மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், 'நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்' என்றன. மனிதன், 'எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்' என்றான். கழுகு, 'என் பார்வையை உனக்குத் தருகிறேன்' என்றது. 'யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்' என்றான். ஜகுவார், 'நான் தருகிறேன்' என்றது. 'பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்' என்றான். பாம்பு, 'அதை நான் உனக்குக் காட்டுகிறேன்' என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, 'மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது' என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, 'இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: 'இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை'.
மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது. எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் மனிதருக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு.
'அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்' (யோவான் 6:27) என்று நம் தேடலை ஒருமுகப்படுத்துகின்றார் இயேசு. 'நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள்' என்று அவர்களின் தேடலில் இருந்த வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். இயேசு ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு கொடுத்தவுடன் அங்கிருந்த மக்களுக்கு ஒரு மாயை வந்து விடுகிறது. அது என்னவென்றால், ஏற்கனவே நாம் பட்டினியாகக் கிடக்கின்றோம். உழைக்க வேண்டுமானால் வேலையும் கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் கடினமானதாக இருக்கிறது. அப்படியே சம்பளம் வாங்கினாலும், ஏரோது ஒருபுறம், உரோமை அரசு மறுபுறம் என அதை வரியாக நம்மிடமிருந்து பிடுங்கி விடுகின்றனர். ஆகவே, இவர் பின்னாலேயே செல்வோம். உழைக்கவும் தேவையில்லை. உணவும் கிடைக்கும் என்ற மயக்க நிலைக்கு ஆளாகின்றனர். இயேசு இந்த மாயை உணர்வைச் சாடுகின்றார்.
இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்கு இரண்டு சவால்களை வைக்கின்றன:
1. நாம் எதற்காக இறைவனைத் தேடுகிறோம்?
2. நாம் நம் வாழ்வின் இலக்காக எதை வைத்திருக்கின்றோம்?
1. நாம் எதற்காக இறைவனைத் தேடுகிறோம்?
2006ஆம் ஆண்டு வெளிவந்த ரிச்சர்ட் டாகின்ஸ் என்பவர் எழுதிய 'கடவுள் என்ற மாயை' என்ற நூலும் 2007ஆம் ஆண்டு வெளிவந்த கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் ஒன்றும் பெரியவரல்ல: சமயம் என்ற விஷம்' என்ற நூலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமயம், சமயத்தால் வருகின்ற அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு, இரத்தம், கண்ணீர், கொலை, மரணம், சித்ரவததை, வலி, பயம் என அனைத்து நிலைகளிலும் சமயத்தை கேள்விக்குட்படுத்துகின்ற இந்தச் சிந்தனை ஒரு நவநாகரீகமாக மாறிவிட்டது. வெகு எளிதாகப் பேசப்படுகின்ற ஒரு பேசுபொருளாக கடவுள் மாறிவிட்டார். கடவுளும், மதமும் இல்லாமலே மனிதம் நிறைவுபெறும் என்கின்ற முடிவு நியாயமானதா என்பது தனிநபர் அனுபவத்தைப் பொறுத்ததே. ஆனால் இந்த இரண்டு நூலாசிரியர்கள் மட்டுமல்ல, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று என்னவென்றால் - மனித ஆழ்மனதில் இருக்கின்ற வெற்றிடத்தை அடைக்க இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த ஒரே பொருள் இறைவன்தான். நம் அனைத்துத் தேடல்களும் நிரந்தர அமைதியைத் தர இயலாதவை. நம் கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானம், அறிவியல் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றாலும், அதோடு வருகின்ற வெற்றிடத்தையும் நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டியுள்ளது. 'ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத் 6:33) என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரப்படவேண்டும்.
2. நம் வாழ்வின் இலக்காக நாம் எதை வைத்திருக்கின்றோம்?
'நிலையற்றவைகளில் மனத்தை ஈடுபடுத்துவதைவிட, நிலையானவைகளில் எங்கள் மனத்தை ஈடுபடுத்தத் தூண்டுகின்ற காலம் இதுவே' - தவக்காலத் திருப்பலி தொடக்கவுரை 2ல் நாம் செபிக்கின்ற வார்த்தைகள் இவை. நம் வாழ்வின் இலக்காக நாம் வைத்துக்கொள்ள வேண்டியதாக இன்றைய நற்செய்தி நமக்குக் காட்டுகின்றது. இறைவனைத் தேடுகிறேன் என்று சொல்லிவிட்டு நாம் இன்னும் எதிர்மறை உணர்வுகள், அடிமைத்தனங்களில் இருந்தோம் என்றால் நம் இலக்கு பயனற்றதாகிவிடும். தூய பவுலடியார் குறிப்பிடுவது போல, 'இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது' (உரோ 14:17). ஆகவே அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் நீதி, அமைதி, மகிழ்ச்சியை நமக்கும், பிறருக்கும் தருவனவாக இருந்தால் நம் இலக்கு சரியான இலக்காக அமையும்.
நம் தேடலும், தேடுபொருளும் இறைவனாகட்டும்!
No comments:
Post a Comment