Wednesday, May 24, 2017

வேலை

'கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.'

நாளைய முதல் வாசகத்தில் (திப 18:1-8) பவுலின் இன்னொரு நல்ல குணத்தை நாம் பார்க்கின்றோம்: 'பவுல் ஒரு வேலைக்காரர்'

மனிதன் யார்? என்ற கேள்விக்கு வரலாற்றில் நாம் பல விடைகளைப் பார்க்கின்றோம்.

'மனிதன் சிந்தனையாளன்' என்கிறார் சாக்ரடீஸ்.

'மனிதன் உறவுக்காரன்' என்கிறார் ஹைடக்கர்.

'மனிதன் ஒரு பரிணாம வளர்ச்சி' என்கிறார் டார்வின்.

'மனிதன் ஒரு வேலைக்காரன்' என்கிறார் காரல் மார்க்ஸ்.

மேற்காணும் வரையறைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரையறை மார்க்ஸ் அவர்களுடையதே. 'நாம் இருக்கிறோம். ஏனெனில் நாம் வேலை செய்கிறோம்.'

அப்படி என்றால் வேலை செய்யாதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள் - குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர் - இவர்கள் மனிதர்கள் இல்லையா?

இவர்கள் மனிதர்கள்தாம். ஆனால், வேலை எல்லா மனிதர்களையும் - செய்பவர்களையும், செய்யாதவர்களையும் - வரையறுக்கிறது.

நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் வேலை அடங்கியிருக்கிறது.

எலுமிச்சம்பழம், சீனி, கரண்டி, டம்ளர், தண்ணீர் - இவை மட்டும் ஜூஸை உருவாக்கிவிட முடியுமா? இவைகளோடு வேலை சேரும்வரை இவைகள் வெறும் கச்சாப்பொருள்களே. நாம் பயன்படுத்தும் பொருள்கள் என்றாலும் சரி, சேவைகள் என்றாலும் சரி எல்லா இடத்திலும் உழைப்பு அல்லது வேலை இருக்கின்றது.

நம் முதற்பெற்றோர்கள் செய்த தவற்றினால் வந்த சாபம்தான் வேலை என பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. முதற்பெற்றோர் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் கடவுளின் கொடைகளில் காலந்தள்ளும் சோம்பேறிகளாக மாறியிருப்பர். என்று வேலை செய்யத் தொடங்கினார்களோ அன்றுதான் அவர்கள் கடவுளைப் போல ஆகின்றனர். ஆக, பாம்பின் சொல் இங்கே அப்படியே பலிக்கிறது. 'இந்தப் பழத்தை உண்டால் நீங்கள் கடவுள்போல ஆவீர்கள்.' கடவுள் ஒருவரே வேலை செய்தார். இப்போது இவர்களும் வேலை செய்வதால் இவர்கள் கடவுளைப் போல ஆகின்றார்கள்.

பவுல் கூடாரத் தொழில் செய்தார்.

கூடாரத் தொழில் என்பது பனை அல்லது பனை போன்ற ஓலைகளால் கூரை வேயும் தொழில். பவுலின் இந்த வேலை எனக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

அ. ஒன்று, தன்மானம். தான் செய்வது நற்செய்திப் பணி என்றாலும், தன் பணிக்கேற்ற கூலியை மற்றவர்களிடம் இருந்து பெற அவர் தகுதியுள்ளவர் என்றாலும் தானே வேலை செய்கின்றார். ஆக, தன் வயிற்றுக்குரியதை தானே சம்பாதிக்கின்றார். இப்படி வாழ்வது அவருக்கு தன்மானத்தை தந்திருக்கும். ஜெர்மன் நாட்டில் மார்க் என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தபோது, 'மார்க் எழுதிய நற்செய்தி' என்று குருத்துவத்தை கிண்டல் செய்வார்கள். அதாவது, கொடுக்கப்படும் மார்க் அளவைப் பொறுத்தே அருள்பணியாளர்கள் அருள்பணி செய்தனர். பவுல் யாரையும் சார்ந்திராமல் தன்னை மட்டுமே சார்ந்திருக்கின்றார்.

