Saturday, May 31, 2014

எனக்கென்ன குறைவு?

'ஆண்டவர் கற்றுக்கொடுத்த செபத்திற்குப்' பின் அனைத்து கிறித்தவர்களுக்கும் மனப்பாடமாக தெரிந்திருக்கும் ஒரு விவிலியப் பகுதி: 'திருப்பாடல் 23' (ஆண்டவர் என் ஆயன்!)

இயேசுவே தன்னை நல்லாயனாக உருவகம் செய்கின்றார். இயேசுவை நல்லாயானக சித்தரிக்கும் ஓவியங்களிலும் இந்தத் திருப்பாடலே பின்புலமாக இருக்கின்றது.

தாவீது ஒரு ஆடு மேய்ப்பவர். ஆடு மேய்ப்பவராக இருந்தவர் அரசராக மாறுகிறார். ஆடு மேய்க்கும் பணியில் இருந்த போது தான் ஆடுகளுக்குச் செய்ததையெல்லாம் ஆண்டவர் மேல் எடுத்து வைத்துப் பாடும் பாடலே இது.

முதலில் ஆண்டவரைத் தன் ஆயர் என அறிக்கையிடுகின்றார். இந்த ஆயன் செய்யும் பணிகள் நான்கு:

அ. பசும்புல் வெளிமீது இளைப்பாறச் செய்வார்.
ஆ. அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்.
இ. எனக்குப் புத்துயிர் அளிப்பார்.
ஈ. என்னை நீதிவழி நடத்திடுவார்.

'அவர்' 'அவர்' எனச் சொல்லிக்கொண்டு வரும் தாவீது திடீரென 'நீர்', 'நீர்' என முன்னிலையில் பேசத் தொடங்குகிறார். அப்படி அவர் சொல்பவை ஆறு:

அ. நீர் என்னோடு இருக்கின்றீர்.
ஆ. நீர் உம் கோல்கொண்டு தேற்றுகின்றீர்.
இ. நீர் விருந்து ஏற்பாடு செய்கின்றீர்.
ஈ. நீர் நறுமணத்தைலம் பூசுகின்றீர்.
உ. நீர் என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கின்றீர்.
ஊ. நீர் உம் பேரன்பால் என்னைச் சுற்றியிருக்கின்றீர்.

'அவர்' நிலைக்கும், 'நீர்' என்ற முன்னிலைக்கும் உள்ள மாற்றம் நமக்குச் சொல்வது என்ன?

நம் வாழ்வில் எல்லாமே ஆச்சரியங்கள். அடுத்த நிமிடம் காத்திருக்கும் ஆச்சர்யம் நமக்குத் தெரிவதில்லை. நம் வாழ்வின் உறவுகளாக உள் நுழைந்த அனைவருமே ஒளிந்திருந்த ஆச்சர்யங்கள்தாம்.

ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகிறோம். மெனு கார்டில் உணவு அயிட்டங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன. கொஞ்ச நேரத்தில் நாம் ஆர்டர் செய்த உணவு நம் மேசைக்கு வருகின்றது.

மெனுகார்டில் உள்ள உணவுப் பட்டியில் ஒருபோதும் நம் பசியைப் போக்குவதில்லை. நம் முன் வந்து நிற்கும் உணவே பசி போக்குகிறது.

கடவுள் அனுபவம் என்பதும் உறவுகளின் அன்பு என்பதும் அப்படித்தான். அவர்களைப் பற்றி புத்தகங்கள் படிப்பதாலும், மறையுரைகள் கேட்பதாலும், வழிபாடுகளில் பங்கேற்பதாலும் நமக்கு அனுபவம் கிடைப்பதில்லை. நேருக்கு நேர் அவரைச் சந்திக்கும் போது அங்கே இனிமையையும், அன்பையும் உணர்கிறோம்.

'அவர்' 'அவன்' 'அவள்' என்ற படர்க்கை நிலை மாறி 'நீர்' 'நீங்கள்' 'நீ' என முன்னிலை வர வேண்டுமானால் அங்கே தேவை தனிப்பட்ட அனுபவம்.

அந்த அனுபவம் என்ற ஒன்றை நாம் பெற இன்று விழைந்தால்...

நாமும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்போம்.

ஏன் என்னைக் கைவிட்டீர்?

திபா 22 நமக்கு மிகவும் பரிச்சயமான திருப்பாடல். கல்வாரியில் இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிய போது அவரே தன் மரண வேதனையில் முணுமணுத்ததாக நற்செய்தியாளர்கள் எழுதும் பாடல்.

இப்பாடலை இயேசு செபித்திருக்கலாம். ஒவ்வொரு யூதரும் திருப்பாடல்களை செபங்களாக செபிப்பது வழக்கம். இந்தத் திருப்பாடலில் வரும் பல்வேறு சொல்லாடல்கள் இயேசுவின் சிலுவைச்சாவோடு மிகவும் ஒத்துப் போவதால் இயேசு இதை முணுமுணுத்ததாக எழுதவும் வாய்ப்பிருக்கிறது.

பாடகர் தன் பாடலை எப்படித் தொடங்குகின்றார்?

தன் மனதில் அமைதி இல்லையாம்.

காலையிலும் மன்றாடுகின்றார். மாலையிலும் மன்றாடுகின்றார். ஆனால் இறைவன் மௌனம் சாதிக்கின்றார். இறைவனின் மௌனம் தன் மனத்தின் அமைதியைக் குலைக்கிறது.

இறைவன் தனக்கு செவிசாய்க்காவிடினும் அவருக்கு இரண்டு நம்பிக்கைகள் இன்னும் இருக்கின்றன:

அ. கடவுள் என் மூதாதையருக்குச் செவிசாய்த்தார். ஆகையால் எனக்கும் செவிசாய்ப்பார்.

ஆ. கடவுள் என் இறந்த காலத்தில், அதாவது என் பிறப்பு முதல் இன்று வரை, என் உடன் இருந்திருக்கின்றார். ஆகவே இன்னும் உடனிருப்பார்.

இந்த இரண்டு நம்பிக்கையையும் சீர்குலைப்பதாக இருப்பது அவரைச் சுற்றியிருக்கும் தீங்கு. இந்தத் தீங்கு என்ன என்று நமக்குத் தெரியவில்லை: போரா, இயற்கைச் சீற்றமா, எதிரிகளின் படையெடுப்பா, அழிக்க முடியாத கொள்ளை நோயா, பசியா, பஞ்சமா? ஆனால் உயிர் போகுமளவிற்கு துயரம் இருப்பது உண்மை.

பாடகரைச் சுற்றியிருக்கும் தீமைக்குப் பல உருவகங்கள் கொடுக்கப்படுகின்றன: காளைகள், பாசானின் கொழுத்த எருதுகள், சிங்கங்கள், தீமை செய்வோரின் கூட்டம், சாவின் புழுதி, நாய்கள், உடைந்த எலும்புகள், வாள். இதில் ஏதாவது ஒன்று வந்தாலே நம்மால் தாங்க முடியாது. அப்படியிருக்க நம் திபா ஆசிரியருக்கு இவ்வளவும் ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்கும்? பாவம்!

தன் இயல்பைப் பற்றிச் சொல்லும் போது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகின்றார்:

அ. கொட்டப்பட்ட நீர் போல ஆனேன்.
ஆ. என் இதயம் மெழுகு போல ஆயிற்று.
இ. என் வலிமை ஓடுபோல காய்ந்தது.
ஈ. என் நா மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது.

இந்த நான்கு அறிகுறிகளும் நமக்கும் வரும். எப்போது? பயம் வரும்போது.

நம் உடலுக்கும், உணர்வுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை இன்றைய அறிவியல் நம் உடலில் உள்ள 'சுரப்பிகளின்' செயல்பாட்டை வைத்து விளக்குகிறது. ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவு இருந்ததை இத்திருப்பாடல் விளக்குகிறது.

ஆசிரியரின் பயம் என்ற உணர்வு அவரின் இரண்டு சுரப்பிகளின் இயக்கத்தைத் தடைசெய்கிறது:

தைராய்டு சுரப்பியின் செயல் இழப்பு நாக்கையும், உடலையும் வறண்டு போகச் செய்கிறது. எலும்பின் வலிமையைக் குறைக்கிறது.

அட்ரீனல் சுரப்பியின் குறைபாடு இதயத்தின் துடிப்பைப் பாதிக்கிறது.

இது உளவியலால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதிக பய குணம் கொண்டவர்களுக்கு, இதயத்தில் அதிக வருத்தத்தைச் சுமப்பவர்களுக்கு இந்த இரண்டு சுரப்பிகளின் இயக்கும் குறைவாகவே இருக்கின்றது.

நம் உணர்வுகள் நம் உடலை அதிகமாகவே பாதிக்கின்றன.

இதுவரை வழிநடத்தி வந்த இறைவன் இனி வழி நடத்தாமாலா போய்விடுவார்? என்று நம்பிக்கை வளரும் போது பயம் குறைகின்றது.

'ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று புலம்பும் ஆசிரியர் வெகு சீக்கிரமாகவே 'உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்!' என்று துள்ளி எழுகின்றார்.

Thursday, May 29, 2014

தகுதியுள்ளவர் யார்? குடியிருப்பவர் யார்?

திருப்பாடல் 15ல் இரண்டு கேள்விகள் நம் முன். இந்தப் பாடல் தாவீதுக்கு உரியது. 'கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை' என்பது தமிழ் விவிலியம் கொடுக்கும் தலைப்பு.

உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

தங்குதலும், குடியிருப்பதும் ஒன்றா?

இந்தத் திருப்பாடலை எழுதியவர் மிகப்பெரிய கவிஞராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்தப்பாடலின் வாக்கிய அமைப்பு அப்படி உள்ளது. அந்த சிறப்பான அமைப்பு சிதைந்து விடாமல் தமிழில் மொழிபெயர்த்தவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
'தங்குவது' என்பது தற்காலிகமானது. 'குடியிருப்பது' என்பது நிரந்தரமானது.

தங்குவதில் அடங்கியிருக்கும் தற்காலிகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது 'கூடாரம்' என்ற வார்த்தை. குடியிருப்பதில் அடங்கியிருக்கும் நிரந்தரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது 'மலை' என்ற வார்த்தை.

வெளியூர்களுக்கும், வெளிநாட்டிற்கும் செல்லும்போது நாம் அங்கே தங்குகிறோம். ஆனால் நம் வீட்டில் குடியிருக்கிறோம். வெளிநாட்டில் குடியிருந்து கொண்டு, நம் வீட்டில் தங்குகிறோம் என நிலை மாறிவிட்டால் அங்கே ஆபத்து இருக்கின்றதுதானே!

ஒரு நாட்டின் குடியுரிமை பெற வேண்டுமெனில் அதற்கென சில தகுதிகளை விதிக்கின்றது ஒரு நாடு. ஒரு லாட்ஜில் நாம் ஒரு இரவு தங்க வேண்டுமெனில் அங்கேயும் அந்த நிர்வாகம் சில தகுதிகளை முன்வைக்கின்றது.

தாவீது அரசர் தன் யூதா அரசையும் தாண்டி இறைவனின் அரசில் தங்குவதற்கும், குடியிருப்பதற்குமான தகுதிகள் என்ன என்பதை இப்பாடலில் எழுதுகின்றார். கொஞ்ச நாள் தங்குதலோ, நிரந்தரத் தங்குதலோ இங்கே தகுதிகள் ஒன்றுதான்.

பத்துத் தகுதிகளை திருப்பாடல் முன்வைக்கின்றது:

1. நேரியவற்றைச் செய்வர்.
2. உளமார உண்மை பேசுவர்.
3. நாவினால் புறங்கூறார்.
4. தோழருக்குத் தீங்கிழையார்.
5. அடுத்தவரைப் பழித்துரையார்.
6. நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்.
7. ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்.
8. தமக்குத் துன்பம் வந்தாலும் கொடுத்த வாக்குறுதியை மீறார்.
9. தம் பணத்தை வட்டிக்குக் கொடாதார்.
10. மாசற்றவருக்கு எதிராக கையூட்டு பெறார்.

இந்த அமைப்பைப் பாருங்களேன். இதில் 4 தகுதிகள் 'எப்படி இருக்க வேண்டும்!' எனவும், 6 தகுதிகள் 'எப்படி இருக்கக் கூடாது' எனவும் சொல்கின்றன. முதல் இரண்டும் நேர்மறை, மற்ற மூன்றும் எதிர்மறை. மறுபடி முதல் இரண்டும் நேர்மறை. மற்ற மூன்றும் எதிர்மறை. இலக்கியத்தில் இதற்குப் பெயர் 'ஓடு வேய்தல்' (tiling technique) - அதாவது ஒரு ஓட்டின் மேல் மற்றொரு ஓட்டை வைத்து மேயும்போது ஒரு பகுதி உள்ளே போய் இருக்கும். மற்ற பகுதி அதன் தொடர்ச்சியாக இருக்கும்.

இந்த மொத்த 10 தகுதிகளையும் ஒரே வார்த்தையில் சுருக்கியும் சொல்கின்றார்: 'மாசற்றவராய் நடப்பவர்!'

இந்தப் பத்துத் தகுதிகளில் எட்டாம் தகுதியை மட்டும் இன்று சிந்திப்போம்:

'கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது!' எப்போது? எப்போதும். தமக்குத் துன்பம் வந்தாலும்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாக இறைமக்கள் முன்னிலையில் 'நான் விருப்பத்துடன் இறைப்பணி ஆற்ற முன்வருகிறேன்' என்று நான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின் வாங்க தினமும் சிந்தனை வருகின்றது. இந்தப் பாடலின் வரியோடு என் மனப்போராட்டத்தையும் இணைத்து சிந்திக்க விழைகின்றேன்.

'நீ கோபமாக இருக்கும் போது முடிவு எடுக்காதே! நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது வாக்குறுதி கொடுக்காதே!' என்பார்கள். ஏரோது அரசன் மகிழ்ச்சியாய் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிதான் திருமுழுக்கு யோவானின் இறப்பிற்குக் காரணமாக மாறுகின்றது. நான் வாக்குறுதி கொடுத்த போது என்ன நிலையில் இருந்தேன்? மகிழ்ச்சி தான். அன்று மகிழ்ச்சியால் நான் வாக்குறுதி கொடுத்தேன் என்று சொல்வதை விட, வாக்குறுதி கொடுத்ததால் மகிழ்ச்சியாக இருந்தேன் என்றே சொல்வேன்.

வாக்குறுதிகள் மூன்று வகை:

1. 'வித் டேர்ம்ஸ் அன்ட் கன்டிசன்ஸ்' (with terms and conditions) - நாம் அனுபவிக்கும் எல்லா சேவைகளும் நமக்கு வாக்குறுதி தருகின்றன. நாம் பயன்படுத்தும் இமெயில், ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், ஏர்செல், ஏர்டெல், எல்லா செல்ஃபோன் சேவைகள், வங்கி சேவைகள், குரியர் சேவைகள். இந்த எல்லாவற்றிலும் நம்மிடம் 'அக்செப்ட்' என்று அழுத்தச் சொல்லியிருப்பார்கள். அல்லது 'ஆம்' என கையெழுத்திடச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் தங்கள் சேவையை நமக்கு வாக்குறுதி செய்கிறார்கள். எப்போது? அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' நாம் உட்படும் போது.

2. 'வித் எ பெய்ட் ஸ்மைல்' (with a paid smile) - இது ஏர்ஹோஸ்டஸ் வாக்குறுதி. மருத்துவமனையில் நாம் காணும் நர்சுகள், பள்ளிகளில் நாம் சந்திக்கும் டீச்சர்கள், பேருந்தில் நாம் காணும் நடத்துனர்கள், ஹோட்டலில் நாம் காணும் சர்வர்கள் அனைவரும் இந்த குழுவிற்குள் வருவர். இவர்கள் பயிற்சி பெறும் போதே 'சிரிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்'. வாடிக்கையாளர் என்ன மாதிரி கடுப்பேத்தினாலும் அவர்கள் சிரிக்கத்தான் வேண்டும். வாங்குகிற காசுக்குச் சிரிப்பார்கள். இதில் டீச்சர்களில் விலக்கு இருக்கலாம். ஆனால் இன்று எல்லாம் தொழில் தானே. மாணவரைக் கண்டிக்க முடியாது இன்று. கண்டித்தால் மீடியாக்கள் பயம் அவர்களுக்கு. ஆகையால் மாணவர்கள் தவறும் போது 'நமக்கு என்ன? தண்டித்தால் யாரு போலிஸ் ஸ்டேசனுக்கு அலைவது' என்று அவர்களும் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

3. 'கள்ளமற்ற வாக்குறுதி' (stainless promise) - திருமணத்தில் ஒருவர் மற்றவருக்கும், அருட்பணி நிலையில் முன்வருபவர் இறைவனுக்கும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்கள், நண்பர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தரும் வாக்குறுதி இது. 'இது' என்று சொல்வதை விட, இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

இந்த மூன்று வாக்குறுதிகளில் இன்று நான் கொடுத்துள்ள வாக்குறுதி இரண்டாம் நிலைக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது. 'வாங்குகின்ற காசுக்கு' மனநிலை. ஏர்ஹோஸ்டஸ் போல சிரிப்பது விரைவில் அலுப்பு தட்டிவிடும். கடவுளை எவ்வளவு நாளைக்கு 'பெய்டு ஸ்மைல்' கொண்டு ஏமாற்ற முடியும்.

