Friday, August 30, 2013

கோடரியைக் கூர்மையாக்குங்கள்!


ஒரு தோட்டக்காரர் தன் தோட்டத்தில் வளர்ந்த ஒரு பெரிய மரத்தை வெட்டுவதுற்கு கோடரியோடு புறப்படுகின்றார். மாலையாவதற்குள் வெட்டிவிடவேண்டும் என்று அயராமல் வெட்டுகின்றார். உணவு உண்ணக்கூட நேரமில்லை. அந்த வழியே சென்ற வழிப்போக்கன் அவர்மேல் பரிதாபப்பட்டு அங்கே நின்று அவர் செய்வதைப் பார்க்கின்றான். அந்தத் தோட்டக்காரரின் உழைப்புக்கேற்ற பலன் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் சென்று, 'ஐயா, உங்கள் கோடரியைக் கூர்மையாக்கிவிட்டு பிறகு வெட்டுங்கள், நீங்கள் எளிதாக வெட்டிவிடலாம்' என்கின்றார். 'இல்லை, அதற்கெல்லாம் நேரமில்லை' என்று தொடர்ந்து வெட்டிக்கொண்டேயிருக்கின்றார். உடல்சோர்ந்து கீழே விழுகின்றார். மரம் நிமிர்நது நிற்கின்றது. 

இந்த நிகழ்வை எழுதுகின்ற மேலாண்மையியல் எழுத்தாளர் ஸ்டீபன் கோவே இப்படி நிறைவுசெய்கின்றார்: 'அவர் 15 நிமிடங்கள் எடுத்து கோடரியைக் கூர்மைப்படுத்தியிருந்தால் தன் வேலையை வெகு எளிதாக முடித்திருப்பார். வேலையும் முடிந்திருக்கும். அவரின் ஆற்றலும் மிஞ்சியிருக்கும்'. உயர்ந்த மனிதர்களின் ஏழாவது பண்பாக அவர் முன்வைப்பது இதுதான்: 'உங்கள் கோடரிகளைக் கூர்மையாக்குங்கள்'. மனித வாழ்க்கைக்கு உழைப்பு எந்த அளவிற்கு அவசியமோ, அதே போல ஓய்வும் அவசியம் என்பதை இந்தப் பண்பு குறிக்கின்றது.

இந்த ஏழாம் பண்பைத்தான் இயேசு தன் சீடர்களின் வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்கின்றார். திருத்தூதர்களின் தங்களின் பணிமுடிந்து இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் தெரிவித்தபோது அவர் பேசுகின்ற ஒரே வார்த்தை, 'ஓய்வெடுங்கள்!' என்பதுதான்.

இயேசுவின் உச்சகட்ட உணர்வுமுதிர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உழைப்பின் அவசியத்தை உணர்ந்த இறைவன் மனிதர்களுக்கு இன்று ஓய்வின் அவசியத்தை உணர்த்துகின்றார். இது இயேசுவின் தாய்மைக்கான முதல் எடுத்துக்காட்டு. இதே நற்செய்திப் பகுதியில் இயேசுவின் தாயுள்ளம் அவர் மக்கள் கூட்டத்தின்மேல் காட்டுகின்ற பரிவில் வெளிப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டில் ஓய்வு நாள் என்பது மிக முக்கியமான ஒன்று. இறைவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்ற சமய அடையாளம் மட்டுமல்ல, 'நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அதை நினைவுகூர்ந்து உங்கள் அடிமைகளுக்கு ஓய்வு கொடுங்கள்' என்ற சமூக அடையாளத்தையும் இது கொண்டிருந்தது. ஆனால், இயேசுவின் காலத்தில் ஓய்வுநாள் என்பது சடங்கு, சம்பிரதாயங்களால் மக்களை அடிமைப்படுத்தும் ஒரு காரணியாக மாறியிருந்து வருத்தத்திற்குரியது.

இயேசு காட்டுகின்ற ஓய்வு என்பது தனிமைத்தவம். கூட்டத்தின் மத்தியில் நாம் இருக்கும்போது நம்மைப் பற்றி நாம் நினைப்பதில்லை. கூட்டத்தின் இரைச்சலில் நம் மனம் பேசும் மெல்லிய வார்த்தைகள் நமக்குக் கேட்பதில்லை, நாம் கேட்கவும் விரும்புவதில்லை. ஆனால் தனிமையில்தான் நாம் நம்மையே பார்க்கின்றோம். தனிமை நம்மைப் பார்த்து 'ஏன் இப்படி இருக்கிறாய்?' என்று கேள்வி கேட்கின்றது. நம்மால் பதில்சொல்ல முடிவதில்லை. ஆகையால் இந்தத் தனிமையை நமக்குப் பிடிப்பதில்லை. ஓய்வு என்பது நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்கின்ற ஒரு நிலை. தனிமைத்தவத்தில்தான் இது சாத்தியமாகின்றது.

