் ஒன்றும் இல்லை என்றும் சொன்னார். கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினோம்.

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வந்தார். மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டார். முன்பின் தெரியாத அந்த நபருக்கு அப்படியே அவர் கேட்ட முழு தொகையையும் கொடுத்து அனுப்பி வைத்தோம்.

இன்று மீண்டும் ஃபோன் செய்தார்.

நாளை தான் வருவதாகவும் தனக்கு பணம் வேண்டும் என்றும் சொன்னார்.

'நாங்கள் இங்கே இல்லை என்றும், அடுத்தவாரம் வரலாம்' என்றும் சொன்னேன்.

'யாரிடமாவது கொடுத்துவிட்டுப் போங்கள். நான் வாங்கிக்கொள்கிறேன்' - என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.

நிற்க.

உதவி கேட்டு வருபவர்களை நான் சில நேரங்களில் தொந்தரவு அல்லது வேலையின் மும்முரம் காரணமாக, 'இல்லை' என்று அனுப்பி வைத்ததுண்டு.

இன்று அமர்ந்து யோசித்தால் ஒன்று தெளிவாகிறது. அதாவது, 'கோபம் வரும்போது என்னால் கொடுக்க முடிவதில்லை'

கோபம் என்னைக் கொடுக்க விடாமல் தடுத்துவிடுகிறது.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 21:1-4) ஏழைக் கைம்பெண்ணின் எளிய காணிக்கை நிகழ்வை வாசிக்கின்றோம்.

'தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டார்' என்ற லூக்காவின் பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

இந்தக் கைம்பெண்ணுக்கு ஏற்கனவே பற்றாக்குறை இருக்கிறது.

தனக்கு அருகில் நின்று பணம் போடும் செல்வந்தர்களையும், அவர்களின் பகட்டான உடைகளையும், அணிகலன்களையும் கண்டிப்பாக பார்த்திருப்பார். இவர் வெறுங் கழுத்தாய், ஒடுங்கிய தேகமாய், நசுங்கிய சேலை அணிந்தவராய் நின்றிருப்பார். மற்ற செல்வந்தரோடு தன்னை அவர் ஒப்பிட்டுப் பார்க்கவில்லையா?

'எனக்கு ஏன் கடவுள் எதுவும் தரவில்லை? என் கணவரையும் ஏன் எடுத்துக்கொண்டார்? எனக்கு மட்டும் ஏன் பற்றாக்குறை?' - என்று இவர் கேள்விகள் கேட்கவே இல்லையா?

கேட்கவில்லை.

கடவுளிடம் கைம்பெண் கோபப்படவில்லை.

கடவுளையே மன்னித்துவிட்டாள் இந்தக் கைம்பெண்.

மற்ற செல்வந்தர்கள் ஏதோ ஒரு பற்றாக்குறையை உணர்ந்தனர். அந்தப் பற்றாக்குறைக்குக் காரணமான கடவுள்மேல் கோபம் கொண்டனர்.

ஆனால், இந்தக் கைம்பெண் பரந்த மனத்தாள்.

ஆகையால்தான், துணிந்து கொடுக்கிறாள்.

கோபம் இல்லை என்றால் கொடுத்தல் தானே வந்துவிடும் -

இது இந்த பெயரில்லாப் பெண் பயிற்றுவிக்கும் பாடம்.


Saturday, November 25, 2017

அரசர் - சின்னஞ்சிறிய

கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று எதற்காக இறுதித் தீர்ப்பு பற்றிய நற்செய்தி பகுதி (மத் 25:31-46) கொடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வி நமக்கு எழலாம். உலக முடிவின் பின் இப்படித்தான் நடக்குமா? கடவுள் நம்மை இப்படித்தான் இருபுறமும் பிரித்து நிறுத்துவாரா? இந்த இரண்டு புறங்களையும் தாண்டி மூன்றாவது புறம் ஒன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா? நாம் வலப்பக்கம் அனுப்பப்படுவோமா? அல்லது இடப்பக்கம் அனுப்பப்படுவோமா? முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

இறப்புக்குப் பின் அல்லது எல்லாரும் இறந்தபின் நடக்கும் இறுதித் தீர்ப்பு உண்டு என விளக்க அல்லது மெய்ப்பிக்கப் பயன்படும் நற்செய்திப் பகுதியே மத் 25:31-46. இந்த நற்செய்திப் பகுதிக்கும் இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கும் என்ன தொடர்பு?