இன்று வாக்குறுதிகள் கொடுப்பதை விட அதைக் கடைப்பிடிக்கும் விடாமுயற்சிக்காகத்தான் நான் செபிக்கிறேன். வாக்குறுதி யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அதில் நிலைக்க விடாமுயற்சி அவசியம். இன்று நாம் ஒருவர் மற்றவருக்கும், நமக்கு நாமேயும், கடவுளுக்கும் கொடுக்கும் வாக்குறுதியை விட, அதில் நிலைத்திருக்க வேண்டிய விடாமுயற்சிக்காக செபிப்போம்.

'தமக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாத' மாசற்ற மனம் தா இறைவா!


இறுதிவரை மறந்துவிடுவீரோ?

'கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்தார்' என்று சொல்வதைவிட 'மனிதன் கடவுளைத் தன் சாயலாகப் படைத்தான்' என்று சொல்வதே பொருந்தும் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். மனிதர்கள் தங்களின் சாயலாக உருவாக்கியவர்களே கடவுளர்கள். தங்களிடமுள்ள நற்குணங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாகத் திரட்டி அதற்குக் கடவுள் என்று பெயர் வைத்துவிட்டனர்.

முதல் ஏற்பாட்டில் (பழைய ஏற்பாட்டில்) - பெயர் விளக்கம். இன்று முதல் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று எழுத வேண்டாம் என இன்று முடிவெடுத்தேன். ஜெர்மானிய மொழிபெயர்ப்பு சொல்வது போல முதல் ஏற்பாடு, இரண்டாம் ஏற்பாடு என எழுதவே விழைகின்றேன். முதல் ஏற்பாட்டில் கடவுள் மனித குணங்களைப் பெற்றவராகவே சித்தரிக்கப்படுகின்றார்.

தோட்டத்தில் உலாவுகின்றார். பேசுகின்றார். மக்களின் கூக்குரலைக் கேட்கின்றார். நினைவு கூறுகின்றார். - இவையெல்லாம் மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயல்கள். இந்தச் செயல்களையெல்லாம் கடவுளும் செய்கிறார்.

இன்று நாம் சிந்திக்கும் திருப்பாடல் 13ன் கடவுளும் மனிதரின் குணங்களைக் கொண்ட ஒரு கடவுளே.

'எத்தனை நாள் மறந்திருப்பீர்? என்றும் 'எத்தனை நாள் முகத்தை மறைப்பீர்?' எனவும் கடவுளை நோக்கிக் கேட்கின்றார் பாடகர்.

'மறதி ஒரு தேசிய வியாதி!' என்று 'இந்தியன்' திரைப்படத்தில் சொல்வார் கமல்ஹாசன். தற்போது திண்டுக்கல்லில் ஆயராக இருக்கும் மேதகு. அந்தோணி அவர்கள் மதுரைக்கு முதலில் துணை ஆயராக வந்த போது, வந்த ஒரு மாதத்தில் எல்லாக் குருக்களின் பெயர்களையும், முகங்களையும் கற்றுக்கொண்டார். அவரிடம் ஒருநாள் சககுரு ஒருவர் கேட்டார்: 'அது எப்படி எல்லாப் பெயரும் உங்களுக்கு நினைவிருக்கிறது?' சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்: 'நாம் விரும்பும் எதையும் நாம் மறக்க மாட்டோம். விருப்பம் இருக்கும் காரணத்தால் எனக்கு மறப்பதில்லை'.

கடவுளைப் பார்த்து 'என்னை மறந்துவிட்டீரா?' என்று பாடகர் கேட்கிறாரென்றால் அதில் பொதிந்துள்ள அர்த்தம் என்ன?

'என்மேல் உனக்கு விருப்பம் இல்லையோ?' என்பதுதான்.

இன்று 'என்னைக் கடவுள் மறந்துவிட்டார்!' என நாம் எண்ணும் நேரங்கள் எப்போது? 

Wednesday, May 28, 2014

எங்களுக்குத் தலைவர் வேறு யார்?

'கடவுள் இல்லை' என்று சொன்ன பொல்லார்கள் போய், 'பறவையைப் போல பறந்து ஓடிப்போ!' என்று சொன்ன பொல்லார்கள் போய், அம்புகளும் வில்லும் எடுத்த பொல்லார் போய் இன்று பாடகருக்கு எதிராக இருப்பவர்கள் 'எங்களுக்கு வேறு தலைவர் யார்' என்று சொல்லும் பொல்லார்கள் வருகின்றனர்.

திபா 9 முதல் 12க்குள் நான்கு வகைகளான பொல்லார் வந்து விட்டனர். ஆகையால் பொல்லார் என்பது ஒரு குழுச் சொல். அந்தக் குழுவிற்குள் பல்வேறு வகையினர் உண்டு.

திருப்பாடல் 12 'நாவன்மை' கொண்ட பொல்லாரைப் பற்றிச் சொல்கின்றது.

இந்த நாவன்மை கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தங்கள் நாவன்மையே தங்கள் வலிமை என்றும், தங்கள் பேச்சுத்திறனே தங்கள் பக்கத்துணை என்றும் சொல்கின்றனர்.

திபா 12 இரண்டு எதிர்மறை வார்த்தைகளோடு தொடங்குகின்றது:

அ. உலகில் இறையன்பர்கள் இல்லை.
ஆ. மானிடருள் மெய்யடியார் இல்லை.

இறையன்பர் என்றால் யார்? இறைவனை அன்பு செய்யும் அன்பரா அல்லது இறைவனால் அன்பு செய்யப்படும் அன்பரா? தமிழ்ச்சொல் இரண்டு அர்த்தங்களையும் தருகின்றது.

மெய்யடியார் என்றால் யார்? உண்மை பேசும் அடியாரா? அல்லது பொய்யான அடியாருக்கு எதிர்ப்பதமான மெய்யான அடியாரா?

மூலமொழி என்ன சொல்கிறது? 'ஹெசத்' (hesed) என்ற வார்த்தையும், 'உமனாம்' (umanam) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஹெசத்' என்றால் கடவுளின் அளப்பரிய பேரன்பு. உமனாம் என்றால் பிரமாணிக்கம்.

இப்படி பொருள் கொள்வோமா?

இவ்வுலகில் மனிதர்கள் நடுவில் பிரமாணிக்கம் குறைந்துவிட்டது. ஆகையால் கடவுளின் பேரன்பும் அவர்கள் மேல் குறைந்துவிட்டது.

இப்படித்தான் மொழிபெயர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பிற்குப் பின் இருப்பது பிரமாணிக்கம். கணவன் மனைவிக்குள் உள்ள காதல், இரண்டு நண்பர்களுக்கு இடையில் இருக்கும் நட்பு, பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பாசம், கடவுள் மனிதர் மேல் கொள்ளும் இரக்கம், மனிதர் கடவுள்மேல் கொள்ளும் பக்தி அனைத்திற்கும் பிரமாணிக்கம் அவசியம். இந்தப் பிரமாணிக்கம் இல்லையென்றால் அங்கே அன்பும் இல்லை. மனிதர்களின் அன்பு மட்டுமல்ல. அங்கே கடவுளின் பேரன்பும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

பிரமாணிக்கம் எதில் வெளிப்பட வேண்டும்? பேசுகின்ற வார்த்தைகள். மேலே சொன்ன அனைத்து அன்பிலும் நாம் ஒருவர் மற்றவரோடு பேசுகிறோம். அந்தப் பேச்சில் பிரமாணிக்கம் இருக்கிறதா?
இன்று மதிய உணவு வேளையில் கல்லூரி நூலகத்தில் இருந்தேன். 'இங்குள்ள புத்தகங்களில் எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும்? இந்த வார்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றியிருக்கும்?'

சேகுவரா அழகாகச் சொல்வார்: 'மாற்றத்தை உருவாக்காத எந்த வார்த்தையும் வீணான வார்த்தை என்று!'

இன்று நாம் எவ்வளவோ பேசுகிறோம்? எவ்வளவோ எழுதுகிறோம்? எவ்வளவோ வாசிக்கிறோம்? ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், வெப் என வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் காணும் புகைப்படங்கள் கூட வார்த்தைகள் தாம். இந்த வார்த்தைகளில் எவை நம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? நம் வார்த்தைகள் மற்றவர்கள் மேல் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? அன்பை ஆழமாக்குகிறதா?

திபா 12 நான்கு வகையான வார்த்தைகளை முன்வைக்கின்றது:

அ. பொய் பேசும் வார்த்தைகள் அல்லது பொய்யான வார்த்தைகள்.
ஆ. தேனொழுகப் பேசும் வார்த்தைகள்
இ. இருமனத்தோடு பேசும் வார்த்தைகள்
ஈ. பெருமை பேசும் வார்த்தைகள்

இந்த நான்கு எதிர்மறை வார்த்தைகளுக்கு மாற்றாக அது முன்வைக்கும் வார்த்தை 'ஆண்டவர் பேசும் வார்த்தை'. அது எப்படிப்பட்டது? 'மண்உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றது' (12:6)

பொய் எப்போது பேசுகிறோம்? பொய் என்பது ரியாலிட்டியை (reality) ஏற்க மறுக்க நாமே கட்டும் ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம் (defence mechanism). ஒன்றை மறைக்க மற்றொன்று, அதை மறைக்க இன்னொன்று என நாம் கட்டிக் கொண்டே போவோம்.

தேனொழுகப் பேசுவதும் ஆபத்தானது. எப்படி? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - இது முதல் ஆபத்து. தேன் வடிந்து விட்டால் வார்த்தைகள் கசப்பாக இருக்கும்.

இருமனத்தோடு பேசுவது. இரண்டு வேலைகளைச் செய்து கொண்டு ஃபோனில் நீங்க யார்கூடவாவது பேசிப்பாருங்க! அதுதான் இது. மனம் இரண்டு பக்கம் இருக்கும். இரண்டிலும் கவனம் இருக்காது. அருட்பணி நிலையில் இருக்கும் எனக்குப் பல நேரங்களில் சாதாரண பொதுநிலையிலேயே இருந்திருக்கலாமோ எனத் தோன்றும். இந்த எண்ணங்களோடு நான் திருப்பலி நிறைவேற்றும் போதும், என் கடமைகளைச் செய்யும் போதும் நான் பேசும் வார்த்தைகளும், நான் ஆற்றும் மறையுரைகளும், அருட்சாதனக் கொண்டாட்ட வார்த்தைகளும் கூட 'இருமனத்தோடு' பேசுவதுதான்.

பெருமை பேசும் வார்த்தைகள். தன்னை மையமாக வைத்தே உலகம் இயங்குகிறது என்ற நினைப்பில் வெளிவரும் வார்த்தைகள்.

இந்த நான்கு வகை வார்த்தைகளைப் பேசுவோருமே பொல்லார் என திபா 12 சொல்கின்றது.

நம் வார்த்தைகள் வெள்ளி போல இருக்க முடியுமா? 'வெள்ளி இருப்பதை இருப்பது போலக் காட்டும்'. நம் வார்த்தைகளும் அப்படி இருந்தால் நாம் இன்னும் அதிகமாக ஒருவர் மற்றவருக்கு பிரமாணிக்கமாக இருக்க முடியுமே?

சரி நாம வெள்ளி போல பேசுறோம்...ஆனா மத்தவங்க தேனொழுகப் பேசுறாங்களே? என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா?

இந்த நிலைதான் தாவீதுக்கு வந்திருக்கிறது. அவர் உதவிக்காக மன்றாடுகிறார்.

நாமும் மன்றாடுவோம்!

'எங்களுக்கு தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

Monday, May 26, 2014

நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?

கடந்த மாதம் வெளியான 'இன்ஃபினிதாட்ஸ்' (infini thoughts) என்ற ஆங்கில மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை எனக்கு ரொம்பப் பிடித்தது. அதன் தலைப்பு இதுதான்: 'நல்லவராயிருப்பதன் விலை!'

நல்லவராய் இருப்பது நல்லது என்ற நிலை மாறி இன்று நல்லவராய் இருப்பவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் உலகம் தெரியாதவர்கள் என்றும் சொல்லக் கூடிய நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் நல்லவராக இருப்பது சாத்தியமா? அவசியமா? என்று ஆராய்கிறது இக்கட்டுரை.

ஒரு காலத்தில் சிகரெட் பிடிப்பது தீமையாகக் கருதப்பட்டது. இப்போது சிகரெட் பிடிப்பது ஃபேஷன் என்றாகிவிட்டது.

தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்று சொல்லப்பட்ட காலம் போய், எப்படியாவது பாஸ் ஆகிவிடு என்றும் சொல்லும் நிலை வந்துவிட்டது.

ஆண்கள் எல்லாம் 'நான் குடிக்கிறேன்!' என்று சொல்வதும், பெண்கள் எல்லாம் 'எனக்குச் சமைக்கத் தெரியாது' என்று சொல்வதுதான் இன்றைய நாகரீகம்.

குடமெல்லாம் தண்ணீராக இருக்கும் போது அந்தக் குடத்தில் ஒரு செம்பு பாலை ஊற்றினால் பாலும் தண்ணீராகத் தானே போய்விடுகின்றது.

திருப்பாடல் 11ல் தாவீது எதிர்கொள்ளும் கேள்வியும் இதுதான்.

பொல்லாரெல்லாம் அவரை நோக்கி என்ன கூறுகிறார்கள்? 'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப்போ!' என்றும் நீ எங்களோடு வாழ்வதற்கு லாயக்கு இல்லாதவன் என்றும் சொல்கின்றனர். இன்றைய திருப்பாடலில் வரும் சொல்லாடல்கள் வேடர்குலத்திற்குப் பொதுவான சொற்கள்: பறவை, மலை, வில், அம்பு, கண், பார்வை. இந்தப் பாடலின் பின்புலத்தில் இருந்தவர்கள் வேடர்களாக இருந்திருக்கலாம். அல்லது நம் தமிழ்மொழி குறித்துக் காட்டும் ஐந்து நிலங்களில் ஒன்றான குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த இடமும்) நிலத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம்.

பாடகருக்குத் தன் உள்ளே எழும் கேள்வி இதுதான்: 'நல்லவனாய் இருந்து நீ என்ன சாதிக்க முடியும்?' என்று நம்மைப் பார்த்து இந்தப் பொல்லார் கேட்கிறார்களே. என்ன செய்வது? நல்லவனாகவே இருப்பதா? அல்லது அவர்களைப் போலத் தானும் மாறிவிடுவதா?

இந்தத் திருப்பாடலுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு 'ஆண்டவரிடம் நம்பிக்கை' எனத் தலைப்பு கொடுக்கின்றது.

அப்படியென்றால் லாஜிக் இதுதான்: மேற்காணும் சோதனை வரும்போது ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்தாலே போதும். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

மற்றவர்கள் தன்னை விரட்டினாலும் தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளதாகப் பாடகர் தொடங்குகின்றார். தான் அடைக்கலம் புகுந்திருக்கும் ஆண்டவரிடம் மூன்று குணநலன்களைப் பார்க்கின்றார்.

அ. ஆண்டவர் பார்க்கின்றார்.
ஆ. ஆண்டவர் நோக்குகின்றார்.
இ. ஆண்டவர் சோதித்தறிகின்றார்.

இந்த மூன்று வார்த்தைகளும் மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்று போல இருந்தாலும் அவைகளுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நல்லவராய் இருப்பதற்குத் தேவை இந்த மூன்றும் தான்.

இந்த மூன்று வார்த்தைகள் இன்று நமக்கு என்ன சொல்கின்றன?

அ. பார்த்தல் (seeing)

ஐம்புலன்களில் நமக்கு அதிகமாக தகவல்கள் மூளைக்கு வருவது கண்கள் வழியாகத்தான். இங்கு நாம் எல்லா மனிதர்களுக்கும் கண் தெரியும் என்ற அடிப்படையில் பேசுவோம். கண்பார்வையற்றவர்களுக்கு அல்லது கண்பார்வை இழந்தவர்களுக்கு இருக்கும் குணநலன்களை நாம் ஆராய விழைய வேண்டாம். நாம் எல்லோருமே பார்க்கின்றோம். ஆனால் நாம் எதைப் பார்க்கின்றோம்? நம் மூளை எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றதோ அதைத்தான் கண்கள் பார்க்கும். 'அங்க அவர் நின்னுகிட்டு இருந்தார். நீங்க பார்த்தீங்களா?' என்று மனைவி கணவனிடம் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 'இல்லை' என்பார். கணவனும், மனைவியும் ஒரே ரோட்டில் ஒன்று போல நடந்து வந்திருந்தாலும் இருவரும் பார்த்த பொருட்களும், நபர்களும் வேறு வேறாகவே இருக்கின்றனர். இதில் நல்லது, கெட்டது என்று சொல்ல எதுவும் இல்லை. நம் மூளை எப்படி பயிற்சி பெற்றிருக்கிறதோ அப்படித்தான் அதன் செயல்பாடு இருக்கும். நல்லவராய் இருக்க முதல் பண்பு 'நன்றாகப் பார்ப்பது'. 'நன்றாகப் பார்ப்பது' என்று சொல்வதை விட நல்லவற்றைப் பார்ப்பது. இதிலும் பிரச்சினை இருக்கின்றது? 'நல்லது எது கெட்டது எது' என்று எப்படித் தீர்மானிப்பது? நான் தீர்மானிப்பது இதுதான். 'என்னை முழுமனிதனாக மாற்றக் கூடியதே' நல்லது. அல்லது 'உடனடி இன்பம்' தராமல் 'நீடித்த மகிழ்ச்சி' தரும் எதுவும் நல்லது.

