Monday, August 26, 2013

கால்களின் மேல் கண்கள்


நாம் பார்க்கும் முகங்களுக்குத்தான் ஆல்பமா என்ன? கால்களின் ஆல்பம் தயாரிக்கிறேன் நான். இன்று காலையிலிருந்து யாருடைய முகத்தையும் பார்க்கக் கூடாது, கால்களை மட்டுமே பார்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டேன். கால்களை மட்டுமே பார்த்தேன். கால்கள் எண்ணற்ற எண்ணங்களை இன்று என்னுள் உருவாக்கியது.

நம் எண்சாண் உடலுக்கு நம் கால்தானே முக்கியம்!

கால்கள் தான் எத்தனை வகை? ஒவ்வொருவரின் காலும் ஒருவகை. ஒவ்வொருவரின் நடையும் ஒருவகை. யாரும் யாரைப்போலவும் நடக்க முடியாது (கால்களால்கூட!).

ஆலயம் திறந்து விளக்கேற்ற வரும் எங்கள் ஆலயக் காப்பாளரின் பூட்ஸ் கால்கள்.

'என் நம்பிக்கையெல்லாம் இனி நீ தான்' என நம்பிக்கையைத் தன் கையில் உள்ள மெழுகுதிரியாய் உருக்கி கண்ணீர் வடிக்கும் அரோரா பாட்டியின் தேய்ந்த கால்கள்.

'ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்' என்று வந்து நின்ற ருமேனியப் பெண்ணின் அழுக்கான கால்கள்.

அவளின் இடுப்பிலிருந்த குழந்தைக்கு அணிந்திருந்த செருப்பு போதாததால் கடித்து இரத்தமான கால்கள்.

'வெள்ளை, சிகப்பு, பிங்க், பச்சை, மிக்ஸ் கலர்' என வண்ணப்பூச்சு செய்யப்பட்ட கால்கள்.

'இந்த செருப்பு ஓகே வா?' என்று செருப்புக் கடையில் தன் கணவருக்கு செலவிழுத்துவிட்டுக் கொண்டிருந்த அன்பு மனைவியின் கால்கள்.

படிகளில் இறங்கும் கால்கள்.

மெட்ரோவில் ஓடி ஏறும் கால்கள்.

எவ்ளோ பேர் முன்னால் இருந்தாலும் தன் கேர்ள் பிரண்ட் சொன்ன 'மொக்க' ஜோக்கிற்காக அவளை அலாக்காகத் தூக்கி அவளின் பாய்பிரண்ட் சுற்றியபோது அருகில் வந்து சென்ற அந்த அமெரிக்க இளவலின் கால்கள்.

நடனமாடும் கால்கள்.

பிளாட்பாரத்தில் தன் அப்பாவை எத்தி விளையாடிய எத்தியோப்பிய சிறுவனின் கால்கள்.

பந்துகளை உதைக்கும் கால்கள்.

பேருந்தின் கூட்டத்தில் நெளியும் கால்கள்.

பின்னிருக்கையிலிருந்து முன்னிருக்கை நுழையும் கால்கள்.

பூஜித்து வணங்கப்படும் கால்கள்.

சீனன் ஒருவனின் கால்கள் (ஏழாம் அறிவு படம் பார்த்தபின் சீனர்கள் வில்லன்களாக மட்டுமே தெரிகின்றனர்!)

கறுப்பான, வெளுத்த, சிவப்பான, நிறம் குழப்பம் தருகின்ற

மயிர் மண்டிய, வழுவழுப்பான கால்கள்

ஐபோட் கேட்டுக்கொண்டே தாளமிடும் கால்கள்

அவசரமாய்ச் சிகரெட்டை நசுக்குகிற கால்கள்.

நேசித்தவரை தேடிச் செல்கிற கால்கள்.

வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற கால்கள்.

இன்னும் எத்தனையோ கால்கள் என் கற்பனைக்கு வந்து போயின...

செங்கற்சூளையின் சேற்றிலுள்ள கால்கள்.

நாற்று நடும் கால்கள்.

தத்தி தத்தி ஓடி கட்டிலில் இடித்து இரத்தம் வந்த குட்டி ஃபிலோ கால்கள்.

உலகளந்த கால்கள்.

மெகந்தியிட்ட கால்கள்.

பாதம் வெடித்த கால்கள்.

மெட்டி மின்னுகிற கால்கள்.

ஆறுவிரல்களுள்ள கால்கள்.

முத்தமிடத் தூண்டும் கால்கள்.

புணர்ச்சியில் பின்னும் பாம்புக் கால்கள்.

'எல்லாரும் இங்கே பாருங்க' என உசுப்பேத்தும் வாழைத்தண்டு கால்கள்

எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்கு பெருவிரலை விட இரண்டாம் விரல் நீளமான கால்கள்.

(அதுல ஒரு சீக்ரெட் இருக்கு – அந்த மாதிரி உள்ளவங்க யாருக்குமே அடங்க மாட்டாங்க...நான் சொல்லல... நம்ம தணுஷே சொல்லிருக்காரு!)

கடலுக்கடியில் நீந்துகின்ற கால்கள்.

மலையேறும் கால்கள்.

இதழோடு இதழ் பதித்து முத்தமிடும்போது ஏறி நிற்கும் கால்கள்.

போருக்குச் செல்கின்ற கால்கள்.

தண்ணீர்க் குடம் சுமந்து தள்ளாடும் கால்கள்.

ரேசன்கடை வரிசையில் நிற்கிற கால்கள்.

கால்மேல் கால் போட்டு அதிகாரம் காட்டும் கால்கள்.

நரம்புகள் புடைத்த கால்கள்.

பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட கால்கள்.

சுகரில் பெருவிரல் இழந்த கால்கள்.

என் வாழ்க்கை என்ற கடற்கரையில் தடம் பதித்த எத்தனையோ கால்கள்.

'யாரும் பார்த்துவிடக் கூடாது' என நான் என் கேன்வாசுக்குள் மறைக்கும்

என் தோலுரியும் அலர்ஜி கால்கள்...

இனி யாரைப் பார்த்தாலும்

கால்களைத்தான் பார்ப்பேன்.

ஒவ்வொரு காலும் ஒரு வரலாறு...




(நன்றி: கால்களைப் பார்க்க என்னைத் தூண்டிய மனுஷ்யபுத்திரனுக்கு!)

No comments:

Post a Comment