Thursday, May 25, 2017

நேர்த்திக்கடன்

'அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்கு கப்பலேறினார்.'

இறப்புக்குப் பின் ஒருவேளை (!) மோட்சம் என்று ஒன்று இருந்து, அங்கு நான் சென்று (!) அங்கு தூய பவுலை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் கேட்க விரும்பும் பல கேள்விகளுள் ஒன்று:

'அப்படி என்ன நேர்த்திக்கடன் வைத்து நீங்கள் கெங்கிரேயா துறைமுகத்தில் முடிவெட்டிக்கொண்டீர்கள்?'

பவுல் செய்த நேர்த்திக்கடன் பற்றிய பதிவு திருத்தூதர்பணிகள் நூலில் இல்லை.

பெற்றோர் இறக்கும்போது அடக்கச் சடங்கு முடிந்தவுடன் அந்த வீட்டின் மூத்த மகன் அல்லது ஒரே மகன் முடியெடுத்துக்கொள்வது வழக்கம். இதற்கு இரண்டு சமூக அர்த்தங்கள் கொடுக்கப்படுகிறது:

அ. அவரைப் பார்த்து மற்றவர்கள் அவரின் இழப்பை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்வர்.
ஆ. தலைமுடியை இழக்கும் ஆண் தன் அழகை இழக்கின்றார். ஆக, தன்னை அழகுபடுத்திக்கொள்ள அவருக்கு இனி நேரம் தேவையில்லை. அந்த நேரத்தை அவர் தன் குடும்பம் பற்றி சிந்திக்க பயன்படுத்துவார். மேலும், தன் அழகு போய்விடுவதால் அடுத்தவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற தேவையற்ற ஆசை அவரில் எழாது.

நிற்க.

பவுல் முடிவெட்டிக்கொண்டாரா அல்லது முழுவதுமாக முடியை எடுத்துக்கொண்டாரா என்ற ஆராய்ச்சி இப்போது வேண்டாம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.

தான் ஒரு இலக்கை நிர்ணயம் செய்கின்றார் பவுல். அந்த இலக்கை அடைகின்றார். அந்த இலக்கை அவர் அடைய காரணமாக இருந்த கடவுள்முன் தன் சரணாகதியின் அடையாளமாக தன் மணிமுடியை கழற்றி கடவுளின் காலடிகளில் இறக்குகின்றார்.

பவுல் நிர்ணயித்த இலக்கு என்ன?

கடவுளின் பிரசன்னத்தை உணர்வதுதான்.

'அஞ்சாதே, பேசிக்கொண்டேயிரு. நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்கு தீங்கிழைக்கப்போவதில்லை.'

'நான் இறைவனின் திருச்சபையை துன்புறுத்தினேன். இன்று அவர் என்னோடு இருக்கிறாரா?' என்ற பவுலின் உள்ளத்து ஏக்கத்துக்கு கிடைத்த பதில்தான் இறைவனின் உடனிருப்பு.

இன்று நான் என் வாழ்வில் நிர்ணயிக்கும் சின்ன சின்ன இலக்குகள் எவை?

அவற்றை நான் அடைய எப்படி முயல்கின்றேன்?

அவற்றை அடைந்துவிட்டேன் என்பதை நான் எப்படி உணர்கிறேன்?


1 comment:

  1. தன்னையும்,தன்னைச் சார்ந்திருந்த மக்களையும் துன்புறுத்திய பவுலோடு உடனிருக்கும் ஆண்டவர்,தன் உடனிருப்பை அவருக்கு உணர்த்தும் முகமாகச் சொல்லும் வார்த்தைகள்..." அஞ்சாதே! பேசிக்கொண்டே இரு.நிறுத்தாதே.ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்.எவரும் உனக்குத் தீங்கிழைக்கப்போவதில்லை". மனத்தை வருடும் வார்த்தைகள்.இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்த ஒருவருக்கு அவர் தரும் பரிசுதான் அவரின் உடனிருப்பு. இந்த உடனிருப்பு என்னுள் உறைவதை நான் உணர்ந்து கொள்வது எப்படி? எப்போது? தந்தையின் கேள்விக்கு என்னால் சொல்ல முடிந்த பதில்.....ஒரு நாளின் முடிவில் உறங்கச்செல்லும்போது நம்மை நிம்மதியும், நிர்மலமான எண்ணங்களும் தாலாட்டினால் அது ஒன்றே போதும் இறைவன் நம்மோடு உறைகிறார் என்பதை நமக்குணர்த்த. மனதை வருடும் அழகானதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றியும்! பாராட்டும்!!!

    ReplyDelete