நாம் மற்றவர்களிடம் நல்லதை மட்டுமே பார்த்தால் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். உறவுகளில் சிக்கல் வரும் போது, அந்தச் சிக்கலுக்குக் காரணமான ஒரு நிகழ்வை மட்டும் பார்க்காமல், அந்த உறவினால் நாம் பெற்ற மகிழ்ச்சியை அசைபோடத் தொடங்கினால் சிக்கலுக்குக் காரணமான நிகழ்வு தானாகவே மறைந்துவிடும். அதைவிட்டு அந்தச் சிக்கலை மட்டும் மிகைப்படுத்திப் பார்த்தால் வருடக்கணக்கில் கட்டியெழுப்பிய உறவு நொடிப்பொழுதில் சரிந்துவிடும்.

ஆ. நோக்குதல் (observing)

பார்த்தலின் கூர்மையே நோக்குதல். 'அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்று இராமாயணம் சொல்வது போல 'பார்ப்பது'. காதல் செய்யும் இருவர் ஒருவர் மற்றவரைப் பார்ப்பதற்குப் பெயர்தான் நோக்குதல். காதலன் 25 வருடங்கள் தன் உதட்டில் மச்சம் இருந்ததைக் கவனித்திருக்க மாட்டான். நேற்று வந்த காதலி அதைச் சுட்டிக் காட்டுவாள். தன்னைச் சிறுவயதிலிருந்து வளர்த்த பெற்றோர் ஏதோ கடமைக்காக பெண்ணின் தலையில் பூ வைத்து அனுப்புவார்கள். 'பூ வைத்தால் தான் நீ அழகு. என்ன இது? ரோஜாப்பூவின் தலையில் மல்லிகைப்பூவா?' என வர்ணிப்பான் காதலன். அவள் வசிக்கும் தெருவில் இருக்கும் அனைவரும் அவளின் தலையில் இருக்கும் பூவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அவன் மட்டுமே நோக்குகிறான். நோக்குதல் என்பது நாம் ஒன்றின் மேல் கொண்டிருக்கும் விருப்பத்தில் இருந்துதான் வருகின்றது.

சிலருக்கு கிரிக்கெட், சிலருக்கு காமெடி, சிலருக்கு பாடல், சிலருக்கு பக்தி - அவரவருக்குப் பிடித்தது வரும்போது தான் நாம் டிவியை நோக்குகிறோம். மற்ற நேரங்களிலெல்லாம் டிவியைப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.

நல்லவானாய் இருப்பேன் என்று யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் தான் நல்லவராக இருக்க முடியும். விருப்பம் நம் பார்வையையும், நம் சிந்தனையையும், நம் செயல்பாடுகளையும் மாற்றிவிடும்.

இ. சோதித்து அறிதல் (judging)

பார்த்தாயிற்று. நோக்கியும் ஆயிற்று. இப்போது கெட்டது எது என்று தெரிந்து நல்லதைப் பற்றிக் கொண்டு, கெட்டதை விடுவதே சோதித்து அறிதல். சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்று சிகரெட் பெட்டியிலேயே எழுதியிருந்தாலும், அதைப் பார்த்தாலும், உற்று நோக்கினாலும், நாம் சோதித்து அறிவதில்லையென்றால் நாம் நல்லதை விடுத்துக் கெட்டதையே பற்றிக்கொள்ளத் துணிகின்றோம்.

இந்த மூன்றையும் இறைவன் செய்கின்றார்.

இந்த மூன்றையும் செய்யும் யாவரும் இறைவனின் திருமுகத்தைக் காண்பர் (11:7) என்பது நம் திருப்பாடல் இன்று நமக்கு வைக்கும் செய்தி.

'நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?


ஏன் தொலையில் நிற்கின்றீர்?

திருப்பாடல்கள் 9 மற்றும் 10 தமிழ் மற்றும் மற்ற மொழிப் பதிப்புக்களில் இரண்டு பாடல்களாக இருந்தாலும் செப்துவாஜின்ட் எனச் சொல்லப்படும் 'எழுபதின்மர் மொழிபெயர்ப்பில்', அதாவது கிரேக்க மொழிபெயர்ப்பில் இரண்டு பாடல்களும் ஒரே எண்ணிற்குக் கீழேயே இருக்கின்றது.

திருப்பாடல்கள் ஒரே நபரால் அடுத்தடுத்து கவிதைகள் போல எழுதப்பட்டவை அல்ல. பல்வேறு காலங்களில் பல்வேறு நபர்களால் பாடப்பட்டவை. பாடியவர்கள் எல்லாம் எழுதியவர்கள் என்பது கருத்து அல்ல. அந்தக் காலத்தில் அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. முதலில் வாய்வழிப் பாடல்களாக இருந்து பின் எழுத்துருவம் பெற்றவை. இப்பாடலை எழுதியவர்கள் அதற்கென்று தலைப்பும் கொடுத்தார்கள். ஆனால் தலைப்புகள் இல்லாத திருப்பாடல்கள் நான்கு: 1, 2, 10 மற்றும் 33. இன்று நாம் காணும் 10ஆம் திருப்பாடலுக்குத் தலைப்பு இல்லை. 9இன் தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது:

பாடகர் தலைவர்க்கு: 'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற மெட்டு. தாவீதின் புகழ்ப்பா.

'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்பதை இந்தத் தலைப்பிலிருந்தே ஊகித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலையும் ஏதாவது ஒரு மெட்டை வைத்தே அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். நம் மண்ணின் சிறந்த இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் கூட பல நூற்றாண்டுகள் வாய்வழி மரபில் இருந்தவைதாம்.

பாடலின் இடையிடையே 'சேலா' என்று வரும் (71 முறை திருப்பாடல்களிலும், 3 முறை அபக்கூக்கு நூலிலும்). சேலா என்பது ஒரு இசைக்குறியீடு. இதன் பொருள்: 'நிறுத்து!' இந்த இடத்தில் நிறுத்தி சிந்திக்க வேண்டும் என்று ஒருசிலர் அர்த்தம் கொடுக்கின்றனர்.

திபா 9 நீதிக்காக நன்றி செலுத்துவதாகவும், திபா 10 நீதிக்காக மன்றாடுவதாகவும் இருக்கிறது. நன்றி செலுத்துவதற்கு முன் மன்றாட்டு வர வேண்டுமல்லவா. ஒருவேளை முன்பின் இடமாற்றம் செய்து இந்தப் பாடலைக் கோர்த்து விட்டார்களோ?

திபா 9 மற்றும் 10ன் முக்கிய வார்த்தை வழக்கு: வழக்காடுபவர் தாவீது (அப்படி வைத்துக்கொள்வோம்!) யாரோடு வழக்காடுகிறார்? கடவுளோடு. எதற்காக? பொல்லாரிடமிருந்து தன்னைக் காப்பதற்காக.

பொல்லார் ஒருபக்கம். கடவுள் மற்றொரு பக்கம். இடையில் தாவீது.

பொல்லாரைப் பற்றி தாவீது சொல்வது மூன்று:

அ. 'கடவுள் இல்லை' என அவர்கள் சொல்கின்றனர்.

ஆ. 'எவராலும் என்னை அசைக்க முடியாது!' என்று சொல்கின்றனர்.

இ. மறைந்திருக்கின்றனர் (ஒளிந்திருந்து, மறைவான இடங்களில், பதுங்கியிருக்கின்றனர்)

கடவுளைப் பற்றி தாவீது சொல்வதும் மூன்று:

அ. ஆண்டவர் கவனிக்கின்றார்.

ஆ. ஆண்டவர் காத்திருக்கின்றார்.

இ. ஆண்டவர் துணைசெய்கின்றார்.

இந்தத் திருப்பாடலில் நாம் சிந்திக்கும் கேள்வி: 'ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கிறன்றீர்?'. பழைய ஏற்பாட்டில் குருத்துவம் உருவாவதற்கு முன்பாக அரசர்கள்தாம் குருக்களாக இருந்தனர். அரசர்கள் மட்டுமே ஆலயத்தில் பணி செய்ய முடியும். இவ்வாறாக, கடவுளுக்கு அருகில் இருக்கும் தாவீது அரசருக்கே கடவுள் தொலைவில் தெரிகின்றார்.

நம் வாழ்விலும் இந்தக் கேள்வி அடிக்கடி வரும். தினமும் செபம் சொல்வோம். கோவிலுக்குச் செல்வோம். புனிதர்களின் கெபிகளுக்குச் செல்வோம். திருயாத்திரை செல்வோம். இருந்தாலும் கடவுள் தொலைவில் இருப்பது போலவே இருக்கும். கடவுள் தொலையில் நிற்கின்றாரா? அல்லது நாம் கடவுளை விட்டுத் தொலையில் நிற்கின்றோமா?

தொலைவு என்பது நபர் சார்ந்தது. என்னதான் 10000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் என் இனியவர்களோடு பேசும் போது ஏதோ அருகருகில் இருப்பது போலவே எனக்குத் தோன்றும். இங்கே என்னதான் 10 மீட்டர் தொலைவில் இருந்தாலும் இங்கிருப்பவர்களோடு பேசி உறவாட என் மனம் மறுக்கின்றதே.

கடவுள் தொலைவில் இருக்கின்றார் என்ற உணர்வு தான் மிகவும் கொடுமையான உணர்வு. அடுத்ததாக, தாவீது தன்னைப் பற்றி சொல்வது தான் நாம் கவனிக்க வேண்டியது. 'அனாதைக்கு நீரே துணை'. மூலமொழியில் 'அனாதையான எனக்கு நீரே துணை!' என்று உள்ளது. எல்லாம் கொண்டிருக்கிற அரசர் எப்படித் தன்னை 'அநாதை' என்று சொல்ல முடியும்? 'நான் உங்களை அனாதைகளாக விட்டுவிடமாட்டேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளை 'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டேன்' என புதிய மொழிபெயர்ப்பில் வாசிக்கின்றோம். 'அநாதை' என்பது 'திக்கற்ற நிலை'. திக்கு என்றால் திசை. திசையற்றவர்களே அனாதைகள். அம்மா அப்பா இல்லாதவர்கள் மட்டும் அனாதைகள் அல்லர். அன்பு இல்லாதவர்களும், தாங்கள் எங்கே செல்கிறோம் என்று தெரியாதவர்களும் அனாதைகளே.

கடவுள் தொலைவில் சென்று விட்டால் உடனடியாக எல்லா உறவுகளும் நம்மை விட்டுப் போய்விடுதாகத் தெரியுமோ என்னவோ? தாவீதுக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

தாவீதுக்கு இப்போது இரண்டு வலி: ஒன்று, உள்ளேயிருக்கும் தனிமை. இரண்டு, வெளியே இருக்கும் பொல்லார்.

ஆண்டவர் நீதியைக் காட்டினாரா? அல்லது அவரும் மறைந்திருக்கிறாரா? அதன் பதில் தான் நாளைய திருப்பாடல்.

'ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?' (திபா 10:1)

Saturday, May 24, 2014

நீர் நினைவில் கொள்ள அவர்கள் யார்?

அப்பொல்லா II விண்கலம் நிலவிற்குச் சென்ற போது வத்திக்கான் சார்பில் நிலவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட திருப்பாடல் இது.

நிலவிற்கு மனிதர்கள் சென்றது வெறும் நாடகம் என்றும், நாம் கண்ட காட்சிகள் எல்லாம் அமெரிக்காவின் ஒரு திரைப்பட ஸ்டுடியோவில் படம் பிடிக்கப்பட்டவை என்பதையும் நிரூபிக்க எண்ணற்ற வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. நிலவிற்கு அவர்கள் சென்றார்களா, செல்லவில்லையா என்பது பதில் தெரியாத ஒரு கேள்வி.

கடவுளின் மாட்சியையும், மானிடரின் மேன்மையையும் எடுத்துக்காட்டும் திருப்பாடல் 8 தான் இன்றைய நம் சிந்தனையின் மையம்.

மிகவும் துள்ளலாக பாடலாசிரியர் இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார்.

ஐந்து நிலைகளில் இதைப் புரிந்து கொள்ள முன்வருவோம்.

1. உமது மாட்சி வானங்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது (8:1)
இந்தத் திருப்பாடலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொண்டிருந்த பிரபஞ்சக் கொள்கை பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். விவிலியத்தின் பிரபஞ்சக் கோட்பாடு எகிப்திய மற்றும் மெசபடோமிய சிந்தனையின் பிரதிபலிப்பாக உள்ளது. எகிப்தியத் தேவதை 'நுட்' (அதாவது, வானம்) இந்தப் பூமியின் மேல் சாய்ந்து வானம் போல, போர்வை போல போர்த்தியிருந்து காத்து வருகிறார் என்பது அன்று நிலவிய நம்பிக்கை. அந்த எகிப்தியத் தேவதைக்கும் மேலாக யாவே இறைவன் நிற்பதாக எழுதுகின்றார் பாடலாசிரியர்.

2. வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நோக்கும் போது... (8:3)
இந்தத் திருப்பாடலை எழுதும் போது, அல்லது பாடும் போது பாடலாசிரியர் இரவில் தன் வீட்டிற்கு வெளியே கட்டிலைப் போட்டுப் படுத்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பாடல் காட்டும் உலகம் இரவின் வானம். மெசப்படோமிய சிந்தனையின் படி 'மார்டுக்' என்ற கடவுள் தான் நட்சத்திரங்களை வானத்தில் பொருத்துகிறார். ஆனால் பாடல் நமக்குச் சொல்வது அனைத்தும் ஆண்டவரின் கைவேலைப்பாடு. 'கைவேலைப்பாடு' என்பது ஒரு முக்கியமான வார்த்தை. எபிரேய மரபில் மனிதர்களின் கைவேலைப்பாடானது அனைத்தும் தீட்டு எனக் கருதப்பட்டது. அதாவது, மனிதர்கள் கைகளால் உருவானவை தெய்வங்கள் அல்ல. இயேசு தன் சிலுவைப்பயணத்திற்கு முன் தலைமைக்குருவால் விசாரிக்கப்படும் போது அவருக்கெதிராக சொல்லப்படும் சாட்சி நினைவிற்கு வருகிறதா? 'மனிதக் கையால் உருவான இந்த ஆலயத்தை இடித்து விட்டு மூன்று நாளில் இதைக் கட்டுவேன் என்றான்!' என்கின்றனர். யாவே இறைவன் வாழும் இல்லத்தையே இயேசு 'கைவேலைப்பாடு' என்று சொல்லியதுதான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசு இவ்வாறாக எங்கும் பேசவேயில்லை. இது பொய்ச்சாட்சி தானே! இந்த வரியில் பாடல் ஆசிரியர் கூறுவது வானம் அனைத்தும் கடவுளின் கைவேலைப்பாடு. நிலாவும், விண்மீனும் வானில் பவனி வரும் அழகு கடவுளின் கலைத்திறனிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

3. மனிதரை நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? (8:4)
மீண்டும் மெசபடோமியா. அவர்களைப் பொறுத்த வரையில் கடவுளர்கள் மனிதர்களைப் படைக்கக் காரணம் தோட்ட வேலை செய்வதற்கும், கடவுளர்களுக்கு அப்பமும், திராட்சை ரசமும் செய்வதற்கு. ஆனால் விவிலியத்தின் மனிதர்கள் சாதாரண வேலை செய்யப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். மாறாக, 'மாட்சிமையையும் மேன்மையையும் முடியாகச் சூடிக்கொண்டவர்கள்!' இரண்டே வார்த்தைகளில் மனிதப்பிறவியின் உச்சத்தை எடுத்துரைக்கின்றது இப்பாடல். தொடக்கநூல் 1:26-27யே இது நினைவுபடுத்துகிறது. கடவுள் தன் சாயலாக மனிதரைப் படைக்கின்றார்.

4. அவர்களைக் கடவுளர்களுக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் (8:5)
இது மனிதர்களைக் குறைத்து மதிப்பிடுவது அன்று. கடவுளர்கள் என்பவர்கள் வானதூதர்கள். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருப்பவர்கள். கடவுளும் மனிதரும் இங்கு ஒரே தராசில் வைக்கப்படுகின்றனர். நம்மைக் கடவுளுக்கு இணையாக ஆக்கி விடுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'நான் கடவுள்!' (அகம் பிரம்மாஸ்மி!) என்ற இந்தியச் சிந்தனையை விவிலியமும் பகிர்கிறது.

5. அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். (8:6)
நாம் கூலிக்காரர்கள் அல்லர், மேற்பார்வை செய்யும் பொறுப்பாளிகள். இது நமக்கு உள்ள பொறுப்புணர்வை உணர்த்துவதாக இருக்கிறது.

இப்படியாக, வரிக்கு வரி உச்சதொனியில் பாடி முடிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர்.

இப்பாடல் இன்று நமக்கு வைக்கும் சவால்கள் என்ன?

அ. நம் ஒன்றுமில்லாமை. ஒரு சின்ன பயிற்சி. நீங்க டீ குடிக்கும் டீ கப்பை எடுத்துக்கொள்ளுங்கள். உங்க முன்னாடி வையுங்க. டீ கப்பை மட்டும் பாருங்க. அடுத்த டீகப்போட அதிருக்கும் டேபிளைச் சேர்த்துப் பாருங்கள். டேபிளோடு உணவறை, உணவறையோடு வீடு, வீட்டோடு தோட்டம், தோட்டத்தோடு தெரு, தெருவோடு ஊர், ஊரோடு மாநிலம், மாநிலத்தோடு நாடு, நாட்டோடு கண்டம், கண்டத்தோடு உலகம், உலகத்தோடு மில்கி வே (milky way), மில்கி வேயோடு பல மில்கி வேக்கள், அவைகளோடு இன்னும் கோடானு கோடி மில்கி வேக்கள். இந்த மில்கி வேயோடு ஒப்பிடும் போது டீகப் ஒன்றுமேயில்லை. அது போலத்தான் நாம். ஒன்றுமில்லாமல் இருந்துகொண்டு எதற்காக இத்;தனை ஆர்ப்பாட்டம்?