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:

அ. 'அரியணை' 

'வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்' (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி. அரசர்களின் இருக்கைகளில் கைபிடிகளாக இரண்டு சிங்கங்கள் ('அரிமா') இருக்கும். மற்ற இருக்கைகளில் அவை இருக்காது. அல்லது சிங்க உருவங்கள் உள்ள இருக்கையில் அரசன் மட்டுமே அமர உடையும். சிங்க உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இவை 'அரிமா ஆசனங்கள்' அல்லது 'அரியாசனங்கள்' அல்லது 'அரியணைகள்' என அழைக்கப்படுகின்றன. 'சிங்கம்' என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலைக் குறிக்கும் ஒரு உருவகம். 
மேலும், 'அமர்வது' என்பதும் அதிகாரத்தைக் குறிக்கிறது. பட்டினத்தார் பாடல் ஒன்றில் பட்டினத்தார் அரசனைப் பார்த்து, 'நீ நிற்க நான் அமர' என்று இருக்கும். அதாவது யார் அமர்கிறாரோ அவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார். ஆகையால்தான், இன்றும் விசுவாச பிரகடனங்களை அதிகாரப்பூர்வமாக திருத்தந்தையர் அறிவிக்க வேண்டியிருந்தால் அவர்கள் உரோம் தூய லாத்தரன் பேரலாயத்தில் உள்ள அரியணையில் 'அமர்ந்து' அறிவிக்க வேண்டும். அதிகாரம் கொண்டிருக்கும் ஒருவர் எந்நேரமும் அமர்ந்துகொள்ள முடியும். அல்லது எந்நேரமும் அமர்ந்திருக்கும் ஒருவர் அதிகாரம் கொண்டிருக்கின்றார் - அரசராக இருக்கின்றார்.

ஆ. 'அரசன்' 

'அரசன்' (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். 'அரசர்' என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு  (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை 'ஆண்டவர்' என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.

இ. 'அரசாட்சி' அல்லது 'அரசுரிமை'

'அரசாட்சியை' (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். 'அரசாட்சி' என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது.

இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை 'அரசர்' என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே:

இயேசுவை இரண்டு பேர் அரசர் என்று நேரிடையாக மொழிந்திருக்கிறார்கள்: 
ஒன்று, நத்தனியேல். 'பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்' என்று இயேசு நத்தனியேலைப் பார்த்துச் சொன்னபோது, 'ரபி, நீர் இறைமகன். நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்' என்கிறார் நத்தனியேல். (காண். யோவா 2:48-49)
இரண்டு, பிலாத்து. தன்முன் கைதியாக நிறுத்தப்பட்ட இயேசுவை விசாரித்து மரண தண்டனை அளித்த பிலாத்து, இறுதியாக, எல்லாரும் பார்க்குமாறு இயேசு அறையப்பட்ட சிலுவையின் உச்சியில், 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' (மத் 27:37) என எழுதி வைக்கின்றார். 

நல்ல கள்வன்கூட 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது' (லூக் 23:42) என்று சொல்கிறானே தவிர, 'அரசராக' என்று சொல்லவில்லை.

இயேசு தன்னையே 'அரசர்' என்று வெளிப்படையாகச் சொல்லும் நிகழ்வு இன்றைய நற்செய்தி வாசகத்தில் மட்டுமே. அவரின் 'அரசர்' தன்மை எப்படிப்பட்டது என்பது இன்றைய நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துக்கொள்வோம்:

1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது.

'அதிகாரம்' என்றவுடன் நாம் அது வேறொருவரால் நமக்குத் தரப்பட வேண்டும் என நினைக்கிறோம். அது தவறு. ஏன்? நாம் ஓட்டுப்போட்டு அரசாட்சி செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நம் தலைவர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களின் அதிகாரம் எங்கிருந்து வருகிறது. மக்களாகிய நம்மிடமிருந்து. இந்த அதிகாரம் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த அதிகாரத்தை எந்நேரமும் மக்கள் அவர்களிடமிருந்து பிடுங்கிவிட முடியும். மேலும் இந்த அதிகாரத்தில் ஒரு கட்டு இருக்கும். அதாவது, அவர்களால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இந்த அதிகாரம் இடத்திற்கும், நேரத்திற்கும் கட்டுப்பட்டது. மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அதிகாரம் தமிழகத்திற்குள் இருக்கும் வரைதான். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரைதான். 
ஆக, வெளியிலிருந்து வரும் அதிகாரம் ஒருவரை உண்மையான அரசராக ஆக்குவதில்லை.

