'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'
இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.
'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம். லூக்காவின் இந்தப் புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் இருந்தன:
பின்புலம் 1: இருதுருவ சிந்தனை
ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.
பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை
கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.
பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை
லூக்கா ஒரு மருத்துவர். மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த லூக்கா கையில் எடுக்கும் இறையியல்கூறுதான் விண்ணேற்றம். ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த லூக்கா, அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.
இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:
தடை 1: இயேசுவின் உடல்
மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.
தடை 2: காலம்-இடம்; கூறு
மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.
தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை
இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.
இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (ascension) அல்லது 'விண்ணேற்பா?' (assumption)
முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை (active voice). 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை (passive voice). விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!
ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.
இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.
எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.
விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:
1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).
2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.
3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).
இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
பாடம் 1: மறைதலே இறைமை
இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12). இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும், 'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக' விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன் மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.
பாடம் 2: சீடர்களின் பணி
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது மூன்று: ஒன்று, 'சீடராக்குங்கள்.' இரண்டு, 'திருமுழுக்கு கொடுங்கள்.' மூன்று, 'கற்பியுங்கள்.'
சீடராக்குங்கள்: சீடராக்குவது வேறு, பக்தர்களாக்குவது வேறு. இயேசு தனக்கென பக்தர்களை விரும்பவில்லை. மாறாக, சீடர்களையே விரும்பினார். சீடர்களாக இருப்பதை விட பக்தர்களாக இருப்பது எளிதாக இருப்பதால் நாம் அப்படியே இருந்துவிடுகிறோம். அவரை ஒரு பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு, 'என் ஆண்டவரே, என் கடவுளே' என நாம் தள்ளி நின்றுகொள்கின்றோம். மற்றவர்களையும் இப்படி நிற்கச் செய்துவிடுகின்றோம். மற்றொரு பக்கம், இயேசுவை நாம் நம் வாழ்வின் நோய், பிரச்சினை, காயம் போன்றவற்றுக்கான தீர்வாக பார்க்கின்றோம். இயேசு இவற்றுக்கு தீர்வுகள் தருபவர் அல்லர். பிரச்சினைகளே வேண்டாம் என அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் பரிசேயர், சதுசேயர், பிலாத்து, ஏரோது, யூதாசு என அனைவரையும் ஒரே நொடியில் இல்லாமல் செய்திருக்கலாம் அல்லவா! நம்மைப்போல பிறந்த அவர் நம்மைப்போல எல்லாவற்றிலும் பங்குகொண்டார். அப்படி என்றால் நமக்கும் இன்று எல்லா நோய், பிரச்சினைகளும் வரும். ஆனால், அவர் கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருந்ததே சீடத்துவம்.
திருமுழுக்கு கொடுங்கள்: யார் பெயரால்? 'தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்.' 'கழுவுங்கள்' என்பதுதான் இங்கே சொல்லப்படும் வார்த்தை. திருமுழுக்கு என்று சொல்வது நமக்கு இறையியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. குழந்தை திருமுழுக்கா? வயது வந்தபின் திருமுழுக்கா? தண்ணீர் ஊற்றி திருமுழுக்கா? தண்ணீரில் அமிழ்த்தி திருமுழுக்கா? ஆசை திருமுழுக்கா? இரத்த திருமுழுக்கா? என நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இதைத் தவிர்க்க, 'கழுவுதல்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். 'கழுவுதல்' என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் சாதாரண ஒரு பழக்கச் சொல். கழுவுதலில் என்ன நடக்கிறது என்றால், முந்தையது மறைந்து புதிய நிலை பிறக்கிறது. அழுக்கு மறைந்து தூய்மை பிறக்கிறது. ஆக, தன்மையம் என்ற முந்தைய நிலையிலிருந்து, 'தந்தை, மகன், தூய ஆவி' என்னும் இறைமையம் நோக்கி நகர்வதே கழுவுதல்.
கற்பியுங்கள்: எவற்றை? 'நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை.' அவர் எவற்றைக் கட்டளையிட்டார்? அன்பு ஒன்றையே. ஆக, அன்பு என்பது வெறும் சொல் அல்ல. மாறாக, ஒரு செயல். இயேசுவிடமிருந்து புறப்படும் சீடர்கள் அனைவரும் அன்பு ஒன்றை வாழ்பவர்களாகவும், கற்பிக்கிறவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
பாடம் 3: எதிர்நோக்கு
'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).
பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!
'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.
பாடம் 5: மகிழ்ச்சி
இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.
இன்றைய நற்செய்தியில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் விண்ணேற்றம் பற்றி பதிவு செய்கின்றனர். ஆனால், மத்தேயு அப்படி பதிவு செய்தாலும் இயேசுவை விண்ணேற்றாமல் அப்படியே விட்டுவிடுகின்றார். 'இம்மானுவேல்' - 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர் இனி ஏறச் செல்ல முடியாது. அவர் 'உலகம் முடியும் வரை, அதாவது எந்நாளும், நம்மோடு இருந்துவிடுகின்றார்.' இயேசுவின் இந்த ஒற்றை வாக்குறுதியே நம் மகிழ்வின் ஊற்றாக அமைய வேண்டும்.
'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.
இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.
ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!'
(தூய அகுஸ்தினார்)
விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!