ஆ. நம் மேன்மை. என்னதான் மில்கிவே டீகப்பைவிட பெரிசா இருந்தாலும் மில்கிவேயில டீ குடிக்க முடியுமா? முடியாது. டீகப்புலதான் குடிக்க முடியும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏதோ பயன் இருக்க. சாதாரண டீகப்பே மத்தவங்களுக்கு பயன்படுதென்றால் நாம் பயன்படுவதில்லையா. நாம் விபத்தால் பிறந்தவர்கள் அல்லர். கடவுளால் சிந்திக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு பிறந்தவர்கள் நம் பிறப்புக்கென்று கண்டிப்பாக ஒரு நோக்கம் இருக்கும். அதைக் கண்டறிவதும், கண்டபின் அதை நிறைவேற்றுவதுமே நம் தேடலாக இருக்க வேண்டும். இன்னைக்கு மத்தவங்க நம்மள கண்டுகொள்ள வில்லையென்றாலும் தளர்ந்து விட வேண்டாம். இறைவனின் அழகிய கைவேலைப்பாடு நாம். அவரின் பார்வையில் நாம் அழகானவர்கள். அவரின் பார்வையில் நாம் பயனுள்ளவர்கள். அவரின் பார்வையில் நாம் மேலானவர்கள்.

இ. நம்மைச் சுற்றியிருப்பதை ரசிப்போம். நாம் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது நம் குழந்தைப் பருவமாகத் தான் இருக்கும். மழை, வெயில், காற்று, நிலா, நட்சத்திரம் இவை வெறும் பொருட்கள் அல்ல. நம் உடன்பிறப்புகள். இம்மண்ணில் இறப்பவர்கள் எல்லாம் உடனே விண்மீன்களாக மாறிவிடுகிறார்கள் என்பது என் நம்பிக்கை. நிலாச்சோறு சாப்பிட்ட காலம் எல்லாம் போய் இன்று தொடுதிரைகளில் தட்பவெப்பநிலைக்காக மட்டும் சூரியனைப் பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். கொஞ்ச நேரம் எடுத்து ஜன்னலைத் திறந்து அண்ணாந்து பார்ப்போம் இன்றைக்கு. உங்க அன்பிற்கு உரியவர்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்லணும்னா நிலாவிடம் சொல்லிவிடுங்க. அது கண்டிப்பாய்ப் போய்ச் சொல்லும். எல்லாருடைய வாழ்விலும் ஒருவர் குட்டி நிலாவாக, குளிர் நிலவாக இருப்பார். அவர் இல்லாமல் வானம் என்றும் வெறுமைதான்.

'மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'

இந்நிலை எத்தனை நாள்?

'ஒரே ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாது!' என்பார் கிரேக்க தத்துவ ஞானி ஹெராகிளிட்டஸ். இதிலிருந்து வரும் சொல்லாடல் தான் 'மாற்றம் ஒன்றே மாறாதது!' எல்லாமே மாறிக்கொண்டே இருப்பது தான் வாழ்வின் எதார்த்தம். ஆனால் இந்த மாற்றத்தின் போது நம் மனநிலை ஒரே மாதிரி இருக்கிறதா? என்று கேட்டால் 'இல்லை' என்றே பதில் சொல்வேன்.

காதலியுடன் இருக்கும் இரவில் 'இந்த இரவு விடியவே கூடாது!' என நினைக்கின்ற மனம், இறந்தவர் வீட்டில் அமர்ந்திருக்கும் போது 'சீக்கிரம் விடியாதா!' என நினைக்கின்றதே! இரண்டும் இரவுகள் தாம். ஆனால் இரண்டிலும் மனம் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. நமக்கு மகிழ்ச்சி தருவது எப்போதும் நீடிக்க வேண்டுமென்றும், துன்பம் தருவது உடனே அகல வேண்டுமென்றும் மனம் துடிக்கின்றது.

இன்று நாம் காணும் திருப்பாடல் 6ல் பாடலாசிரியர் 'ஆண்டவரே! இந்நிலை எத்தனை நாள்?' என்று கேட்கின்றார்.

'நீண்ட காலம் நீடிப்பது' நமக்குப் பல நேரங்களில் துன்பத்தையும், கலக்கத்தையும் தருகின்றது. நமக்கு வரும் காய்ச்சல் ஒரே நாளில் போய் விட்டால் கவலையில்லை. அதுவே, ஒரு வாரம் நீடித்தால் மனம் லேசாகப் பயப்படுகிறது. என்னவாக இருக்கும்? என்று கேட்கிறது. 'வலி' நீடிப்பதை நம் மனம் ஏற்க மறுக்கிறது.

திருப்பாடல் ஆசிரியரின் இந்தக் கேள்வியின் பின்னால் என்ன வலி இருந்தது?

இத்திருப்பாடலுக்குத் தலைப்பு 'இக்கட்டான காலத்தில் உதவுமாறு வேண்டல்' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடகருக்கு ஏதோ ஒரு இக்கட்டான நிலை. பாடலிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இரண்டு:

அ. உடல்நலக் குறைவு
ஆ. எதிரிகளின் படைபலம் அல்லது படையெடுப்பு

இந்த இரண்டும் ஏறக்குறைய வெகு நாட்கள் நீடிக்கின்ற சூழல். 'எல்லாம் மாறிவிடும்!' என நினைக்கிறார். ஆனால் ஒன்றும் மாறவில்லை. இந்தப் பிண்ணனியில் இந்தப் பாடலைப் பாடுகின்றார்.

ஆசிரியரின் மனநிலை இரண்டு நிலைகளில் இங்கே பிரதிபலிக்கப்பட்டுள்ளது:

வரிகள் 1 முதல் 8 வரை மிகவும் சோகமாகவும், 9 மற்றும் 10ல் மிகவும் துணிச்சலாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.

மற்றொரு வகையில் பிரித்தால், பாடலாசிரியரின் உள்ளத்தில் குற்றவுணர்வு, தாழ்த்தப்பட்ட நிலை மற்றும் வருத்தம் என்ற மூன்று உணர்வுகள் இருக்கின்றன.

இந்தப் பாடல் நமக்கு பழைய ஏற்பாட்டுக் கால மக்களின் சிந்தனை ஓட்டங்களையும் வெளிப்படுத்துகின்றது. அவை எவை?

அ. நமக்கு வருத்தம் அல்லது நோய் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நம் பாவம். (எனக்கும் சில நேரங்களில் இந்த மனநிலை வரும். எனக்கும் நான் அன்பு செய்பவருக்கும் ஏதாவது வாக்குவாதம் வந்தால், 'ஐயோ! இன்னைக்கு செபம் செய்யாததால் இப்படி நடக்கிறதோ!' எனத் துடிக்கிறது மனம்)

ஆ. பாதாளம் என்பது இறந்தவர்கள் வசிக்கும் இடம். அங்கே கடவுள் இருப்பதில்லை. இறப்பு என்பது ஒரு தண்டனை. அது கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது.

இ. மனிதர்கள் உடல், மனம், ஆன்மா என்ற மூன்று காரணிகளால் ஆக்கப்பெற்றவர்கள்.

இந்த மூன்று சிந்தனைத்தடாகங்களும் இன்று ஏற்புடையைவா என்பது கேள்விக்குறி.

மொழியியல் பின்புலத்தில் பார்த்தால் மிகவும் கலர்ஃபுல்லான பாடல் இது. மனித உணர்வுகளை வார்த்தையால் உணர்த்த முடியும் என்று நிரூபிக்கும் பாடல்.

தளர்ந்து போனேன்
எலும்புகள் வலுவிழந்தன
உயிர் ஊசலாடுகின்றது
பெருமூச்சினால் இளைத்துப் போனேன்
துயரத்தால் கண் வீங்கியது
கட்டில் கண்ணீரால் நனைந்தது
பகைவரால் கண் மங்கியது

தளர்ந்து போகக் கூடியது மனம். வலுவிழக்கக் கூடியது உடல். ஊசலாடக் கூடியது ஆன்மா.

பாடகரின் மனம், உடல், ஆன்மா என அவரின் மொத்தமும் வருத்தத்தில் இருக்கின்றது.

'கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது!' என்ற சொல்லாடலில் ஆசிரியரின் பாடல்திறன் வெளிப்படுகின்றது. இலக்கியத்தில் இதற்குப் பெயர் 'மிகைப்படுத்துதல்' (ஆங்கிலத்தில் 'ஹைபர்போல';). இருக்கின்ற ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

எ.கா: இந்த மேசை யானை கனம் கனக்கிறது. (கனமாக இருக்கிறது ஓகே! அதற்காக யானையைத் தூக்க முடியுமா?)
இந்த டிரெயினில் இன்று உலகமே பயணம் செய்கிறது. (கூட்டமாக இருக்கிறது ஓகோ! அதற்காக உலகத்தையே டிரெயினில் அடைக்க முடியுமா?)

அதேபோல, கண்ணீர் வடிக்கிறீங்க ஓகே! அதற்காக உங்க கட்டில் அதில் மிதக்குமா?

ஆராய்ச்சி போதும். அர்த்தத்திற்கு வருவோம்.

பாடலாசிரியருக்கு தாள முடியாத வருத்தம். அந்த வருத்தத்தில் இருந்து இறைவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

அவரின் உள்ளத்தின் வருத்தம் என்னவென்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லையென்றாலும் அவர் வடிக்கும் கண்ணீர் உண்மை.

நாம் அதிகமாக சந்தோஷமாக இருக்கும்போதும், அதிகமாக சோகமாக இருக்கும் போதும் நம் உடல் பேசும் மௌன வார்த்தை கண்ணீர். இந்தக் கண்ணீர் ஒரு வித்தியாசமான எதார்த்தம். அருட்பணியாளராக இருந்து நான் எத்தனையோ கண்களில் கண்ணீரைப் பார்த்திருக்கின்றேன். அடுத்தவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்த்து நான் கையாலாகாத நிலையில்தான் அதிக நேரம் இருந்திருக்கின்றேன். பல கண்ணீருக்கு எனக்குப் பதில் தெரியாது. உரோமைக்கு வந்த புதிதில் நானும் அதிக நாள்கள் கண்ணீர் வடித்திருக்கிறேன். கட்டில் மிதக்கும் அளவிற்கு இல்லையென்றாலும் தலையணை நனையும் வரை அழுதிருக்கிறேன்.

ஒவ்வொரு வீட்டின் தலையணையிலும் ஏதோ ஒரு கண்ணீர்த்துளி ஒட்டியிருக்கத்தான் செய்கின்றது. இரவின் மடியில், யாரும் நம்மைப் பார்க்காமல் இருக்கும் அந்த நேரத்தில் நம் உள்ளம் ஏதோ ஒரு இழப்பை நினைத்து கண்களைக் கசியச் செய்து விடுகிறது.

சோகம் வரும்போது மனம் தளர்ந்து விடுகிறது. உடல் வலுவிழந்து போய்விடுகிறது. மனம் அங்கலாய்க்கிறது. ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் இந்த முப்பரிமாண வலி இருக்கும்.

கண்ணீருக்கு என்னதான் வழி?

இறைவன் தரும் துணிச்சல். கட்டில் மிதக்கும் அளவிற்குக் கண்ணீர் விடும் பாடகர் திடீரென 'ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்!' எனத் துள்ளிக் குதிக்கின்றார். இறைவனின் உடனிருப்பை உணர்பவர்கள் மட்டுமே கண்ணீர்க் கடலிலிருந்து மீள முடியும்.

இரண்டாவதாக, கண்ணீர் தானாக சரியாகி விடாது. நாம் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று யோசிக்க வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும்.

விடுமுறையின் போது என் நண்பி ஒருத்தியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அழுதுகொண்டே அவளின் பிரச்சினைகளையெல்லாம் சொன்னாள். அவளின் கண்களைத் துடைத்தவாறு, 'அழாதே! எல்லாம் சரியாகிவிடும்!' என்றேன். வேகமாக அவள் சொன்னாள்: 'எல்லாம் சரியாகிவிடாது! நாம் தான் சரியாக்க வேண்டும்!' உடனே ஞானம் பெற்றேன் நான்.

'முடியும் என்று நினைக்கும் போது விடியச் செய்வாரே!'

என்ற பாடல் வரிகள் எங்கோ கேட்கின்றன.

அவரின் கரங்கள் நம் கண்ணீரைத் துடைக்கட்டும் - இன்றும்! என்றும்!


Friday, May 23, 2014

எவ்வளவு காலம் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?

இரவு உங்களுக்குப் பிடிக்குமா? எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை எவை என்று கேட்டால் இரண்டு என்பேன்: ஒன்று, பசி. மற்றொன்று, தூக்கம். இந்த இரண்டும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டால் தனிமனிதருக்கு நோயும், சமூகத்தில் குற்றங்களும் குறைந்துவிடும்.

இரவு ஒரு வித்தியாசமான எதார்த்தம். எது உண்மை? இரவா? பகலா? ஒரு மெழுகுதிரியின் வெளிச்சத்தை ஒரு ஊரின் இருள் ஒன்று சேர்ந்தாலும் இருட்டாக்க முடியாது. இருள் என்பது ஒளியின் இல்லாமை.

தன்னால் அறிந்து கொள்ள முடியாத அனைத்தையும் ஒன்றே மூட்டை கட்டி அதற்கு இருள் என்று பெயர் வைத்துவிட்டனர் மனிதர்கள்.

இன்று நாம் சிந்திக்கும் கேள்வி இருள்சூழ்ந்த நேரத்தில் தன் வீட்டின் கட்டிலில் அமர்ந்திருக்கும் ஒருவரின் உள்ளத்து உணர்வுகள்.

பகலெல்லாம் வெயிலில் நின்று எதிரிகளோடு போர் செய்துவிட்டு, தூசியோடும், அழுக்கோடும் வீடு திரும்பும் ஒருவர் நன்றாகக் குளித்துவிட்டு, சுடச்சுட சோறு சாப்பிட்டுவிட்டு, தன் மனைவி, குழந்தைகள் அனைவரும் தூங்கிப்போய்விட தான் மட்டும் விழித்திருந்து தன் இறைவனை நோக்கிப் பாடும் பாடல்தான் திருப்பாடல் 4. திருப்பாடல் 3 அவர் பகலில் என்ன செய்தார் என்பதைச் சொல்லுகிறது.

விவிலியம் திருப்பாடல் நான்கை 'மாலை மன்றாட்டு' என அழைக்கின்றது.

'இந்த நாள் இனிய நாளாக இருந்தது!' என்று இனிமையாக வாழ்ந்த ஒருவரின் வார்த்தைகள் தாம் இவை.

கடவுளை நோக்கிப் பாடுவதாகத் தொடங்கும் இப்பாடல் மற்றவர்களை நோக்கி நகர்ந்து இறுதியில் பாடகர் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதாக அமைகின்றது.

1. இறைவா! நீர் எனக்குத் துணைபுரிந்தீர்!
2. மற்றவர்களே! நான் இறைவனின் அன்பன். நான் என்ன கேட்டாலும் அவர் செய்வார்!
3. ஹலோ மிஸ்டர். உள்மனம்! நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்!

யாருக்குத் தூக்கம் வரும்? இந்த இடத்தில், இந்த நேரத்தில் எனக்கு ஆபத்தில்லை என்று நினைக்கும் ஒருவரால் அந்த இடத்தில், அந்த நேரத்தில் தூங்க முடியும்.

திருவிழாக்களிலும், திருமண வைபவங்களுக்கு முன் தினமும், பயணம் செய்யும் போதும், இறந்தவர்களின் வீட்டிலும், நோயுற்றவரின் அவருகிலும் நாம் வேண்டுமென்றே தூங்காமல் இருக்கின்றோம். அதற்கான காரணங்கள் வேறு.

தனக்கு ஆபத்து இருக்கும் இடத்தில் எந்த உயிரினமும் தூங்காது.

ஆபத்தைக் களைபவர் இறைவன். ஆகையால் இறைவனின் பிரசன்னம் அவசியம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எப்படித் தூக்கம் வரும்? அதை இன்னொரு நாள் பார்ப்போம்.

இரண்டாவதாக, மற்றவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒருவரே தூங்க முடியும். எனக்கு அருகில் தூங்குபவன் துப்பாக்கியோ, கத்தியோ வைத்திருப்பதை நான் பார்த்துவிட்டால் அவரோடு என்னால் தூங்க முடியுமா? 'சுட்டு விடுவானோ! குத்திவிடுவானோ?' என்றே தான் மனம் எண்ணிக்கொண்டிருக்கும். இதுதான் நம்பிக்கை.

மூன்றாவதாக, சலனமற்ற உள்ளம். நம் உள்ளத்தின் சலனங்களே பல நேரங்களில் நம் கனவுகளாக வருகின்றன. சலனமில்லாத உள்ளம் தூக்கத்தில் கனவுகள் காண்பதில்லை. சலனமற்ற உள்ளம் தனிநபர் சார்ந்தது.

மொத்தத்தில் இனிய தூக்கம் வர திருப்பாடல் 4 சொல்லும் வழிகள் மூன்று:

அ. உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாக இருங்கள்.
ஆ. முறையான பலிகளைச் செலுத்துங்கள்.
இ. ஆண்டவரை நம்புங்கள்.

இந்த மூன்றும் இருந்தால் நமக்குக் கிடைப்பவையும் மூன்று:
அ. மகிழ்ச்சி. சாதாரண மகிழ்ச்சி அல்ல! தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சி! இன்னைக்கு உள்ள மாடர்ன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 'ஸ்டேட் ஃபர்ஸ்ட வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சி!'

ஆ. மன அமைதியுடன் படுத்துறங்குவேன்.

இ. தனிமையாயிருந்தாலும் ஆண்டவர் பாதுகாப்பார்.