எந்த அதிகாரம் ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர் ஆக்குகிறது. எடுத்துக்காட்டாக, நாசரேத்தூர் இயேசு, திருத்தூதர் பவுல், மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, நீங்கள், நான் என எல்லாரும். அதாவது, தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக் கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல் செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான் அடங்கியிருக்கிறது. நான் எந்த எதிர்மறை நிகழ்வுகள் அல்லது உணர்வுகளால் ஆட்கொள்ளப்படாத போது நான் அரசராக இருக்கிறேன்.

இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரி 15:20-26,28) பார்க்கின்றோம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது என்ன நடக்கும் என்பதை விளக்குகின்ற பவுல், அங்கே அதிகாரம் மற்றும் ஆட்சி செலுத்துதல் மறைந்து, 'கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்' என விளக்குகின்றார். ஆக, எல்லாரும் தங்களை வென்றவர்களாக, தங்களிடம் கடவுள் தன்மையைக் கண்டவர்களாக, அதே கடவுள் தன்மையை மற்றவரிடம் பார்ப்பவர்களாக மாறுவர். அப்படி இருப்பதுதான் உண்மையான அரச நிலை.

நாம் யாரும் யாரையும் ஆளப்பிறக்கவில்லை? எதற்காக நாம் மற்றவர்களை அரசாள வேண்டும்? மற்றவர்களை அரசாள நான் முயலும்போது நான் அவரை அடிமையாக்கி அவரின் இயல்பை நான் மறுதலிக்கிறேன். மாறாக, கடவுள் அனைத்திலும் அனைவரிலும் இருப்பதை நான் கண்டுகொள்ளும்போது எல்லாருடைய கட்டின்மையையும் நான் மதிக்கத் தொடங்குகிறேன். அதைத்தான் இயேசுவும் செய்தார். 

மனித உணர்வுகளில் எப்போதும் தலைதூக்கும் தலைவன் உணர்வைச் சரி செய்யத்தான் இயேசு இன்னொரு எக்ஸ்ட்ரீம் எல்லைக்குச் செல்கின்றார்: 'நீ மற்றவரின் பாதங்களைக் கழுவு'. நான் மற்றவரின் பாதங்களைக் கழுவும்போது நான் எவ்வளவு உயரமானவராக இருந்தாலு; என் தலை மற்றவரின் தலைக்குக் கீழ் வந்துவிடுகிறது. அதிகாரம் மறைந்துவிடுகிறது.

ஆக, எல்லாரிடமும் இருக்கும் கடவுள்தன்மையைக் கண்டுகொள்ளும்போது, எல்லாரையும் அரசர் என்று நினைக்கும்போது நாமும் அரசராகிறோம்.

2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர்

இன்று அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரோடு தங்களை ஒன்றிணைத்துக்கொள்கிறார்கள்? தங்கள் உறவினர்களோடு, தங்களைவிட அதிக பணம் அல்லது அதிகாரம் கொண்டிருப்பவர்களோடு. ஆனால் இயேசு இங்கே முற்றிலும் மாறுபடுகின்றார். தன் அதிகாரத்தை அல்லது அரசதன்மையை தன்னைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில் வரையறுக்கின்றார்.

ஆறு சொல்லாடல்கள் வழியாக சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை:
அ. 'பசி' - அரசன் பசியாய் இருந்ததாக அல்லது இருப்பதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அரசன் அதிகம் சாப்பிட்டதால் அவதிப்படுவானே தவிர அவன் என்றும் பசியோடு இருப்பதில்லை. அவனது உணவுமேசை எப்போதும் நிரம்பியே இருக்கும். ஊரில் கொடும் பஞ்சம் நிலவினாலும் அரசன் உண்பதற்குச் சோறு இருக்கும்.

ஆ. 'தாகம்' - ஊரெல்லாம் வறட்சி என்றாலும் மினிஸ்டர் வீட்டு தண்ணீர் பைப் ஓடிக்கொண்டுதான் இருக்கும். தனக்கென குளம், ஏரி, ஆறுகளைத் திருப்பிக்கொண்ட அரச வரலாறுகள் அதிகம்.
இ. 'ஆடையின்மை' - அரசன் பல்வேறு ஆடைகள் அணியக்கூடியவன். அரசவைக்கு ஒன்று, போருக்கு ஒன்று, அந்தப்புரத்திற்கு ஒன்று, பொழுதுபோக்கிற்கு ஒன்று என எண்ணற்ற ஆடைகளை வைத்திருப்பவன் அவன்.

