Monday, May 22, 2017

கைதிகள் விருந்தாளிகள் ஆன கதை

திருத்தூதர் பணிகள் நூலை ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டுமென்றால், 'வியப்பு' என்று சொல்லலாம். இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எல்லாமே நம்மை வியக்க வைக்கின்றன. கடவுளின் செயல்பாடுகள் அப்படித்தான் போலும்! அவைகளுக்கு லாஜிக் இல்லை. அவைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையே நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 16:22-34) வாசிக்கின்றோம்.

பிலிப்பு நகரில் சிறையிடப்படும் பவுலும், சீலாவும் வியப்புக்குரிய வகையில் தப்பிப்பதையும், அவர்களின் தப்பித்தல் சிறைக்காவலரையும் மனமாற்றுவதையும் எடுத்துச் சொல்கிறது இந்த வாசகம்.

சீலா என்றவுடன் பெண் என நினைத்துவிடாதீர்கள். நிறைய வருடங்கள் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆங்கிலத்தில் 'சைலஸ்'. தமிழில் 'சீலா.'  இருவருக்கும் கடுங்காவல் விதிக்கப்படுகிறது. உடைகள் களையப்படுகின்றன. ஆகையால் இவர்கள் தப்பினாலும் நிர்வாணமாக ஓட வேண்டியிருக்கும். இது முதல் தண்டனை. அவர்கள் உட்சிறையில் தள்ளப்பட்டார்கள். அதாவது, மூன்றடுக்கு சிறையில் மூன்றாவது உள்ளடுக்கில் இருந்தனர். கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டியிருந்தனர். ஆக, நகலவும் முடியாத நிலையில் கைதிகளாக இருக்கின்றனர்.

ஆனாலும், கடவுளுக்குப் புகழ் பா பாடுகின்றனர். இது எப்படி என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது?

வலி, சித்ரவதை, தனிமை, பசி, சோர்வு இவற்றின் நடுவில் கடவுளைப் புகழ இவர்களால் எப்படி முடிந்தது? இவர்கள் பாடுவதை மற்ற கைதிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆக, இவர்கள் தாங்கள் பாடுவதைக் குறித்து வெட்கப்படவில்லை.

அந்நேரம் ஏதோ ஒரு அற்புதம் நிகழ, இவர்களின் கை மற்றும் கால் விலங்குகள் அகல்கின்றன. சிறைக் கதவுகள் திறக்கப்படுகின்றன.

அந்நேரத்தில் விழிக்கும் சிறைக்காப்பாளர், கைதிகள் தப்பித்திருப்பார்கள் என எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கிறார். கைதிகள் தப்பினால் காப்பாளருக்க மரண தண்டனை என்பதால், தங்கள் மானத்தை காத்துக்கொள்ள நினைக்கிறார் காப்பாளர்.

ஆனால், பவுலும், சீலாவும் அதைவிட தன்மானம் உள்ளவர்கள். தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அப்படியே நிற்கிறார்கள். இவர்களின் இந்த செயல் காப்பாளரின் மனதைத் தொடுகிறது. மனம் மாறுகிறார் அவர் குடும்பத்தோடு. தன் வீட்டில் இவர்களை விருந்தினர்களாக அழைக்கின்றார்.

ஆக, கைதியாக வந்தவர் விருந்தினராக மாறுகின்றார்.

எந்தச் சூழலிலும் தங்களைக் கைதிகள் என பவுலும், சீலாவும் நினைக்கவில்லை.

இவர்களின் இந்த மனச்சுதந்திரம் அல்லது உள்ளத்தின் கட்டின்மை நம் வாழ்க்கைப்பாடமாகலாமே!

1 comment:

  1. இன்றையப்பதிவில் யாரையும் யோசிக்க வைக்கும் வரிகள்...."வலி,சித்திரவதை,தனிமை,பசி,சோர்வு இவற்றின் நடுவில் கடவுளைப் புகழ பவுல்,சீலா இவர்களால் எப்படி முடிந்தது? அது மட்டுமல்ல...தப்பித்துச் செல்ல வழி இருந்தும் தன்மானம் மிக்கவர்களாய் அப்படியே நிற்கிறார்களே!"..அது எப்படி? தங்களுக்குக் கிடைத்ததை ஒரு தண்டனையாகக் கருதாமல் இறைவன் புகழ்பாடுவதிலேயே கருத்தாய் உள்ளனர்.அதற்குக் கிடைத்த பரிசுதான் "கைதியாக வந்தவர் விருந்தினராக மாறுவது." இத்தனையும் உண்மைதானா? நடக்குமா என்றால் " உண்மைதான்", " நடக்கும்" என்கிறார் தந்தை.ஏனெனில் கடவுளின் செயல்பாடுகள் வியப்புக்குரியவை,லாஜிக் இல்லாதவை என்கிறார்.அப்புறமென்ன? இவர்களின் வாழ்வில் நடந்த அந்த 'வியப்புக்கு' காரணமான " மனச்சுதந்திரத்தை" நாமும் கூட நம் வாழ்க்கைப் பாடமாக்கலாமே! சிந்திக்கத்தூண்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete