Tuesday, May 23, 2017

சாமி அல்லது கடவுள்

கடந்த மாதம் சிறுகதை ஒன்றை வாசித்தேன்.

இந்திய மரபில் கடவுள் பற்றிய புரிதல் என்ன என்பதை விளக்கும் கதை அது.

ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தின் நடுவில் ஒரு சிறிய கோயில். அந்தக் கோயிலுக்குள் ஒரு சாமி சிலை. அது ஒரு கல் சிலை. அந்தச் சிலைக்கு தினமும் மாலையிட்டு, பூசை செய்து வழிபடுகின்றனர் அந்தக் கிராமத்து மக்கள். அந்த ஊருக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் வருகின்றார். அந்த ஊர் மக்களின் கோயில் மற்றும் பூசைகளைப் பார்த்துவிட்டு, அந்த சாமி சிலையை ஃபோட்டோ எடுக்க விரும்புகிறார். ஊர் மக்களும் அனுமதி தருகின்றனர். சாமி சிலை கோயிலுக்கு உள்ளே இருந்ததால் ஃபோட்டோவில் சரியாக விழவில்லை. சிலையை வெளியே எடுத்து வைத்து ஃபோட்டோ எடுக்க அனுமதி கேட்கின்றார். ஊர் மக்களும் சம்மதிக்கின்றனர். வெளியே அவர் எடுத்து வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரின் பெரியவர் ஒருவர், 'உங்களுக்குப் பிடித்தால் இந்த சாமி சிலையை நீங்கள் கொண்டு போங்கள். நாங்கள் வேறொன்றை வைத்துக்கொள்கிறோம்!' என்கிறார். ஆக, 'சாமி அல்லது கடவுள் தன்மை என்பது அந்தக் கல்லில் இல்லை. மாறாக, வணங்குபவரின் உள்ளத்தில்தான் இருக்கிறது' எனக் கண்டுகொள்கிறார் அந்த வெளிநாட்டுக்காரர்.

சாமி அல்லது கடவுள் பற்றி ஒவ்வொரு மரபும் ஒவ்வொரு வகையான புரிதலைக் கொண்டிருக்கிறது.

நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 17:15-22, 18:1) இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் வாசிக்கின்றோம்.

ஏதென்ஸ் நகரின் தொழுகைக்கூடங்களைச் சுற்றி வருகின்றார் பவுல். அங்கே, 'நாம் அறியாத தெய்வத்துக்கு' என்ற ஒரு பலிபீடத்தைக் காண்கிறார். தான் பார்த்ததை வைத்து தன் உரையாடலைத் தொடங்குகிறார். அத்தோடு கிரேக்கர்களின் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றார்.

இது எதைக் காட்டுகிறது? தூய பவுலின் பரந்த அறிவை. அதாவது, எபிரேயத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்த பவுல் கிரேக்கமும் நன்றாக அறிந்திருக்கிறார். ஏதென்ஸ் நகர மக்களுக்கு அவர்கள் மொழியில் பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றார்.

பவுல் நமக்குச் சொல்லும் முதல் பாடம்: நாம் உரையாடத் தொடங்குமுன் அடுத்தவரின் மொழி என்ன என்பதை தெரிந்து, அடுத்தவரின் புரிதல்திறன் எது என்பதை உணர்ந்து அதிலிருந்து தொடங்க வேண்டும்.

இரண்டாவதாக, நற்செய்தி அறிவிக்கும் ஆர்வம். புதிய இடம், புதிய மக்கள், புதிய மொழி என்று ஓய்ந்திருக்காமல், அந்த புதிய இடத்திலும் தன் இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆகையால்தான் இரண்டு நாள்களுக்கு முன் வாசித்தோம். ஆற்றங்கரையில்கூட பவுல் போதிக்கின்றார்.

மூன்றாவதாக, ஏதென்ஸ் மக்களின் அறிவுப்பசி. புதிதாக எது இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம். நம் இந்திய மண்ணில் நிறைய மதங்கள் இருக்கின்றன. இந்து மதம், பொளத்தம், சமணம், சோராஸ்டிரியனிசம் என நான்கு மதங்களுக்கு தாயாகவும், இசுலாம், கிறிஸ்தவம் என்னும் இரண்டு மதங்களுக்குத் தொட்டிலாகவும் இருக்கும் நம் மண். இங்கே கிறிஸ்தவத்தில் இருக்கும் எனக்கு பல நேரங்களில் என் மதத்தை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதிலேயே நேரமும், ஆற்றலும் போய்விடுகிறது.

நிற்க.

என் கடவுள் அனுபவம் என் உள்ளத்தில் இருந்தால் என் கண்முன் சிலையோ, சுரூபமோ எது இருந்தாலும், இல்லை என்றாலும் எல்லாம் இறைமயமே!

1 comment:

  1. இந்தப்பதிவில் தந்தை விளக்க முயன்றிருக்கும் பல விஷயங்கள்......இந்திய மரபில் கடவுளின் புரிதலை விளக்கும் அந்த சிலையின் கதையாகட்டும்,பவுலின் பன்மொழிப்புலமை மற்றும் அவரது நற்செய்தி அறிவிக்கும் ஆர்வமாகட்டும், ஏதென்ஸ் மக்களின் அறிவுப்பசியாகட்டும்,பல மதங்களுக்குத் தொட்டிலாகக்கருதப்படும் நம் மண்ணின் மகிமையாகட்டும்....இதையெல்லாம் தாண்டி என் மனத்தைப் தைத்தது தந்தையின் " இங்கே கிறிஸ்தவத்தில் இருக்கும் எனக்குப் பல நேரங்களில் என் மதத்தை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதிலேயே நேரமும்,ஆற்றலும் போய்விடுகிறது." இந்த வரிகளில் இருப்பது பெருமிதமா...சலிப்பா....என்று தெரியவில்லை....பெருமிதம் என்றே எடுத்துக்கொள்கிறேன்.எத்தனை பேருக்குக் கிடைக்கும் இத்தகையதொரு வாய்ப்பு? பவுலைப்போன்று பன்மொழிப்புலமையும்,யாரும் ஐயமற நம்பக்கூடிய வகையில் மதத்தின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லும் திறனும் படைத்தவர்கள் தங்களைப்போன்ற வெகு சிலர்தானே! செய்வதைப்பெருமையோடு செய்யுங்கள்.. நெற்றியடியாய் வந்துவிழும் அந்த வரிகள்...." என் கடவுள் அனுபவம் என் உள்ளத்தில். இருந்தால் என் கண்முன் சிலையோ,சுருபமோ,எது இருந்தாலும்,இல்லை என்றாலும் எல்லாம் இறைமயமே!" .....பசுமரத்தாணியாய் வந்த வார்த்தைகளுக்காகத் தந்தையை எத்தனை பாராட்டினும் அது நியாயமே!!!

    ReplyDelete