ஈ. 'அந்நியம்' - அரசன் யாருக்கும் அந்நியம் இல்லை. அவனை எல்லாருக்கும் தெரியும். அவன் முன்பின் பாhத்திராதவர்கள் கூட அரசன் என்றவுடன் அவனைக் கண்டுகொண்டு வரவேற்று உபச்சாரம் செய்வர்.

உ. 'நோய்' - எடப்பாடியாருக்கும், ஓபிஎஸ்சுக்கும் டெங்கு காய்ச்சல் வருவதில்லை. ஊரெல்லாம் டெங்கு பரவினாலும் அது ஒன்றும் செய்யாது.

ஊ. 'சிறை' - சிறை என்பது கட்டு. ஆனால் அரசனை யாரும் சிறையிட முடியாது. அவன் தான் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்திற்குச் செல்வான். அவன் மற்றவர்களைச் சிறையிடுவானே தவிர அவனை யாரும் சிறையிட முடியாது.

இப்படியாக, அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக் கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு. 'பசித்திருப்போர்,' 'தாகமுற்றோர்,' 'ஆடையின்றி இருப்போர்,' 'அந்நியர்,' 'நோயுற்றோர்,' 'சிறையிலிருப்போர்' என அனைவரையும் தன் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.

இயேசுவின் இந்த வரையறை அரசத்தன்மையை எல்லாருக்கும் பொதுவானதாக்குகின்றது.

3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள்
இன்றைய முதல்வாசகத்தில் தன் கடவுள் அல்லது ஆண்டவர் தன்மையை மிக எளியை வார்த்தைகளில் விளக்குகின்றார் கடவுள். எப்படி? தன்னை ஓர் ஆயனாக உருவகம் செய்து, 'சிதறுண்ட ஆடுகளைத் தேடுவேன்,' 'மந்தாரமான நேரத்தில் மீட்டு வருவேன்,' 'மேய்ப்பேன்,' 'இளைப்பாறச் செய்வேன்,' 'காணாமல் போனதை தேடுவேன்,' 'அலைந்து திரிவதை திரும்ப கொண்டு வருவேன்,' 'காயத்திற்கு கட்டுப்போடுவேன்,' 'நலிந்தவற்றை திடப்படுத்துவேன்' என ஓர் ஆடுமேய்ப்பவர் செய்யும் சாதாரண செயல்களைச் செய்பவராகக் காட்டுகின்றார்.
ஆக, அரசர்நிலை அல்லது அரசத்தன்மை என்பது போருக்குச் செல்வதிலும், பிற உயிர்களை அழிப்பதிலும், அணுஆயுதங்கள் தயாரிப்பதிலும், அமைதி உடன்படிக்கைகளில் கையெழுத்து இடுவதிலும், நிறைய இயற்கை வளங்களை வளைத்துப் போடுவதிலும், கோடிக்கணக்காக சொத்து மட்டும் நிலங்களை உடைமையாக்குவதிலும் இல்லை. உண்மையில் இவைகள் எல்லாம் அடிமையின் தன்மைகள்.

பின் எதில் அடங்கியிருக்கின்றன?
நாம் செய்யும் எல்லா சின்னஞ்சிறு செயல்களிலும்: பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதில், வீணாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விசிறியை அணைப்பதில், வழிதெரியாத ஒருவருக்கு வழி சொல்வதில், சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடுவதில், மற்றவருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில், தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வதில், அலைபேசியில் உள்ள மிஸ்டு கால்களை திரும்ப அழைப்பதில், நாம் வைக்கும் அலார்மிற்கு சரியாக எழுவதில் என சின்னஞ்சிறியவைகளைச் செய்வதில்தாம் அரசத்தன்மை நிரம்பி வழிகின்றது.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே குனிந்து பார்ப்போம்.
நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும் எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.
நீங்களும், நானும் அரசர்களே!