ஆ. இரண்டு, நேர மேலாண்மை. ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரத்தை ஒதுக்க பவுலால் முடிந்தது. ஒன்றை வளர்ப்பதற்காக மற்றொன்றோடு அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. சமரசம் செய்துகொள்ளாமல் தன் உழைப்பையும், தன் நற்செய்தி பணியையும், தன் உறவுகளையும் சமாளிக்கத் தெரிந்திருக்கின்றார் பவுல்.

இ. மூன்று, சக மனிதர்களின் உழைப்பை மதிப்பது. தான் தங்கியிருக்கும் வீட்டார் சாதாரண நபர்கள் என்றாலும், அவர்களோடு உணவருந்தும் பவுல், அவர்களோடு உழைக்கவும் செய்கிறார். இதுதான் முழுமையான ஒன்றிப்பு. அதே நேரத்தில் பவுலால் அரண்மனையிலும் இருக்க முடிந்தது. சிறையிலும் கைதியாக இருக்க முடிந்தது. முன்பின் தெரியாதவர் வீட்டிலும் நல்ல விருந்தாளியாக இருக்க முடிந்தது. தன்னை மறுக்கும், தன்னை இழக்கும் ஒருவரே இப்படிப்பட்ட பண்பைப் பெற முடியும்.

வேலையின் சுமை உணர்தலும் சுகமே!


3 comments:

  1. பவுல் தான் தங்கியிருந்த வீட்டில் ' விருந்தினர்' எனும் இறுமாப்புடன் இல்லாமல்,தனக்குத் தெரிந்த கூடாரம் செய்யும் தொழிலை அவர்களுடன் இணைந்து செய்த விதம் அவரை நம் பார்வையில் பெரிய மனிதராகக் காட்டுகிறது.இந்த அவரின் நற்குணத்தைச் சார்ந்திருந்த மற்ற பிற குணங்களான தன்மானம்,நேர மேலாண்மை,மற்றும் தன்னுடன் இணைந்த மனிதரின் உழைப்பை மதிப்பது போன்றவை நாமும் கூட பின்பற்றக்கூடியவை என எடுத்து வைக்கிறது இன்றையப்பதிவு." தன்னை மறுக்கும்,தன்னை இழக்கும் ஒருவரே இப்படிப்பட்ட பண்புகளைப்பெற முடியும்" எனத் தந்தை பவுலுக்குக்கொடுக்கும் சான்றிதழும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே! " வேலையின் சுமை உணர்தலும் சுகமே!"... போகிற போக்கில் அள்ளித்தெளிக்கப்பட்ட வார்த்தைகள் எனினும் 'அழகு!'.
    இன்றையப்பதிவில் தந்தைக் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம் நம் புருவங்களைத் தூக்க வைக்கிறது.' விலக்கப்பட்டக் கனியைத்' தின்றதனால் நம் ஆதிபெற்றோர்கள் இறைவனை விட்டுத் தள்ளி நின்றார்களென நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க, வேலை செய்ய ஆரம்பித்த காரணத்தால் அவர்கள் இறைவனைப்போல ஆனார்கள் என்பது மட்டுமின்றி " பாம்பின் சொல் இங்கே அப்படியே பலிக்கிறது" என்பதையும் தந்தை எடுத்து வைப்பது சுவாரஸ்யமே! இப்படித் தான் பார்க்கும் எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில் அலசி ஆய்வது மட்டுமின்றி, அதைப் படிக்கும் வாசகர்களுக்கும் சுவைபடப் படைக்கும் நேர்த்திக்காகத் தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'

    ReplyDelete
  2. முதற்பெற்றோர் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் கடவுளின் கொடைகளில் காலந்தள்ளும் சோம்பேறிகளாக மாறியிருப்பர்.

    //our forefathers had job. God didnt let them merely enjoy in the Eden garden

    genesis 2:15 ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.

    ReplyDelete
  3. Lovely and enlightening message.

    ReplyDelete