Saturday, August 17, 2013

பைபிளின்படி வாழ முடியுமா?


நேற்று இரவு டெட் வீடியோஸ் வலைத்தளத்தில் ஏ. ஜே. ஜேக்கப்ஸ் அவர்கள் ஆற்றிய 'விவிலியத்தோடு ஓர் ஆண்டு' என்ற உரையைக் கேட்டேன். ஒரு பக்கம் சிரிப்பு., ஒரு பக்கம் சீரியஸ் என விறுவிறுப்பாக ஓடியது. ஜேக்கப்ஸ் பற்றிச் சொல்லணும்னா, இவர் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர், கடவுள் இருக்கிறாரா, இல்லையா எனக் கவலைப்படாத சங்கத்தின் உறுப்பினர். இவர் செய்த வித்தியாசமான செயல்களில் எனக்குப் பிடித்தவை இரண்டு: 1) ஒரு வருடம் முழுவதும் தன் பணியிலிருந்து விடுமுறை எடுத்து 'பிரிட்டானிக்கா என்சைக்லோபேடியா' முழுவதையும் வாசித்தவர். 2) ஒரு வருடம் முழுவதும் தன் வாழ்க்கைiயே 'அவுட்சோர்சிங்' செய்தவர். பெங்களுருவிலிருந்து ஒரு டீமை வேலைக்கு அமர்த்தி தன் மெயில் பார்ப்பது, தன் செல்போன் அழைப்புகளுக்குப் பதில் தருவது, தன் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்வது, தன் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, தன் மனைவியோடு சண்டை போடுவது என அனைத்தையும் மற்றவர்கள் வழியாகச் செய்து தனக்குப் பிடித்த நூல்களை படித்துக்கொண்டிருந்தவர்.

'விவிலியத்தின் வழி ஒரு வருடம் வாழ முடியுமா?' என்ற கேள்வியோடு தொடங்குகிறது இந்த வீடியோ. 'பிறரை அன்பு செய்' என்று கற்பிக்கின்ற விவிலியம், 'உலகத்தின் மிகக் கொடூரமான வன்முறையையும் சரி' எனச் சொல்வதாக இருக்கின்றது. எங்கே தொடங்கி எங்கே முடிப்பது?

ஆனால் விவிலியத்தின் வழி வாழ்வது எனக்கு ஐந்து பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது என்கிறார் இவர்.

1. எதையும் வார்த்தைக்கு வார்த்தையாக எடுக்காதே. ஒவ்வொன்றும் எழுதப்பட்டதன் சூழலும், பின்புலமும் வேறு. வார்த்தையை அதன் சூழலோடு எடுக்க வேண்டும். இது விவிலியத்திற்கு மட்டுமல்ல நம் உறவு வாழ்க்கைக்கும் மிக அழகாகவே பொருந்தும். நாம் பேசுகின்ற வார்த்தைகள் அவைகளுக்கென சூழலைக் கொண்டுள்ளன. வெறும் வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் போது அர்த்தமும் குறைவுபடுகின்றது. நபரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றார்.

2. என்றும் நன்றி சொல்லுங்கள். இது விவிலியம் கற்பிக்கும் ஒரு பாடம். நம் வாழ்க்கை கடவுளின் கொடை. 'இது நிகழ்ந்து உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே' (யோசுவா 24:12-13). நாம் இருப்பதும் இயங்குவதும் இறைவனிலும், பிறரிலும் தான். இந்த எண்ணம் நமக்குத் தரவேண்டியது நன்றியுள்ளம்.

3. எல்லாவற்றிற்கும் மரியாதை கொடுங்கள். உள்ளவரோ, இல்லாதவரோ, நல்லவரோ, கெட்டவரோ நீங்கள் தீர்ப்பிடாதீர்கள். எல்லாரையும், எல்லாவற்றையும் மதிப்புடன் நடத்துங்கள். வாழ்க்கை என்பது சக்கரம். இன்று அடிமைப்படுத்துவது, நாளை அடிமைப்படுத்தப்படும். இன்று ஓங்கி நிற்பது, நாளை சாய்ந்து கிடக்கும்.

4. அரைத்த மாவையே அரைக்காதீர்கள். வாழ்க்கையில் வித்தியாசங்களுக்கு நம் எண்ணங்களைத் திறந்து வைக்க வேண்டும். எகிப்தின் அடிமைத்தனம் போதும் என்றிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு பாலும் தேனும் பொழியும் நாட்டைக் கொடுக்கின்றார் இறைவன். 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என்று விரக்தி வந்த இடத்தில் புதிய திராட்சை இரசம் பொங்கச் செய்கின்றார் இயேசு. 'எல்லாம் இப்படித்தான். எல்லாம் என் விதி. நான் இப்படித்தான் இருப்பேன்னு என் ஜோசியர் சொன்னாருன்னு' தினமும் நம்மையே நொந்து கொண்டிருந்தால் வித்தியாசங்களின் இறைவனை நம்மால் கண்டுகொள்ள முடியாது.

5. சாதாரணமானவர்களை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். எகிப்தியர்கள் கடலில் வீழ்ந்தழியக் காரணம் இஸ்ராயேலரை அறிவற்றவர்கள் எனவும், சாதாரணமானவர்கள் எனவும் தவறாக எடைபோட்டதுதான். இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. சிலர் அறிவாளிகளாக இருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் எதையும் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் பணம் பெற்றிருப்பதற்கும் காரணம் உண்டு. சிலர் ஒன்றுமே இல்லாதவர்களாக இருப்பதற்கும் காரணம் உண்டு. 'அடுத்தவன் கறுப்பா, சிகப்பான்னு பார்க்காத. அவன் முழி எப்படியிருக்குன்னு ஆராயாத. உன் ஜோலிய நீ பாரு உன் வாழ்க்கை ஜாலியா இருக்கும்.'

6. பிக் அப் அன்ட் சூஸ். உனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள். வாழ்க்கை ஒரு சாய்ஸ். நீங்க கேட்கலாம்? அப்படின்னா 'நமக்கு வேணும்ங்கிறத எடுத்துக்கிட்டு மற்றத விட்றவா? இது என்ன 'கஃபேயா?' 'ஓட்டலா?' ஆமா. வாழ்க்கை ஒரு 'கஃபே' தான். நம்ம கண்ணுக்குத் தெரியற எல்லாத்தையும் நம்மால குடிக்க முடியுமா? நம்மால சாப்பிட முடியுமா? நமக்கு பிடிக்குங்கிறதத்தான் சாப்பிட முடியும்? ஏன் பிடிச்சதுல இருந்தது பிடிக்காத உணவுக்குக் கொஞ்சம்; கொஞ்சமா போகலாமே. 'கஃபேடேரியா ஆன்மீகம்' இருந்தாலே போதும். உங்களுக்குப் பிடிச்ச பகுதியை எடுங்க. அத மாதிரி வாழனும்னு நினைங்க. 'அத மாதிரி மத்தவங்களும் வாழ்வாங்கன்னு' நினைங்க நீங்க தப்பு பண்ண மாட்டீங்க.



No comments:

Post a Comment