மெய்யியலார்களில் புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருப்பவர் மார்ட்டின் ஹைடெக்கர் (1889 – 1976). ஜெர்மானிய நாட்டைச் சார்ந்த இவர் தனது சிந்தனையை இம்மானுவேல் காண்ட் என்னும் மெய்யியலாரின் விமர்சனத்திலிருந்து தொடங்குகின்றார். இவரது சிந்தனையை பிற்காலத்தில் வந்த பின்நவீனத்துவம், கட்டமைப்பு உடைத்தல், சூழல்மைய மெய்யியல் அனைத்திற்கும் ஊற்றாக அமைந்தது. தற்காலத்தின் பெரிய மெய்யியலார்கள் அனைவரும் இவரின் புத்தகங்களை வெகுவாக ஆய்வு செய்தவர்கள்தாம். இவரின் முக்கியமான மெய்யியில் பங்களிப்பு 'இருத்தலும் நேரமும்' என்ற நூல். ஹிட்லரின் நாசிஸ சிந்தனையை மிகவும் ஆதரித்தவர் என்ற குற்றச்சாட்டு இவர்மேல் இன்றும் உண்டு.
மனித இருத்தலை மையமாக வைத்துத் தொடங்கும் இவரின் சிந்தனை இயற்கை, இறைவன், உலகம் என அனைத்திலும் ஆக்டோபஸ் போல விரிகின்றது.
இவரின் 'இருத்தலும் நேரமும்' என்ற நூலில் நான் கற்ற ஒன்று இதுதான்: 'இருத்தல் என்பது உடனிருத்தல்'. சார்த்தர் போன்றவர்கள் 'உடனிருத்தல் என்பது ஒரு நரகம்' என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில் 'நாம் உடனிருப்பதன் வழியாகவே இருக்கிறோம்' என்று உடனிருப்பிற்கு முக்கியத்துவம் அளித்தவர். யாருமே தனியாய் இருப்பதில்லை. அனைவரும் அனைவரோடும், அனைத்தும் அனைத்தோடும் இணைந்திருக்கின்றன. ஏன் கடவுள் கூட தனியாய் இருப்பதில்லை. மனுக்குலம் இல்லாமல் கடவுளால் இருக்க முடியாது.
மனிதர்களுக்கும், மனிதர்களுக்குமான உறவை 'ரிலேஷனாலிட்டி' எனவும், மனிதர்களுக்கும், இயற்கைக்குமான உறவை 'ஃபங்சனாலிட்டி' எனவும் அழைக்கின்றார். முதலாவது உறவில் நாம் 'மனிதர்களோடும்', இரண்டாவது உறவில் நாம் 'நிகழ்வுகளோடும்' இணைந்திருக்கிறோம். இந்த இரண்டு நிலைகளில் உள்ள உறவில் ஒரு சில தானாய் நேர்ந்தவை. மற்றும் சில நாமாய்த் தேர்ந்து கொண்டவை. இன்னும் சில நம்மேல் சுமத்தப்பட்டவை.
இந்த அனைத்திலும் நாம் நம் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கட்டாயத்திற்குப் பதிலாக நாமாய் விரும்பி உடனிருந்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமே.
நம் வாழ்வின் உடனிருப்பை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:
முதல் வகை: தண்டவாளத்தின் இரண்டு இரும்புத் தளவாடங்கள் போல. இந்த இரண்டும் 'கிட்டக் கிட்ட' இருந்தும் 'தொட்டுக்கொள்ள முடியாத நிலையில்'தான் இருக்க வேண்டும். தொட முயற்சி செய்தால் அங்கே ஆபத்துதான் மிச்சம்.
இரண்டாம் வகை: நிலவும் சூரியனும் போல. ஒன்றின் வருகை மற்றொன்றின் மறைவு. இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நிலவு தான் ஒளிர்வதற்கு சூரியனைச் சார்ந்திருந்தாலும் சூரியன் வந்து விட்டால் தான் மறைந்துதான் ஆக வேண்டும்.
மூன்றாம் வகை: தண்ணீரும் எண்ணையும் போல. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் ஒன்று மற்றொன்றிலிருந்து மேலேயே இருக்கும். பார்ப்பதற்கு இணைந்திருப்பதுபோல இருந்தாலும் மிக எளிதாகப் பிரித்துவிடலாம்.
நான்காம் வகை: மலரும் மணமும்போல. நடனமும் அதை ஆடுபவரும்போல. ஒன்றை மற்றதிலிருந்து பிரித்துப்பார்க்கவே முடியாது.
நம் இருத்தல் உடனிருத்தலா? அல்லது உடைந்திருத்தலா?
உடனிருத்தல் என்றால் எவ்வகை?
No comments:
Post a Comment