இயேசு குறிப்பிடும் தனிமை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு (loneliness) அன்று. மாறாக, நாம் தேர்ந்துகொள்கின்ற தனிமை (aloneness or solitude). நாம் யார்? நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நம் உறவுகளின் அர்த்தம் என்ன? என்ற கேள்விகளை நாம் தனிமையில் கேட்டால்தான் மக்கள்கூட்டத்தோடு, உலகத்தோடு, உறவுகளோடு நம்மால் வாழ முடியும். தனிமையை அனுபவித்த மனிதனால் மட்டுமே வாழ்வை எதிர்கொள்ள முடியும்.

விக்டர் பிராங்கிள் என்ற யூத எழுத்தாளர் இந்த உலகமே வியக்கின்ற 'Man's Search for Meaning' என்ற நூலைப் படைக்கின்றார். இந்தப் படைப்பு முழுவதுமே அவர் குறிப்பிடுவது என்னவென்றால் ஹிட்லரின் வதைமுகாமிற்குள் இருந்த தனிமையில்தான் என் வாழ்வின் அர்த்தம் நான் கண்டேன் என்பதுதான். தனிமையில்தான் நாம் ஓய்ந்திருக்கின்றோம். நாம் நாமாக இருக்கின்றோம்.

காலை துயில் எழுவதிலிருந்து, இரவு தூங்கும் வரை ஓடிக்கொண்டேயிருக்கின்றோம். வேகமான நடை, வேகமான ஓட்டம், வேகமான தொலைத்தொடர்பு, வேகமான வாகன வசதி' என்று வேகமாக ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் நிம்மிதியடைகின்றோமா? என்றால் அது கேள்விக்குறிதான். ஒரே நாள் போல அடுத்த நாளும் ஓட்டம்.

கடந்த ஆண்டு 'அவசரம்' என்ற குறும்படம் வெளியானது. மும்பை நகரின் பரபரைப்பைக் காட்டுகின்ற படம். ஒரு பெண் குளித்து, சரியாகத் துவட்டாத தலையுடன் வேகமாக லோக்கல் ட்ரைனைப் பிடிக்க ஓடிவார். எப்படியோ கூட்டத்தைச் சமாளித்து ஏறிவிடுவார். சுற்றிலும் பார்ப்பார். யாரும் இறங்குவதாகத் தெரியவி;ல்லை. செல்போன், நியூஸ்பேப்பர் என்ற எல்லாரும் மும்முரமாயிருக்கின்றார்கள். ஒரு ஸ்டேஷனில் நிறையப் பேர் இறங்க, ஓடிப்போய் ஒரு இடம் பிடித்து அமர்ந்து கொள்கின்றார். இறங்குவதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்றெண்ணி டிபன் பாக்ஸை எடுக்கின்றார். திறக்க முடியவில்லை. சூடாக மூடியதால் மூடி இறுகிவிட்டது. சுற்றிலும் பார்க்கின்றார். யாரும் உதவுவதுபோல் தெரியவில்லை. பல்லால் கடித்துத் திறக்க முயல்கின்றார். அந்தநேரம் ட்ரைய்ன் திடீரென்று நிற்க டிபன் பாக்ஸ் கீழே விழுந்து சோறு கொட்டிவிடுகின்றது. தன் உடை, காலணிகள் என்று எல்லா இடமும் சாம்பார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. மெதுவாக டிபன் பாக்ஸை மூடிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கின்றார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஓடவேண்டும். ஓட்டலுக்குச் செல்ல நேரம் இருக்காது. கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது. குறும்படம் இந்த வரிகளோடு நிறைவடையும்: 'நாம் செய்கின்ற வேலையினால் நிம்மதியாக ஒரு கையளவு உணவு கூட சாப்பிட முடியவில்லையென்றால், எதற்காக அந்த வேலை? எதற்காக அந்த அவசரம்?'

இன்று வாழ்க்கை ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்ப்போம். நமது கனவு, நமது குழந்தைகள், நமது குடும்பம். இவைகளுக்காகத்தானே இந்த ஓட்டம். திடீரென்று ஒருநாள் நாமே நிறுத்தப்பட்டாலன்றி ஓடிக்கொண்டேயிருந்தால் அது 'வேகமாகப் போகவேண்டும் என்பதற்காக பெட்ரோல் கூட போடாமல் வண்டி ஓட்டத் துணிவது' போன்றது.

தனிமைத்தவம் ஏற்போம். இறைவனின் தாயுள்ளம் பெறுவோம்!

No comments:

Post a Comment