இன்றைக்கு இதில் ஒன்றை மட்டும் நாம் செய்வோமோ?

உள்ளத்தோடு பேசி அமைதியாக இருப்போம்!

என்றாவது நாம் நம்மைப் பற்றி நம்மிடம் பேசியிருக்கிறோமா? இன்றைக்குப் பேசிப் பார்ப்போம். நம்மையே நாம் வாய்விட்டுப் பாராட்டுவோம். தட்டிக் கொடுப்போம். தட்டிக் கேட்போம். ஆறாத காயங்களுக்கு நாமே மருந்திடுவோம்.

நம் பிறப்பிலிருந்து நம்மோடு வரும் நல்ல நண்பன் 'நாம்' தான். இறுதிவரை நம்மோடு இருக்கப்போவனும் இந்த 'நாம்' தான். நம்மோடு பேசக் கற்றுக்கொண்டால் வெளியிலிருந்து வரும் தனிமையோ, வருத்தமோ, சோகமா, வன்சொல்லோ, கண்டுகொள்ளாத்தன்மையோ எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

உள்ளத்திற்கு அமைதியும், இரவில் தூக்கமும் தராத எந்த நிகழ்வும்

வெறுமையையும், பொய்யானதையும் நாடிச்செல்வதேயாகும்!

எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?


Wednesday, May 21, 2014

சீறி எழுவதேன்? சூழ்ச்சி செய்வதேன்?

'உனக்கு முன் நிற்கும் ஒரு மனிதரை நீ காயப்படுத்தாதே! ஏனெனில் ஏதோ ஒரு காயத்தால் அவர் அழுது கொண்டிருப்பார்!' என்பது செல்டிய பழங்குடி மக்களிடம் புழங்கும் ஒரு பழமொழி.

ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் ஒரு கண்ணீர்ப் பெருங்கடல் இருக்கின்றது. இவ்வளவு கண்ணீரைத் தனக்குள் வைத்திருக்கும் மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் அடுத்தவர்களின் கண்களில் கண்ணீரைக் கூட்டுவதிலேயே கவனமாக இருக்கின்றனரே! ஒரு வேளை தங்களிடம் உள்ள கண்ணீர்தான் மற்றவர்களின் கண்ணீருக்கும் காரணமாகிவிடுகின்றதோ?

மனிதர்கள் ஏன் மனிதர்களுக்கு எதிராக எழ வேண்டும்?

தன் இனத்தை அளவுக்கதிகமாக அன்பு செய்யும் இனமும் மனித இனம்தான். தன் இனத்தை 'அழிக்க வேண்டும்!' என நினைத்து அழிப்பதும் மனித இனம்தான்.

மனிதர்களின் உள்ளுணர்வை வன்முறை - காமம் என இரண்டு வகையாகப் பிரிக்கின்றார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு. இந்த இரண்டையும் கட்டுக்குள் வைக்க மனிதர்களுக்கு கடவுளும், சமூகமும் தேவைப்படுகின்றன(ர்).

'வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?

சீறி எழுவதேன்? சூழ்ச்சி செய்வதேன்?

இந்த இரண்டு கேள்விகளின் அர்த்தம் என்ன?

'மனிதன் மனிதனுக்கு ஓநாய்!' (homo homoni iupus) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு முதுமொழி.

இந்த இரண்டு கேள்விகளின் பின்புலத்தில் இருப்பது இஸ்ரயேல் மக்களின் அரசியல் வரலாறு. கடவுள் ஒரு அரசரை (தாவீதை அல்லது சாலமோனை - உறுதியான தகவல் பாட்டில் இல்லை!) தேர்ந்தெடுக்கிறார். அந்த அரசரைப் பிடிக்காதவர்கள் அவருக்கு எதிராகச் சீறி எழுகின்றனர். அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர். இந்த நிலையில் ஆண்டவர் எதிரிகளை எல்லாம் அழித்து இவரின் அரசரை நிலைநாட்டுவார் என்று இவருக்கு நம்பிக்கை தருவதாகவும், எதிரிகளுக்கு எச்சரிக்கை தருவதாகவும் அமைந்திருக்கிறது திருப்பாடல் 2.

நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் சீறி எழுவதும், அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்வதும் நாம் அன்றாடம் காணும், அனுபவிக்கும், சொல்லக் கேட்கும் நிகழ்வுதான்.

சீறி எழுபவர் யார்? சூழ்ச்சி செய்பவர் யார்?

'டோம் அன்ட் ஜெரி' நாடகம் பார்த்ததுண்டா? டோம் கேட் - ஜெரி மவுஸ். டோமிற்குக் கோபம் உண்டாக்கும் ஜெரி. அப்படிக் கோபித்துத் தன்னை விரட்டும் போது தன் சூழ்ச்சியால் முறியடிக்கும். டோமிடம் இருப்பது சீற்றம். ஜெரியிடம் இருப்பது சூழ்ச்சி.

வலிமையானவனிடம் இருப்பது சீற்றம். வலிமையில்லாதவனிடம் இருப்பது சூழ்ச்சி.

நம்மிடம் யார் கோபப்படுவார்கள்? நம்மைவிட வலிமையானவர்கள்தான். கோபம் மேலிருந்து கீழ்நோக்கி செல்வது. சூழ்ச்சி கீழிருந்து மேல் நோக்கி செல்வது.

வீட்டுப்பாடத்தை மாணவன் எழுதிக் கொண்டு வராததால் அவன் மேல் கோபப்படுகின்றார் ஆசிரியர். இந்தக் கோபத்திற்கு எதிராகக் கோபப்பட முடியாமல் அவரது சேரில் எண்ணெய் தடவி அவரை அழுக்காக்க சூழ்ச்சி செய்கின்றான் மாணவன்.

தாவீதின் வாழ்வில் இந்த இரண்டையும் அவர் எதிர்கொள்கின்றார். வலுவானோர், வலுவற்றோர் என அனைவரும் அவருக்கு எதிரிகளாக இருந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் ஆண்டவரின் பதில் என்ன?

மற்றவர்களின் சீற்றத்தாலும், சூழ்ச்சியாலும் வருத்தப்பட்ட தாவீதுக்கு ஆண்டவர் ஏழு வாக்குறுதிகளை வழங்குகின்றார்:

1. நீர் என் மகன். ஆம். மகன். அடிமையல்ல. மகனுக்கு எல்லா உரிமையும் உண்டு.

2. உம்மை நான் பெற்றெடுத்தேன். தத்தெடுக்கவில்லை. பெற்றெடுத்தேன். கடவுள் தன்னையே பெண்ணாக உருவகப்படுத்துகின்றார். பெற்ற பிள்ளை தாயின் உடலிலும் பங்கு பெறுகிறது. ஆனால் தத்துப் பிள்ளை தாயின் உணர்வுகளில் மட்டுமே பங்கு பெறுகிறது.

3. நீர் விரும்புவதை என்னிடம் கேள். 5 வயது வரை ஒரு குழந்தை இந்த உலகில் மிகவும் வலிமையானவர் தன் அப்பா தான் எனவும், அவரை வெல்ல யாராலும் முடியாது எனவும் நினைக்குமாம். அந்தக் குழந்தையின் மனப்பக்குவத்தைப் பெற தாவீதை அழைக்கின்ற கடவுள் இங்கே ஒரு அப்பாவாக வருகின்றார்.

4. பிற நாடுகளை உனக்கு உரிமைச் சொத்தாக்குவேன். உரிமைச் சொத்து என்பது பங்கு போட முடியாதது. அதாவது வெற்றி முழுவதும் உனக்கே. பங்கு போடவே ஆள் இருக்காது. நீதான் என் எல்லாம்!

5. பூவுலகை உனக்கு உடைமையாக்குவேன். அதாவது, உனக்கு எதிராக எவருமே இருக்க மாட்டார்கள்.

6. இருப்புக்கோலால் நீர் தாக்குவீர். ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் தங்கள் கைகளில் இருப்புக் கோல் வைத்திருப்பார்கள். ஆடுகளைக் கவர ஓநாய் வந்தால் ஒரே அடி அடித்து ஓநாயைக் கொன்று தங்கள் மந்தையைக் காப்பாற்றுவார்கள். முதல் அடி சரியாக விழுந்தால் தான் ஓநாய் இறக்கும். அல்லது அது அடிப்பவரின் மேலேயே பாய்ந்து விடும். இந்த முதல் அடியை வலிமையாக விழச்செய்வது இரும்புக்கோல்தான்.

7. குயவன் கலத்தைப் போல அவர்களை நொறுக்குவீர். பானையை உடைத்து விட்டால் அது ஒன்றுக்கும் பயன்படாது. அதிலிருந்து புதிய பானையை செய்யவும் முடியாது. சுட்ட களிமண் சுடாத களிமண்ணோடு கலக்க முடியாது. உடைந்த செங்கலிலிருந்து ஒருபோதும் புதிய செங்கலை உருவாக்க முடியாது. தாவீதின் எதிரிகள் தங்களுக்கும் பயன்படாமல், மற்றவர்களுக்கும் பயன்படாமல் அழிந்து போவர்.

இந்த ஏழு வாக்குறுதிகளும் தாவீதுக்கு நம்பிக்கை தருகின்றன. இவைகளெல்லாம் நடக்கவில்லை என்றாலும் 'கடவுள் என்னோடு இருக்கிறார்! நான் அவருக்கு செல்லப்பிள்ளை!' என்ற நம்பிக்கை தாவீதுக்கு கண்டிப்பாக வந்திருக்கும்.

'நீரே என் மகன்!' என்ற வார்த்தையை இங்கிருந்துதான் நற்செய்தியாளர்கள் எடுத்து இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின் போதும் வானகத்தந்தையின் வார்த்தையாக எழுதுகின்றனர்.

இந்தத் திருப்பாடல்தான் புதிய அரசர் அரியணையில் ஏறும்போது இஸ்ரயேல் மக்கள் பாடிய திருப்பாடல்.

நம் வாழ்வில் மற்றவர்களின் சீற்றமும், சூழ்ச்சியும் தாங்க முடியாத போது இந்த ஏழு வாக்குறுதிகளை நினைவில் கொள்வோம். உடைந்த பானையைப் போல அவர்கள் அழிய வேண்டாம். பாவம்! ஆனால், 'கடவுளின் செல்லப்பிள்ளைகள் நாம்!' என்ற நம்பிக்கையை இது நமக்கு தரட்டும்! ஒவ்வொரு நாளும் நாமும் அரசர்கள்தாம்!

சீறி எழுவதேன்! சூழ்ச்சி செய்வதேன்!

நற்பேறு பெற்றவர் யார்?

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக விவிலியத்தின் கேள்விகள் ஒவ்வொன்றையும் சிந்தித்தோம். கேள்விகள் இன்னும் முடிந்தபாடில்லை.

இன்று முதல் திருப்பாடல்களில் வரும் கேள்விகளை மையமாக வைத்துச் சிந்திப்போம்.

திருப்பாடல்கள் நூலின் முதல் வரியே கேள்வியோடுதான் தொடங்குகிறது.

'நற்பேறு பெற்றவர் யார்?'

இந்த யார் என்பதற்கான பதிலை மூன்று எதிர்மறை வார்த்தைகளாலும், இரண்டு நேர்மறை வார்த்தைகளாலும் சொல்கின்றது திருப்பாடல்.

1. மூன்று எதிர்மறை வார்த்தைகள்:

அ. பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்.
ஆ. பாவிகளில் வழியில் நில்லாதவர்.
இ. இகழ்வாரின் குழுவினில் அமராதவர்.

ஒரு மனிதர் செய்யும் அடிப்படையான செயல்கள் மூன்று: நடப்பது, நிற்பது, அமர்வது. படுப்பது என்பது அமர்வதின் நீட்சி அல்லது நிற்பதின் சாய்ந்த நிலை என எடுத்துக்கொள்ளலாம். ஆகவே செயல்கள் மூன்று. இந்த மூன்றிலும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வரி உணர்த்துகின்றது.

'பொல்லாதவர்' என்றால் யார்? 'அவன் ரொம்ப பொல்லாதவன்!' எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது 'போல அல்லாதவரே!' 'பொல்லாதவர்!' - இயல்புக்கு மாறாக இருப்பவர். இயல்புக்கு மாறாக இருப்பவர்கள், இயற்கையை மீறிச் செயல்படுபவர்கள் இவர்களின் சொல்படி நடக்கக் கூடாது. சரியா?

'பாவிகள்' என்பதற்கு விவிலியம் கூறும் அர்த்தம் பல. அதில் முதன்மையாக இருப்பது 'திருச்சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுபவர்கள்'. திருச்சட்டம் என்றால் பத்துக்கட்டளைகள்.

'இகழ்வார்' - இகழப்படக்கூடியவர் அல்லது பிறரை இகழ்பவர் என்று இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கலாம். மற்ற மனிதர்கள் இவர்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல.

இந்த வரியில் இயற்கையை மதிக்கவும், இறைவனை மதிக்கவும், பிறரை மதிக்கவும் செய்யாதவர்களிடமிருந்து அகன்று நிற்பவரே 'நற்பேறு' பெற்றவர்.

2. இரண்டு நேர்மறை வார்த்தைகள்:

அ. ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்.
ஆ. அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்.

இந்த இரண்டிலும் மையமாக இருப்பது திருச்சட்டம். புதிய ஏற்பாட்டில் பத்துக்கட்டளைகள் என்னும் திருச்சட்டத்தை இயேசு 'அன்பு' என்ற ஒரே வார்த்தையாகச் சுருக்கிவிட்டார். ஆகையால் அன்பில் மகிழ்ச்சியுறுபவரும், அன்பை இரவும் பகலும் சிந்திப்பவரே நற்பேறு பெற்றவர்.

இந்த நற்பேறு பெற்றவர் எப்படி இருப்பார்?

அ. நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல - ஃப்ரெஷ்ஷாக!
ஆ. தாம் செய்வதனைத்திலும் வெற்றியோடு - பெருமிதமாக!

இன்றும் நாம் பிறரை வாழ்த்தும் போது 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்!' என வாழ்த்துகிறோம். இந்தப் 'பதினாறு' என்பது 'பிள்ளைகளின் எண்ணிக்கை' அல்ல. நம் தமிழ்மரபில் ஒருவர் கொள்ள வேண்டிய நற்பேறாக 'பதினாறை' வகைப்படுத்தியுள்ளனர். அவை இவைதாம்: புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், துணிவு, பொன், நெல், உடல்நலம், இன்பம், அறிவு, அழகு, அறம், பெருமை, ஊழ், நீடிய ஆயுள்.

இந்தப் பதினாறு பெற்றவர்களும் நற்பேறு பெற்றவர்களே.

நீங்களும் நற்பேறு பெறுவீர்களாக! இன்றும்! என்றும்!

Monday, May 19, 2014

எது சரி? எது சுகம்?

'பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்' ... 'நீ எனக்குத் தடையாக இருக்கிறாய்!' ... 'தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்!' (காண். மத்தேயு 16:21-27)

பிலிப்பு, செசாரியாப் பகுதியில் தன் சீடர்களிடம் தான் யார் என்று சொல்லக் கேட்டவுடன், தொடர்ந்து அவர்களிடம் பேசும் பகுதியே இன்றைய நற்செய்தி. இந்ந நற்செய்தி மூன்று உட்பகுதிகளைக் கொண்டுள்ளது: 1. இயேசு பாடுகளை முன்னறிவிக்கின்றார். 2. பேதுரு இயேசுவின் பாடுகளைக் கடிந்து கொள்கின்றார். 3. இயேசு சீடத்துவத்தின் அர்த்தம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

1. இயேசு பாடுகளை அறிவிக்கின்றார். இயேசுவுக்கு எருசலேமின் பாடுகளும், சிலுவைச் சாவும் திடீரென நிகழ்ந்த ஒரு வியப்பு அல்ல. அது அவருடைய வாழ்வின் நிறைவு. தன் பணி வாழ்வு முழுவதிலும் சிலுவை அவருக்கு முன்னேயே நின்றிருக்கிறது. சிலுவை என்ற வார்த்தைக்குப் பதிலாக கொலை என்ற வார்த்தையை மத்தேயு நற்செய்தியாளர் இங்கே பயன்படுத்துகின்றார். இதே வார்த்தைதான் எருசலேமின் ஆலயத்தில் ஆடுகள் பலியிடப்படுவதைச் சொல்லும் வார்த்தை. தன் இறப்பு மற்றவர்களின் பார்வையில் ஒரு கொலையாகத் தெரிந்தாலும், தன் பார்வையிலும், இறைவனின் பார்வையிலும் அது ஒரு மேலான பலி எனவும், அந்தப் பலியால் பலரும் மீட்புப் பெறுவர் என்பது இயேசுவின் பார்வை. தன் இறப்பு பற்றி மட்டுமல்ல, உயிர்ப்பு பற்றியும் முன்னுரைக்கின்றார். இயேசுவின் இலக்குத் தெளிவு இதில் வெளிப்படுகின்றது. வாழ்க்கையை வாழும்போது நம் இறுதி எப்படி இருக்கும் என நினைத்தால் நாம் நன்றாக வாழ்வோம் என்று குறிப்பிடுவார்கள். நம் இறுதியை நாமே எழுதிவிட்டு அதன்படி ரிவர்ஸ் செய்து வாழ்ந்தால் வாழ்வு செம்மையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறது மேலாண்மையியல்.