'ஆளுநன் இயேசுவை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார்.' (மத் 27:11)

Friday, November 24, 2017

போதகரே, நன்றாகச் சொன்னீர்

நாளைய (25 நம்பவர் 2017) நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் இயேசுவைக் கேள்வி கேட்கும் நிகழ்வை (லூக்கா 20:27-40). நமக்கு பரிச்சயமான இறைவாக்கு பகுதிதான். ஒரு பெண்ணை ஏழுபேர் மணந்த கதை. சதுசேயர்கள் உயிர்ப்பு உண்டு என்பதை நம்பாதவர்கள். ரொம்ப பிராக்டிகலான ஆள்கள். சதுசேயர்கள்தாம் அந்நாள்களில் அரசவையை அலங்கரித்தவர்கள். அரசவையில் இருப்பவர்களுக்குத்தான் இங்கேயே சொர்க்கம் கிடைத்துவிடுகிறதே. அவர்கள் இறந்தபின் சொர்க்கம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உருவாக்கப்பட்டதுதான் மறுவாழ்வு. அதாவது இந்த உலகில் கிடைக்காதது எல்லாம் மறுவுலகில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம் வாழ்க்கையை நகர்த்திவிடுவதற்காக.

நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வரியைச் சிந்திப்போம்:

'போதகரே, நன்றாகச் சொன்னீர்'

இந்த மூன்று வார்த்தைகள் நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

ஒன்று, யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேச வேண்டும். சதுசேயர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே நம்பக்கூடியவர்கள். ஆக, அவர்களிடம் பேசுகின்ற இயேசு விடுதலைப் பயண நூல் 3ஆம் பிரிவை மேற்கோள்காட்டி வாதாடுகின்றார். யாரிடம் எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேச வேண்டும். எல்.கே.ஜி குழந்தைகளுக்கு 'ஐந்து மாடுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் புரியும். அதை விட்டு விட்டு அவர்களிடம் 'ஆஸ்கர் ஒயில்ட்' பேசினால் குழந்தைகளுக்கும் புரியாது, நமக்கும் போர் அடிக்கும்.

இரண்டு, பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் - நேர்முகமான பாராட்டு. மறைநூல் அறிஞர்களுக்கு இயேசுவைப் பிடிக்காது என்றாலும், 'நன்றாகச் சொன்னீர்' என்று மனதார பாராட்டுகின்றனர். வாய்விட்டு பாராட்டுவது நல்ல குணம். அப்படி பாராட்டும்போது நம்மை அறியாமல் நம் மனமும் நேர்முக ஆற்றலால் நிரம்புகிறது. இன்றைக்கு யார் நல்லதைச் சொன்னாலும், செய்தாலும் கொஞ்சம் வாய்விட்டு பாராட்டலாம்.


Tuesday, November 7, 2017

மூன்று காரணங்கள்

இன்று காலை எங்கள் வளாகத்தில் உள்ள பள்ளி விடுதி மாணவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றச் சென்றிருந்தேன். இவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் ஞானஒளிவுபுரம் பத்தாம் பத்திநாதர் ஆயத்தக் குருமடத்தில் 9 முதல் 12 வகுப்புகள் வரை படித்ததுதான் நினைவிற்கு வரும். இன்று சில மாணவர்கள் ஸ்வெட்டர் அணிந்து வந்திருந்தார்கள். 'குளிர்கிறதா?' என்று நான் கேட்ட கேள்வி எனக்கே சிரிப்பாக இருந்தது. குளிர்வதால்தானே ஸ்வெட்டர் போடுறாங்க!

எனக்குள் சிரித்துக்கொண்டே திருப்பலியைத் தொடர்ந்தேன்.

இன்றைய நற்செய்தி வாசகம் இன்னும் கிளுகிளுப்பாக இருந்தது:

ஒருவர் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றனர்.

அ. வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய் பார்க்க வேண்டும்.
ஆ. ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அதை நான் ஓட்டிப் பார்க்க வேண்டும்.
இ. எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று. ஆகையால் என்னால் வர முடியாது.

வயல் வாங்கியவர் அதைப் போய் பார்க்க வேண்டும் எனவும், ஏர் மாடு வாங்கியவர் ஓட்டிப்பார்க்க வேண்டும் என்றும் சொன்னவர், திருமணம் ஆனது என்று மட்டும் நிறுத்திக்கொள்கின்றார்.

நிற்க.

இவர்கள் மூவரும் சொன்ன காரணங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன.

இவர்கள் தங்கள் மனதுக்குப்பட்டதை அப்படியே சொல்லிவிட்டார்கள். தங்களை விருந்திற்கு அழைத்தவரை திருப்திப்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் விருந்து முக்கியம் இல்லைதான். இவர்களுக்குத் தங்கள் உழைப்பும், தங்கள் குடும்பமும் பெரிதாகத் தெரிகின்றது.

நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ப்ரையாரிட்டி இருக்கத்தான் செய்கின்றது. இதை நிர்ணயம் செய்பவர் நாம்தான்.

இந்த ப்ரையாரிட்டி மிக முக்கியம்.

இது தெளிவாக இல்லாதபோது நாம் எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்போமே தவிர, நமக்குத் தேவையானதைச் செய்ய மாட்டோம்.

முக்கியமில்லாத ஒன்றுக்கு நான் ஆம் என்று சொல்லும்போதெல்லாம் முக்கியமான ஒன்றுக்கு நான் இல்லை என்று சொல்கிறேன்.

இல்லையா?

ஆனால்,

ஒருவருடைய ப்ரையாரிட்டி அடுத்தவருக்கு எக்ஸ்க்யூஸ்.

இதுதான் வாழ்க்கை.

Saturday, November 4, 2017

நம்பிக்கையின்மை

வலைப்பதிவு எழுதி ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது.

நிறைய சோம்பல். நிறைய சாக்குப் போக்குகள். ஆதலால் நிறைய இடைவெளி.

நிற்க.

கடந்த ஒரு வாரமாக கடவுள் நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே வருகின்றது. கடவுள் நம்பிக்கை குறைகிறது என்று சொல்வதைவிட, கிறிஸ்தவ கடவுள் நம்பிக்கை குறைகிறது என்றுதான் சொல்வேன். இந்த நம்பிக்கை குறைபாடு எனக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தானாகவே வந்துவிடுகிறது.

அனைத்து புனிதர்கள், அனைத்து ஆன்மாக்கள், இறப்பு, உயிர்ப்பு, நிலைவாழ்வு, மறுவாழ்வு என நாம் நம்பிக்கை அறிக்கையில் சொல்கின்ற பல சொல்லாடல்கள் எனக்கு கேள்விக்குறியாகவே தெரிகின்றன. விளைவு, இந்த வாரம் முழுவதும் நான் சந்திக்கும் அனைத்து அருள்பணியாளர்களோடும் கருத்துமோதலாகவே இருக்கின்றது.

இந்த என் போரட்டத்தையே இன்று மாலை என் செபமாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

நம்பிக்கை போராட்டம் வரும்போதெல்லாம் நான் எடுத்து வாசிக்கும் நற்செய்திப் பகுதி மாற்கு 9:14-29. தன் சீடர்களால் விரட்டமுடியாத பேய் ஒன்றை சிறுவன் ஒருவனிடமிருந்து விரட்டுகின்றார் இயேசு. இங்கே இயேசுவுக்கும், சிறுவனின் அப்பாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது:

அதற்கு அவர், '...உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார்.

இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்றார்.

உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார்.

தன் நம்பிக்கையின்மை குணமாகவேண்டும் என கதறுகின்றார் தந்தை.

ஆக, நோய் குணமாவதற்கு முன் நம்பிக்கையின்மை குணமாகவேண்டும். மேலும், நம்பிக்கையின்மையை குணமாக்குபவர் கடவுளே. அல்லது நம்பிக்கையை கொடையாகக் கொடுப்பவரே கடவுள்.

'எனக்கு உம்மேல் நம்பிக்கையைத் தா இறைவா!' - இப்படித்தான் இன்று நான் செபித்தேன்.

இதைத் தொடர்ந்து நான் வாசித்த விவிலியப் பகுதி சீராக்கின் ஞானம் 2:1-6. இந்த இறைவாக்குப் பகுதியில் அருள்பணி நிலைக்கு முன்வரும் ஒரு சிறுவனுக்கு அறிவுறுத்துகின்றார் ஆசிரியர். இங்கே அவர் தரும் பத்துக்கட்டளைகள் அருள்பணி வாழ்வுக்கு மிக முக்கியமானவை:

முன்னுரை: 'குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால்...'

1. சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.
2. உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு.
3. உறுதியாக இரு.
4. துன்பவேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே.
5. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்.
6. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்.
7. இழிவு வரும்போது பொறுமையாய் இரு.
8. ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்.
9. உன் வழிகளைச் சீர்படுத்து.
10. அவரிடம் நம்பிக்கை கொள்.

இன்று எனக்கு வரும் சோதனை 'நம்பிக்கையின்மை.'

இதற்கு அவர் தரும் பதில், 'அவரிடம் நம்பிக்கை கொள்!'