2. சீமோன் இயேசுவைக் கடிந்து கொள்கின்றார். 'நீ பாறை!' என்று சற்றமுன் சீமோன் பேதுருவை அழைத்த இயேசு 'அப்பாலே போ சாத்தானே!' என அவரைக் கடிந்து கொள்கின்றார். 'இது வேண்டாம்! உமக்கு நடக்கவே கூடாது!' என்பது ஒரு நலவிரும்பியின் வார்த்தைகள். நம் அன்பிற்குரியவர்கள் யாராவது தனக்குத் துன்பம் வரப்போகிறது என்று புலம்பினால் நம் மனநிலை எப்படி இருக்கும்? பேதுருவைப் போல நாமும் அக்கறையோடுதான் 'அப்படியெல்லாம் நடக்காது!' என்று சொல்வோம். இயேசுவைப் பேதுரு புரிந்து கொள்ளவில்லை என்பதை விட பேதுருவை இயேசு புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. மனிதர் பார்க்கும் பார்வைக்கும், கடவுள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கின்றது. மனிதர்கள் பகுதியாகப் பார்க்கின்றனர். கடவுள் மொத்தமாகப் பார்க்கின்றார். இயேசுவின் பாடுகளை வேண்டாம் எனச் சொல்லும் பேதுரு, உயிர்ப்பையும் வேண்டாம் என்றுதானே சொல்கின்றார். கடவுளின் பார்வையில் பாடுகள் என்பது உயிர்ப்போடு இணைந்திருப்பது. இறைவனின் பேங்கில் நாணயத்தின் இரண்டு பக்கங்களும் அவசியம். ஒன்றை மட்டும் டெபாசிட் செய்ய முடியாது. பேதுரு வாழ்க்கை என்ற நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கின்றார். நம் வாழ்வில் நாம் துன்பங்கள் வரும்போது உடனடியாக நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நம் வாழ்விற்கு மற்றொரு பக்கமும் இருக்கிறது.

3. பேதுருவின் குறுகிய பார்வையைத் தான் இயேசு கடிந்து கொள்கிறாரே தவிர, பேதுருவை இயேசு கடிந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றாற் போல நடக்காத போது நாம் அவர்களைக் கடிந்து கொள்கின்றோம். நம் கடிந்து கொள்ளுதல் ஒரு நபரின் செயலை நோக்கியதாக இருக்கின்றதா அல்லது ஒரு நபரையே நோக்கியதாக இருக்கின்றது. செயல்களை நோக்கியதாக மட்டுமே இருக்க வேண்டும். செயல்களை நோக்கி இருந்தால் அதற்குப் பெயர் 'குட்டிக் கோபம்'. அதுவே நபரை நோக்கி இருந்தால் அதுதான் 'குட்டி வெறுப்பு'. வெறுப்பு வந்து விடும் இடத்தில் அந்த நபரையே நம் வாழ்விலிருந்து நாம் துடைத்துவிடுகின்றோம்.

4. சீடத்துவம். தொடர்ந்து இயேசு சீடத்துவத்தின் விலை பற்றித் தன் சீடர்களுக்குப் போதிக்கின்றார். சீடத்துவம் என்பதில் மூன்று பண்புகள் அடங்கியிருக்கின்றன: அ. தன்னைத் துறக்க வேண்டும். ஆ. தன் சிலுவையைத் தூக்க வேண்டும். இ. இயேசுவைப் பின்பற்ற வேண்டும். இந்த மூன்றையும் தலைகீழாகப் பார்த்தால் தான் முழு அர்த்தம் வருகின்றது. முதலில் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். எப்படிப் பின்பற்ற வேண்டும்? சிலுவையைத் தூக்கிக் கொண்டு. சிலுவை என்றால் என்ன? தன்னைத் துறப்பது. இதில் முதல் இரண்டைக் கூடச் செய்து விடலாம். ஆனால் 'தன்னைத் துறப்பது' என்பதுதான் மிகவும் கடினமான ஒன்று. ஆகையால் தான் இயேசு இதை முதலில் சொல்கிறாரோ என்னவோ? மூன்று வாரங்களாக ஒரு அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே நாளில் முடிக்க வேண்டிய ஒன்று. ஆனால் என்னவோ அதை எழுதவே முடியவில்லை. அதை எழுதலாம் என்று நினைத்தவுடன் மனம் தான் விரும்பியதைத் தான் செய்கிறதே தவிர, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய மறுக்கிறது. யாராவது எழுதிக்கொடுத்தால் நன்றாக இருக்குமே எனவும் எண்ணத் தொடங்கிவிட்டது. இந்தப் போராட்டம் எல்லா நேரங்களிலும் வரும். அலார்ம் அடித்தவுடன் எழ வேண்டும் என்று இரவில் சொல்கின்ற மனம், காலையில் அலார்ம் அடித்தவுடன் 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் என்ன?' எனக் கேட்கிறது. நன்றாகப் படிக்க வேண்டும் எனச் சொல்கின்ற மனம், 'படித்துப் படித்து என்னத்தைக் கண்டோம். நீ இன்று சொல்வதை உனக்கு முன் என்றோ, யாரோ சொல்லிவிட்டார்கள்' என்றும் சொல்கின்றது. நம் மூளையும், உடலும் பல நேரங்களில்; தங்களுக்கு எது எளிதோ அதை மட்டுமே செய்கின்றன. எது சரி? என்று கேட்பதை விட எது சுகம்?' என்றே உடல் கேட்கின்றது. எது சரி என்பதற்கும், எது சுகம் என்பதற்கும் இடையேயான போராட்டத்தின் பெயரே சிலுவை. சுகத்தைத் துறப்பதே தன்னலம் துறப்பது. எது சரி என்பது ஆன்மா, எது சுகம் என்பது உலகம். பல நேரங்களில் இந்த உலகம் முழுவதையும் எனக்கு உரிமையாக்கிக் கொள்ளவே நினைக்கிறேன்: அதாவது எல்லா நண்பர்களிடமும் ஃபோன் செய்கிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன். 'உதவி!' என்று யார் கேட்டாலும் ஓடுகிறேன். ஆனால் நாளின் இறுதியில் அமர்ந்து இன்று என் மனம் விரும்பும் ஒன்றைச் செய்தேனா? என்று கேட்டால் மௌனமே மிஞ்சுகிறது. 'என் சுகம்!' எதையோ அதைத் தான் செய்கிறேனே தவிர, 'என் சரி!' என்பதை நான் செய்வதில்லை. இதைத்தான் இயேசு 'உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' எனக் கேட்கின்றார். 'அவசியம் - அவசரம்' என்ற கட்டத்தில் வாழ்க்கை அவசியமானதை விடுத்து அவசரத்தை மட்டுமே நம்மைச் செய்யச் சொல்கிறதென்றால் ஆபத்து நம் அருகிலேயே இருக்கின்றது.

நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்?

அக்காலத்தில், இயேசு ... 'மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' ... 'நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்? ... 'நீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்' என்றார் பேதுரு. (காண். மத்தேயு 16:13-20)

நாம் கேட்கின்ற பல்வேறு அடிப்படைக் கேள்விகளுள் ஒன்று: 'நான் யார்?' இந்தக் கேள்வியைக் கொஞ்சம் விரிவுபடுத்தினால், 'எனக்கு நான் யார்?' 'என் நண்பர்களுக்கு நான் யார்?' 'என் குடும்பத்திற்கு நான் யார்?', 'என் சமூகத்திற்கு நான் யார்?', 'என் கடவுளுக்கு நான் யார்?' என்று கேட்டுக்கொண்டே போகலாம். இது வெறும் சுய அடையாளத்திற்கான கேள்வியாக மட்டுமல்லாமல், நமக்கும், பிறருக்கும் உள்ள உறவை, தொடர்பை அடையாளப்படுத்தும் கேள்வியாகத்தான் இருக்கின்றது.

இந்தக் கேள்வியை இன்று இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றார். இயேசுவின் இந்தக் கேள்வி தன் அடையாளத்தைத் தான் தெரிந்துகொள்வதற்காக என்று இல்லாமல், தன் அடையாளத்தை மற்றவர்கள் எப்படி காண்கிறார்கள்? என்ற தேடலின் விளைவாகத்தான் அமைகின்றது. இந்தக் கேள்வி இரண்டு படிநிலைகளைக் கொண்டிருக்கின்றது: 1) மக்கள் என்னை யாரெனச் சொல்கிறார்கள்?, 2) நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?

இங்கே சீடர்களின் மறுமொழி ஒட்டுமொத்த சமூகத்தின் அறிக்கையாகவும், பேதுருவின் மறுமொழி சீடர்களின் நம்பிக்கை அறிக்கையாகவும் அமைகின்றது.

இயேசுவின் இந்தக் கேள்வியும், சீடர்களின் பதிலும்; இன்று நமக்கு மூன்று சவால்களை முன்வைக்கின்றன:

1. நம்பிக்கைப் பயணம்
இறைவன் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது ஒரே இரவில் உதித்துவிடும் ஒன்றல்ல. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நாம் தொடர்ந்து கற்றுக்கொண்டேயிருக்கின்ற ஒரு பாடம். வாழ்வில் வரும் அனைத்து அனுபவங்களுமே ஏதோ ஒரு வகையில் இந்த நம்பிக்கைக்கு வலுவூட்டலாம், அல்லது தளர்த்திவிடலாம். சிறு வயதிலிருந்தே நாம் பெற்ற மறைக்கல்விப் போதனைகள், ஞாயிறு வகுப்புகள், மற்ற அருளடையாளப் பயிற்சி வகுப்புகள் வழியாக நாம் இறைவனைப் பற்றிய அடையாளத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் 'மற்றவர்கள்' இறைவனைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்ற முதல் நிலைதான். இதிலிருந்து நாம் கடந்து செல்ல வேண்டியது 'இறைவன் எனக்கு யார்?' என்பதுதான். இதுவே நம்பிக்கைப் பயணம். மற்றவர்கள் சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு, வெறும் கோட்பாடுகள், இறையியல் என்று நின்றுவிடுவது சுட்டிக்காட்டு;ம் விரலை மட்டும் பிடித்துக்கொண்டு, சுடுபொருளாகிய நிலவை விட்டுவிடுதல் போலாகும்.

2. மார்டின் பியூபர் என்ற ஜெர்மானிய மெய்யியலார் மனிதர்கள் உறவுகொள்ளும் நிலையை இரண்டாகப் பிரிக்கின்றார்: 'நான் - அது' (ஐ – ஐவ), 'நான் - அவர்' (ஐ – வுhழர). இதில் முதல் நிலை உறவு வெறும் தகவல் பரிமாற்றம் சார்ந்ததாக மட்டும் இருப்பதாகவும், இரண்டாம் வகை உறவில்தான் ஆத்மார்த்த உணர்வுகள் பரிமாறப்படுவதாகவும் முன்வைக்கின்றார். இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவும் கூட இப்படி இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வகை உறவில் நாம் இருக்கும்போது இறைவன் நமக்கு வெறும் உயிரற்ற அடையாளமாக, நம்பிக்கைப் கோட்பாடாம மட்டும் இருக்கலாம். தலைவலிக்கு நாம் எடுக்கும் அநாசின் போல, இறைவனை பிரச்சினைகளின் போது மட்டும் தேடலாம். உடைகளைகத் தூய்மையாக்கும் வாஷிங் மெஷின் போல, நம் உள்ளத்தைப் பாவத்திலிருந்து தூய்மையாக்க மட்டும் தேடலாம். குற்றம் செய்தால் தண்டிக்கும் போலீஸ் போலவும், எப்போதும் அன்பளிப்புகள் வழங்கும் 'சாந்தா கிளாஸ்' போலவும் கூட பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து 'நீ – நான்' என்று அன்பு உறவில் இணைந்திருக்கும் நிலையில் நாம் இருக்கின்றோமா? என்று கேட்க வேண்டியது இரண்டாவது சவால்.

3. பாறை. தன் மேல் நம்பிக்கை அறிக்கை செய்யும் பேதுருவின் மேல் தன் திருச்சபையைக் கட்டுவதாக இயேசு மொழிகின்றார். பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதி எந்தத் திருச்சபை உண்மையானது என்ற வாதத்தின் மையமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரும் பாறைதான். பேதுருவால் எப்படி இயேசுவை இறைமகன் என்று கண்டுகொள்ள முடிந்தது? நாம் இயேசுவை நெருக்கமாக அனுபவிப்பதற்கு என்ன தடையாக இருக்கின்றது? நாம் வாழும் இவ்வுலகம் இன்று கடவுளை வெறும் கோட்பாடாக மட்டுமே பார்க்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை வடிவமைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலரின் வாழ்வில் கடவுள் என்ற வார்த்தைக்கே இடமில்லை. எல்லாவற்றையும் புலன்களுக்குள் அடக்கி வைக்க நினைக்கும் மனமே இறைவனையும் அவ்வாறு அடக்கி வைக்க நினைக்கின்றது.

Sunday, May 18, 2014

அம்மா! உமது நம்பிக்கை பெரிது!

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார் ... கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா! தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்! என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார் ... 'இவரை அனுப்பிவிடும்' ... 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து' ... 'மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் திண்ணுமே!' ... 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது!' (காண். மத்தேயு 15:21-28)

நாம் அடிக்கடி கேட்ட நற்செய்திப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இயேசுவைப் பற்றிய நம் நல்ல அபிப்பிராயத்தைக் கொஞ்சம் ஆட்டம் செய்ய வைக்கும் பகுதி. எல்லா மக்களுக்கும் பொதுவாக அனுப்பப்பட்ட இறைமகன் இயேசு எதற்காக தான் 'சிதறுண்ட இஸ்ரயேல் மக்களிடமே அனுப்பப்பட்டதாகக்' குறிப்பிட வேண்டும்? தன்னிடம் உதவி கேட்டு வந்த புறவினத்துப் பெண்ணை எதற்காக 'நாய்க்கு' ஒப்பிட வேண்டும்? இந்த இரண்டு கேள்விகள் குறித்து ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவர் ஆய்வுத்தாள் எழுதுகின்றார். ஆனால் இன்னும் இதற்கான பதில்கள் விளக்கம் தருபவையாக அல்ல. இயேசு அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு சிலரின் வாதம். இயேசு 'தான் ஒரு யூத ஆண்!' என்ற சிந்தனையைக் கொண்டிருந்திருக்கலாம் என்பது மற்றவர்களின் வாதம். கேள்விகளை அப்படியே விட்டுவிடுவோம். சிந்தனைக்குச் செல்வோம்.

இயேசுவின் மற்ற புதுமைகளுக்கும் இந்தப் புதுமைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், மற்ற புதுமைகளில் எல்லாம் புதுமை நடக்கத் தடையாக யூதர்களும், மறைநூல் வல்லுநர்களும், பரிசேயர்களும் இருப்பார்கள். ஆனால் இங்கே தடையாக இயேசுவே இருக்கின்றார். இயேசுவின் தயக்கம் இரண்டு முறை இருக்கின்றது: 1) நான் இஸ்ராயேல் மக்களுக்காக அனுப்பப்பட்டேன். உங்களுக்காக அனுப்பப்படவில்லை. 2) பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவதில்லை.

இறுதியில் இயேசு சொல்லும் வார்த்தை மிகவும் மேன்மையானதாக இருக்கிறது: 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது!' பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வார்த்தைகளை இன்று நாம் ஜெயாவுக்குச் சொன்னாலும் பொருத்தமாகவே இருக்கும்: 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்!' அம்மா விரும்பியவாறே அவருக்கு நிகழ்ந்து விட்டது. வாக்காளர்கள் விரும்பியவாறு இனி அம்மா நடக்க வேண்டும்!'

ஜோக்ஸ் அபார்ட். இன்றைய நற்செய்தி நமக்கு என்ன சொல்கிறது?

1. துணிச்சல். இன்று நாம் காணும் இந்தத் தாய் மூன்று வகை 'தாழ்வுநிலைக்கு' உட்பட்டவள்: அ. பெண். ஆ. புறவினத்துப் பெண். இ. புறவினத்து பேய்பிடித்த குழந்தையின் தாய். இந்த மூன்று தாழ்வு நிலைகளையும் தாண்ட துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது? வாழ்க்கையை இரண்டு நிலைகளாக வாழலாம்: அ. விக்டிம் மனநிலை. அதாவது, நான் இப்படித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என் பிறப்பு ஒரு தவறு. என் சூழல் ஒரு தவறு. எனக்கு எப்போதும் கெட்டதே நடக்கும். இப்படியொரு புலம்பல். ஆ. மாஸ்டர் மனநிலை. எது எப்படி இருந்தாலும் நான் என் வாழ்க்கையின் நிர்வாகி. என்னால் வாழ முடியும். என் பாதையை நான் அமைத்துக் கொள்வேன். இது ஒரு நேர்மறை அணுகுமுறை. நம் கதையின் பெண் இந்த இரண்டாம் மனநிலைக்குச் சொந்தக்காரி. நாம்?

2. இயேசுவைத் தெரிந்திருந்தல். இயேசுவைத் 'தாவீதின் மகனே!' என அழைக்கின்றார். இந்த டைட்டில் இயேசு ஒரு யூதர் எனவும், யூதரின் அரசராம் தாவீதின் மரபில் அவர் வந்தவர் எனவும் தான் ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது. 'உம் டைட்டில் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீர் இரக்கம் கொள்வீர் என எனக்குத் தெரியும்' என்று முடிவெடுக்கின்றார். இயேசுவைத் தெரிந்திருந்தல் என்பது அவருக்கு இறையியலார்கள் வழங்கும் பெயர்களைத் தெரிந்திருத்தல் அன்று. மாறாக, அவரின் இரக்கத்தையும், அன்பையும் உணர்வது.

3. தன் மகள் மேல் இருந்த அக்கறை. தன் மகளுக்காகத் தான் ஒரு நாய் எனவும் அழைக்கப்படத் தயாராகின்றாள் இந்த ஏழைத்தாய். இதை இரண்டு பக்கங்களில் இருந்து பார்க்கலாம். அ. தாய் என்பவள் தன் பிள்ளைக்காக எதையும் செய்யத் துணிபவள். என்னை என்ன வேண்டுமானாலும் அழைத்துக்கொள். ஆனால் எனக்கு வேண்டியதைச் செய்து கொடு! இதுதான் பெண்ணின் மனநிலை. ஆ. நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களை நாம் எப்படிப் பார்க்கின்றோம். உதவி கேட்டு என்றால் பணம் கேட்டு வருபவர்கள் அல்லர். நம் குடும்பங்களிலேயே ஒருவர் மற்றவரிடம் அன்பை, ஆதரவைக் கேட்கிறோம். இவர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோமா?

4. இயேசுவுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கின்றார் பெண். உடல்நலமும், உள்ள நலனும் தருபவர் கடவுள். மனிதர்கள் அதற்குக் குறுக்கே நிற்க முடியாது. இந்த உண்மையை இயேசுவுக்கு உணர்த்துகின்றார். நாய்க்கு உணவளிப்பவர் கடவுள். வீட்டு உரிமையாளர் அல்ல. இன்றும் கடவுள் செயலாற்றுவதற்கு எந்த மதமோ, மத போதனையே, மத கொள்கையோ, கோட்பாடோ தடையாக இருக்க முடியாது. அன்பையும், மன்னிப்பையும், நலத்தையும் வழங்குபவர் கடவுள்.

5. நம்பிக்கை. பெண்ணின் மனதில் இருந்ததெல்லாம் நம்பிக்கை மட்டும்தான். நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? 'நீங்க எப்படி என்னைய நாய் என்று கூப்பிடலாம் எனக் கோபப்பட்டிருப்போம்' அல்லது 'பரவாயில்லை. நாங்க வேற வழியைப் பார்க்கிறோம்!' என்று சொல்லியிருப்போம். நம்பிக்கை என்பது இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்பது. ஒருமுறை பதிய வைத்துவிட்டால் ஒருக்காலம் திரும்ப எடுக்கவே கூடாது. பெண் கண்களைப் பதிய வைத்தார். பெற்றுக்கொண்டார்.

Saturday, May 17, 2014

உண்மையில் என்னதான் நடந்தது?

மக்களை அனுப்பிவிட்டு இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ... அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார் ... 'ஐயோ! பேய்!' என்று அலறினர் ... 'துணிவோடிருங்கள். நான்தான்' ... 'வா' ... 'ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்' ... 'நம்பிக்கை குன்றியவனே!' ... 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர். (காண். மத்தேயு 14:22-33)

நற்செய்தியாளர்கள் செய்திகளை உடனுக்குடன் பதிவு செய்யும் பத்திரிக்கை நிருபர்கள் அல்லர். மாறாக, ஒரு அறையில் அமர்ந்து கொண்டு செய்திகளைத் தணிக்கை செய்யும் எடிட்டர்கள். நிகழ்ந்த ஒன்றைத் தன் பார்வையில், தன் செய்தித்தாளின் நோக்கத்திற்கும், அதை வாசிப்பவர்களின் ரசனைக்கும் ஏற்ப மாற்றிக் கொடுப்பதே எடிட்டரின் வேலை. இயேசுவின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒவ்வொரு வகையில், தங்களின் குழுமத்தின் தேவைக்கேற்றவாறு தணிக்கை செய்து கொடுக்கின்றனர். மாற்கு நற்செய்தியில் வரும் இன்றைய நற்செய்திப் பகுதியில் நிறைய தகவல்கள் சொல்லப்படவில்லை. இயேசுதான் என்றதும் பேதுரு இறங்கி ஓடியதும், அவரை ஆண்டவரே என்று அழைத்ததும், 'இறைமகன்' என்று சீடர்கள் அறிக்கையிட்டதும் மத்தேயுவின் சேர்க்கைள்.

அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது? 'ஆண்டவரே' மற்றும் 'இறைமகன்' என்னும் பட்டங்கள் இயேசுவுக்கு அவரின் உயிர்ப்பிற்கு மேல் அவரின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் கொடுத்தது. அந்த டைட்டில்கள் எப்படி இந்த நிகழ்வுக்குள் வந்தன?

மத்தேயு நற்செய்தியின் இயேசு எப்போதும் 'கடவுள் நம்மோடு' எனவே இருக்கின்றார். ஆனால் இன்றைய நிகழ்வில் தன் இல்லாமையைத் தன் சீடர்கள் மேல் சுமத்துகின்றார். தன் சீடர்களோடு தான் மட்டும் படகில் ஏறி வந்த இயேசு இப்போது தான் மட்டும் கரையில் இருக்க அவர்களை மட்டும் செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றார். தான் செய்யப்போகும் அறிகுறிக்குத் தயாரிப்பாக இதைச் செய்தாரா? அல்லது இயேசுவின் இல்லாமையை உணர்ந்த தொடக்கத் திருச்சபை இந்த நிகழ்வை ஒரு உருவகமாக எழுதியதா? படகு என்பது திருச்சபை. கடல் என்பது உலகம். சீடர்கள் திருச்சபையின் போதகர்கள். தண்ணீரில் இறங்கி நிற்கும் பேதுரு திருச்சபையின் தலைவர்.

இன்றைய நற்செய்தி 'இல்லாமை - இருமை' என்ற அடிப்படையிலும், இயேசுவின் பெயர் என அடிப்படையிலும் சிந்திப்போம்.

முதலில் 'இல்லாமை - இருமை'. இந்த இரட்டிப்புத்தன்மை மூன்று படிகளாக நிகழ்கின்றது. முதலில் இயேசு சீடர்களோடு இல்லை. அடுத்ததாக அவர்களின் பார்வையில் இருக்கின்றார். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இறுதியாக அவர்களோடு இருக்கின்றார். 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது முதல் நிலை. 'கடவுள் நமக்கருகில்' என்பது இரண்டாம் நிலை. 'கடவுள் நம்மோடு' என்பது மூன்றாம் நிலை.

இரண்டாவதாக 'இயேசுவின் பெயர்'. இயேசுவை முதலில் 'பேய்' என அழைக்கின்றனர். இரண்டாவதாக, ஆண்டவர் என அழைக்கின்றனர். இறுதியாக 'இறைமகன்' என அழைக்கின்றனர்.

இந்த இரண்டு புரிதல்களும் நமக்குச் சொல்லும் பாடங்கள் என்ன?

1. இறைவேண்டல். 'தனித்திரு - விழித்திரு - செபித்திரு' என்ற விவேகானந்தரின் வார்த்தைகள் தான் நினைவிற்கு வருகின்றன. மக்கள் கூட்டத்தோடு இருந்த அளவிற்குத் தனிமையிலும் இருக்கத் துணிகின்றார் இயேசு. தனிமையில் நாம் நம்மையே கண்டுகொள்கிறோம். தனிமை நம்மை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ஆகையால்தான் தனிமை பல நேரங்களில் நமக்குப் பயமாக இருக்கின்றது. தனிமையான அந்த நேரத்தை தன் தந்தையோடு செலவழிக்கின்றார். இயேசு எப்போதும் 'உடன்' இருப்பவராக இருக்கின்றார் - மக்களோடு, சீடர்களோடு, தந்தையோடு. இன்று நம் பிரசன்னம் எப்படி இருக்கின்றது?

2. இயேசு தண்ணீரில் மேல் நடப்பது புவிஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு நிகழ்வு. ஒன்றின் மேல் நடப்பது என்பது அதன்மேல் ஒருவர் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் காட்டுகிறது (காண். யோபு 9:8, 38:16, திபா 77:19, எசா 43:16, 51:9-10, அபக்கூக்கு 3:5). பேதுரு தண்ணீரின் மேல் நடக்க நினைத்தது இயேசுவைப் போல ஆக வேண்டும் என்ற ஆசையால் அல்ல. மாறாக, இயேசுவுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் தான். இறைவனைத் தேடிச் செல்லும் ஆர்வம் நமக்கு இருக்கிறதா?

3. நம்பிக்கை. 'நம்பிக்கை குன்றியவனே!' என்று பேதுருவை அழைக்கின்றார் இயேசு. நம்பிக்கை என்றால் என்ன? நம் வாழ்க்கை என்ற கடலில் அலையே வீசாது என்பதும், நம் படகு கவிழாது என எண்ணுவதும், நாமும் தண்ணீரில் நடக்க முடியும் என நினைப்பதும் நம்பிக்கை அல்ல. மாறாக அலை வீசினாலும், புயல் அடித்தாலும் விரைவில் இயேசு அங்கு வருவார் என்று உறுதியாக இருப்பதே நம்பிக்கை.

4. இயேசு நமக்கு யார்? அரண்டவனின் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, அவர்களோடு இருந்த இயேசுவே அவர்களின் பார்வைக்குப் பேயாக இருக்கின்றாரா? கடலில் பேய்கள் வாழ்வதாக யூதர்கள் நம்பினார்கள். இன்றும் அப்படியே நம்புகிறார்கள். கடலின் கோரம் அவர்களுக்கு இயேசுவையே மறைத்துவிடுகிறது. இன்று இயேசுவை நம் பார்வையிலிருந்து மறைக்கும் காரணிகள் என்ன?

5. 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' இயேசுவின் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்வின் சாயங்காலங்களில் நமக்கு நம்பிக்கை ஒளி தருகின்றது. இந்த இரண்டு வார்த்தைகளை இறைவன் நம்மிடம் சொல்வது போல நாமும் ஒருவர் மற்றவரிடமும் சொல்வதற்குக் கடமை உண்டு தானே!

Friday, May 16, 2014

எஞ்சிய அப்பங்களை என்ன செய்திருப்பார்கள்?

அக்காலத்தில், பாலைநிலத்திலுள்ள ... பெருந்திரளான மக்களைக் கண்டபோது இயேசு பரிவு கொண்டார். 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே'... 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்...' 'ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறில்லையே...வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார்...எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். (காண். மத்தேயு 14:13-21)

நாம் சின்ன வயசிலிருந்து அடிக்கடி வாசிக்கக் கேட்ட இறைவார்த்தைப் பகுதி. நான்கு நற்செய்திகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வும் இது. நான்கு நற்செய்தியாளர்களின் பதிவுகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கின்றன. ஆகையால் இது உண்மையாகவே நடந்திருக்கலாமா? நடந்திருக்கலாம்! ரூல் ஆஃப் மெஜாரிட்டி என்று வைத்துப் பார்த்தால் இது நடந்திருக்கலாம்.

இந்தப் பகுதியை வாசித்தபோது என்னில் எழுந்த கேள்விகள் சில:

1. மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள் என்று சொல்லும் பகுதி எதற்காக இயேசு அங்குச் சென்றபோது எனத் தொடர்கிறது? இயேசு மக்களைப் பின்தொடர்ந்தார் என்பது போல அல்லவா இருக்கிறது!

2. 'ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்' என்று சொல்லும் யோவான் நற்செய்தியில் வரும் சிறுவன் எங்கே?

3. மீதியான அப்பங்களை என்ன செய்திருப்பார்கள்? பன்னரண்டு கூடைகள் பாலைநிலத்தில் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?

பரிவு - பகிர்வு - சமத்துவம். இந்த மூன்று வார்த்தைகள் இந்த நிகழ்வை நமக்கு ஒருமுகப்படுத்துகின்றன. இந்த நிகழ்வு இயேசு நிகழ்த்திய ஒரு அற்புதமா? அல்லது ஒரு போதனையா? என்ற கேள்வி இன்னும் இருக்கின்றது. 'மாலையில் அப்பம் பிடுதல்' என்பது நற்செய்தி நூல்களில் அதிகம் காணப்படும் ஒரு நிகழ்வு: பரிசேயர் வீட்டு விருந்து, இறுதி இராவுணவு, எம்மாவுஸ் உணவு, திபேரியக் கடல் உணவு. இந்த நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை இயேசு செய்த புதுமையாக நற்செய்தியாளர் எழுதியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இயேசுவின் புதுமை வெறும் அப்பங்களைப் பகிரச் செய்தது மட்டுமல்ல. இந்த நிகழ்வில் எண்ணற்ற புதுமைகள் அடங்கியிருக்கின்றன: 1) ஒன்றுமே இல்லை என நினைத்தவர்களிடம் அப்பங்களும், மீன்களும் இருந்திருக்கின்றன. 2) மக்கள் அமர்ந்து உண்ண பாலைவனத்தில் புல்தரை இருந்திருக்கின்றது. 3) எத்தனை பேர் உண்டார்கள் என எண்ணிப் பார்க்க 'கணக்கு' தெரிந்த ஒருவர் இருந்திருக்கிறார். பெண்களும் குழந்தைகளும் நீங்கலாக என்று இருக்கிறது. பெண்கள் இயேசுவுக்கு அருகில் அமர்ந்திருப்பார்களா? இல்லை. தூரமாகத்தான். ஏனெனில் பொதுவிடத்தில் ரபியின் போதனையை அருகில் இருந்து கேட்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பக்கத்தில் உள்ளவர்களை மட்டும் எண்ணிவிட்டு மற்றவர்களை விட்டுவிட்டார்களோ? 4) எஞ்சிய உணவுத்துண்டுகளை எடுக்கத் தயாராக 12 கூடைகள் இருந்திருக்கின்றன. இவைகளும் புதுமைகள் தானே. 'யார் புதுமையைத் தேடுகிறாரோ அவருக்கே புதுமை நடக்கும்' என்பது செல்டிக் பழமொழி. நம் வாழ்விலும் எண்ணற்ற புதுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. அவற்றை நாம் புதுமை என உணர்கிறோமா என்பது முதல் கேள்வி.

இரண்டாவதாக, பரிவு. இயேசுவைவிட சீடர்களுக்குத்தானே அக்கறை இருக்கின்றது. 'அவர்களை அனுப்பி விடுங்கள். மாலை நேரமாகிறது!' எனச் சொல்கிறார்கள். சீடர்களின் அக்கறைக்கும், இயேசுவின் பரிவிற்கும் என்ன வித்தியாசம். பரிவு என்பது அக்கறையுடன் கூடிய செயல்பாடு. ஆனால் அக்கறை என்பது வெறும் பொறுப்புணர்வு மட்டும் தான். அங்கே செயல்பாட்டிற்கு இடம் இல்லை. உதாரணத்திற்கு, நம் சாலைகளும், தெருக்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் அக்கறைப்படுகிறோம். ஆனால் அது வெறும் உணர்வாக மட்டுமே நின்று விடுகிறதே. சீடர்களின் வார்த்தைகளும் அப்படித்தான் இருக்கின்றன. மக்கள் மேல் அக்கறைப்படுகிறார்களே தவிர, 'அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என நினைக்கிறார்கள். பரிவு என்றால் என்ன? அவனுக்கு நான் இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்பது பரிவல்ல! அவனுக்கு நான் இதைச் செய்யாவிடில் அவனுக்கு என்ன ஆகும் என்று நினைப்பதே பரிவு. மக்களுக்கு உணவு கொடுக்காவிடில் அவர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கின்றார் இயேசு. இன்று மற்றவர்கள் தேவையில் இருக்கும் போது நாம் காட்டுவது வெறும் அக்கறையா அல்லது பரிவு. அக்கறை காட்ட பன்னிரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் பரிவு காட்ட ஒருவரால் தான் முடியும். நாம் இதில் யார்?

மூன்றாவதாக, வாருங்கள், கேளுங்கள் என்று முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் அழைப்பு விடுக்கின்றார். இயேசுவைச் சந்திக்க வந்த மக்களும் அவரின் போதனையைக் கேட்கவே வருகின்றார்கள். வந்தார்கள்! கேட்டார்கள்! வென்றார்கள்! கால்நடையாகவே வருகின்றார்கள்! நோயுற்றவர்களைத் தூக்கிக் கொண்டே வருகிறார்கள்! பாவம்! கட்டாந்தரையில், சுடுவெயிலில், கல்லும் முள்ளும் குத்த கடவுளைத் தேடியிருக்கிறார்கள். இந்தத் தேடல் எனக்கு ஒரு பாடம். இன்று நாம் கடவுளைத் தேடி ஓடவெல்லாம் தேவையில்லை. நாமே அவரை ஒரு பெட்டிக்குள் வைத்து நமக்கு அருகில் வைத்துவிட்டோம். நம் வீட்டுக் கதவைத் திறந்தால் எதிரில் கோவில். எதிரில் கடவுள். செல்ஃபோனைப் போல இன்று கடவுளும் நம் கைக்கருகில் இருக்கிறார். ஆனால் 'அவர் நம் அருகில் இருக்கிறார்!' என்ற சிந்தனை எனக்கு இல்லை. அவரைத் தேட வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. இயேசுவைத் தேடிய மக்கள் இன்று என்னைப் பார்த்தால் என்ன கேட்பார்கள்! வாங்க தம்பி! எங்களோட வாங்க...அவர் இங்க வந்திருக்கிறார்! என்று சொல்லும் போது நான் அவர்களிடம் என்ன சொல்வேன்?

நான்காவதாக, எஞ்சிய உணவுகளை ஏன் மக்களிடமே திருப்பிக் கொடுக்கவில்லை? பழைய ஏற்பாட்டு மன்னா கதை நினைவிருக்கிறதா? அன்றன்றுள்ள அப்பம் - இதுதான் இறைவனின் மதிப்பீடு. சேர்த்து வைப்பது, முதலீடு செய்வது, வட்டி பெறுவது - இவையெல்லாம் மனித மதிப்பீடுகள். அன்று விடிகிறதா! அன்று நம் தேடல் சிறப்பாக இருக்கிறதா! அன்று உணவு கிடைக்கிறதா! போதும்! இறைவன் நிகழ்காலத்தின் இறைவன். இறைவனால் நிரப்பப்படும் போது எதிர்காலம் குறித்த கவலை மறைந்துவிடுகிறது. (சொல்ல ஈசியா இருக்கு! ஆனா செய்யக் கஷ்டமாக இருக்கே!)

ஐந்தாவதாக, இயேசு இறுதி இராவுணவில் நற்கருணையை ஏற்படுத்தும் போது பயன்படுத்தும் ஐந்து வினைச்சொற்கள் இங்கேயும் பயன்படுத்தப்படுகின்றன: எடுத்து, பார்த்து, போற்றி, பிட்டு, கொடுத்து. நற்கருணையில் நாம் இன்றும் சொல்லும் இந்த வார்த்தைகள் ஒருவர் மற்றவரின் பசி போக்க நம்மைத் தூண்ட வேண்டும். உணவு மட்டும் பசி அல்ல. அறிவு, அன்பு, நட்பு, அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல், தனிமை, நோய் - இவைகளும் பசிதான். அங்கே நம்மை எடுத்துப் பிட்டுக் கொடுக்க முடிகிறதா?


Thursday, May 15, 2014

மேலானதைப் பெற...

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: 'ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்...வணிகர் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார்...விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்...' (காண். மத்தேயு 13:44-52)


விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைப் போதனை தொடர்கிறது. புதையல், முத்து, வலை என மூன்று உவமைகளை முன்வைக்கின்றார் இயேசு. நோக்கியா ஃபோன் பயன்படுத்திவிட்டு சாம்சங் ஃபோன் பயன்படுத்தினாலோ, ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்திவிட்டு ஐஓஸ் ஃபோன் பயன்படுத்தினாலோ பயன்படுத்துபவர்கள் சொல்லும் ஒரு புகார் என்ன தெரியுமா? 'இதுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லையே!' நம் மூளை எப்போதும் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியது. ஃபிரேம் ஒன்றைக் கட்டி வைத்து அதற்குள் மற்றதைப் போட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளும். எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற பேப்பர் நம் கண்முன் இருக்கும் போது நம் மனதில் உள்ள வெள்ளை என்ற ஃபிரேமிலும், பேப்பர் என்ற ஃபிரேமிலும் பொருத்தி, ஓகே! இது வெள்ளை பேப்பர் என்று சொல்கிறது. இந்தத் தொடர்புபடுத்துதல் இல்லாதவரைத்தான் நாம் 'அப்நார்மல்' என்றும் 'சப்நார்மல்' என்றும் அழைக்கிறோம். இன்றைய உவமைகளை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாதது போலவே இருக்கிறது. மூன்று உவமைகளும் வெவ்வேறு 'அர்த்த வளையங்களைச்' (semantic field) சார்ந்தவை. புதையல் நிலத்தில் கண்டெடுப்பது. முத்து கடலில் கண்டெடுப்பது. வலை கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் மாறி மாறிச் செல்வது.

இயேசுவின் முதல் இரண்டு உவமைகள் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடையவை. புதையல் எல்லார் கண்ணுக்கும் படலாம் என்றாலும் பணம் உள்ளவர்கள்தாம் அதை நிலத்தோடு வாங்கிக்கொள்ள முடியும். நல்முத்தைக் காண்பவர்கள் அதைப் பெற வேண்டுமென்றாலும் தங்களிடம் உள்ள முத்துக்களையெல்லாம் துறக்க வேண்டும். பணமும், முத்தும் சாதாரண மக்களிடம் இருக்க வாய்ப்பில்லையே? வலை உவமை நேரடியாக மற்ற இரண்டோடு தொடர்புடையதாக இல்லை. முதல் இரண்டு உவமைகளில் வரும் வினைச்சொற்கள் 'செய்வினையிலும்', மூன்றாவது உவமையில் வரும் வினைச்சொற்கள் 'செயப்பாட்டு வினையிலும்' இருக்கின்றன. மேலும் மூன்றாவது உவமையின் விளக்கமும் அதனோடே தொற்றிக்கொண்டே இருக்கிறது.

இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளுமுன் இதை வாசிக்கும் போது என்னில் எழுந்த கேள்விகள் இவை:

புதையலைக் கண்டுபிடித்தவர் எதற்காக அதை மறுபடியும் மூடி வைக்க வேண்டும்? மூடி வைத்துவிட்டு ஏன் தன் சொத்தையெல்லாம் விற்று அந்த நிலத்தை வாங்க வேண்டும்? நான் வாசித்த புதையல் கதைகள் எல்லாம் அப்படித்தான் சொல்கின்றன.

வலையில் சிக்கிய கெட்ட மீன்கள் தீயில் எறியப்படுகின்றன. வலையில் சிக்காத தீய மீன்களும் கடலில் இருக்கின்றனவே. அவைகளுக்கு தீ பனிஷ்மென்ட் இல்லையா? கிறித்தவம் என்ற வலைக்குள் இருக்கப்போய்த்தானே 'மோட்சம், நரகம்' என்ற பயம் எனக்கு வருகிறது. கிறித்தவத்தில் இல்லையென்றால் இதுபற்றிக் கவலையில்லையே! எதற்காக நம் மதம் ஒரு பயமுறுத்தும் கருவியாக இருக்க வேண்டும்?

இந்த மூன்று உவமைகளையும் மூன்று வார்த்தைகளில் அடக்கி விடலாம் என நினைக்கிறேன்: முழுமை, முதன்மை, முறைமை. புரியலயா?

1. முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
2. முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
3. முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

1. முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும். விண்ணரசு என்னும் புதையல் தனியே எடுக்கக் கூடிய ஒன்று அல்ல. அதை அதன் முழுமையான நிலத்தோடு வாங்கிக்கொள்ள வேண்டும். நம் வாழ்வில் வரும் மகிழ்ச்சி, நிறைவு, உயர்வு போன்றவை சிங்கிளாக வருபவை அல்ல. இறைவன் என்ற நிலத்தை நாம் முழுமையாக வாங்கும் போது அவைகளும் சேர்த்தே நமக்கு வருகின்றன. அவைகளை மட்டும் வைத்துக்கொள்ள நினைத்தால் காலப்போக்கில் அவைகளின் மதிப்பு குறைந்துவிடுகிறது. கொஞ்சம் ரியல் எஸ்டேட் மூளையோடு பார்ப்போமே! நாம் எடுத்த புதையலை நாம் செலவழித்து விட்டாலும், புதையல் இருந்த நிலம் என்று நிலத்தையும் நாம் நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளலாமே! ஆகையால் புதையலை மட்டும் எடுக்க வேண்டும். முழுமையாக நிலத்தையும் எடுத்துக்கொள்வோம். 'அனைத்திற்கும் மேலாக அவரது அரசையும் அதற்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். இப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33).

2. முதன்மையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நல்முத்தைப் பெற எம்முத்தையும் இழக்க முன்வர வேண்டும். நல்முத்தைக் கண்டும் பெற்றுக்கொள்ளாமல் பிறமுத்துக்களை வைத்திருத்தல் சால்பன்று. நல்முத்தைத் தேடுபவரே நல்முத்தைக் காண முடியும். இல்லத்தில் அமர்ந்துகொண்டே எல்லாம் கிடைக்கும் என நினைப்பது சிறப்பன்று. விண்ணரசையும், வாழ்க்கையையும் தேட வேண்டும். தேடிக் கண்டவுடன் வைத்திருப்பதை இழக்க வேண்டும். 'இதுவும் வேண்டும்! அதுவும் வேண்டும்!' என்ற பிளவு மனநிலை இறைவனின் டிக்ஷனரியில் கிடையாது. 'தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்தேனே!' - இந்தப் பழைய முத்துக்களை இழக்க வேண்டுமா? என நினைக்காமல் இழக்கத் துணிவோரே நல்முத்தை உரிமையாக்க முடியும்.

3. முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்லதைத் தீயதிலிருந்து பகுத்தாயும் மனம் அவசியம். தீயதிலிருந்து நன்மையானதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். நன்மையைப் பற்றிக் கொள்ள வேண்டும். தீமையை விலக்கிவிட வேண்டும். இந்த உள்ளத்தைத்தான் சாலமோன் ஆண்டவரிடம் கேட்கின்றார் (1 அர 3:9-11). இதுதான் ஞானம். முறைமையானது எதுவோ அதையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். அவற்றுள் நல்லது-தீயது எனப் பகுத்துப் பார்த்து முறைமையானதைச் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் காலப்போக்கில் அழுகிய மீன்கள் நல்ல மீன்களையும் கொன்று விடும்.

இந்த மூன்று உவமைகளுக்குப் பொதுவானது என்ன? மேலானதைப் பெற தாழ்வானதை இழக்க வேண்டும். இறையரசையும் மற்ற அனைத்தையும் ஒப்பிடும்போது மற்றது தாழ்வே. மேலானைதைப் பற்றித் தாழ்வானதை விட இறைவனிடம் துணிச்சல் வேண்டுவோம்!

Tuesday, May 13, 2014

எது உண்மை? எது பொய்?

அக்காலத்தில் இயேசு...விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்...ஒருவர் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்...ஒருவர் கடுகு விதையை எடுத்து...பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து...கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்! (காண். மத்தேயு 13:24-43).

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என்று தன் உவமையைத் தொடங்கும் இயேசு அடுத்தடுத்து மூன்று உவமைகளை முன்வைக்கின்றார்: களைகள், கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு. களைகளின் உவமைக்கு இயேசுவே அர்த்தமும் கொடுக்கிறார்.

இந்த உவமைகளை எதற்காக மத்தேயு நற்செய்தியாளர் எழுதியிருக்க வேண்டும் என்று பார்ப்போமே!

முதலில் களைகள். தொடக்கத் திருச்சபை இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் வேகமாக வளர்ந்து வரும் நேரம். அதையொட்டியே தப்பறைக் கொள்கைளும் வளர்கின்றன. இயேசு கடவுளா? மனிதனா? அவர் எப்படிப் பாவத்தைப் போக்க முடியும்? அவர் உண்மையிலேயே உயிர்த்தாரா? இந்தத் தப்பறைகள் ஒரு பக்கம் விசுவாசிகளைப் பின்னோக்கி இழுத்தன. மற்றொரு பக்கம் திருத்தூதர்களின் துணிச்சலான போதனைகள். இதில் எது உண்மை? எது பொய்? என்று உணர முடியாத நேரம். இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் ஒருங்கே வளரும் நேரத்தில் யார் வெற்றி பெறுவார்? என்பது எல்லோருடைய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலாக வருவதுதான் இந்த உவமை. நன்மையும், தீமையும் அருகருகே இருந்தாலும் பயப்பட வேண்டாம். தொடர்ந்து வளரட்டும். இறுதிநாளில் கடவுள் தீமையை அழித்து விடுவார் என்று இந்த உவமை தொடக்கத் திருச்சபைக்கு நம்பிக்கை தந்தது. இயேசு கூறுவதாக நற்செய்தியாளர் எழுதும் அர்த்தமும் இதை மையப்படுத்தியதாகவே இருக்கிறது.

இரண்டாவதாக, விசுவாசிகளின் சிந்தனையில் ஒரு குழப்பம். நாம் சிறிய சமூகமாக இருக்கிறோமே. இவ்வளவு பெரிய உலகில் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும்? நம் நம்பிக்கை வளருமா? அப்படியே மடிந்து விடுமா? இதற்கு விடையாக வருவதுதான் கடுகுவிதை. சிறியதாக இருந்தாலும் வானத்துப் பறவைகள் வந்து தங்கும் அளவிற்கு கிளைகள் பரப்பும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இரண்டாவது உவமை.

மூன்றாவதாக, அவர்களிடம் இருந்த மற்றொரு பிரச்சனை பயம். தொடக்கக் கிறித்தவர்கள் தங்களை க் கிறித்தவர்கள் என்று அறிக்கையிடப் பயந்தனர். மற்றவர்களின் கண்களிலிருந்து ஒளிந்தே இருந்தனர். ஒளிந்தே இறைவார்த்தையைக் கேட்டனர். ஒளிந்தே அப்பம் பிட்டனர். ஒளிந்தே செபித்தனர். இப்படியே நாம் ஒளிந்தே இருக்கிறோமே? எப்படி நம்மால் மற்றவர்கள் முன் சான்று பகர முடியும் என்று நினைத்தவர்களுப் பதிலாக வருவதுதான் புளிப்பு மாவு. புளிப்பு மாவு ஒளிந்தேதான் இருக்கும். ஆனால் முழு மாவையும் புளிப்பேற்றிவிடும் என நம்பிக்கை தந்தது மூன்றாவது உவமை.

இந்த மூன்று பின்புலங்களில் பார்க்கும் போது இயேசு இந்த உவமைகளைச் சொல்லியிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிகிறது. நற்செய்தியாளர்கள் தாங்களும் தங்கள் விசுவாசிகளும் சந்தித்த அன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உவமைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த உவமைகளை இயேசுவே சொல்வதாக எழுதுகின்றனர். இது என் கருத்து! 'இயேசுதான் சொன்னார்' என நீங்கள் சத்தியம் செய்தாலும் நான் உங்களோடு வாதாடப் போவதில்லை!

இந்த மூன்று உவமைகளும் இன்று நமக்கு என்ன சொல்கின்றன?

1. களைகள். 'ஆள்கள் தூங்கும்போது' களைகள் விதைக்கப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் 'தூக்கம்' என்பதற்கு 'ஆன்மீக சோம்பேறித்தனம்' என்ற பொருள் உண்டு (காண். மாற்கு 13:36, 1தெச 5:6-8, 1பேதுரு 5:8). நம் உள்ளத்தில் நன்மை உண்டு. நாம் சற்றே 'தூங்கும்'போது தீமை விதைக்கப்பட்டு விடுகிறது. மற்றொரு பக்கம் நம்மைச் சுற்றி நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மகிழ்ச்சி தரும் குடும்பமே சில நேரம் வருத்தம் தருகிறது. பாதுகாப்பு தரும் சமூகமே சில நேரங்களில் தீவிரவாதத்தால் அச்சுறுத்துகிறது. நன்மை இருந்த இடத்தில் தீமை எப்படி வந்தது என்ற கேள்வியை இன்னும் நாம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தீமையிலிருந்து தப்பிக்க வேறு என்னதான் வழி? தாராள உள்ளம். களைகளும் வளரட்டும்! எனத் தாராள உள்ளம் காட்டுகிறார் வீட்டுத்தலைவன். களைகளைக் களையும் போது பயிர்களையும் களைந்துவிடலாம் என்ற எச்சரிக்கையில் அதை அனுமதிக்கிறார். இறுதியில் வெற்றி என்றும் நன்மைக்கே.

மற்றொரு பக்கம், களையும் பயிரும் ஒரே நீரையே பருகுகிறது. ஒரே உரத்தையே சத்தாக்குகிறது. ஆனால் களைகள் அவைகளைப் பயன்படுத்துவதனால் மற்றவர்களுக்குப் பயன் தருவதில்லை. அவைகள் சத்துக்களை தங்களுக்கென்றே வைத்துக்கொள்கின்றன. நம்மிடம் வரும் உறவுகள், ஆற்றல், பொருள் எல்லாம் நம் வழியாக மற்றவர்களுக்குப் பயன் தர வேண்டும். நம்மிலேயே தேங்கிவிடும் போது நாமும் களையாக மாறிவிட வாய்ப்பு இருக்கின்றது. இந்த உவமை நமக்குத் தரும் பாடம்: charity. charity என்றால் வெறும் தானம் அல்ல. பகிர்வு. தாரள உள்ளம்.

2. கடுகு. கடுகு மரம் என்பது கிடையாது. கடுகு வெறும் பத்தடி வளரும் செடி தான். ஆனால் எதற்காக இவ்வளவு பெரிய நஒயபபநசயவழைn? கடவுளின் செயல்பாடு எப்போதும் அளப்பரியது. அது எப்போதும் நம் கண்களுக்கு வியப்பாகவே இருக்கிறது. அதை நாம் காண நம்பிக்கைக் கண்கள் வேண்டும். கடுகு போல நம் சிந்தனை இருக்க வேண்டும் - சிறியதாக அல்ல. ஆற்றல் மிக்கதாக. இதையே 'clarity' என்று சொல்லலாம். சிந்திக்கின்ற சிந்தனையில் தெளிவு இருந்தால் நாமும் அளப்பரிய நிலையில் செயலாற்ற முடியும்.

3. புளிப்பு மாவு. பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் கலக்கிறார். மூன்று மரக்கால் அளவில் 300 பேர் இட்லி சாப்பிடலாம். 'பிசைந்து வைத்தார்' என்று நற்செய்தி சொல்கிறது. ஆனால் மூலமொழியில் 'ஒளித்து வைத்தார்' என்றே இருக்கிறது. புளிப்பை ஒளித்து வைத்தாலும் அது மற்றதையும் தன் இயல்பாக மாற்றி விடுகிறது. இதை நாம் 'integrity' என்று பொருள் கொள்ளலாம். புளிப்பு மாவு தன்னை மற்ற மாவோடு இணைத்தாலும் அதன் இயல்புத் தன்னைத் தாக்கவிடாமல் தன் இயல்புக்கு அதைக் கொணர்கிறது. தகைமையைக் கொண்ட உள்ளமும் இப்படித்தான் செய்யும்.

Charity, Clarity, Integrity - என இந்த மூன்று 'ரிட்டிகளை' நாம் கொண்டிருந்தோம் என்றால் இறையரசு வளர நாமும் காரணமாக இருப்போம். இறைவனின் அரசு என்பது நம்மை இயக்கும் ஒரு ஆற்றல்!